யுவன் சந்திரசேகரின் இந்தப் பகடையாட்டம் நாவலை அவர் நேரடியாக என் கையில் கொடுத்தார். நான்தான் மலேசியாவுக்கு வரும்போது கொண்டுவாருங்கள் என்றேன். நேற்று நான் அதனை வாசிக்கத் தொடங்கிய நேரம், இன்று அவருக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருப்பது தற்செயல் என்றே இருக்கட்டும்.
யுவனின் சிறுகதையின் எழுத்துப் போக்கு வாசகனைக் கட்டிப்போட்டுவிடும். தமிழில் யாரும் இந்த அதிநவீன கதை சொல்லல் முறையைக் கையாண்டு நான் வாசித்ததில்லை. ஒரு மாய விளையாட்டு போல கதை எண்ணற்ற பாத்திரங்களையும் சம்பவங்களையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தமே இல்லாமல் பின்னிப்பிணைந்து போய்க்கொண்டிருக்கும். ஆனால் அதன் சரடு கடைசி கணங்களில் மையத்துக்குள் வந்து இணைந்துகொள்ளும். மையக் கதை ஒன்றுதான் ஆனால் கதைக்குள் கதை, கதைக்குள் கதை என கிளை பிரிந்து பிரிந்து இறுதியல் ஒரு புள்ளியில் வந்து நிறுத்தி வாசகனுக்குப் பெரிய பரவசத்தைக் கொடுத்துவிடுவார்.அவருக்கு விஷ்ணுபுர விருது அறிவித்திருப்பதுவும் வாசகனுக்கான பரவசத் தருணம்தான்.
கோ.புண்ணியவான்
*
தமிழ் படைப்புலகில் புதிய உத்திகளை, புதிய பரிமாணங்களை அறிமுகப்படுத்தி. தமிழ் சிறுகதை தளத்தின், நாவல் வெளியின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்தாளர் யுவன். அவருக்குவிஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கிறது.மகிழ்ச்சியான செய்தி. அவருக்கு அன்பான வாழ்த்துகள்.
தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இனிய நண்பர் யுவன் சந்திரசேகர், எனது மொழிபெயர்ப்பு பணியில் வழிகாட்டியாக இருக்கிறார். அவர் மேலும் பல சிறப்புகளை பெற்றிட மனமார்ந்த வாழ்த்துகள்.
அ.இரவி
*
ஓர் எழுத்தாளனை விருதளித்துச் சிறப்பிப்பதன் பிரதான நோக்கம் அவனை இன்னும் பரவலான வாசகத் திரளுக்கு கொண்டு சேர்ப்பதே. அவ்வகையில் இன்று ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான விருதாக விஷ்ணுபுரம் விருது இருக்கிறது.
இந்த வருடம் அது எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. அவர் என் ஆசிரியர்களில் முதன்மையானவர். அவருக்கு என் வணக்கங்களும் வாழ்த்துகளும்
கார்த்திக் பாலசுப்ரமணியன்