கர்மவினைக் கோட்பாட்டால் தான் நாம் வீழ்ந்தோம், நம் பண்டைய கலாச்சாரம் தேக்கமடைந்தது என ராகுல்ஜியின் இந்து தத்துவவியலில் படித்தேன்.
உங்கள் கருத்தை அறிய ஆவல்.
அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி
*
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
ராகுல சாங்கிருத்தியாயன் புத்தராக, பௌத்தமடாலயங்களில் இருந்தவர். அங்கிருந்த பழமைநோக்கு ஒவ்வாமலாகி மார்க்ஸியரானார். அவ்வாறு புதிய ஒன்றை தழுவுபவர்கள் எப்போதுமே அதீத நிலைபாடுகள் எடுப்பார்கள். ராகுல்ஜியின் தத்துவ விவாதங்களெல்லாம் மார்க்ஸியத்தின் எளிமையான பொருளியல்வாத அடிப்படை கொண்டவை. தத்துவார்த்த ரீதியாக எவ்வகையிலும் இன்று பொருட்படுத்தத் தக்கவை அல்ல.
இந்த கூற்றை இன்று இப்படி எடுத்துக் கொள்ளலாம். 12 ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்தியாவின் மேல் நிகழ்ந்த தொடர் அன்னியப் படையெடுப்புகளும் சூறையாடல்களும் இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணமல்ல. ஐரோப்பியக் காலனிய ஆதிக்கமும், அதன் ஈவிரக்கமில்லாத சுரண்டலும் காரணமல்ல. அச்சுரண்டலின் விளைவான பஞ்சங்களும், அவர்களால் இங்கு வந்த ஸ்பானிஷ் காய்ச்சல், பிளேக் முதலிய தொற்றுநோய்களும் காரணமல்ல. இந்து- சமண—பௌத்த மதங்களின் மறுபிறப்புவாதம் கர்மவாதம் மட்டுமே காரணம். இதைத்தான் ராகுல்ஜி சொல்கிறார் என்றால் அவர் என்னவகையான மார்க்ஸிஸ்ட்? இது எந்தவகையான பொருள் முதல்வாதம்?
இதையே தலைக்கீழாகப் போட்டு இன்னொருவர் சொல்லலாமே. உலகின் மிகுந்த மக்கள்செறிவுள்ள ஒரு நிலப்பகுதி, பல்லாயிரக்கணக்கான இனக்குழுக்கள் வாழும் ஒரு நிலப்பகுதி, தங்கள் இனமோதல்களை சமரசம் செய்துகொண்டு உலகின் மிகச்சிறந்த பண்பாடும், செல்வமும் கொண்ட ஒன்றாக மாறி ஏறத்தாழ ஆயிரத்தைநூறாண்டுகள் நீடிக்க இதே கொள்கைகள்தான் காரணம். அதன்மேல் அறுநூறாண்டுக்காலம் அன்னியப் படையெடுப்பும், பஞ்சங்களும் , அழிவுகளும் நிகழ்ந்த பின்னரும் அது மீண்டெழ அதே கொள்கைகள்தான் காரணம். அதனுடன் காலனிய அடிமைகளாக இருந்த பிற நாடுகளில் ஜனநாயகமில்லாத சர்வாதிகாரமும், மதவாத அரசுகளும் உருவாகி, கலவரங்களும் அழிவும் அடிமைத்தனமும் நீடிக்கையிலும் அது முன்னேறுவதற்கு அந்தக் கொள்கைகள்தான் காரணம். இது சரியா?
ராகுல்ஜியைப் போன்றவர்கள் சோவியத் ருஷ்யா அடைந்த வீழ்ச்சிக்கும், இன்றிருக்கும் அடிமைத்தனத்துக்கும் மார்க்ஸியம் காரணம் என்றால் கொதிப்பார்கள். போல்பாட், ஸ்டாலின், மாவோ போன்றவர்கள் நடத்திய படுகொலைகளுக்கு மார்க்ஸியம் காரணம் என்றால் அது மார்க்ஸியத்தின் பிழையல்ல, தனிநபர்களின் பிழை என்பார்கள். உலகப்போர்கள் உருவாக கிறிஸ்தவம்தான் காரணம் என்று சொன்னால் அபத்தம் என கொதிப்பார்கள். ஆனால் இந்தியாவில் தொற்றுநோய் வந்தால்கூட இந்து மதக் கொள்கைகள்தான் காரணம் என்பார்கள். இது சிந்தனை அல்ல. ஓர் அரசியல் வியூகம், அவ்வளவுதான். அந்த வியூகம் எதிர்மறையாக இந்தியச் சூழலில் விளைவுகளை உருவாக்கியது என்பது கண்கூடு.
இந்தியாவிலென்றல்ல உலகில் எங்குமே பொருளியல் வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டுமே பொருளியல் விசைகளால் நிகழ்கின்றன. நிலையான அரசு, புவியியல் வாய்ப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், வணிகம் என எவ்வளவோ காரணங்கள் உள்ளன.அதேபோல தொற்றுநோய், படையெடுப்புகள் என பல்வேறு வீழ்ச்சிக்காரணங்களும் உள்ளன. மதம், பண்பாடு போன்றவை மக்களின் வாழ்க்கையின் உணர்வுத்தரத்தை மட்டுமே தீர்மானிக்கின்றன. சில கொள்கைகள் மட்டுமே சமூகப்பொருளியலை பாதிப்பவை. உதாரணமாக, இனமேட்டிமைக் கொள்கை. மத அடிப்படைவாதப்பார்வை போன்றவை. மறுபிறப்பு என்பதும் கர்மவினை என்பதும் ஒருவகை தத்துவக்கொள்கைகள் மட்டுமே.
இந்திய மதங்களிலுள்ள மறுபிறப்புக் கொள்கையை காந்தியும் அம்பேத்கரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். அவர்களைப்போல பலகோடிப்பேர் அதை ஏற்றுக்கொண்டவர்களே. அந்நம்பிக்கை இந்த வாழ்க்கையின் பல விடுபடாப் புதிர்களை விளக்கிக்கொள்ள அவர்களுக்கு உதவின. துயரங்களை கடந்துசெல்ல பயன்பட்டன. பஞ்சங்களாலும் போர்களாலும் பலகோடிப்பேர் அழிந்த இந்தியநிலத்தில் மறுபிறப்பு – கர்மவினைக் கொள்கை மிகப்பெரிய ஆறுதலாக அமைந்திருக்கும். கோடானுகோடி மக்கள் அதை நம்பி தங்கள் சொல்லொணாத் துயர்களை கடந்து வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள். அதனால் துயர்களை அவன் அப்படியே ஏற்றுக்கொண்டான் என்று பொருள் இல்லை. அதே கர்மவினைக் கொள்கை துயர்களை எதிர்த்து போராடவும், தங்கள் வாரிசுகளுக்கு தங்கள் செல்வங்களை விட்டுச்செல்லவும் கற்பிக்கிறது. அந்த மாபெரும் வாழ்க்கைப்போராட்டம் இங்கே நடந்துகொண்டேதான் இருந்தது.
வாழ்க்கை மிகக்குறுகிய காலமே நிகழ்ந்த அக்காலகட்டத்தில் ஒருவன் செய்வதன் பயன் அவனுக்கே அமையும் என்னும் உறுதிப்பாடு இருவகையில் அளிக்கப்பட்டது. ஒன்று, சொர்க்கம் என்னும் கருதுகோள். செயலாற்றி மறைபவன் பலனை சொற்கத்தில் அடைவான் என்னும் நம்பிக்கை. இன்னொன்று அவனே மறுபடியும் பிறந்து அடைவான் என்னும் கருத்து. இரண்டாவது கருத்து செயலூக்கம் கொள்ளத்தான் ஊக்குவித்தது.
அதற்கும் அப்பால் அக்கொள்கை இங்குள்ள அனைத்தும் ஒரு நிரந்தச் சுழற்சியில் உள்ளன என்று கற்பிக்கிறது. புழு, பூச்சி, விலங்குகள் எல்லாமே ஒன்றின் வேறு வேறு தோற்றங்களே என்று சொல்கிறது. மனிதன் விலங்காக, புழுவாக பிறப்பான் என்னும் சாத்தியமே இயற்கையின் ஒருமைத்தரிசனத்தை அளிக்கிறது. மனிதன் இயற்கையின் அரசன் என்றும், எல்லா உயிர்களும் தாவரங்களும் அவனுடைய நுகர்வுக்குரியவை என்றும் கற்பித்த மார்க்ஸியம் உலக இயற்கைச்செல்வத்தில் பெரும்பகுதியை முக்கால் நூற்றாண்டில் சூறையாடியது. இன்றும் சீனாவில் அந்த அழிவு தொடர்கிறது. அதனுடன் ஒப்பிடும்போது கர்மவினைக் கொள்கை பல மடங்கு கருணை கொண்டது. ஒத்திசைவை முன்வைப்பது.
ஜெ