அன்புள்ள ஜெ
எளிமையான கேள்வி. நீங்கள் எல்லாவற்றுக்கும் தெளிவான பதிலை வைத்திருப்பதாகவும், எல்லாவற்றிலும் தெளிவான முடிவுகள் கொண்டிருப்பதாகவும், இலக்கியவாதிகள் அப்படி தெளிவான முடிவுகளுடன் இருக்க மாட்டார்கள் என்றும் ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் சொன்னார். இந்தக் குற்றச்சாட்டுக்கு நீங்கள் இதற்கு முன் பதில் சொல்லியிருக்கிறீர்களா?
ரவி செல்வம்
*
அன்புள்ள ரவி,
பலமுறை எழுந்த குற்றச்சாட்டு, பலமுறை சொல்லப்பட்ட பதில்.
தமிழ் இலக்கியம் நடுத்தர வர்க்கத்தின் வெளிப்பாடாகவே இருந்து வந்துள்ளது – இருந்து வருகிறது. அன்றாட அல்லல்பாடுகள், அவற்றை மீறிச்செல்லத் தேவையான கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் வீராப்பு – இவ்வளவுதான் இதன் பொதுவான உள்ளடக்கம். வாசகர்களும் பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரே. ஆகவே இது இவர்களே இவர்களுக்குள் ஆடிக்கொள்ளும் ஒரு விளையாட்டு. பழைய திண்ணைகளில் அமர்ந்து தாயம் விளையாடுவதுபோல. திண்ணையிலேயே தாயக்கட்டம் காலகாலமாக வரையப்பட்டிருக்கும்.
இந்த நடுத்தரவர்க்க எழுத்தின் மையப்பேசுபொருள் பாலியல் மீறல். அதாவது ஒழுக்கம், சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட எல்லைகளை கொஞ்சம் சீண்டிப்பார்த்து கிளுகிளுப்படைதல். அத்துடன் கொஞ்சம் பகற்கனவு. இன்னொரு பேசுபொருள், கையாலாகாத ஒருவகை அறச்சீற்றம், கொதிப்பு. இவ்வளவேதான். புதுமைப்பித்தன் சொற்களில், சீலைப்பேன் வாழ்க்கை.
இந்த நடுத்தரவர்க்க மனநிலையில் இருந்தே இந்த கேள்வி உருவாகிறது. எழுத்தாளர்களுக்கு எதைப்பற்றியும் கருத்து இருக்காது என்னும் வரியின் மெய்யான உள்ளடக்கம் ‘கருத்தெல்லாம் சொல்ல நாம யாரு சார்?’ என்னும் நடுத்தரவர்க்க பவ்யம்தான். இந்த மனநிலை காரணமாக இவர்கள் ஆழ்ந்த சிந்தனை எதற்கும் செல்வதில்லை. தத்துவார்த்தமாக, ஆன்மிகமாக எதையும் உசாவிக்கொள்வதில்லை. கண்ணுக்கும் செவிக்கும் பட்டவற்றுக்கு அப்பால் செல்வதில்லை.
அவர்களுக்கு சிறிய உலகியல் விஷயங்கள் மிகப்பெரியவை. எல்லாமே சிக்கலானவை. எறும்புகளுக்கு கூழாங்கற்களே மலைச்சிகரங்கள். உலகியலிலேயே உழல்பவர்களால் அதில் எதையும் சொல்ல முடியாது. ’கருத்து என எதையும் சொல்ல மாட்டேன், என் பிரதிகள் சொல்லட்டும்’ என்பது ஓர் உறுதிப்பாடு. அது அந்த இலக்கியவாதியின் இயல்புக்குரியது. சொல்லமுடியாது, அல்லது கூடாது என்பது இலக்கியவாதியின் இயல்பே அல்ல.
உலகமெங்கும் பேரிலக்கியவாதிகள் வாழ்க்கை பற்றிய திட்டவட்டமான பார்வைகளை உருவாக்கியவர்கள், முன்வைத்தவர்கள். சொல்லப்போனால் அப்படி அல்லாத பேரிலக்கியவாதி என எவரும் நான் வாசித்தவரை இல்லை. வாழ்க்கைக்கு என மாறாத உறுதிப்பாடுகள் இல்லை – அவ்வாறு சிலவற்றை கண்டடைந்தும் உருவாக்கியும் நிலைநிறுத்துவதும்தான் தத்துவம் இலக்கியம் ஆகியவற்றின் அடிப்படைப் பணி. நீங்கள் காணும் எல்லா விழுமியங்களும் இலக்கியவாதிகளும் தத்துவ வாதிகளும் உருவாக்கியவையே. அவற்றை மறுபரிசீலனை செய்யவைப்பவர்களும் அவர்களே.
இலக்கியவாதி தன் நிலையில் இருந்துகொண்டு தத்துவம் ,வரலாறு இரண்டையும் ஆராயலாம், மதிப்பிடலாம், கருத்துரைக்கலாம். மொத்தப் பண்பாட்டையும் மதிப்பிடவும், கருத்துரைக்கவும், வழிநடத்தவும்கூட அவன் தகுதிகொண்டவனே. நாம் வாசிக்கும் எல்லா பேரிலக்கியவாதிகளும் அவ்வழியையே நமக்குக் காட்டியுள்ளனர். தாகூரோ ,பாரதியோ, சிவராம காரந்தோ… ஏன் அங்கதத்தின் மொழியிலேயே எழுதிய பஷீர் கூட.
’நான் ஒரு எழுத்தாளன் அல்ல. நான் வாழ்ந்தவற்றைச் சார்ந்து சிலவற்றைச் சொல்ல வந்தவன். நான் ஆசிரியன். கற்பிப்பவன். நன்றாகக் கவனித்துக் கொள்ளவும், நான் வழிகாட்டுபவன்’ என்றார் பஷீர் ஒரு நேர்காணலில். தன் வாழ்நாள் முழுக்க பஷீர் தன் காலகட்டத்தின் அறவியலை முடிவுசெய்யும் ஆளுமையாகவே இருந்தார். அந்த இடத்தை நிலைநிறுத்தும்பொருட்டு அரசியல், கல்வித்துறை ஆகிய இரு அதிகாரங்களையும் தவிர்த்து வாழ்ந்தார். அவற்றிலிருந்த பெரும்பாலானவர்கள் அவருடைய நண்பர்கள் என்றபோதிலும்.
சிந்திக்க, சிந்தனையை முன்வைக்க, சமூகத்தை விமர்சிக்க,அதனூடாக சமூகத்துடன் உரையாட, சிந்தனைமரபை மறு ஆக்கம் செய்ய, ஒட்டுமொத்தச் சிந்தனையை ஊடுருவ இலக்கியவாதிக்குத் தகுதியுண்டு, பொறுப்பும் உண்டு. துரதிருஷ்டவசமாக தமிழ்ச்சூழலில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என மிகசிலரே அதை உணர்ந்து, அந்த தன்னம்பிக்கை கொண்டிருந்தனர்.
தமிழ்ச் சூழல் இலக்கியவாதிக்கு அந்த இடத்தை ஒருபோதும் அளித்ததில்லை. பெரும்பாலான இலக்கியவாதிகள் தங்களை தாங்களே சமூகம் விரும்பும்படிச் சுருக்கிக்கொண்டு, ‘சாமானியர்கள்’ என தங்களையே சொல்லிக்கொண்டு, ஒடுங்கிக்கொண்டார்கள். அவர்களின் சமூகநிலை, பொருளியல் நிலை ஆகியவையும் அதற்குரியவகையிலேயே அமைந்திருந்தன. ஓர் எழுத்தாளன் தன்னை ‘எளியோன்’ ஆக முன்வைக்கும் தோறும் தமிழ் உளவியல் அவர்களை கொண்டாடுகிறது. அவன் கொஞ்சம் நிமிர்ந்தால் பாதிப்பேர் வசைபாட, மீதிப்பேர் ஆலோசனை சொல்ல வந்துவிடுகிறார்கள்.
நான் அந்த இலக்கியச் சாமானியர்களில் ஒருவன் அல்ல. நான் எழுத்தாளனின் சமூக இடத்தை அங்கீகரித்த கேரளச்சூழலில் இருந்து வந்தவன், எந்த இடத்திலும் நிமிர்ந்து நின்று எழுத்தாளன் கருத்துச் சொல்லலாம் என இளமையிலேயே கண்டு வளர்ந்தவன். என் ஆதர்சங்கள் பஷீரும்,எம்.கோவிந்தனும், பி.கே.பாலகிருஷ்ணனும் தான். என் ஐந்து வயதுமுதலே. தமிழிலும் தன் காலகட்டத்தையே எதிர்கொண்டு பேசிய பெரும்படைப்பாளிகளான சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் இருவரையும் முன்னுதாரணமாகக்கொண்டவன். அவர்களுடன் பழகி உருவானவன்.
இங்குள்ள சீலைப்பேன் வாழ்க்கைக்கு எதிரான ஒவ்வாமையே என்னை பத்தொன்பது வயதிலேயே வீட்டைவிட்டு கிளம்பச் செய்தது. மலைகளிலும் காடுகளிலும் அலையச் செய்தது. பிச்சை எடுக்க வைத்தது. தெருக்களில் தூங்க செய்தது. ஆசிரியர்களையும் ஆன்மிக வழிகாட்டிகளையும் தேடி அலையச் செய்தது. இன்றும் அமைதியற்றவனாக ஆண்டெல்லாம் பயணம்செய்ய வைக்கிறது. நூல்களில் இருந்து நூல்களுக்கு, செவ்விலக்கியங்களில் இருந்து செவ்விலக்கியங்களுக்கு கொண்டுசெல்கிறது. பெருங்கனவுகளை நோக்கிச் செலுத்துகிறது.
நான் தமிழ்ச் சிற்றிதழுலகின் சிற்றுயிர் அல்ல. அவர்களின் சிறிய வாழ்க்கை, சின்னஞ்சிறிய கனவுகள் எனக்கில்லை. அவர்களின் மாறாத அன்றாடமும் எப்போதுமுள்ள சோர்வும் கொண்டவன் அல்ல நான். அந்த மனநிலைகளை எழுதவந்த போதே உடைத்து என் வழியை உருவாக்கிய படைப்பாளி. என்னை தமிழின் பழைய சிற்றிதழ் மதிப்பீடுகளால் அளவிட முடியாது. நான் உருவாக்கியிருக்கும் உலகம் ஒட்டுமொத்த தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியத்தை விட அளவிலும் ஆழத்திலும் பெரியது. அதற்குள் வரும் வாசகர்கள் மட்டுமே என்னை மதிப்பிட முடியும்.
சிந்தனை, படைப்பூக்கம், இலக்கியச் செயல்பாடு ஆகியவற்றில் நான் உருவாக்கிய அளவு ஒன்று இங்கே உள்ளது. அதைக் கடந்து செல்வதே இளைய படைப்பாளிக்குரிய மெய்யான அறைகூவல். அந்த கடந்துசெல்பவர்கள் நிகழ்வர் என்பதும் ஓர் உண்மை. தங்களால் அது இயலாதென்று உணர்ந்தவர்கள் தங்கள் திறனின்மைகளுக்கேற்ப உருவாக்கிக்கொள்ளும் சில்லறை அளவுகள் எழுந்து வரும் தமிழ் படைப்பாளிக்கு உரியவை அல்ல.தன் எல்லைகளை தலையால் அறைந்து உடைத்து மேலும் மேலுமென முன்னகர்பவர்களே நமக்குத் தேவை.
தமிழ்ச்சூழலில் ஒட்டுமொத்தப் பண்பாட்டையும் எதிர்கொண்டு, கருத்துருவாக்கம் நிகழ்த்தும் சிந்தனைவல்லமை கொண்ட புதிய படைப்பாளிகள் எழுந்து வரவேண்டுமென நான் எண்ணுகிறேன். தமிழகத்தின் அறவியல், தத்துவம், அன்றாடவாழ்க்கை ஆகியவற்றை இணைக்கும் ஆற்றல்கொண்டவர்கள் உருவாகவேண்டும். கலைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் அவர்கள் புதிய பார்வைகளை, நமக்கேயான கொள்கைகளை உருவாக்கவேண்டும். அவற்றை உலகின் முன் வைக்கவேண்டும். நாம் பெறுபவர்கள் மட்டுமல்ல, கொடுப்பவர்களும் கூட என்னும் நிலை எதிர்காலத்திலாவது உருவாகவேண்டும்.
*
சிந்தனை என்பது இலக்கியத்தில் இருந்து பிரிக்கவே முடியாதது. சிந்தனையும் கற்பனையும் இணையும் ஒரு மொழிவெளிப்பாட்டையே இலக்கியம் என்கிறோம். உலகின் மாபெரும் படைப்பாளிகளெல்லாமே சிந்தனையாளர்களே. அவர்களில் பலருக்கு தத்துவவாதிகளின் வரிசையிலும் இடமுண்டு – எந்த தத்துவக் கலைக்களஞ்சியத்திலும் அதைக் காணலாம்.
சிந்தனை என்பது எப்போதும் தெளிவை நோக்கியே செல்லக்கூடியது. அறிந்து, தெளிந்து, மேலும் வினாக்களை அடைவது. எந்த அளவுக்கு அன்றாடத்தில் தெளிவடைகிறீர்களோ அந்த அளவுக்கே தத்துவார்த்தமான ஆழத்தை, ஆன்மிகமான நுண்மையை அடைய முடியும். உலகியலில் தெளிவு என்பது அடிமரம் ஏறுவதுபோல. ஏறினாலொழிய கிளைக்குச் சென்று மலரைத் தொடமுடியாது. உலகியலிலேயே தெளிவற்றவர்கள் அதற்கப்பால் எதையும் யோசிக்க முடியாதவர்கள்.
எனக்குச் சில தெளிவுகள் உள்ளன. அவை உலகியல் வாழ்க்கை, சிந்தனையின் அடிப்படைகள் சார்ந்தவை. அவற்றை உறுதியாகவே வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொல்கிறேன். அந்த தெளிவை என் இலக்கியப்படைப்புகள் முன்வைப்பதில்லை. ஏனென்றால் இலக்கியம் தேடலே ஒழிய பிரச்சாரம் அல்ல. நான் எதை தெளிவுற உணர்கிறேனோ அது என் படைப்பில் இருக்காது. அந்தத் தெளிவைக் கடந்து மேற்கொண்டு நான் செல்லும் மேலும் நுண்ணிய பயணமே அவற்றில் இருக்கும். ஆகவே அவை பலதிசைகள் கொண்டவையாகவும், நுண்ணிய ரகசியவழிகள் கொண்டவையாகவும் இருக்கும். அறிந்தும் அறியாமலும் வாசகன் அவற்றுடன் தொடர்புகொள்கிறான். ஏனென்றால் நான் என் விடைகளை நோக்கிச் செல்லும் வழி இலக்கியம். என் ஆய்வுக்கருவி அது. என் தியானம் அது.
உலகியல், அடிப்படைச் சிந்தனை ஆகிய இரண்டிலும் என் தெளிவையே கூடுமானவரை உரையாடல்களில் முன்வைக்கிறேன். அவை உருவாக்கும் விவாதச் சூழல் நமக்கு தேவைப்படுகிறது. அதைச் செய்யாத பேரிலக்கியவாதிகள் எவருமில்லை. என் அகத்தேடலை எம் புனைவுப் படைப்புகள் மட்டுமே சொல்கின்றன. அதற்கும் அப்பால் எனக்குள் நிகழும் அலைக்கழித்தல்களை, தவிப்புகளை என் ஆசிரியர்களிடமே நான் பகிர்ந்துகொள்கிறேன்.
(மிக அரிதாக புனைவுக்கு அருகே செல்லும் சில குறிப்புகள் வழியாக பதிவ்செய்வதுமுண்டு- அவை பதிவாகவேண்டும் என்பதற்காக. அவை ஒருவகை டைரிக்குறிப்புகள்.)
என் உறுதிப்பாடுகள் நான் ஏறிச்செல்லும் உறுதியான படிகள். அவற்றினூடாக நான் மேலும் மேலும் உயரமான இடங்களுக்குச் செல்கிறேன். நுண்ணிய, அருவமான, சிக்கலான வினாக்கள் நோக்கிச் செல்கிறேன். இவற்றை மிதித்து ஏறாமல் அங்கே செல்லமுடியாது. இங்கேயே உழல்வதற்கு சாமானிய இலக்கியம் போதும், நான் எழுதுவதுபோன்ற எழுத்து தேவையில்லை.
ஜெ