தனிமொழி

வணக்கம்.

Meta language  என்பதை  தனி மொழி என சொல்லியிருந்தீர்கள். நீங்களே சொல்கிறீர்களா அல்லது ஏற்கெனவே அப்படி பயன்பாட்டில் உள்ளதா.  அத்தனை துல்லியமாக அது இல்லை என நினைக்கிறேன். மொழியின் மொழியான meta language அதனளவில் தனித்துவமானதுதான். ஆனால் மொழியின் building block எனும் கூறு தனிமொழி என்பதில் வெளிப்படவில்லையே. முடிந்தால் விளக்குங்கள். நன்றி.

இன்னொரு பக்கம், ‘I appreciate that the embargo starts at circa 15 Oct’.. என பிரிட்டிஷ்காரர் கூறினால், US காரர் கூகிளுக்கு தான் போக வேண்டும். அப்படி போகாமல், நேரடியாக பொருள் கொண்டால் மேலும் சிக்கல்தான். பிரிட்டிஷ்காரர் ‘ பரவால்லப்பா அக்டோபர் நடுவுல வரை ரிலீஸ் பண்ணிக்கலாம்ங்கிறத புரிஞ்சிக்கிறேன் ‘.. ன்னா,  US காரர் ‘ அக்டோபர் 15 வரை வேலை நடக்கும்கிறதை பாராட்டுறேன் ‘.. ன்னு புரிஞ்சிக்குவார்.  அதிலும் appreciate ங்கிறது பெரும்பாலும் ஆப்பிரிக்க அமெரிக்கர் வார்த்தை.. ‘வாரியக்கொண்ட’ ங்கிறத கோவில்பட்டிக்கு வடக்கே ‘தலை வார சொல்ராங்க’ ன்னு தான புரிஞ்சிப்பாங்க..

உங்களுக்கு தெரியாததில்லை. தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள நேரடி மொழிபெயர்ப்பு சாத்தியங்கள், UK, US ஆங்கிலங்களுக்கிடையே இல்லை. Meta language.

வணக்கங்கள்.

ஜெயரஜன்

*

அன்புள்ள ஜெயராஜன்,

மெட்டா லாங்வேஜ் என்பதன் சரியான மொழியாக்கம் தனிமொழி அல்ல. உள்மொழி, துணைமொழி, இணைமொழி என்றெல்லாம் மொழியாக்கம் செய்யவேண்டும். ஆனால் 1980கள் முதல் ருஷ்ய மார்க்சிய தத்துவநூல்களில் அப்படி மொழியாக்கம் செய்துவிட்டார்கள். ஆகவே அதை அப்படியே கையாளலாம் என்பதே என் தரப்பு.

எந்தச் சொல்லும் இடுகுறித்தன்மை கொண்டதுதான். அச்சொல்லின் நேர்ப்பொருளில் அது சிந்தனையில் புழங்க முடியாது. நேர்ப்பொருள் கொண்ட சொல்லை உருவாக்கினாலும் அச்சொல்லின் பொருள் காலப்போக்கில் விலகிச்செல்லலாம். சிறுகதை என்ற சொல்லின் பொருள் இன்று சிறிய கதை என்று அல்ல. நாவல் என்பது செய்யுள் அல்லாத நவீனவகை கதையைச் சுட்ட பயன்பட்ட சொல். நாவல் உருவாகி இருநூறாண்டுகள் கடந்துவிட்டன.

தனி மொழி என்பதை வழக்காறுகள் (Idioms) சொலவடைகள் (Phrases) அணிச்சொற்றொடர்கள் (Figure of speech) வட்டாரவழக்குகள் (Regional  Dialect) ஆகியவற்றுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.அப்படி சாதாரணப்புழக்கத்தில் செய்கிறார்கள் என்றாலும் அப்படிச் செய்வது இலக்கியத்திலும், தத்துவத்திலும் பெரிய பிழைகளை நோக்கிக் கொண்டுசென்றுவிடும்.

வழக்காறுகள் என்பவை ஒரு பண்பாடு உரையாடலின்போது உருவாக்கிக் கொள்ளும் சுருக்கங்கள், மருவுகள் அடங்கியது. அவர்களுக்குள் அது புரியும். எல்லா தொழிற்குழுக்களுக்குள்ளும் அத்தகைய வழக்காறுகள் இருக்கும். (ஜி,எம் எட்டுமணிக்கு வந்ததும் ஏ.ஓவை கூப்பிட்டு டோஸ் விட்டார்!) விதிர்விதிர்ப்பது, திக்குமுக்காடுவது, பேஸ்த் அடிப்பது, சான்ஸே இல்லை, என பலநூறு வழக்காறுகள் நம் சூழலில் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

அதைப்போல சொலவடைகள், அணிச்சொற்றொடர்கள் எல்லா மொழிகளிலும் உருவாகிக்கொண்டே இருக்கும். அணிச்சொற்றொடர்கள்தான் பின்னர் சொலவடைகளாகின்றன. வயத்திலே பால வார்த்த மாதிரி, சினிமா தீயா இருக்கு, மனசு வாடுது என்பதுபோன்றவை இன்று சொலவடைகள். அவை முன்பு அணிச்சொற்றொடர்கள். தளிர்மனசு  என்று ஒருவர் சொல்லும்போது அது அணிச்சொற்றொடர்.

இதைத்தவிர வட்டார வழக்குகள். குமரிமாவட்ட வட்டாரவழக்கு வெளியூர்க்காரர்களுக்கு புரியாது. நீக்கம்பு என்றால் காலரா. தள்ளை என்றால் அன்னை. இவை போல எல்லா வட்டாரங்களுக்கும் உண்டு.

தனிமொழி என்பது இவை அல்ல. ஒரு துறையில், அத்துறைக்குரிய கூடுதல் அர்த்தங்களை தொடர்புறுத்தும் பொருட்டு, அந்த அறிவியக்கத்தின் விளைவாக உருவாகிவருவது அது. மொழிக்குள் உள்ள கூடுதல் மொழி அது. மொழிக்குள் உள்ள சொற்களையே வேறுபொருளில் பயன்படுத்துவதனால் அது உருவாகலாம். மொழிக்கு அப்பாற்பட்ட் குறியீடுகளைக் கொண்டும் உருவாக்கப்படலாம். தனிமொழி ஏறத்தாழ முழுமையான ஒரு மொழி அளவுக்கே விரிவானது. தனக்கென பொதுவான அமைப்பும், விதிகளும் கொண்டது.

எல்லா அறிவுத்துறைகளும் தங்களுக்கான தனிமொழிகளை உருவாக்கிக் கொண்டுதான் செயல்பட முடியும். அறிவுத்துறைகள் கலைச்சொற்கள், குறியீடுகளாலான தனிமொழியை உருவாக்கிக்கொண்டுள்ளன. இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றுக்கான தனிமொழிகள் உள்ளன. அறிவுத்துறையும் கலையுமான இலக்கியம் தனக்கான தனிமொழியை உருவாக்கிக்கொண்டுள்ளது. கலைச்சொற்கள் மற்றும் படிமங்களால் ஆனது அது.

படிமம் என்றால் உலோக வார்ப்பாகச் செய்யப்படும் சிலை . இலக்கியத்தில் அது வேறுபொருளில் பயன்படுத்தப்படுகிறது. வாசகன், அல்லது ரசிகனால் அர்த்தம் ஏற்றப்படவேண்டிய ஒரு காட்சி அல்லது ஒலி அல்லது மொழிவெளிப்பாடு அது. அப்படி அர்த்தமேற்றப்படவேண்டிய வகையில் ஆசிரியனால் அது முன்வைக்கப்பட்டிருக்கும். ‘வண்ணக்குருடான பட்டாம்பூச்சி’ என்பது ஒரு படிமம். அது நேரடியான பொருள் கொண்டது அல்ல.அதன் அர்த்தம் வாசகனால் உருவாக்கிக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

இலக்கியத்தின் தனிமொழி மொழிக்குள் வாசகன் தன் கற்பனையால் உருவாக்கிக் கொள்ளவேண்டிய ஒன்றாக உள்ளது. அதற்கு பொதுவான இலக்கணம் இல்லை, இலக்கணம் வகுத்தால் உடனே அது மீறப்படும். ஏனென்றால் புதுமைநாடிச் செல்வதே இலக்கியத்தின் பாதை.

‘தோணிக்குள் அலை’ எனும் கவிதை வரியை வாசிக்கும் வாசகன் ஒரு நீர்ப்பரப்பின் அமைமேல் மிதக்கும் தோணிக்குள் சற்று நீரில் சிறிய அலைகள் கிளம்புவதை காட்சியாக்கிக் கொள்ளவேண்டும். நீர்ப்பரப்பு புறவுலகம். தோணி மனிதன். உள்ளே சிற்றலை அவன் உள்ளம். வெளியே உள்ள அலைகள் உள்ளே அதே அலைகளை உருவாக்குகிறது என விரித்துக்கொண்டால் அவன் கவிதையின் தனிமொழியை அடைகிறான்.

அறிவுத்துறைகளின் தனிமொழியை அகராதிகளின் துணையால் புறவயமாகக் கற்றுக்கொள்ளலாம். இலக்கியத்தின் தனிமொழியை அதுவரையிலான தனிமொழியை கற்றுக்கொண்டு, அதைக்கொண்டு அந்த தனிமொழியின் வழி என்ன என்று அறிந்துகொண்டு, மேலே நாமே கற்பனைசெய்துதான் அடையவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரையுவன் – விஷ்ணுபுரம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசுருதி டிவி நிதியுதவி