சனாதனம், சனாதன எதிர்ப்பு
அன்புள்ள ஜெ
சென்ற சில நாட்களாக இந்த சனாதன விவாதத்தைக் கவனித்து வருகிறேன். குறிப்பாக உங்களை மையமாக்கி என்னென்ன சொல்கிறார்கள் என்று. எல்லாம் தங்களுக்குள் தாங்களே சொல்லிக்கொள்பவை. எவருக்குமே இன்னொருவரை சான்றுடன் தர்க்கரீதியாக சொல்லி புரியவைக்கும் மனநிலை இல்லை.
விவாதக்குழுமங்களிலே கண்டது.
ஒன்று, நீங்கள் கிறிஸ்தவர்கள் மதம் மாற்ற பணம் செலவிடுவதைக் கண்டித்திருந்தீர்கள். இந்துமதத்தை கண்டனம் செய்பவர்கள் பலர் கிறிஸ்தவ நிறுவனப்பின்னணி கொண்டவர்கள் என்று சொன்னீர்கள். இன்று நீங்களே அவர்களிடம் சரணடைந்துவிட்டீர்கள்.
இரண்டு: உதயநிதியின் சினிமா நிறுவனத்திற்காக நீங்கள் அவரை ஆதரிக்கிறீர்கள்
மூன்று, சினிமாவிலுள்ள கிறிஸ்தவர்களை தாஜா செய்கிறீர்கள்
நான்கு:ஆரம்பம் முதலே நீங்கள் கிறிஸ்தவ கைக்கூலி
மறுபக்கம் அதேபோல
ஒன்று, நீங்கள் ஆர் எஸ்எஸ் ஊடுருவல்காரர். இது உங்கள் அசைன்மெண்ட்
இரண்டு, நீங்கள் நுட்பமாக இதிலும் இந்துத்துவ நஞ்சை செலுத்துகிறீர்கள்.
நீங்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதாக நிரூபிக்கவே எல்லாரும் முயல்கிறார்கள். நல்லவேளையாக எவரும் உங்களைச் சொந்தம்கொண்டாடவில்லை. எல்லாருமே நிராகரிக்கிறார்கள்.
என்னால் இவர்களிடம் பேசவே முடிவதில்லை. இவர்களின் தன்னம்பிக்கை, கண்மூடித்தனம் திகைப்பை அளிக்கிறது.
கிருஷ்ணராஜ்
அன்புள்ள கிருஷ்ணராஜ்,
இது எப்போதுமே இப்படித்தான் இருந்துள்ளது. இன்று போர்கள் இல்லை. நூறாண்டுகள் முன்புவரை இங்கே போர்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ஒரு தரப்பை ‘எதிரி’ என அடையாளப்படுத்தி, அவருடைய எல்லாமே தீமையானவை என்று வகுத்துக்கொண்டு, அவனை கண்டதுமே இரக்கமில்லாமல் கொல்ல ஒரு மனநிலை வேண்டும்.
அதில் மாற்றுக்கருத்தை புரிந்துகொள்வது, எல்லாவற்றிலும் மறுபக்கத்தையும் பார்ப்பது, பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்துகொள்வது என்னும் பேச்சுகளுக்கே இடமில்லை. கண்மூடித்தனமே போருக்கான ஆற்றலை வழங்குகிறது. போர்வீரர்கள் மட்டுமல்ல, அப்போர்வீரர்களை உருவாக்கும் சமூகமும் அப்படித்தான் இருந்தாகவேண்டும்.
அந்த மனநிலைகள் அத்தனை எளிதாக அகன்றுவிடாது. சில தலைமுறைகள்கூட கடக்கவில்லை. அந்த வகையான பண்பாட்டுப்பயிற்சி அப்படியே இன்னமும்கூட நீடிக்கிறது. அதுவே இந்த கண்மூடித்தனங்களை உருவாக்குகிறது. இன்றைய தொண்டர்கள், பற்றாளர்கள் பெரும்பாலும் அந்த பழைய மனநிலையின் நீட்சி கொண்டவர்கள்.
அவர்களிடம் விவாதிக்க முடியாது. அறிவியக்கம் அவர்களுக்கு வெளியே தான் என்றும் நடந்து வந்துள்ளது. இன்னும் பலகாலம் அப்படித்தான் நிகழமுடியும்.
ஜெ