அன்புள்ள ஜெ
யுவன் சந்திரசேகர் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது 2023 ஆண்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது மனநிறைவை அளிக்கிறது. நான் யுவன் சந்திரசேகரை நீண்டகாலமாக வாசித்து வருகிறேன். நான் அறிந்த ஓர் உலகம் அவர் கதைகளில் இருப்பதுதான் காரணம். அவருடைய கதைகளிலுள்ள மாற்று மெய்மை என்று அவர் சொல்லும் மந்திரமாயங்கள் என் பிரச்சினை அல்ல. ஆனால் அவருடைய மனிதர்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நடுத்தரவர்க்க குடும்பங்கள், வெவ்வேறு சாதி மதங்களைச் சார்ந்தவர்கள். சிறிய வேடிக்கைகளும் சிறிய வாழ்க்கைப்பிரச்சினைகளும் கொண்டவர்கள். யுவன் சந்திரசேகர் அவர்களின் வாழ்க்கையை இயல்பாகவும் நுணுக்கமாகவும் எழுதிய படைப்பாளி.யுவன் சந்திரசேகரின் வாசகர்கள் நிறையபேர் உண்டு. அவரை விருதுடன் கௌரவப்படுத்துவது அனைவருக்கும் மனநிறைவை அளிக்குமென நினைக்கிறேன்.
சாந்தகுமார் ஜி
அன்புள்ள ஜெமோ
யுவன் சந்திரசேகரின் கதைகளை ஒரு கேலியுடன் நான் வாசித்த நாட்கள் உண்டு, அவர் சொல்வது ஒரு புனைவுலகை மட்டும்தான் என்று நான் நினைத்தேன். சில மேலைநாட்டு எழுத்தாளர்களின் சூடோ மெடஃபிசிக்ஸை இங்குள்ள சில செவிவழிக்கதைகளுடன் இணைக்கிறார் என்றும் தோன்றியதுண்டு. ஆனால் எனக்கு ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு Third level heart attack வந்தது. அது ஒரு பெரிய அனுபவம். நம் உடல் எப்போதும் நம்முடன் இருக்கிறது. நான் இதையெல்லாம் சொல்லமுடியாது. நம் மனசு இங்கே எல்லாவற்றுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. உடம்பு தனியாக இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். உடம்பும் அப்படி எல்லாவற்றுடனும் இணைந்துதான் இருக்கிறது என்றும் தெரியும். என்னால் ஒரு தெரு நாயுடன் மிக நுணுக்கமாகப்பேசமுடிந்தது. அதை சொன்னால் கேலிக்கூத்தாக ஆகிவிடும். ஆனால் அந்த உலகத்தை யுவன் சந்திரசேகரின் கதைகளிலே கண்டுகொண்டேன். மிகுந்த கொண்டாட்டமான ஒரு வாசிப்பாக அதன்பின் அவர் நூல்கள் ஆகிவிட்டன. அவருக்கு விருதுகிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆர். பாஸ்கர்
அன்புள்ள ஜெ,
யுவன் சந்திரசேகருக்கு விருது அளிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. யுவன் எனக்கு பிரியமான எழுத்தாளர். கொஞ்சம் கு.அழகிரிசாமியும் கொஞ்சம் ஜானகிராமனும் கலந்த எழுத்து அவருடையது. அவர் எழுத்தில் இஸ்மாயீல் என்னும் கதாபாத்திரம் பேசும் தத்துவங்களும் கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரத்தின் இளமைப்பருவ அனுபவங்களும் அருமையானவை. நன்றி
ஜெயக்குமார்.வி