தியானமுகாம், கடிதம்

* மலைதங்குமிடத்தில் சமீபத்தில் நடைபெற்ற தியான மற்றும் உளக்குவிதல் முகாம், இக்காலத்தின் மாபெரும் சிக்கல்களான- ஒரு விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த இயலாத தன்மை,  தூக்கமின்மை, உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்கள் போன்ற பலவற்றின் மூலத்தை அறிந்து கொள்ளவும், அதிலிருந்து விடுதலை பெற்று- அமைதியான & சந்தோஷமான வாழ்வினை மேம்படுத்தி கொள்வதற்கானபல வாழ்வியல் வழிமுறைகளையும் கற்றுக்கொள்வதற்கான தளமாக இருந்தது.

* கற்பிக்கும் இடம் கற்றலை மேலும் எளிமையாக்கி இன்பயமாக்கும் என்பதை வெள்ளிமலைக்கு வந்த அனைவருமே உணர்ந்திருப்பர். லேசான தூறலுடன் வந்த குளிர்ந்த தென்றல், மிதமான வெயில் மற்றும் பல்வேறு பறவைகளின் வித விதமான
ஒலிகள், இவை இன்னும் கற்றலின் மீதான தீவிரத்தை அதிகப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

*பல்வேறுபட்ட ஆசனங்கள், பிராண யாமம், நாடிசுத்தி பயிற்சி மற்றும் சைதன்யா தியான முறையின் மூன்று படிநிலைகள் போன்றவை எளிமையாகவும் எல்லா வயதினரும்சுலபமாக செய்ய கூடியவையாகவும் இருந்தது. இசையுடன் உடல் மற்றும் மனதைஇணைத்து எல்லோரையும் ஆட வைத்தது இதுவரை அனுபவிக்காத ஒன்றாகவும், குழந்தை சென்றதை போலவும் இருந்தது.

* “இக்கணத்தில் வாழும் கலையை” பல உதாரணங்களுடன் குரு விளக்கிய விதமும் அதனை நிகழ்வின் பகுதியாகவே சாத்தியப்படுத்திய விதமும் மிக நன்றாக இருந்தது. இறந்த கால வருத்தங்கள், எதிர்கால பயம்-பதற்றங்களிலிருந்து விலகி “நிகழ்காலத்தில் வாழும் மனிதனால்” ஆற்ற கூடிய செயல்கள் கூடுதல் சிறப்பு பெறுகிறது என்பதை இந்த நான்கு நாட்களிலே என்னால் நன்றாக உணர முடிகிறது.

-உட்கொள்ளும் உணவின் எண்ணிக்கை குறைவதுடன், அதன் சுவையையும் ஆழ்ந்து உணர முடிகிறது. கவனத்தோடு குளிப்பதால் நீர் தேவையின்றி விரையம் ஆவது குறைந்து, சேமிக்கப்படுவதை உணர முடிகிறது. செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் முழு கவனம் செலுத்துவதால் இரு நாள் வேலையை கூட ஒரே நாளில் செய்ய முடிகிறது. நம் மீது நாம் கொண்டிருக்கும் அர்த்தமற்ற பயம் , பதற்றம் விலகி நம்பிக்கை கூடுவது, அதன் விளைவாக மனமும் உடலும் அமைதி பெறுவதை
நன்கு உணர முடிகிறது.

* எல்லையற்ற பிரபஞ்சத்தின் தன்மையை உணர மனிதன் எல்லைக்கெல்லாம் அப்பாற்பட்டு சிந்தனை செய்ய வேண்டிய தேவையையும், அதன் வழியாக அவன் ஆற்றவேண்டிய செயலின் அத்தியாவசியத்தையும் மிக தெளிவாக எடுத்துரைத்தார். பஞ்சபூதங்களும், உடலும்-மனமும்-பிராணனும் எப்படி ஒன்றை ஒன்று சார்ந்து வாழுகின்றன என்பதையும் விளக்கினார். இதனால், உலக உயிர்களெல்லாம் அடையும்பேரின்பத்தை நினைக்கும் பொழுது , மற்ற உயிர்களைவிட மனிதனுக்கு தரப்பட்டுள்ள தனி சிறப்பையும் அதன் வழியாக அவன் ஆற்ற வேண்டிய பொறுப்பையும் நன்கு உணர முடிகிறது. இது என்னுடைய தேவையற்ற கவன சிதறல்களிலிருந்து விலக்கி, செய்து கொண்டிருக்கும் செயலின் மீதான ஆர்வம் & தீவிரத்தை அதிகப்படுத்துவதை நன்கு உணர முடிகிறது.

* அகத்தையும் புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வதால் மனிதன் அடையும் மாபெரும் விடுதலை உணர்வினை கூட கதைகள் வாயிலாக குரு எடுத்து சொன்ன விதமும் அருமை. உலகின் உண்மையை ஏற்றுக்கொள்ளாத வரை ஒருவன் அடையும் அக(புற)சிக்கலையும், ஏற்று கொள்ளும் பொழுதிலிருந்து அவன் அடையும் விடுதலையையும் எளிமையாக விலக்கிய விதமும் சிறப்பாய் இருந்தது.

* புத்தரின் தம்ம கொள்கைக்கும், ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைக்கும் இடையே உள்ள தொடர்பையும் கர்மயோகத்திற்கும், கர்மத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும் குரு விளக்கினார்.

*தன்மீட்சி, தன்னைக்கடத்தலில் ஜெயமோகன் சார் சொல்லியிருக்கும் பல விஷயங்களை நடைமுறையில் உணர இந்த நிகழ ஒரு பெருவாய்ப்பாக இருந்தது

*பல நிலங்களிலிருந்து வந்திருந்த பல செயல் மனிதர்களின் அன்பும், அனுபவங்களும் நிகழ்வினை ஒரு விழாவாக மாற்றியது. இறுதியாக , தனது கர்மயோகத்தை நிறைவேற்ற வாய்ப்பளித்த அத்தனை பேருக்கும் குரு உணர்வு பூர்வமான நன்றியை வெளிப்படுத்திய விதம் நிகழ்வை மேலும் நெகிழ செய்தது.

*மிகவும் பொறுமையாக, எளிமையாக நேர்த்தியாக பயிற்சி அளித்த குரு தில்லை செந்தில் பிரபு மற்றும் அவருடைய உதவியாளர்கள், நிகழ்வினை மிக சிறப்பாக ஒருங்கிணைத்த அந்தியூர் மணி அண்ணா, அஜிதன், சரஸ்வதி அக்கா, முருகன், மற்றும் பொம்மையன் அண்ணா போன்ற அனைவருக்கும் நன்றிகள்.

* இந்த வாழ்வு எத்துணை அழகானது, அள்ள அள்ள குறையாத இன்பம் தரக்கூடியது என்பதை உணர வாய்ப்பளித்த ஆசிரியருக்கு மிக்க நன்றிகள்.

க. பிரபாகரன்,  சென்னை

முந்தைய கட்டுரைஅகழ் நாள்தோறும்
அடுத்த கட்டுரைகுமரி, கடிதம்