இலட்சியவாதம், கடிதம்

இலட்சியவாதிகளை பின்தொடர்வது…

அன்பிற்குரிய ஜெயமோகன்,

இலட்சியவாதிகள் மற்றும் சுயசிந்தனை பற்றிய உங்களின் தெளிவான பதிலைப்படித்து அதீத உவகை அடைந்தேன். உங்களின் சிந்திக்க வைக்கும் பதிலை வாசித்த போது நமது மாநிலத்தில் இருக்கும் அரசியல் கோமாளிகளைப்பற்றித் தான் என் நினைவிற்கு வந்தது. மக்களின் வரிப்பணத்தை வாங்கி அதை ஒழுங்கான முறையில் செலவு செய்து எண்ணற்ற பலரும் போற்றக்கூடிய ஆக்கப்பணிகளை செய்வோம் என்ற இலட்சியம் இல்லாதவர்கள் தான் ஆட்சி முறையில் இருந்து சொல்ல முடியாத ஊழல்களை செய்து கொண்டே இருக்கும் நிலை.

நமது மாநிலத்தின் கடன் 7.5 லட்சம் கோடி என்றால் எந்தவொரு சுயசிந்தனையும், மனசாட்சியும், இலட்சியமும் இல்லாதவர்கள் தானே இங்கு அரசியலில் வளர முடியும் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கும் அவலம்.

இலட்சியம் என்பது ஒரு வகையான தியாகம், தன்னை முழுதும் ஒரு இலட்சியத்திற்காக அர்பணித்தல் என்பது இன்றைய சூழலில் மிகவும் அரிய ஒன்றாகும். தாங்கள் கூறியது போல் அதை நல்ல ஆளுமைகளிடம், இலக்கியவாதிகளிடம் இருந்து அவர்களின் நல்லனுபவங்களில் இருந்து பெற்று கொண்டு நாமும் ஒரு நல்ல ஆளுமையாக வளரலாம். முதலில் இங்கு பிரித்தானியர்கள் வைத்து விட்டு சென்ற கல்வி முறையை முற்றிலும் மாற்றும் சிந்தனை நமது ஆட்சியாளர்களிடம் தோன்ற வேண்டும்.

நமது நாட்டிற்கு உகந்த கொள்கைகள், திட்டம், நோக்குகள் இலட்சியங்கள் கொண்ட ஒரு மேன்மையான அரசால் கொண்டுவரப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் அது நிகழும் என்று நம்புகிறேன்.

உங்களின் பதிலின் முடிவு வரிகள் ” நெருப்பில் இருந்தே நெருப்பை கொளுத்திக்கொள்ள முடியும். நெருப்பின் இயல்பென்பது அணுகிய அனைத்தையும் கொளுத்துவதுதான். இவ்வுலகையே நெருப்பாக்க விழைந்து துடிப்பதுதான் தழல் என்பது.” என்பது வாசிக்கும் அனைவரையும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

உங்களின் ஆலயம் எவருடையது படித்து பெற்ற வாசிப்பனுபவம் சொற்களில் கூற இயலாத ஒன்றாக அமைந்தது. உங்களின் சிற்பங்களின் மீதுள்ள அதீத விழைவை அறிந்து கொண்டேன். உங்களின் ஆலயம் பற்றிய தெளிவான அவதானிப்புகள் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தின.

தோப்பில் முஹம்மது மீரானின் சிறுகதைகள் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளம் மொழி கற்க வேண்டும் என்று ஒரு வித விழைவு பிறந்து, எழுத்துக்களை எழுதி கற்க ஆரம்பித்திருக்கிறேன்.

முந்தைய பதிவுகளில் கூறியது போல் உங்களின் மற்றுமொரு மேன்மையான படைப்பை எதிர்பார்த்திருக்கும் எளிய வாசகன்.

அன்புடன்

பழனியப்பன் முத்துக்குமார்.

முந்தைய கட்டுரைஆலயக்கலைப் பயிற்சியும் சிற்பியும்
அடுத்த கட்டுரைஎம்.வேதசகாயகுமார்