ஓராண்டுக்கு முன்பு தத்துவ முகாம் தொடங்கும்போது எனக்கொரு எண்ணமிருந்தது, நூறுபேரில் முப்பதுபேர்தான் இரண்டாம் வகுப்புக்கு வருவார்கள். அது மேலும் குறைந்து பத்து அல்லது ஐந்து ஆக முடியும். அந்த ஐந்துபேர்தான் இலக்கு. தீவிரமான முயற்சிகளைப் பொறுத்தவரை அதுதான் தமிழகத்தில் பெரும்பாலான நிகழ்வுகளில் வழக்கம். ஆகவே முப்பதுபேர் வீதம் மூன்று முதல் அமர்வுக்கு பின் இரண்டாவது அமர்வை திட்டமிட்டேன்.
ஆச்சரியமாக இதுவரை ஒரே ஒருவர் மட்டுமே தொடர்ச்சியாக வர முடியவில்லை என சொல்லியிருக்கிறார். தொடர்ச்சியாக எல்லாருமே நிகழ்வுகளுக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். அத்துடன் முதல் வகுப்புக்கான தேவை திகைப்பூட்டும்படி உள்ளது. இன்னமும்கூட முதல் வகுப்புகளை நிகழ்த்தியாகவேண்டும் என்னும் நிலை உள்ளது.
அத்துடன் இன்னொன்றுமுண்டு, எவரும் இயல்பாக வந்துவிடுவதில்லை. பங்கெடுத்தவர்கள் சொல்லிச் சொல்லித்தான் அடுத்த அணி வருகிறது. தில்லை அவர்களின் நிகழ்வுக்கு இப்போதுதான் பெருந்திரள் கூட ஆரம்பித்துள்ளது. ஏ.வி.மணிகண்டனின் ஓவியப்பயிற்சி வகுப்புக்கும் விரைவில் அப்படி ஒரு பரபரப்பான வரவேற்பு வருமென நினைக்கிறேன்.
வழக்கமாக எங்கள் நிகழ்வுக்கு ஆர்வம் தெரிவிப்பவர்கள் ஐம்பது பேர் என்றால் வருபவர்கள் முப்பதுபேர்தான். கணிசமானவர்கள் பயணத்தை எண்ணி தவிர்ப்பார்கள். பலர் இது இலவச நிகழ்வாக இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பதுமுண்டு.
ஆகவே சென்ற மூன்றுநாள் தத்துவ முகாம் செப்டெம்பர் 8, 9 மற்றும் 10 நாட்களில் அறிவிக்கப்பட்டபோது எழுபதுபேருக்கு அழைப்பு விடுத்தேன். அறுபத்தைந்து பேர் வந்துவிட கொஞ்சம் நெரிசல். ஆயினும் நிகழ்வு மிகச்சிறப்பாக அமைந்தது. ஒரு பெருமழை மாபெரும் வாழ்த்துபோல பொழிந்தது.
மாலைநடைகள் இனிமையாக அமைந்தன. இரண்டாவது வகுப்பு மூன்றாம் முறையாக இனி நவம்பரில் நிகழும். அருகே உள்ள இனிய சிறு டீக்கடை ஒரு நல்ல இடம். அங்கே ஒரு கிராமியச் சூழல் அமைகிறது. குறிப்பாக மாலையில் சுடசுட வந்துசேரும் தினத்தந்தி.
பொதுவாக நான் நல்ல ஆசிரியன்தான் என எனக்கே நிறைவுறும் தருணங்கள் இவை. நம் நண்பர்களில் இதுவரை ஆசிரியர்களாக எவரும் குறைவுபட்டதில்லை. முதல் வகுப்பிலேயே ஆயுர்வேதக் கல்வியில் சுனில் கிருஷ்ணன் பலருடைய உள்ளங்களை கொள்ளைகொண்டுவிட்டார். புனைவு கற்பிக்கும் ஆசிரியராக அவர் சிங்கப்பூர் பல்கலை கழக அழைப்பின்பேரில் சிங்கப்பூர் சென்றுள்ளார். டிசம்பர் வரை அங்கிருப்பார்.
கற்றுக்கொள்ளும் ஆர்வம் தீராமலிருப்பவர்கள், தொடர்ச்சியாக உரையாடலில் இருப்பவர்கள், கூடவே எதிலும் எதிர்மறைநோக்கு இல்லாதவர்களே நல்ல ஆசிரியர்கள் என்பதை நான் கவனித்துள்ளேன். எதிர்மறைநோக்குள்ளவர்கள் எப்படியோ ஒரு வகுப்பின் தீவிரத்தை இல்லாமலாக்கிவிடுகிறார்கள்.
மிகப்பெரும்பாலான தமிழிலக்கியவாதிகள் நல்ல ஆசிரியர்கள் அல்ல. அவர்களால் கோவையாக எதையும் சொல்லவோ, எதையும் புறவயமாக கற்பிக்கவோ இயலாது. ஆனால் உலக அளவில் சிறந்த படைப்பாளிகளாக அறியப்பட்ட பெரும்பாலும் அனைவருமே சிறந்த ஆசிரியர்கள், சிறந்த பேச்சாளர்கள்.
நான் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களை பொதுவாக பொருட்படுத்துவதில்லை. அவர்களின் பயிற்றுமுறை சலிப்பூட்டுவது என்பது என் மதிப்பீடு. அது ஒரு தொழிலாக அமைந்து, நீண்டநாட்கள் அதைச் செய்து அவர்களிடம் ஒரு மாறாத ஒலியமைப்பு, சொல்லொழுக்கு அமைந்து விடுகிறது. வகுப்புகள் புதியதாக நிகழ்வதில்லை. மாணவர்கள் மேல் மெய்யான பெரும்பிரியம் இல்லாமல் கற்பித்தல் நிகழவே முடியாது. ஆர்வமில்லா மாணவர்கள் ஆசிரியரை இயந்திரமாக ஆக்கிவிடுகிறார்கள்.
அந்த முறைக்கு வெளியே ஒரு நல்ல சூழலில் நல்ல கல்வி நிகழவேண்டும் என்பதே எண்ணம். அக்கல்வி ஒரு கொண்டாட்டமாக அமையவேண்டும். மகிழ்வும் கிளர்ச்சியும் இல்லாமல் கல்வி நிகழமுடியாது என்பது என் உளப்பதிவு.
அத்துடன் முழுக்க முழுக்க எதிர்மறை அம்சமே இல்லாமல் இது நிகழவேண்டுமென எண்ணுகிறேன். இது நீண்டகாலமாகவே என் உளப்பதிவாக இருந்துள்ளது. ஜனநாயக அரசியல் மக்களை தொடர்ச்சியாக குறைசொல்லப் பழக்குகிறது. கிளர்ச்சி செய்ய அறைகூவுகிறது. அது தேவையும்கூட. ஆனால் பொதுவெளி முழுமையாகவே எதிர்மறை உணர்ச்சிகளால் நிறைந்துவிடுகிறது.
நம் வாழ்க்கை இன்று மிகையழுத்தம் கொண்டது. சென்ற நூற்றாண்டின் அரசியல் சார்ந்த இலட்சியவாதங்கள் சரிந்துவிட்டிருக்கின்றன. ஆகவே பொதுவாகப் பெரும் சோர்வு நம்மை ஆட்கொண்டிருக்கிறது. இச்சூழலில் இந்தப் பொதுவெளியின் எதிர்மறையியல்பு மேலும் சோர்வை உருவாக்குகிறது. உளச்சோர்வே இந்நூற்றாண்டின் பொதுமனநிலை.
கலையிலக்கியங்களிலும் பெரும்பகுதி சோர்வு சார்ந்ததே. அதுவும் இயல்பே. கலையிலக்கியங்கள் கண்ணாடி காட்டுபவை. ஆனால் மேலான இலக்கியம் சூழலை கடந்து, முதல்பறவைபோல, முன்னோக்கிச் செல்லவேண்டும் என்றும் நினைக்கிறேன். அது கனவுகளால் கொண்டுசெல்லப்படவேண்டும்.
ஆனால் உண்மை அதுவல்லவா. இலக்கியம் உண்மையின் கண்ணாடி அல்லவா என சிலர் கேட்கலாம். அப்படி அனைவருக்கும் பொதுவான, மாறாத ‘உண்மை’ என ஒன்று உலகியலில் இல்லை. உலகம் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்களோ அவ்வாறு. ஆஸ்த்மா நோயிருந்தால் வசந்தம்தான் மிகமிக துன்பம் தரும் பருவம். இலக்கியத்தின் பேசுதளம் மட்டும்தான் புறவய உண்மை. இலக்கியம் நிகழும் ஆழம் அகவயமானது. ஆசிரியனின் தரிசனமே அதை உருவாக்குகிறது.
நேர்நிலை மனநிலையில், களியாட்டு நிலையில் மட்டுமே கல்வி நிகழ முடியும். ஆகவே நிராகரிப்பு, மறுப்பு, எதிர்ப்பு என்பது கல்விக்கு எதிரான ஒன்று. நான் ஊட்டியில் நித்யாவிடம் கற்றபோதிருந்த மனநிலை என்பது முழுமையாகவே அதுதான். அதைச் சற்றேனும் உருவாகவியலுமா என்பதே என் இலக்கு.
பத்தாம்தேதி மாலையில் ஈரோடு மாவட்டம் பருகூர் அருகே சோளகனை என்னும் சோளகர் சிற்றூரில் ஒரு நிகழ்வு. ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தின் மதுமஞ்சரி அங்கே ஒரு பொதுக்கிணறை அமைத்துள்ளார். ஆழமில்லாத அக்கிணறு அம்மக்களால் உருவாக்கப்பட்டு நீரில்லாமல் ஆகிவிட்ட ஒன்று. அதை ஆழப்படுத்தி செம்மையாக்கி அம்மக்களுக்கு அளித்துள்ளார். இந்த மலைப்பகுதியில் மதுமஞ்சரி அமைக்கும் மூன்றாவது கிணறு இது. (மதுமஞ்சரியுடன் ஓர் உரையாடல் )
இந்த மலைப்பகுதிகளின் சிக்கல் என்னவென்றால் இங்கே நிலத்தடி நீர் என்பது சமநிலம் போல மண்ணுக்கு அடியில் தேங்கியது அல்ல. அது மலையில் இருந்து இறங்கிக்கொண்டே இருக்கும் ரகசிய நதி. ஆகவே இடம் பார்த்து ஆழ்துளைக்கிணறு போட்டாலும் மிக விரைவாக அது வறண்டுவிடும். மலைப்பகுதி முழுக்க நீரில்லாத ஆழ்துளைக் கிணறுகளைக் காணலாம்.
மலைப்பகுதிகளுக்கு கிணறுதான் சரியான தீர்வு. ஏனென்றால் அது சூழ்ந்திருக்கும் நிலத்தில் பத்தடி மண்பரப்பில் இருக்கும் நீரை இழுத்து தன்னுள் ஊறச்செய்கிறது. மலைப்பள்ளம் என்றால் கிணறு வற்றுவதுமில்லை. முந்நூறாண்டுகளாக வற்றாத கிணறுகள் இந்த மலைப்பகுதியிலுள்ளன
ஆனால் அரசிடம் இப்போது கிணறு தோண்டும் திட்டங்கள் இல்லை. காரணம் கிணறுகள் தோண்ட நிலம் வேண்டும். கிண்றுகள் பராமரிக்கப்பட அமைப்புகளும் வேண்டும். ஆகவே அரசிடம் ஆழ்துளைக்கிணறு தோண்டும் திட்டங்களே உள்ளன. மொத்தக் காண்டிராக்ட் ஆக அவை போடப்படுகின்றன. அவற்றில் விரைவில் நீர் வறண்டுவிடுகிறது.
மதுமஞ்சரி உருவாக்கிய கிணற்றில் நல்ல நீர் பல அடி ஆழத்துக்கு உள்ளது. சோளகனை முழுக்க முழுக்க சோளகர்களின் ஊர். இதுவரை அவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று நீர் கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். இனி அது தேவையில்லை. கிணறு சிறப்பாக, அப்பகுதியின் கற்களைக்கொண்டே கட்டப்பட்டுள்ளது. விலங்குகள் நீர் அருந்த தொட்டியும் உள்ளது.
சோளகனை ஊரில் மக்களின் விவசாயமும், உணவும் பெரும்பாலும் கேழ்வரகுதான். அதை அரைப்பது அவர்களுக்கு பெரிய சிக்கல். தாமரைக்கரை வரை, பத்து கிலோமீட்டர் மலைப்பாதையில், நடந்து கொண்டுவரவேண்டும். வேணுகோபால் என்னும் நண்பர் அவருடைய அமைப்பினூடாக அவர்களுக்கு ஒரு அரவை இயந்திரசாலையை அமைத்துக்கொடுத்துள்ளார்.
யான் அறக்கட்டளை, தழல் அறக்கட்டளை இரண்டும் இந்த கட்டிடம் மற்றும் இயந்திரத்துக்கான நிதியுதவியைச் செய்துள்ளன. சுடாமல் உயர் அழுத்தத்தில் உருவாக்கப்பட்ட செறிவான செங்கற்களால் ஓர் அழகிய சிறு கட்டிடம் அமைத்து அதில் முழுக்கவே சூரியஒளித் தகடுகளால் மின்சாரம் உருவாக்கி அந்த இயந்திரம் இயக்கப்படுகிறது. ஆகவே மின்வெட்டு, மின்னழுத்தக்குறைவு சிக்கல்கள் இல்லை.
அந்த இயந்திரத்தை பராமரிக்கும்பொருட்டு அங்கே ஒரு மகளிர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அம்மகளிரின் கூட்டங்களுக்காக அக்கட்டிடம் ஒரு சிறு கூடமாக அமைக்கப்பட்டுள்ளது. அரசு நலத்திட்டங்களைப் பெறவும், தங்களுக்கான வசதிகளைச் செய்துகொள்ளவும் அந்த மகளிர் குழு முயலவேண்டும்.
அந்த அரவையியந்திரத்தையும் மகளிர்கூடத்தையும் சோளகமக்களுக்கு அரும்பாடுபட்டு வரும் தோழர் வி.பி.குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி) திறந்துவைத்தார். நான், என் நண்பர் ர்ஃபீக் அகமது (ரத்தசாட்சி இயக்குநர்) ஆகியோருடன் பல நண்பர்கள் கலந்துகொண்டோம். நிகழ்வை தோழர் அன்புராஜ் ஒருங்கிணைத்தார்.
அன்புராஜ் சோளக மக்களின் கல்வி, பொருளியல் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறார். அந்தியூரில் இயற்கை மலைப்பொருட்கள் விற்கும் ஒரு கடை நடத்திவருகிறார். (அன்புராஜ் முன்பு வீரப்பனுடன் இருந்து சிறைசென்று மீண்டவர். குறிப்பிடத்தக்க நாடக ஆசிரியர். அவருடைய விடுதலை கன்னட எழுத்தாளர்களின் முன்னெடுப்பால் நிகழ்ந்தது) (பார்க்க கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி)
சோளகர்களின் ஊர் இன்று சிறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அரசு அளிக்கும் மானியத்தால் கட்டப்படும் சிறிய கான்கிரீட் வீடுகள் ஆங்காங்கே உருவாகியிருக்கின்றன. பழைய புல் அல்லது ஓலைக்குடிசைகள் அனேகமாக இன்றில்லை. இம்மக்களின் தொழில் என்பது பருகூர் மாடுகள் எனப்படும் சிறியரக மாடுகளை வளர்ப்பதும், மலைவிவசாயமும்தான். அவற்றில் மாடு வளர்ப்பே ஓரளவு கைகொடுக்கிறது.
சோளகர் ஊர் முழுக்க சிறுவர்கள். கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள் தாமரக்கரை உண்டு உறைவிடப்பள்ளிக்கோ வேலைக்கோ சென்றுவிட்டனர். குழந்தைகளிடம் அத்தகைய ஒரு கள்ளமற்ற துருதுருப்பை அத்தகைய சிற்றூர்களில்தான் பார்க்கமுடிகிறது. ஊரில் எவர் வந்தாலும் கொண்டாட்டம்தான். கையாட்டி வாழ்த்து கூவிக்கொண்டே இருந்தார்கள்.
எங்கள் வண்டியோட்டியான மாதேஸ் சோளகர்களின் வழக்கம் பற்றிப் பேசிக்கொண்டே வந்தார். அவர்கள் நிறையப் பிள்ளைகள் பெற்றுக்கொள்வார்கள். முன்பெல்லாம் குழந்தையிறப்பு மிகுதி. இன்று அரசு அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வற்புறுத்துகிறது. பதினான்கு பிள்ளை பெற்ற ஒரு சோளகருக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ய அரசு அவரை தேடி அலைய அவர் காட்டில் ஒளிந்துகொண்டதை மாதேஸ் சொன்னார்.
பழங்குடிகளை எப்படி ‘மையச்சமூகம்’ எதிர்கொள்வது என்பது பெரும் சிக்கல்தான். உலகமெங்கும். அக்குழந்தைகள் எவருக்குமே தமிழ் தெரியாது. சோளகமொழிதான். அவர்கள் பள்ளிக்குச் சேர்ந்தால் தமிழ் என்ற புதிய மொழியைக் கற்று, அதில் தேர்ந்து பத்தாம் வகுப்பு வெல்லவேண்டும். நம்மிடம் இந்தியில் பாடம் படிக்கச் சொன்னால் எப்படியோ அப்படி.
இது மொழித்திணிப்பு, பண்பாட்டுத்திணிப்பு. வன்முறையும்கூட. அக்குழந்தைகள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பள்ளியை தவிர்ப்பதே வழக்கம். அவர்களால் கற்க முடியாது. அத்துடன் சோளகனையில் எழுபது எண்பது ஆரம்பப் பள்ளி குழந்தைகள் இருப்பார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் ஆசிரியர் என்றால்தான் அக்குழந்தைகளுக்கு ஏதேனும் கற்பிக்கமுடியும். அதுவும் கடினமானது.
ஆனால் வேறென்ன செய்வது? அவர்களுக்கு தமிழ் அல்லது பொதுமொழி கற்பிக்கப்பட்டே ஆகவேண்டும். உலகுடன் அவர்கள் தொடர்பு கொள்ளவேண்டும். தங்கள் உரிமைகளை அடையவேண்டும். என்னதான் தீர்வு இதற்கு?
நான் கட்டிடத்தை திறந்து வைத்தேன். வி.பி.குணசேகரன் இயந்திரத்தை தொடங்கி வைத்தார். மதுமஞ்சரி பாரம்பரிய விதைச் சேமிப்பு நிகழ்வை தொடங்கி வைத்தார். நாங்கள் மகளிர் கூடத்தைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டோம். வந்திருந்த நண்பர்கள் அனைவருமே மரங்களை நட்டனர்.
பாறைகளே இருக்கைகளாக அமர்ந்துகொண்டு ஒரு சிறு கூட்டம். அன்புராஜ் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அன்புராஜ் அவர்களிடம் பேசிப்பேசி அதற்கான மொழியும் உணர்வுகளும் அமையப்பெற்றவராக இருந்தார். வி.பி.குணசேகரன் அம்மக்களுக்கு நன்கு அறிமுகமான மக்கள்தலைவர்.மிக எளிமையான உணவு அனைவருக்கும். நான் அம்மக்களிடையே ஒரு சில வார்த்தைகள் பேசினேன்.
இந்த கேழ்வரகு அரைப்பு இயந்திரம் முழுக்க முழுக்க வேணுகோபாலின் கனவு. அவரும் அவர் மகனும் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்க உற்சாகமாக இருந்தது. இந்த சேவை அமைப்புகள் எல்லாமே சிவராஜ் என்னும் தனிமனிதரின் குக்கூ என்னும் அமைப்பில் இருந்து கிளைவிரித்துக்கொண்டே இருப்பவை. சிவராஜை அச்சூழலில் காண மகிழ்வாக இருந்தது. வழக்கம்போல உற்சாகமான நிலையில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு சற்று நோயுற்றிருந்தார். இப்போது நன்றாக இருக்கிறார்.
சோளகனை முழுக்க உழுதுபோட்டுக்கொண்டு மழைக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். மலைக்கு மறுபக்கம் பெய்த மழை அங்கே எட்டவில்லை. பெய்த சிறு மழையில் கேழ்வரகு விதைத்திருந்தார்கள்.
அறக்கட்டளைகள், கொடையாளர்களை இணைத்துக்கொண்டு செய்யப்படும் இந்த செயல்பாடு என்பது ஒரு கொடை அல்ல. இதிலுள்ளது அவர்களுக்கு ‘இரங்கும்’ செயல் அல்ல. அம்மனநிலையே பிழையானது. சிலவற்றை அம்மக்கள் அவர்களே செய்துகொள்ள முடியும் என அவர்களுக்குக் கற்பிக்கவே மதுமஞ்சரியும் சிவராஜும் முயல்கிறார்கள். அதுதான் கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதனின் வழி.
இப்படி ஒரு செயலை முன்னெடுக்கையில் உருவாகும் ஒருமையும் ஊக்கமும் அவர்களுக்கு உருவாகுமென்றால் அது பெரிய தொடக்கம்.
புகைப்படங்கள்: மோகன் தனிஷ்க் (Website link https://nithilamsarees.com/ )