பாறைக்குடைவு ஓவியங்கள் சார்ந்து ஒரு விந்தையான செய்தி உண்டு. ரயான் ஹர்ட் () என்னும் ஆய்வாளரின் வழிமுறை இது. இத்தகைய ஓவியங்கள் உள்ள இடங்களுக்குச் சென்று அங்கே தூங்குவது. கனவுகாண்பது. அக்கனவுகளை குறித்து வைப்பது. அப்படி பலநூறுபேர் காணும் கனவுகளில் பொதுவாகவும், அதீதமாகவும் என்னென்ன வருகிறது என்று ஆராய்ந்து அவற்றைக்கொண்டு இந்த ஓவியங்களைப் புரிந்துகொள்ள முயல்வது.இதை தொல்லியல்கனவு (Archaeodreaming) என்கிறார்கள். எந்த அளவு பயனுள்ளது என்று தெரியவில்லை. (Archaeodreaming: lucid dreaming as a tool for exploring sacred sites)
ஆனால் எனக்கு, ஓர் இல்க்கியவாதியாக, இக்கனவுமுறை உகந்ததாக இருந்தது. நான் கனவு காண்பேன் என்பதில் எனக்கு சந்தேகமே இருக்கவில்லை. தெளிவாக நினைவுகூர முடிந்தவை இரண்டு கனவுகள். ஒன்றில் நானின்னும் இருவருடன் இந்த பாறைவரைவு ஓவியங்களை காணச்செல்கிறேன். அவர் இவற்றில் மேலும் வரைகிறார். ஆமை உருவம். ஆமை அசைகிறது. அந்த ஓவியப்பரப்பே அசைந்து நெளிகிறது. இப்படி வரையலாமா எனறு நான் கேட்கிறேன். வரையலாம் என்று அவர் சொல்கிறார்.
இன்னொரு கனவில் ஒரு பழங்குடி (காணி) என்னை காட்டுக்குள் கொண்டுசெல்கிறார். அங்கே ஒரு பெரிய களம். அது இந்த குடைவுச் சித்திரக்களம்தான். அதன்மேல் ஒரு பன்றியை பலிகொடுக்கிறார்கள். அதன் நெஞ்சைப்பிளந்து உள்ளே வாழைப்பழம், சோறு ஆகியவற்றுடன் உயிருடன் துள்ளும் மீன்களையும் வைக்கிறார்கள்.
இரு கனவுகளையும் எனக்குள் ஓட்டிக்கொண்டே இருந்தேன். என்னளவில் பொருள் கொண்டு விரிந்தன. ஆனால் கூடவே என் தர்க்கமும் ஓடிக்கொண்டிருந்தது. ஏன் அந்த ஓவியங்கள் அலைபாய்ந்தன? ஏனென்றால் அவற்றில் மீன்கள் இருந்தன. பன்றியை பலிகொடுப்பதை நானே கண்டிருக்கிறேன். ஓர் உயிருக்குள் இன்னொரு உயிரை வைத்து பலிகொடுப்பது பழங்குடிகளின் வழக்கம். பின் அந்த தர்க்கங்களை உதறி மீண்டும் கனவை துழாவலானேன்.
இந்த வரைவுருவங்கள் எல்லாமே பின்னாளைய தொன்மங்களில் வளர்ந்துள்ளன. திரச்சி மீன் உலகமெங்கும் தொன்மங்களிலுள்ளது. கெல்டிக், ஆப்ரிக்கா, தென்னாசியா எங்கும் அது அன்னைமீன், உலகை தாங்கும் மீன் என்றெல்லாம் தொன்மங்களில் இடம்பெற்றுள்ளது. இந்திய தொன்மங்களிலும் விஷ்ணுவின் முதல் அவதாரம் மீன். அது திரச்சிமீனின் வடிவில்தான் பழைய சிற்பங்களில் காணப்படுகிறது. Manta Ray Spiritual Meaning, Symbolism and Totem
அதாவது மானுடம் தன் கனவுகளுக்கு ஒரு தொடர்ச்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால் சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் ஆகியவற்றுக்கு அந்த தொடர்ச்சி இல்லை. ஏனென்றால் இந்த கற்காலத்துக்கும் நமக்கும் நடுவே இறுதிப்பனியுகம் உள்ளது. அப்போது மானுடம் உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டது.
ஒன்றாம் தேதி எங்கள் பயணம் முதலில் மர்லேஸ்வர் கோயில். அது ஓர் இயற்கையான குகை. உள்ளே ஈரமும் வெம்மையும் நிறைந்திருந்தன. சிவன் கோயில். அருகே கவசமணிந்த நாகதேவியரின் சிலைகள் அமர்ந்த இரு சன்னிதிகள். உள்ளே சென்றதுமே மூச்சுத்திணறி வெளியே செல்லவேண்டுமென்ற பதைப்பு. ஆனால் பூசகர் இருவர் உள்ளேயே அமர்ந்திருந்தார்கள். அது ராஜநாகங்களின் இடம் என்பது தொன்மம்.
வெளியே பக்தர்கள். ஆனால் இன்று எங்கும் பக்தர்கள் கடவுளுடன் செல்பி எடுக்கத்தான் விரும்புகின்றார்கள். செல்பியே இப்போது ரீல்ஸ் ஆக மாறிவிட்டது. ஒரு பெண்மணி கேட்வாக், உதட்டுச்சுழிப்பு, seductive look என விதவிதமாக நடிக்க ஒரு பையன் சுற்றிச்சுற்றி படமெடுத்தான். அவள் மகன் என தெரிந்தது.
மர்லேஸ்வர் கோயிலுக்கு முந்நூறு படிகள் ஏறவேண்டும். உயரமற்ற படிகள்தான். ஒரே மூச்சில், இடைவெளியே இன்றி ஏறமுடியுமா என்று பார்த்தேன். ஏறமுடிந்தது. கீழே நல்ல மோர் கிடைத்தது. மேலே வரை ஒரே வேகத்தில் மூச்சுத்திணறாமல் சென்று சேர்ந்தேன். பரவாயில்லை என்று நானே எனக்குச் சொல்லிக்கொண்டேன்.
மலைவிளிம்பிலுள்ள கோயிலின் முகப்பில் நின்றுகொண்டு சூழ்ந்திருந்த சஹ்யாத்ரி மலையடுக்குகளை பார்த்தேன். பசுமை பொலிந்த குன்றுகள் ஆண்டில் ஆறுமாதம்தான் அப்படி இருக்கும். ஓர் அருவி அப்பால் பொழிந்தது. அங்கே செல்ல அனுமதி இல்லை. காட்டுக்குள் சில சிறு கோயில்கள் இருந்தன. அங்கே செல்ல பாதைகள். ஆனால் வழி பருவமழை காரணமாக மூடப்பட்டிருந்தது.
திரும்பி வரும் வழியில் வண்டியை நிறுத்திவிட்டு ஆற்றில் ஒரு குளியல்போட்டோம். ஓர் ஊரில் சாப்பிடுவதுபோலத்தான் ஓர் ஆற்றில் குளிப்பதும். குளித்ததும் அது நம் ஆறாக ஆகிவிடுகிறது. நல்ல விசைகொண்ட நீரோட்டம். வழுக்கும் பாறைகளை பிடித்துக்கொண்டு குளிக்கவேண்டும். கை விட்டால் ஆறு கொண்டு போய்விடும்.
கொங்கணின் இப்பகுதியில் மக்கள்தொகை மிகக்குறைவு. மலைகளுக்கும் கடலுக்கும் நடுவே உள்ள பகுதியில்தான் மக்கள் நெரிசல். முதன்மைக்காரணம் இது நெடுங்காலமாக சாலைவசதி இல்லாமல் ஒதுங்கிக்கிடந்த வனாந்தரம் என்பதுதான். கோலாப்பூர், ரத்னகிரி எல்லாம் அண்மைக்காலமாகவே மலர்ச்சி அடைந்து வருகின்றன. ஏராளமான புதிய கட்டிடங்களைக் கண்டோம்.
ரத்னகிரி பாலகங்காதர திலகரின் பிறந்த நகர். அவர் இங்குதான் சிறையிலும் இருந்தார். ரத்னகிரி கடற்கோட்டை புகழ்பெற்றது. முன்பு நான் சிவாஜியின் கோடைகளைப் பார்க்க ஒரு பயணம் செய்தபோது அங்கே சென்றிருக்கிறேன். கடலுக்குள் நீட்டி நின்றிருக்கும் மூக்கு கொண்டது
திலகரின் இல்லம் சென்றிருந்தோம். பாழடைந்து கிடந்தது. எவருமே இல்லை. அங்கிருந்தவருக்கு மராத்தி மட்டும்தான் தெரியும். ஒரு வார்த்தை இந்தியோ ஆங்கிலமோ இல்லை. மராத்தி மட்டும்தான். நாய் சந்தைக்கு போனதுபோல ஐந்து நிமிடத்தில் மறுபக்கம் சென்றுவிட்டோம்.
மகாராஷ்டிரத்தின் ‘ஐகன்’ சிவாஜிதான். எங்குபார்த்தாலும் சிவாஜியின் சிலை. அதன்பின் மராட்டிய சிற்றரசர்களின் சிலைகள் அந்தந்த ஊர்களில். அண்மைக்காலமாக சவார்க்கர் சிலைகள். திலகர் கூட இன்று அங்கே பெரிய அளவில் மதிக்கப்படவில்லை போலும் என நினைத்துக்கொண்டேன்
ரத்னகிரி அருகே ஒரு நட்சத்திர நிலை விடுதி. நாங்கள் சென்றபோது மிகச்சிலரே தங்கியிருந்தார்கள். ஆனால் மிக அழகான இடம். பத்து ஏக்கர் விரிவு கொண்டது. தனித்தனி கட்டிடங்களாக தங்குமிடங்கள். நீச்சல்குளம் உள்ளிட்ட வசதிகள். அம்பாதேவி ஆலயத்தில் சிறப்புநாட்களின்போது மக்கள் வந்து தங்குவார்கள் என நினைத்துக்கொண்டேன்.
மாலையில் இளந்தூறலும் குளிர்காற்றும் இருந்தது. அந்த விடுதிக்குள்ளாகவே ஒரு நீள்நடை சென்றேன். நண்பர்கள் அருகே இருந்த ஓரு நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்றார்கள். அந்தநாளை நான் எனக்குள் ஆழமாக செலுத்திக்கொள்ள முயன்றேன். கண்மூடினால் உதிரி உதிரி காட்சிகளாக குடைவுச்சித்திரங்கள்.
இந்தியாவிலுள்ள இந்த பாறைப்பதிவுகள் பற்றி இன்னமும்கூட பெரிய அளவில் ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஏனென்றால் நம்முடைய கல்விநிலையங்களில் இது இன்னும் ஆய்வுப்பொருளாகவில்லை. தனிப்பட்ட ஆர்வத்தால்தான் சிலர் ஏதோ செய்கிறார்கள். அதற்கான நிதியும் நமக்கில்லை. இந்த பாறைப்பதிவுகள் இன்னும் பல்லாயிரம் இருக்கக்கூடும். முறையான தொகுப்பும், ஆய்வும் செய்யப்படவில்லை.
இதன் நடுவே எண்ணை அகழ்வு, நிலக்கரி அகழ்வு மற்றும் கட்டுமானங்கள் என நம் காடுகளும் பாறைப்பகுதிகளும் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றன. பாறைகளை வெட்டி விற்பதென்பது இந்தியாவின் முக்கியமான தொழில், ஆகவே முக்கியமான ஊழல்.
ராஜஸ்தான் இந்தியாவுக்கும் உலகுக்கும் கல்லை வெட்டி விற்கும் மாநிலம். ராஜஸ்தான் தார் பாலைவனத்தில்தான் உலகிலேயே மிகப்பெரிய பாறையோவியம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். (New enigmatic geoglyphs in the Indian Thar Desert: The largest graphic realizations of mankind?) அது எவ்வளவு காலம் இருக்கும் என்பதெல்லாம் இன்றைய சூழலில் கேள்விக்குறிதான்.
செப்டெம்பர் இரண்டாம் தேதி காலையில் கிளம்பி கோலாப்பூர் பயணமானோம். கோலாப்பூரிலிருந்து எங்களுக்கு மதியம் இரண்டு மணிக்கு பெங்களூரிக்கு ரயில். அங்கிருந்து இரவு எட்டரைக்கு நான் ரயிலில் நாகர்கோயில் செல்லவேண்டும். காரின் இருபக்கமும் பச்சைப்புல் பரவிய குன்றுகள் வந்துகொண்டே இருந்தன. கொங்கணி மலைப்பகுதியின் உச்ச அழகு இப்பருவம்.
இந்தப் பாறைமேல் உள்ள புல்பச்சையை நான் மேலே நடக்கும்போது பிடுங்கிப்பார்த்தேன். புல்லின் வேருக்கு அடியில் அதிகம் மண் இல்லை. புல் நெடுங்காலமாக காய்ந்து மட்கி உருவான ஒருவகை பஞ்சு. அதன்மேல்தான் மீண்டும் புல் முளைத்துள்ளது. அடியில் சிவந்த இறுகிய பாறைதான்.
இந்த பஞ்சுப்பரப்பைப்பற்றி புகுவேகோ தன் ஒற்றை வைக்கோல் புரட்சி நூலில் சொல்கிறார். இது நெல்வயலுக்கு மிக மிக அவசியமானது, நாம் இதை எரிக்கவோ உழுது புதைக்கவோ செய்கிறோம் என்கிறார். இந்த மென்பஞ்சில் நீர்ப்பிடிப்பு உண்டு. இதில் நுண்ணுயிர் செறிவும் உண்டு. நெடுங்காலமாக இயற்கை உருவாக்கிக்கொண்ட ஓர் ஆடைப்போர்வை இது.
ஓரிடத்தில் மலைச்சரிவே பூத்திருந்தது. இறங்கி சற்றுநேரம் வெயிலில் உலவினோம். பச்சைவெயில். பச்சை நிறமான எண்ணங்களும் கூட. நண்பர்கள் அமர்ந்தும் கிடந்தும் புரண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். உள்ளூர்க்காரர்களுக்கு விந்தையாக இருந்திருக்கும். ஆண்டுதோறும் காணும் அழகு அழகல்லாமல் ஆகிவிடுகிறது. நம்மூர் அழகை நாம் பார்க்கிறோமா என்ன?
விமானநிலையம் வந்து விமானத்தில் ஏறி கண்களை மூடிக்கொள்ளும்போதுகூட அகலாத பச்சை.
(நிறைவு)