நித்திலம் – ஒரு முயற்சி

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,

நலமே வேண்டுகிறேன்.

கடந்த மார்ச் மாதம் நித்தியவனத்தில் நடந்த தியான வகுப்பில் கலந்து கொண்டுவிட்டு வந்து உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். உங்கள் சொல்கொண்டு அடுத்த பத்தாண்டுக்கான திட்டம் ஒன்று தொடங்குவதாக எழுதியிருந்தேன். சிவராஜ் அண்ணா நூற்பு சிவகுரு அண்ணா அனைவரின் அருகாமையில் வழிகாட்டுதலின்படி அத்திட்டம் நிறைவு பெற்று உள்ளது. அதனை தங்களின் ஆசீர்வாதத்துடன் தொடங்க விரும்புகிறேன். அதன் விவரங்களை இக்கடிதத்தில் இணைத்து அனுப்புகிறேன்.

தேவாங்கர் குலம் அல்லது ஜேந்தர் குல மக்கள் ஆந்திராவிலிருந்து கர்நாடகா, தமிழ்நாடு வரை புலம்பெயர்ந்து சிறுசிறு குழுக்களாக குடிகலைமைத்துக் கொண்டார்கள். குழுக்கள் இணைந்து பிற்காலத்தில் கிராமமாகின. தேவல முனி என்பவர் குலக் குருவாகக் கருதி வணங்கப்பட்டிருக்கிறார்.

நெசவு இந்த மக்களின் பிரதானத் தொழிலாகவும் வாழ்வுமுறையின் அடிப்படையாகவும் இருந்து வந்திருக்கிறது. நெசவு செய்து, நெய்த துணிகளை தலைச் சுமையாக ஊர் கடந்து வாணிபம் செய்து வந்திருக்கிறார்கள். முன்னாட்களில் இப்படி ஊர் கடந்து துணி விற்பவர்கள் தலைமூட்டை வியாபாரிகள் என்று அறியப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் அவர்கள் பயணம் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள்.

1950 முதல் 1960 வரை இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சத்தினால் பெருந்திரளான நெசவுக் குடும்பங்கள் வடமாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தார்கள். எனது குடும்பமும் டெல்லிக்கு நகரவேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கே தெருவோரங்களிலும் ஊருக்கு ஒதுக்குப் புறங்களிலும் குடிசைகளிட்டுத் தங்கி, அங்குள்ள வீடுகளில் சமையல் வேலை செய்வது சுத்தம் செய்வது எனக் கிடைக்கும் வேலைகளைச் செய்து வந்தார்கள் புலம்பெயர்ந்த மக்கள்.

எங்கள் ஒரு தலைமுறைக்கான காலம் அங்கே கழிந்தது. அப்பா அங்கு தான் பிறந்தார். நானும் அக்காவும்  பிறந்தோம். எங்களது பால்யமும் அங்கே தான் கழிந்தது. ஆரம்பக் கல்விக்காக  டெல்லியிலேயே ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்டோம். நான் நான்காம் வகுப்பு வரை அங்கேயே தான் பயின்றேன். பிள்ளைகளின் கல்வி தமிழ்நாட்டில் தான் வேண்டும் என அம்மா கூறியதால் மீண்டும் ஊருக்கே திரும்பினோம். தமிழ்நாட்டில் எங்கள் சொந்த ஊரான சின்னாளப்பட்டியில் எங்களது ஆரம்பக் கல்வி தொடர்ந்தது.

எங்கள் படிப்பும் குடும்பத்தின் பிழைப்பும் சின்னாளப்பட்டியிலேயே தொடர்ந்தது. நாங்கள் பள்ளி முடித்து வருகையில் அம்மா தறியில் இருப்பார். மீண்டும் தறியேறி நெசவு செய்யத் துவங்கியதில் அம்மாவுக்குத் தான் அவ்வளவு மகிழ்ச்சி. அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் நெசவுத் தொழில் பரவலாக ஆதார வருமானம் தரும் ஒன்றாக இருந்தது.

நான் சொந்தக்காரர் ஒருவரின் குடும்பத்திற்குத் தத்துக் கொடுக்கப்பட்டேன். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக அவர்களுடனேயே தங்கி வேலைசெய்து கொண்டே படித்தும் கொண்டிருந்தேன். பள்ளிப்படிப்பு முடிந்தப் பின் பலர் உதவியுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை கணிப்பொறியியல் படித்தேன். அதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் பொறியியல் கல்லூரியில் முதுநிலை கணிப்பொறியியலும் படித்து முடித்தேன்.

படிப்பு நிறைவானவுடன் குடும்பத்திற்கான வருமான ஈட்டுதலின் பொருட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். பணிச்சூழலும் அழுத்தமும் அதிகரித்ததனால் அங்கிருந்து விலகிக் கொண்டேன்.

சிறுவயதில் இருந்தே புகைப்படங்களின் மீதான ஆர்வம் எனக்கிருந்தது. புகைப்படக்கலையின் மீதிருந்த ஆசையாலும் ஈர்ப்பாலும்  பெங்களூரில் ஒரு விளம்பர நிறுவனத்தில் துணைப் புகைப்படக் கலைஞராகப் இரண்டாண்டு காலம் வேலையிலிருந்தேன்.

கோரோனோ காலகட்டம் பொருளாதார நிலையிலும் மனநிலை அளவிலும் பெரும் நெருக்கடியைத் தந்தது. நிறைவில்லாத இந்த வாழ்க்கைக்கான ஓட்டம் எனக்குள் சலிப்பை ஏற்படுத்தி இருந்தது.

எங்கள் ஊருக்கென ஒரு அம்சம் இருந்திருக்கிறது. இந்த மக்களுக்கென ஒரு அடையாளம் இருந்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் ஊரைப்பற்றியும் என் குடும்பப் பின்னணி பற்றியும் அறிந்துகொண்டேன்.

என் தாத்தா பொன்ராஜ். ‘டெய்லர்’ பொன்ராஜ் என்று மட்டுமே அறியப்பட்டிருக்கிறார். துணி நெய்பவனுக்கு எப்போதும் அழிவே கிடையாது என்று என் அம்மா சொல்வார். பாவுகளாலும் ராட்டைகளாலும் தரிகளாலும் எழுப்பப்பட்ட குடும்பம் இது என்பதை உணர்ந்து கொண்டேன்.

இந்தத் நெசவுத் தொழில் இப்போது என்னவாக இருக்கிறது என்று கவனிக்கையில், கைத்தறி முறை தேய்ந்து எந்திரங்கள் இந்தத் துறைக்குள் நுழைகின்றன. வண்ணமேற்றம், அச்சு என இந்தத் தொழில் வேறு பரிணாமம் கொள்கிறது. கைத்தறியை விட்டு மக்கள் வருமானத்தின் போதாக்குறையால் எந்திரங்களைக் கொண்டு துணி உற்பத்தி செய்யத் துவங்குகிறார்கள்.

காலப்போக்கில் நெசவு எல்லா வகையிலும் நலிவடைந்து போனது. நெசவை ஆதாரத் தொழிலாகக் கொண்ட குடும்பங்களில் படித்தவர்கள் வேறு துறைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார்கள். சிலர் மட்டும் படித்த பின்னரும் இந்தத் தொழிலின் நீட்சியைக் கைக் கொண்டார்கள். ஸ்ரீலங்கா, சவுத் ஆப்பிரிக்கா, மொரீசியஸ், சிங்கப்பூர், மலேசியா இன்றைக்கும் சின்னாளப்பட்டியில் இருந்து சென்று துணி வாணிபம் செய்பவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

முன்னர், சின்னாளப்பட்டி கண்டாங்கிப் புடவைகளால் மட்டும் அடையாளம் காணப்பட்டிருந்திருக்கிறது. பட்டால் பிரசித்தி பெற்ற ஊர் என்றிருந்த நிலை மாறித் தேய்ந்து இன்று சுங்குடிச் சேலைகள் உற்பத்தி செய்யும் இடமாக சின்னாளப்பட்டி அறியப்படுகிறது.

பெரும்பாலான சுங்குடிச் சேலைகள் இங்கிருந்து தான் தயாராகின்றன. ஆனால், நெசவுத் தொழில் புரியும் மக்கள் இன்றும் சின்னாளப்பட்டியில் இருந்து கொண்டிருக்கிறார்கள். சிலவகைப் பட்டுக்கள் மட்டுமே அவர்கள் நெய்கிறார்கள். போதிய வருமானம் இன்மையால் அவர்களுக்குள்ளும் பலர் தொழில் மாறிப் போய்விடக்கூடிய சூழல் நிலவுகிறது. நெசவுத் தொழில் கை கொடுக்காது என்று சிலர் குடும்பமாகவே தொழில் மாறி வெளியேறுகிறார்கள்.

ஆனால், எல்லா நெருக்கடிகளுக்கு இடையிலும் நான் தொடர்ந்து ஊருக்கு அழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். நெசவின் நலிவும், துணிகள் சார்ந்த வாழ்வியலுக்கான அச்சுறுத்தலும் என்னால் காணப்பட்டுக் கொண்டே இருக்கிறது. குறைந்தபட்சம் கேள்விப்பட்டாவது விடுகிறேன். என் பெற்றோரால் அவர்களது முன்னோரால் கையளிக்கப்பட்ட இந்த வாழ்வுமுறைக் கையிலெடுக்கப் போகும் கடைசித் தலைமுறை நானாகக் கூட இருக்கலாம்.

இப்படியான மரபு நீட்சி அறுபட்டுவிடக்கூடது என்ற எண்ணம் என்னை அரித்துக்கொண்டிருந்தது. இந்த அடையாளம் சுமக்கப்பட்டாக வேண்டும் என நினைக்கிறேன். அதன் முதல்கட்டமாக சின்னாளப்பட்டிச் சேலைகளை ஒரு வலைதளத்தின் வழி சென்றடையும் தொலைவுக்கு கொண்டு சேர்க்க எண்ணியதன் விளைவாக ‘நித்திலம்’ என்னும் வலைதளத்தைத் துவங்க இருக்கிறேன்.

இன்றைக்கு எஞ்சி இருக்கும் நெசவு மரபின் தொடர்ச்சியை நீட்டித்துக் கொண்டு செல்லவும் முழுக்க மனித ஆற்றலாலேயே உருப்பெறும் சுங்குடிச் சேலைகளின் நீட்சியை காத்துக் கைமாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற வேகம் நித்திலமாக உருப் பெற்றிருக்கிறது.

முன்னவர்களால் என் பெற்றோருக்கும் என் பெற்றோரால் எனக்கும் கையளிக்கப்பட்ட இந்தத் தொழிலை பொறி நெருப்பென காக்க வேண்டிய கடமையும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

எல்லாம் செயல் கூடும்.

மோகன் தனிஷ்க்

Website link

https://nithilamsarees.com/

முந்தைய கட்டுரைஅணி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஹா.கி.வாலம்