யுவன் நூல்கள் விருது சார்ந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில்- சீரோ டிகிரி
அன்பின் ஜெ
தொடக்க காலங்களில் கவிதை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த யுவன் யதேச்சையாக திறந்துகொண்ட சுனைபோல் ஏராளமான புனைவுகள் படைத்தவர்.தொடரந்து எங்களுக்கு இலக்கிய ஞானம் வழங்கிய ஆசிரியர்களில் அவரும் ஒருவர்.கிருஷ்ணன் எனும் பாத்திரம் வழியாக அனுபவங்களையும் பல திறப்பு களையும் அளித்தவர்.
இன்று இலக்கிய உலகில் பலராலும் பேசப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்குவதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
யுவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வேலாயுதம் பெரியசாமி
யுவன் சந்திரசேகர் காணொளிகள். சுருதி டிவி
அன்புள்ள ஜெ,
யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நான் ஒன்றை கவனித்ததுண்டு. இங்கே ஒருவருக்கு விருது என்றால் மற்ற எழுத்தாளர்கள் பொதுவாக வாழ்த்து தெரிவிப்பதில்லை. வாசகர்கள் வாழ்த்து தெரிவிப்பதும் மிகக்குறைவு அதையும் மீறி ஒரு சில வாழ்த்துக்கள் கண்ணுக்குப் பட்டன.
யுவன் தமிழின் தனித்துவமான எழுத்தாளர். அவருடைய எழுத்துலகம் குடும்பம் இசை என இரண்டு பகுதிகளுக்குள் சுழல்வது. இசை வழியாகத்தான் அவருடைய குடும்பச்சூழலில் இருந்து புனைவு வெளியேறிச் செல்கிறது. அவருடைய கானல்நதி எனக்கு மிகவும் பிடித்த நாவல். அது இந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் இருவரின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல். இசை எல்லாவற்றையும் மிகையாக்குகிறது. உணர்சிகரமாக ஆகுகிறது. ஆகவே இசைக்கலைஞர்களின் வாழ்க்கையும் அப்படி கொஞ்சம் உணர்ச்சிகரமான மிகையுடனேயே இருக்கிறது. அவர்கலின் பேச்சும் பாவனையும்கூட மிகையானவை. அந்த மிகையான உலகத்தை அழகாகச்சொன்ன நாவல் அது.
அந்நாவல் ஒரு அழகான முரண்பாட்டைச் சொல்கிறது. ஏழை இசைக்கலைஞன். இசை ராஜகுமாரன். இருவருக்குமான உறவின் சிக்கலைச் சொல்லும் நாவல் அது
யுவன் சந்திரசேகருக்கு என் வாழ்த்துக்கள்.
சந்திரசேகரன் வேம்பார்
அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. யுவன் சந்திரசேகரின் நாவல்களில் குள்ளச்சித்தன் சரித்திரம் ஒரு அசலான தமிழ் நாவல். நம் சித்தர்மரபை வைத்து எழுதப்பட்ட நாவல்களில் க.ந.சுவின் அவதூதரும் குள்ளச்சித்தன் சரித்திரமும் தான் சிறந்த படைப்புகள். சித்தர்லீலைகளில் இருக்கும் மாயத்தை திகிலாகவோ மர்மமாகவோ பயன்படுத்தாமல் ஒரு ஆடலாகவே காட்டிய நாவல்கள் இவை. யுவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கிருஷ்ணப்பிரசாத்
யுவன் – விஷ்ணுபுரம்- கடிதங்கள்