சனாதனம், கடிதங்கள்

சகோதரன் ஐயப்பன்

சனாதனம், சனாதன எதிர்ப்பு

சனாதனம்ப் பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன், அதில் திரு. திருமா அவர்கள் ஆதரவு இணைப்பையும் படித்தேன்.நீங்கள் விளக்கியுள்ளதுபோல் எத்தனை பேர் சனாதன எதிர்ப்பை, புரிந்து கொள்வார்கள், மிகச் சிலரே இருப்பர் இந்த சூழலில். சனாதன தர்மம் என்பது இந்து தர்மத்தை குறிக்கும் ஒரு பொதுவான  சொல்லாகவே இருந்துள்ளது. நீங்கள் கட்டுரையில் சொன்னதை வைத்து பார்த்தாலே பொது பார்வையில் சனாதன எதிர்ப்பு என்பது மொத்த இந்து மதத்தையும் எதிர்ப்பது போல் தோற்றமளிக்கிறது. முற்போக்கு எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள் பவர்கள் முன்னிலையில் ஒரு கட்சி  அமைச்சர்   சனாதனத்தை ஒழிப்போம் என்பது

முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது, நீங்கள் விளக்கியிருப்பதுபோல் அமைச்சர்   “சனாதன எதிர்ப்பு “என்றால் என்ன என உள் வாங்கி புரிந்து பேசியிருப்பாரா என்பது சந்தேகமே. நான் சொல்லவருவது “சனாதனம் “எனும் பதம் பொதுவாக மொத்த  இந்துக்களையும் உணர்ச்சிவயப்பட வைக்கும் ஒரு சொல்லாக இருக்கும் போது,  மத வெறி, சாதி பாகுபாடை குறிக்கும் ஒரு மாற்று சொல்லை பிரயோகப்படுத்தலாமே, மற்ற மதங்களில் இந்து மதத்தில் இருப்பதை விட இன்னும் அதிகமான பிற்போக்கு தனங்கள் இருக்கும் போது, “சனாதன எதிர்ப்பு “என்பது ஒரு மதத்தை குறி வைத்து பேசுவது போல் உள்ளது.

அன்புடன்

பன்னீர்.

அன்புள்ள பன்னீர்

எந்த ஒரு விவாதத்திலும் சொல்பவர் என்ன உத்தேசிக்கிறார் என்பதை அவர் தரப்பைக்கொண்டு உணர்வதே நியாயமான விவாதம். நாம் என்ன புரிந்துகொள்கிறோமோ அதற்குச் சொல்பவர் பொறுப்பேற்கவேண்டும் என்று சொல்வது பிழை.

அரசியலில் எப்போதுமே இதெல்லாம் கவனிக்கப்படுவதில்லை. திமுக சொன்னதை பாஜக அவர்களுக்குரிய அரசியல் ஆயுதமாக கொண்டுசெல்கிறார்கள். திமுகவே அவர்களுக்கு வசதியானபடித்தான் பிறர் சொன்ன எல்லாவற்றையும் திரித்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  நேருவின் ‘நான்சென்ஸ்’ என்ற ஒற்றைச் சொல்லை இப்படித்தான் இனவாதப்பார்வையாகத் திரித்து தேர்தல் ஆயுதமாக்கினர். அது அரசியல்.

நான் பேசிக்கொண்டிருப்பது அரசியல் அல்ல

ஜெ

அன்புள்ள ஜெ

என் நண்பர்கள் இருவர் சனாதனம் கட்டுரையை வாசித்தபின் ‘பிராமணர்களையும் இந்து மதத்தையும் பிரிக்கும் சூழ்ச்சி’ என்று கடுமையாகக் கருத்துச் சொன்னார்கள். பலர் உங்களிடமும் சொல்லியிருப்பார்கள்.

சிவக்குமார் ராம்

அன்புள்ள சிவக்குமார்,

இம்மாதிரி விஷயங்களில் அவரவர் சாதி – மத – இன அரசியலை முன்வைத்து யோசிப்பவர்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாது.

பிராமணர்கள் அனைவரும் வைதிக தத்துவ மரபினர் ஆக இருந்தாகவேண்டும் என்பதில்லை. உண்மையில் அப்படி இல்லை என்பதே கண்கூடு. வேதாந்தத் தரப்பிலும் கணிசமானவர்கள் பிராமணர்களே. வேதஎதிர்ப்பாளர்களிலும், பௌத்தர்களிலும் ஏராளமான பிராமணர்கள் வரலாற்றுக்காலம் முதல் இருந்துள்ளனர். தாராளவாதிகளும் மார்க்ஸியர்களுமான பிராமணர்களும் உள்ளனர். இ.எம்.எஸ் மகாவைதிகக் குடியைச் சேர்ந்தவர்.

அக்கட்டுரையிலேயேகூட வைதிக மரபின் இருப்பை நான்  மறுக்கவில்லை  அது ஒரு தரப்பு என்றே சொல்கிறேன். அதன் பங்களிப்பையும் ஏற்கிறேன். ஆனால் அதுவே இந்துமதம், அதுவே இந்துமதத்தின் மையம் என்னும் கருத்தை ஏற்கவில்லை. அதற்கு எதிரான குரல்கள் என்றும் இருந்துள்ளன, அக்குரல்களுக்கான சமூகநியாயங்களும், தத்துவார்த்தமான நியாயங்களும் உள்ளன என்று மட்டுமே குறிப்பிடுகிறேன்.

ஒருவர் சனாதனியாக- வைதிகராக – இருப்பது அவருடைய தெரிவு. தன் தரப்பை நம்ப, அதற்கேற்ப வாதிட அவருக்கு உரிமை உண்டு. அவர் என்னை கடுமையாக மறுப்பதும் எனக்கு முழு ஏற்புடையதே. நாராயண குருவை சனாதனிகள் நிராகரிப்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர் தானே இந்துமதம் என்றும், தனக்கெதிரான எல்லா மறுப்புகளும் இந்துமதத்தை அழிக்கும் முயற்சிகள் என்றும் சொல்வார் என்றால் அது ஏற்புடையது அல்ல.

இது உங்கள் தெளிவுக்காக. எதிர்மனநிலை கொண்டவர்களுக்கு புரியவைக்க முடியாது. அதைத்தான் ஆரம்பம் முதலே சொல்கிறேன். தத்துவத் தரப்பை எளிதில் புரியவைக்க முடியாது. ஏனென்றால் தன்னலத்துக்காக அதை எப்படியும் கொண்டுசெல்லமுடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைதனியிடத்தில் நிகழ்பவை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமேல்சித்தாமூர்