அன்புள்ள ஜெ,
Seattle வருகைக்கான தேதிகள் முடிவாகி உங்களுக்கும் அருண்மொழி அம்மாவுக்கும் விமானப் பயணச் சீட்டுகள் வாங்கப் பட்டுவிட்டன; October 13ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) புளோரிடா மாகாணத்திலிருந்து Seattle வருகிறீர்கள்; திங்கள் காலை இங்கிருந்து போர்ட்லேண்ட் நகருக்கு பயணம் செய்வதாக ஏற்பாடு. போர்ட்லேண்ட் நகர நிகழ்வுகளை பிரபு முருகானந்தமும் Seattle நகர நிகழ்வுகளை நானும் ஒருங்கிணைக்கிறோம், Seattle நகரில் விஷ்ணுபுரம் வட்ட உறுப்பினர் வாசகி சுஜாதா இல்லத்தில் தங்குவதாக ஏற்பாடு அனால் நானும் ராஜனும் எப்போதும் இங்கே உங்களுடன் இருப்போம்.
இவற்றையெல்லாம் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை; ராஜனும் சௌந்தரும் பார்த்துக்கொள்வார்கள். ஒரு தகவலுக்காக சொல்கிறேன், இந்த கடிதத்தை எழுதுவது ஒரு கோரிக்கையுடன், முந்தைய மின்னஞ்சலில் பேசிக்கொண்டது போல சனிக்கிழமை (அக்டோபர் 14) அன்று மதியம் (11:30-2:00) Lecture Hall முன்பதிவு செய்திருக்கிறேன். நீங்கள் விரும்பும் பட்சத்தில் இதை ஒரு தலைப்புடன் கூடிய உரையாக விளம்பரம் செய்யலாம் அல்லது தலைப்பு ஏதும் இல்லாமல் சந்திப்பு உரையாடல் நிகழ்வாகவும் நடத்தலாம். உரை என்றால் கேள்வி நேரம் தேவையில்லை என்பதே என் கருத்து, (முன் தயாரிப்பற்ற இலக்கிய தனி உரையாடலுக்காக தேர்ந்தெடுத்த வாசகர்களை மட்டும் அழைத்து தனியாக வேறொரு சந்திப்பும் நிகழும்).
ஏற்கனவே சொன்னது போல இங்கிருக்கும் தமிழ் வாசகர்கள் அனைவரும் 20 மைல் சுற்றில் வசிக்கிறார்கள் , பெரும்பாலும் Microsoft , Amazon போன்ற பெரு நிறுவனங்களில் பணி செய்கிறார்கள், விஷ்ணுபுரம் வட்டத்தில் இணையும் போது அரங்காவிடம் என்னை அமெரிக்காவில் ‘சாப்ட்வேர் கூலி’ வேலை செய்கிறேன் என்று தான் அறிமுகப்படுத்தி கொண்டேன், ஆனால் இங்கே தொழில் நுட்ப துறையில் பணிபுரியும் வல்லுனர்களாக பணி புரிபவர்களின் அறிவாற்றல் மற்றும் அர்ப்பணிப்பு மேல் எனக்கு மரியாதை உண்டு
18 வருடங்களுக்கு முன் நான் Microsoft இணைந்தபோது எல்லா வருடமும் இறந்த பணியாளர்களின் அஞ்சலிக் குறிப்பு பகிரப்படும், வெங்கட்ராமன் என்கிற ஒரு நபரை அப்படி அறிந்துகொண்டேன், ரத்தப் புற்று நோயால் இறந்தார், பெரிய பதவியில் இருந்தவர் அல்ல ஆனால் கடுமையான சிகிச்சைக்கு நடுவிலும் கூடுமான வரை பணிக்கு வந்து கொண்டிருந்தார், வெறுமனே அலுவலக வருகை மட்டும் அல்ல அவரால் இயன்ற கடைசி நொடி வரை அர்ப்பணிப்புடன் நிரல் எழுதி பிழை திருத்த வேலைகள் செய்திருக்கிறார், அவர் அன்று Windows Media Player என்னும் செயலியை உருவாக்கும் அணியில் பணியாற்றி வந்துள்ளார், காணொலிகளை கணினியில் திரைடுவதற்க்க்கான கட்சி சட்டகங்களை குறுக்கும்(compressing) அலகாரிதங்களையும் வழிமுறைகளையும் வடிவமைப்பதில் பங்காற்றியுள்ளார், அவர் அணி உருவாக்கிய வழிமுறைகள் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழியாக உலகளாவிய காணொலி குறியாக்க தரநிலைகளை (video எனக்கோடிங் standard) உருவாக்குவதில் சேர்க்கப்பட்டன, அப்படியாக இன்று நீங்கள் ஒவ்வொரு காணொலியை காணும்போதும் அவர் ஆற்றிய பங்களிப்பு அதில் உண்டு என Microsoft நிறுவனம் எழுதிய அஞ்சலி குறிப்பு சொன்னது.
இவரை போல அர்ப்பணிப்பு கொண்ட பல நபர்களை இந்த தொழில் நுட்ப சமூகத்தில் கண்டிருக்கிறேன், இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் அல்ல, படித்தாலும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் படிப்பபவர்கள் , தர்க்கம் மட்டுமே அறிதல்முறை என்ற நம்பிக்கை கொண்டவர்கள் இலக்கியம் என்பதை பொழுதுபோக்கு அல்லது அறநெறி சார்ந்த சொல்லாடலாகவே அறிமுகம் செய்து கொண்டவர்கள், தமிழ் இலக்கியம் பற்றிய சரியான அறிமுகம் அற்றவர்கள். அங்கே நுட்பத்துடன் ஆழமும் தீவிரமும் கொண்ட சிறு வட்டம் இயங்கி கொண்டிருப்பதை அறியாதவர்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு இலக்கியம் வழியாக அறிதல் முறையை சரியாக அறிமுகம் செய்து வைக்கும் உரையாக இந்த உரையை அமைக்க முடியுமா என்ற கோரிக்கையை உங்களிடம் வைக்கிறேன், உங்கள் உரைக்குப்பின் புற்றிலிருந்து வெளிவரும் பாம்புகளை போன்ற silent reader நண்பர்களை இணைத்து இந்த நகரில் ஒரு தமிழ் இலக்கிய செயல் களம் உருவாக வேண்டும் என்பது என் ஆவல்.
செயல்கள் இப்போதே ஆரம்பித்துவிட்டன, சென்ற முறை இந்தியா வந்த பொழுது Stories of True 50 பிரதிகள் வாங்கி வந்தேன் , நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி குழந்தைகளுக்காக ஒரு நூல் விமர்சன போட்டியை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளேன், என் வேலை இழப்பு காரணமாக இந்த முயற்சி தாமதமாகி விட்டது, இந்த போட்டியை பற்றிய விவரங்களை தனி மின்னஞ்சலில் பகிர்கிறேன். புதிய வேலையில் இந்த வாரம் இணைந்தேன்.
கீழே உங்களுக்காக காத்திருக்கும் Lecture hall பற்றிய விவரங்களை இணைத்துள்ளேன். இந்த உரை அல்லது சந்திப்பு பற்றிய என கோரிக்கைக்கு உங்களை பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சியாட்டலில் நடக்கும் நிகழ்வுக்கு பதிவு செய்ய , இங்கே கிளிக் செய்யவும். மேலும் விபரங்கள் அறிய 425-445-7874 தொடர்பு கொள்ளவும்.
சங்கர் பிரதாப்
அன்புள்ள சங்கர்,
’மூன்று அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் இவ்வுரை அமையலாம். சில அடிப்படைகளைப் பேசலாமென நினைக்கிறேன்.
ஜெ