வணக்கம். நலம்தானே? இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக நண்பர் யுவன் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சந்தித்த நாள் முதல் நட்போடு இருக்கும் சிலரில் ஒருவர் அவர். அவருடைய ஒற்றை உலகம் தொகுப்பு வந்த நாள் முதல் அவருடைய எல்லா எழுத்துகளையும் படித்திருக்கிறேன். துள்ளலான நடையில் படிக்கும்போதே ஒருவித சுவாரசியத்தைத் தக்கவைத்தபடி. தன்போக்கில் போய்க்கொண்டே இருக்கும் கதையமைப்பை அவர் வெற்றிகரமாக இன்றுவரை கையாண்டு வருகிறார். கதை தொடங்கிய பத்து வரிகளுக்குள் நம்மையறியாமலேயே நாம் அவர் கதைகளுக்குள் சென்றுவிடுவோம். ஒவ்வொரு படைப்பும் ஒரு புது அனுபவம். அவருடைய படைப்புலகத்தை சுருக்கமாக நான் கனவின் இனிமை என்று குறிப்பிடுவேன். அவருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நாளில் குற்றாலம், ஒக்கேனக்கல், உதகை என பல இடங்களில் சந்தித்து உரையாடிய தருணங்கள் நினைவில் எழுகின்றன. அவருக்கு என் வாழ்த்துகள். இத்தருணத்தை அளித்த உங்களுக்கு நன்றி.
அன்புடன்
பாவண்ணன்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு Phenomenon. அவருடைய படைப்புகள் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் நிறையவே இருக்கின்றன. யுவனின் படைப்புகள் பற்றிப் பேசுவது என்பது ஏறத்தாழ ‘கதைமரபு’ குறித்துப் பேசுவதுதான். உண்மையில் தற்போது இலக்கிய விமர்சனம் என்ற பெயரில் படைப்பில் வெளிப்படும் மனிதாபிமானம், முற்போக்கு சங்கதிகள், எழுத்தாளரின் சமூக பொறுப்பு என்று எதையெதையோ பேசுகிறோம். ஆனால் இலக்கியம் என்பது அடிப்படையில் கதை சொல்வதுதான்.
கதை என்ற சொல்லின் மீது நம் சூழலில் மரியாதையான அபிப்ராயம் இல்லை. ‘கதை விடுகிறான் , சரடு விடுகிறான்’ என்பதெல்லாம் நாம் அன்றாடம் கேட்கும் வாக்கியங்கள். ஆனால் கதை சொல்வது அவ்வளவு எளிய செயல் எல்லாம் இல்லை. ( கதை சொல்ல இயலாது பாமர மனங்கள்தான் கதை மீதான கேலியை உருவாக்கி இருக்கக்கூடும்)வாய்வழியாகக் கதை சொல்வதை விட சிக்கலானது எழுத்தின் வழியே ‘கதை சொல்வது’. யுவன் சந்திரசேகர் நம் காலத்தின் மாபெரும் கதை சொல்லி என்ற வரியை திரும்பத் திரும்ப கேட்க முடியும். ஆனால் அவர் கதை சொல்லும் முறைக்கு நவீன தமிழ் எழுத்தில் முன்னோடிகள் கிடையாது. தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் எழுத்தின் வழியே கதையை சொல்லிச் செல்லும் தன்மையில் யுவன் சந்திரசேகர் தொட்ட உயரங்கள் வேறு. இந்தக்கூறல் முறை வழியாக அவர் படைப்புகள் சென்று தொடும் ஆழமும் யாரும் செல்லாதது. அவர் படைப்புகள் பற்றி விரிவாக விவாதிப்பதற்கான ஒரு வாசலை விஷ்ணுபுரம் இலக்கிய விருது உருவாக்கி இருக்கிறது.
யுவன் எதிர்கால வாசகர்களை நோக்கிப் பேசுவதாக எனக்குத் தோன்றும். ஏனெனில் நவீனத் தமிழ் இலக்கியத்தை ஒருவர் எவ்வளவு ஆழக் கற்றிருக்கிறாரோ அந்த அளவு யுவனின் எழுத்து பரவசப்படுத்தும். ஆகவே எதிர்வரும் நாட்களில் யுவனின் படைப்புகள் மீதான வாசிப்பு அதிகரிக்கும். ஏறத்தாழ யுவனின் எல்லா சிறுகதைகளையும் மூன்றுமுறை வாசித்து இருக்கிறேன். தமிழின் முதன்மையான சிறுகதை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்தான் என்பது என் எண்ணம்.(நாவல்கள் பற்றித் தனியே பேச வேண்டும்) ஆனால் இதை அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம் இதுவரை தமிழில் எழுதி அமையப்பெற்ற சிறுகதை வடிவம் சார்ந்த போதத்துக்கு வெளியே நிற்பவையாகவே யுவனின் தொன்னூறு சதவீதக் கதைகள் உள்ளன. ஆகவே யுவன் சந்திரசேகர் கதைகளை முன்னிட்டு சிறுகதை என்ற வடிவத்திற்கு நாம் வகுத்து வைத்திருக்கும் வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது. மாபெரும் படைப்பாளிகளே இத்தகைய உடைவுகளை ஒரு இலக்கிய வடிவத்தில் உருவாக்க இயலும். யுவன் சந்திரசேகர் அத்தகைய மாபெரும் ஆளுமை. அவருக்கு என் வணக்கங்கள்.
சுரேஷ் பிரதீப்
2023 -வது ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளரும் கவிஞருமான யுவன் சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் நவீன இலக்கியத்தில் சிறுகதை, நாவல், கவிதை என மூன்று தளத்திலும் குறிப்பிடும்படியான பங்களிப்பை நிகழ்த்தியுள்ள யவனுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
கீரனூர் ஜாகீர் ராஜா