சனாதனம், சனாதன எதிர்ப்பு
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
தாங்கள் தங்களது கட்டுரைகளிலும் பதில்களிலும் ‘நான் ஒரு வேதாந்தி, நாராயண குரு, நடராஜ குரு, நித்யா இவர்களின் மரபினன்’ என தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். நான் அம்மரபை தங்களின் மூலம் அறிய முயன்று கொண்டிருக்கிறேன்.
ஆனால் ஒரு சந்தேகம். அவ்வாறு நீங்கள் சொல்வதால் உங்கள் தந்தை உள்ளிட்ட முன்னோர்கள் பின்பற்றிய அனைத்தையும் பின்பற்றுவதில்லை என எடுத்துக்கொள்ளலாமா. ‘ஆம் , பின்பற்றுவதில்லை ‘ என நீங்கள் சொல்வீர்கள் என்றால் அது ஒரு மரபுச் சங்கிலி அறுபடுவதற்கு நிகர் இல்லையா. ?
அல்லது இரண்டையும் (நாராயண குரு மரபு மற்றும் உங்கள் குடும்ப மரபு) பின்பற்றுகிறீர்கள் எனில் அது சரியா?
இது எனது தனிப்பட்ட சந்தேகம். தயவு செய்து பதிலளிக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
அன்புடன்,
கே.எம்.ஆர்.விக்னேஸ்
அன்புள்ள விக்னேஸ்,
ஒருவர் தனக்கான அகவாழ்க்கையை தானாகவே தெரிவுசெய்துகொள்கிறார். அகவாழ்க்கை என்பது அறிவு, ஆன்மிகம் சார்ந்தது. அது எவ்வண்ணம் அமைய வேண்டும் என்பதை முடிவுசெய்வதில் அவருடைய தனித்தன்மையும் ஆளுமையும் (personality) உள்ளது.
ஒருவர் தன்னை சாமானிய உலகியலாளனாக எண்ணுவாரென்றால் அவர் இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஒன்று மரபு. இன்னொன்று, சூழல். இரண்டும் முக்கியமானவை
மரபு, சூழல் இரண்டும் எதிரெதிராகச் செல்லும் இரு விசைகள். மரபு ஒருவகையில் நிலையானது. ஏனென்றால் நீண்டகாலமாக வாழ்விலிருந்து திரட்டி எடுக்கப்பட்ட விழுமியங்கள் மற்றும் ஆசாரங்களால் ஆனது அது. சூழல் எப்போதுமே புதியது. மேலும் புதிய உலகம் நோக்கிச் செல்வது. ஆகவே வளர்ந்து மாறிக்கொண்டிருப்பது.
சூழலை பல்வேறு விசைகள் மாற்றியமைக்கின்றன. அறிவியல், தொழில்நுட்பம், உற்பத்திமுறை, நுகர்வு போன்ற பொருளியல் முறைகளும் வரலாற்று நிகழ்வுகளும் வாழ்க்கைச் சூழலை தொடர்ந்து மறு அமைப்பு செய்துகொண்டே இருக்கின்றன அதற்கேற்ப நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம். மாறாமல் எவரும் உயிர்வாழ முடியாது. அடர்காட்டுக்குள் வாழும் பழங்குடிகள் கூட மாறிக்கொண்டேதான் இருக்கிறர்கள்.
ஓர் உலகியலாளன் தன் குடும்பப் பின்னணியில், தன் மதத்தில் இருந்து திரண்டு வந்து இளமையிலேயே தனக்களிக்கப்பட்ட மரபை கடைப்பிடித்து வாழமுடிவெடுக்கலாம். அதுவே அவனுக்கு இயல்வது. அதையே பெரும்பாலும் அனைவரும் செய்கிறார்கள் என்பதும் உண்மை. அதில் பிழையேதுமில்லை. ஏனென்றால் அந்த மரபு காலத்தால் உறுதிசெய்யப்பட்டது.
இந்த மரபு என்பது மூன்று கூறுகளால் ஆனது. ஒன்று, நம்பிக்கைகள். இரண்டு விழுமியங்கள். மூன்று ஆசாரங்கள்.
நம்பிக்கை என்பது முதன்மையாக தெய்வங்கள் மீதும், பல்வேறு குறியிடுகள் மீதும் அமைவது. நம்பிக்கைகளே ஒருவனின் அகம் இயங்குவதற்கு அவசியமான அடிப்படையான படிமங்களை அளிக்கின்றன. பழமையில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட படிமங்கள் இல்லாத எந்த உள்ளமும் இல்லை.
மதம், பண்பாடு என பலவகையான களங்களில் இருந்து இந்தப் படிமங்கள் நம் உள்ளத்துக்கு வந்து சேர்கின்றன. அவற்றின் மீதான நம்பிக்கையே நம்மை உணர்வுபூர்வமானவர்கள் ஆக்குகின்றது. கலை, இலக்கியம், ஆன்மிகம் மூன்றுமே அப்படிமங்களால் ஆனவையே. அவை இன்றி சிந்தனையே சாத்தியமில்லை. இதுவரையிலான மானுடவாழ்க்கையுடனான நம் தொடர்பு அவற்றின் வழியாகவே.
அதைப்போன்றவையே விழுமியங்களும். எந்தச் சமூகமும், எந்த மனிதனும் மரபிலிருந்து விழுமியங்களைப் பெற்று, அவற்றின் அடிப்படையிலேயே வாழ்கிறான். நாகரீகம் என்பது விழுமியத்தொகைதான். அன்பு.பாசம்,காதல், நீதி,அறம் போன்றவை. பெரியோரை மதித்தல், பெண்களுக்கு முன்னிடம் கொடுத்தல் போன்ற பழக்கவழக்கங்கள் விழுமியங்களே.
ஆசாரங்களும் நம் வாழ்க்கையில் மரபிலிருந்தே அமைகின்றன. எந்த நவீன மனிதனும் பலவகையான ஆசாரங்களைக்கொண்டே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். பிறந்தநாள் வாழ்த்து சொல்வதுகூட ஆசாரமே.
இவ்வாறு மரபிலிருந்து நம்பிக்கைகள், விழுமியங்கள், ஆசாரங்கள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு வழும் ஒருவர் அவற்றைச் சூழலுடன் இணைத்தாகவேண்டும். அவ்வாறு இணைக்காமல் எவரும் வாழ்வதில்லை. பெரும்பாலானவர்கள் கட்டாயத்தால் அல்லது தங்களை அறியாமல் அவ்வாறு இணைத்துக்கொள்கிறார்கள். அதை பிரக்ஞைபூர்வமாக செய்வதே உகந்தது.
மரபில் இருக்கும் பல நம்பிக்கைகள் இன்றைய சூழலில் வன்முறையானவையாக, பண்படாதவையாக இருக்கலாம். பல விழுமியங்கள் இன்று பொருந்தாதவை ஆகியிருக்கலாம். பல ஆசாரங்கள் இன்று பிழையானவையாக, அநீதியானவையாக மாறியிருக்கலாம். காலமாற்றத்துக்கு ஏற்க அவ்வாறு பல அடிப்படைகள் மாறும் என்றே நூல்கள் சொல்கின்றன. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்று நன்னூல் சொல்வதும் ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்னும் பழமொழியும் அதையே குறிக்கின்றன.
விழுமியங்களே மாறக்கூடும். தந்தைசொல் மிக்க மந்திரமில்லை என்பது பழைய விழுமியம். நம் தொல்நூல்கள் வலியுறுத்துவது. இன்றைய வாழ்க்கையில் அது எங்கும் இயல்வது அல்ல. தந்தைசொல்லை கருத்தில்கொள்ளலாம், அப்படியே பின்பற்ற எவருக்கும் இயலாது. ஏனென்றால் இன்றைய சூழலில் வாழ்க்கை மிக வேகமாக மாறுகிறது. தந்தையர் வாழ்ந்த உலகச்சூழல் மைந்தனுக்கு இல்லை. தந்தையின் வழிமுறைகளும் எண்ணங்களும் மைந்தர்களுக்கு பொருந்துவதில்லை. தந்தையை மீறியே பெரும்பாலும் அனைவரும் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.
அதேபோலத்தான் பல ஆசாரங்களும். தெய்வங்களுக்கு ங்உயிர்ப்பலி போன்ற பல ஆசாரங்கள் இன்றையச் சூழலுக்கு ஒவ்வாதவை. சாதிப்பாகுபாடு, சாதிவெறி, தீட்டுபார்த்தல் போன்ற ஆசாரங்கள் மானுடவிரோதமானவை. அவற்றைக் கடைப்பிடிப்பவரை இருளில் தள்ளுபவை. அவற்றை புறந்தள்ளி காலந்த்தோடு ஒட்டிய, நம்பிக்கைகளும், விழுமியங்களும் ஆசாரங்களும் கொண்டு வாழ்வதே உலகியலில் சிறந்த வழி.
அவ்வாறன்றி, மூதாதையர் வாழ்க்கையை ‘அப்படியே’ வாழ்வேன் என்று சொல்பவர்களை கவனியுங்கள். உணவு, உடை, தொழில் என அனைத்திலும் அவர்கள் நவீன வாழ்க்கையுடன் சமரசம் செய்துகொண்டிருப்பார்கள். அதில் தங்கள் வசதிகளை மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் தங்கள் தன்னலத்துக்கு எந்தவகையிலும் தடையல்ல என்றால் எல்லாவகையான பழைய ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிப்பார்கள். அது சகமனிதனுக்கு தீங்கானது, சமூகநெறிக்கு மாறானது என்றாலும்கூட அதை தங்கள் மரபு என்பார்கள். அதை மூதாதையர் வழி என நியாயப்படுத்த முயல்வார்கள்.
உலகியலின் பொதுவழி என்பது தனக்கு வந்த மரபை இன்றைய சூழலுடன் இணைத்துக்கொண்டு வாழ்வது. நவீன அறம், ஒழுக்கம் ,நாகரீகத்துடன் முரண்படாமல் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது. அதையே நீங்கள் சொல்கிறீர்கள். அதற்கு வெளியே இரண்டாவது வழி ஒன்றுண்டு. மிகச்சிலருக்கே உரியது அது. அதை அறிவின் வழி எனலாம்.
அது தனக்கான வாழ்க்கை நெறியை, தனக்கான ஆன்மிகத்தை தானே தேடிச் சென்று, கற்றுக்கொண்டு, முன்னகர்வது. ஒன்றை கற்றுக்கொண்டு முன்னகர்கையில் ஏற்கனவே இருந்தவை பலவற்றை உதறிவிட்டே செல்கிறோம். எல்லா கல்வியும் ஏற்கனவே இருந்த ஒரு கல்வியை அழித்து அங்கே தன்னை நிறுவிக்கொள்கிறது.
இந்தப்பாதையில் ‘மூதாதையர்’ முக்கியம் அல்ல. ’ஆசிரியர்கள்’ மட்டுமே முக்கியம். வழிவழியாக வருவனவற்றை ஏற்று ஒழுகுவது அல்ல இது. தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டே இருப்பது. இதில் ஆசிரியரின் வழிகாட்டலும் நாம் அடையும் அறிவும் நம் மூதாதையரை கடந்துசெல்லும்படி கோரும் என்றால் அவ்வாறே செய்தாகவேண்டும்.
நான் என் மூதாதையர் வழிவந்த எதையும் எனக்கானதாக கொள்ளவில்லை. ஏனென்றால் நான் என் பாதையை அறிவார்ந்ததாக ஆக்கிக்கொண்டேன். ஆகவே என் ஆசிரியர்களையே ஏற்றுக்கொண்டேன். அவர்கள் வழியாக கற்றுக்கொண்டு முன்னகர்ந்தேன். அந்தப் பாதையில் என் மரபில் இருந்து எவற்றை உதறவேண்டுமோ அவற்றை எல்லாம் தயங்காமல் உதறினேன். அதுவே என் வழி.
நான் நித்ய சைதன்ய யதியின் மாணவன். பாகுலேயன் பிள்ளையும், அவர் தந்தை சங்கு ஆசானும் எனக்கும் குருதிவழி முன்னோர் மட்டுமே. அவர்களின் சிந்தனையின் வாரிசு அல்ல நான். அவர்களின் உணர்வுகளின் வாரிசும் அல்ல. இதுவே என் தன் வரையறை. நாராயண குருவின் மரபே என்னுடையது
இதில் மரபுச் சங்கிலி அறுபடுகிறதா? இரண்டு மரபுச்சங்கிலிகள் உள்ளன. ஒன்று சமூக மூதாதையரின் மரபுச்சங்கிலி. குடும்பம், சமூகம் என வழி வழியாக வருவது. இன்னொன்று அறிவுமரபின் சங்கிலி. நித்ய சைதன்ய யதி அந்த அறிவுச்சங்கிலியில் இருக்கிறார். அவருக்கு முன் நடராஜ குரு, நாராயண குரு, தைக்காடு அய்யாவு என அது நீண்டு நீண்டு சென்று பாதராயணர் வரை செல்லக்கூடும். இன்னொரு பக்கம் தமிழ்ச்சித்தர் மரபாக நீண்டு அகத்தியர் வரை செல்லக்கூடும். அதுவும் தொடர்சியெ.,
இந்த ‘அறிவின் பாதை’ யை தெரிவுசெய்ய ஒரு முழுமையான நோக்கு தேவை. தொடர்ச்சியாக கற்றுக்கொண்டிருக்கும் மனநிலையும் உழைப்பும் தேவை. உரிய ஆசிரியர்களை கண்டடைந்து கற்றுக்கொள்ளும் தன்னடக்கமும் தேவை. அவை ஏதுமில்லாமல், தனக்கு பிடித்த கருத்துக்களை அவ்வப்போது தன் வசதிப்படி ஏற்றுக்கொண்டு, அதை சுயசிந்தனை என்று சொல்லிக்கொள்பவர்கள் உண்டு. அவர்கள் தேவையானபோது சட்டென்று மரபின் பாதைக்கும் திரும்பிவிடுவார்கள். நான் சொல்வது உண்மையான ஞானப்பாதையை.
அறிவின்பாதை எந்தவகையானதாகவும் இருக்கலாம். அது ஆன்மிகமோ ஆன்மிக எதிர்ப்போ ஆக இருக்கலாம். கலை அல்லது மெய்யியல் சார்ந்ததாக இருக்கலாம். அறிவியல் அல்லது அரசியல் சார்ந்ததாக இருக்கலாம். அதை தேர்வுசெய்பவர் தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டு முன்செல்கிறாரா, அவர் தன் வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் அதன்படி அமைத்துக்கொண்டிருக்கிறாரா என்னும் இரண்டு கேள்விகளே அடிப்படையானவை
ஜெ