
கற்காலக் கனவுகள்-3
வழக்கமாக பயணங்களைத் திட்டமிடும்போது கிருஷ்ணனிடம் ஒரு பதற்றம் இருக்கும். பைசா வசூல் மனநிலை. செலவழித்த பணத்துக்கு எல்லாவற்றையும் பார்த்துவிடவேண்டும் என தவித்து நிறைய இடங்களில் சுற்றி இரவில் கூடணைந்து அதிகாலையில் கிளம்புவதுபோல் ஆகிவிடும். அத்துடன் காரிலேயே இலக்கிடம் வரைச் செல்வதனால் பயணத்தில் ஒரு பகுதி காரிலேயே செலவாகிவிடும்.
இந்தப் பயணத்தில் இலக்கிடத்தின் அருகே வரை விமானத்திலேயே சென்றோம். மொத்த வேன் பயணமும் ஆயிரம்கிலோமீட்டருக்குள்தான். அந்திக்கு முன் ஒவ்வொரு நாளும் விடுதிக்குத் திரும்பி விட்டோம். மாலைகளை உற்சாகமாகச் செலவிட்டோம். காலையில் எங்கள் வழிகாட்டி ரத்னகிரியிலிருந்து வராமல் செல்லமுடியாது, ஆகவே விடியற்காலையில் கிளம்பவேண்டியதில்லை. காலைக்காபியை சுவைக்க வாய்ப்பமைந்தது. பயணக்களைப்பும் இல்லை.

இப்பயணத்தில் சில அழகான விடுதிகளில் தங்க வாய்ப்பமைந்தது. 29 ஆம் தேதி தங்கிய கஷேலி விடுதி முழுமையாகவே செந்நிறச் சொறிக்கல்லால் அழகுறக் கட்டப்பட்டது. அங்குள்ள ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்காக கட்டப்பட்ட பெரிய கட்டிடம். நன்கு பராமரிக்கப்பட்ட பெரிய அறைகள் கொண்டது. இன்னொன்று கஷேலி – ரத்னகிரி அருகே கடற்கரை தங்குமிடம். மூன்றாவது அம்பா கட்டில் தங்கிய அழகிய, பெரிய வனத்தங்குமிடம்.
இப்பயணத்தில் பறவையியல் ஆர்வலரான ஈஸ்வரமூர்த்திதான் முதலில் இருவாய்ச்சி என்றும் அன்றில் என்றும் வேழாம்பல் என்றும் அழைக்கப்படும் Great Indian Hornbil எனும் பறவையை முதலில் பார்த்தார். இணைபிரியாமலிருக்கும் தன்மை, விந்தையான வாழ்க்கைமுறை, மிகப்பெரிய அலகு, மிகப்பெரிய சிறகு கொண்ட இந்த பறவை இந்தியாவின் அரிய உயிர்களிலொன்று. பார்ப்பதற்கும் அரியது.
ஏற்கனவெ இதை நாங்கள் தற்செயலாக வால்பாறையில் பார்த்திருக்கிறோம். அதன் சிறகோசை கேட்டு திரும்பிப் பார்த்த கிருஷ்ணன் “சார், ஒரு பெரிய பறவை” என்று கத்த ஓடிப்போய் பார்த்தோம். அதன்பின் அஜிதனிடம் போன் செய்து அது என்ன பறவை என தெரிந்துகொண்டோம். பறவைகளில் ஓங்கிய சிறகோசை கொண்டது அதுதான். நாய் குரைப்பதுபோன்ற ஓசை. பறவைப்பித்தனாகிய அஜிதன் பலகாலமாக ஏங்கியும் இன்னும் பார்க்க நேரிட்டதில்லை.
கபாட்காவ் (Kapadgaav) செதுக்குகள் ஒரு அரசுப்பள்ளிக்கு அருகே இருந்தன. ஒரு பகுதியில் கட்டிடப்பணி தொடங்கப்பட்டு ஆர்வலர் முயற்சியால் நின்றிருந்தது. நிவாலி என்னுமிடத்தில் இன்னொரு ஓவியப்பரப்பு. இரண்டுநாட்களாக இவற்றைப் பார்க்கத் தொடங்கு மெல்ல மெல்ல விழிபழகி சட்டென்று உருவங்களை அடையாளம் காண தொடங்கிவிட்டிருந்தோம். சிறு விலங்குகள் வெவ்வேறு கோணங்களில். சிலசமயம் ஒன்றன் மேல் ஒன்றாக. மல்லாந்த மனிதர்களின் கோட்டுருவங்கள்.
இவற்றிலுள்ள ஆர்வமூட்டும் சில கூறுகளை ரித்விஜ் சொன்னார். அதாவது தாவரங்கள் எங்குமே இல்லை. ஓர் இலைகூட வரையப்பட்டதில்லை. பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் எவையுமே இல்லை. நாய்கூட. அதாவது இம்மக்கள் முழுக்க முழுக்க வேட்டைக்குடிகள். வேளாண்மை செய்யவில்லை. காய்கனிகளை தெரிவுசெய்து உண்டிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு அது முக்கியமானதாகப் படவில்லை. ஊனுணவே அவர்களுக்கு முதன்மையானது,
மானுடவியலாளர்களின் கூற்றுப்படி ஊனுணவு மிகுந்த ஓய்வுநேரத்தை அளிக்கிறது. ஒரு நல்ல ,பெரிய வேட்டை என்பது ஒருமாதக்காலம்கூட ஓய்வை அனுமதிக்கும். உலரவைக்கப்பட்ட ஊன் சேமித்துவைக்கவும் உதவுவது. தானியங்கள் தவிர எந்த தாவரவுணவும் சேர்த்துவைக்க உகந்தது அல்ல. தானியங்களை விவசாயம் வழியாகவே உருவாக்க முடியும். உலகில் வேட்டைச்சமூகங்களே பண்பாட்டின் அடித்தளத்தை அமைத்தவை.

அக்கூறுகள் பின்னர் நிலையான வாழ்விடம் அமைந்த வேளாண் சமூகங்களால் எடுத்து உருமாற்றப்பட்டு வளர்க்கப்பட்டன. வேளாண்சமூகங்கள் எண்ணிக்கையில் பெருகி வேட்டைச்சமூகங்களை அழித்தன. நாம் வேளாண்சமூகத்தின் தொடர்ச்சி. வேட்டைச்சமூகங்கள் நம்மால் அழிக்கப்பட்டு, உண்ணப்பட்டுவிட்டவை. ஆகவேதான் நமக்கு இயல்பான தொடர்ச்சி இல்லாமலிருக்கிறது.
இந்தப்பாறைச் செதுக்குகளின் வழியாக அறுதியான கொள்கைகளை உருவாக்கிக் கொள்வதை முடிந்தவரை ஒத்திப்போடவேண்டும் என்பது ஒரு நிபந்தனை. அதில் ருத்விஜ் தெளிவாகவே இருந்தார். எல்லாவற்றையும் சொல்லிப் பார்க்கலாம், எதையும் முடிவாகச் சொல்லக்கூடாது. இந்த கற்செதுக்குகளில் உள்ள காலம் நமக்கு அப்பாற்பட்ட ஒன்று என நமக்குநாமே சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் எல்லாவற்றையும் தன்னைநோக்கி இழுப்பது மானுட இயல்பு
கபாட்காவ் ஓவியங்களில் முக்கியமான ஒன்று இரண்டு உருண்ட வடிவங்களின்மேல் ஏறி நின்றிருக்கும் மனிதன். மனிதனின் கால் ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கு பல விளக்கங்கள். நேர்ப்பொருளில், அவன் பரிசல் அல்லது தக்கை போன்ற எதிலாவது ஏறி கடலுக்குள் செல்லும் காட்சியாக இருக்கலாம். நான் இரண்டு மலைகள்மேல் கால்வைத்து ஓங்கி நின்றிருக்கும் மலைநின்ற பெரும் ஆள் என்று பொருள்கொண்டேன்.
மனித உருவங்களில் பெண்ணுரு அனேகமாக இல்லை. இடைவரை பெண் மட்டுமே காணக்கிடைக்கிறது. ஆண் என ஏன் சொல்கிறோமென்றால் முலைகள் வரையப்படவில்லை. இடைவளைவும் இல்லை. குகை ஓவியங்களில் பெண் என்றால் எப்போதுமே முலைகள் உள்ளன. இங்கே ஆணின் பெருந்தோற்றம் இருப்பது இந்த வேட்டைச்சமூகங்கள் பெண்மையச் சமூகங்களல்ல, ஆண் தலைமைகொண்டவை என்பதற்கான சான்றாகக் கருதத் தக்கது.
இவற்றின் காலம் எப்படி கணிக்கப்படுகிறது? முதன்மையாக இந்த ஓவியங்களின் உள்ளடக்கம், வரையப்பட்ட முறை ஆகியவற்றைக்கொண்டுதான். இவற்றில் உள்ள இரண்டு விலங்குகள் அவ்வகையில் முக்கியமானவை. ஒன்று, நேர்கொம்பு கொண்ட யானை. இன்னொன்று காண்டாமிருகம். காண்டாமிருகம் இப்பகுதியில் இல்லாமலாகி முப்பத்தைந்தாயிரம் ஆண்டுகளாகின்றது. நெர்கொம்பு யானையும் மறைந்து முப்பதாயிரமாண்டுகளாகின்றன.
இங்குள்ள ஓவியங்கள் நினைவிலிருந்து வரையப்பட்டவை அல்ல. நேர்நின்று பார்த்து வரையப்பட்ட தன்மை அவற்றிலுள்ளது. காண்டாமிருகம் இங்கே வாழ்ந்திருந்தமைக்கு பல சான்றுகள் கிடைக்கின்றன. (சு.கி.ஜெயகரன் தமிழ்நாட்டில் நெல்லை அருகே காண்டாமிருகத்தின் எலும்பை கண்டடைந்துள்ளார்) இந்த ஓவியங்களில் பள்ளமான களத்தில் மெல்லிய புடைப்பாக உள்ள ஓவியங்கள் பதினைந்தாயிரமாண்டு தொன்மை கொண்டவை. வெறும் கோடுகளாகவே அமைந்தவை முப்பதயிரமாண்டுக்கு மேல் தொன்மை கொண்டவை.
மேலும் மேலும் சதுரக்களங்களை கண்டடைந்தோம். அவற்றின் வடிவம் ஒருவேளை அவர்களின் குடியிருப்பாக, சிறிய நகரமாகக்கூட இருக்கலாம் என ஒருவர் சொன்னதாக ருத்விஜ் சொன்னார். அதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றியது. வேட்டைக்குடிகள் நகரங்களை அமைப்பதில்லை. இவை வேறேதோ நோக்கம் கொண்டவை.
அல்லது ஒரேயடியாக எரிக் வான் டேனிகன் பாணியில் இந்த மக்கள் வேட்டைக்குடிகளாக இருக்கையிலேயே வேற்றுக்கிரகவாசிகள் நகரவரைபடத்தை இவர்களுக்குக் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள் என அடித்துவிடலாம். அதன்பின் எந்த கேள்விக்கும் இடமில்லை.
இன்னொரு கொள்கை உள்ளது. மனிதன் எந்த தேவையும் இல்லாமல், மூளையின் இயல்பினாலெயே ஜியோமிதி வடிவங்களை கண்டடைந்தான். அவற்றை வரைந்து வரைந்து பார்த்தான். அதற்கு மிகப்பிந்தித்தான் அவன் நகரங்களை உருவாக்கத் தொடங்கினான். இவற்றை வரைந்தது வெறும் ஆர்வத்தால், கற்பனையின் இன்பத்தால் ஜியோமிதியின் வாய்ப்புகளையும் திசைகளின் அமைப்புகளையும் தானே உருவாக்கிக் கற்றுக்கொள்வதற்காகத்தான்.
அவற்றை வரைந்தவனுக்கு அச்சமூகத்தில் பூசகனாக, கடவுளின் வடிவமாக மிகுந்த மதிப்பு உருவாகியிருந்திருக்கலாம். அக்காலத்தின் யூக்ளிட், பிக்காஸோ அல்லது ஐன்ஸ்டீன் அவன். அந்த மேதைகளின் கண்டுபிடிப்புக்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல அவன் சென்றடைந்த தூரம். மானுடத்திற்கு எவ்வளவு பெரிய பாய்ச்சல் அது!
நிவாலியில் சொறிக்கல் வெட்டி எடுக்கும் மிகப்பெரிய குவாரிகள் உருவாகியிருந்தன. கற்களை இயந்திரங்களால் அல்வா போல வெட்டி எடுக்கிறார்கள். கற்கள் எடுக்கப்பட்ட குழிகள் நன்கு அமைக்கப்பட்ட தெப்பக்குளம் போன்று சீராக தோற்றமளிக்கின்றன. இவை எத்தனை அரிய குடைவோவியங்களை ஏற்கனவே அழித்துவிட்டன என்று இன்று சொல்ல முடியாது. நிவாலியின் குடைவுகள் ஓரளவு பாதுகாக்கப்படுகின்றன.
ருத்விஜ் ஒரு விந்தையான விஷயத்தைச் சொன்னார். இந்த குடைவோவியங்கள் உலகின் ஆச்சரியங்களில் ஒன்று. இவற்றை யுனெஸ்கோ பொறுப்பேற்றுக் கொள்ளும் முன்வரைவு வெளியாகியுள்ளது. ஆனால் யுனெஸ்கோவின் நிபந்தனை இத்தகைய இடங்களுக்கு 20 மீட்டர் தொலைவு வரை எந்த விதமான அகழ்வும் நிகழலாகாது. இந்த இடங்களை யுனெஸ்கோவுக்கு பரிந்துரைத்தால் குவாரிகளை நிறுத்தச் சொல்வார்கள். அவை அரசியல்வாதிகளுக்குரியவை. ஆகவே அவற்றை நிறுத்த முடியாது. எனவே யுனெஸ்கோ கவனத்துக்கு இந்த இடங்களை கொண்டுசெல்லவில்லை.
சாவே தேவூட் (Chave Dewood) என்னுமிடத்திலுள்ள காண்டாமிருகம் இப்பகுதியிலுள்ள பாறைவரைவுகளில் பெருவியப்புடன் ஆராயப்படுகிறது. நன்கு எல்லைகட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது இது. காண்டாமிருகத்தின் முகத்தின் கூர்மை, கொம்புகள், காதுகள் எல்லாமே மிக அழகாக வரையப்பட்டுள்ளன. கழுத்து மற்றும் தோணின் மடிப்புகளும் நேர்த்தியானவை
காண்டாமிருகம் குறுகிய வாலை நீட்டி, முன்னங்காலை முன்னால் நீட்டி பாய்வதற்குத் தயாரான நிலையில் உள்ளது. இது காண்டாமிருகத்துடன் இவர்களுக்கு இருந்த மோதல் சார்ந்த உறவைக் காட்டுகிறது. இந்தக் ண்டாமிருகம் அளவில் மிகப்பெரியது. ரித்விஜ் ‘இவர்கள் வேட்டையாடி உண்ட விலங்குகளை அதே அளவிலும், அஞ்சிய விலங்குகளை பெரிதாகவும் வரைந்தனர்” என்றார்.
ஆனால் உண்மையில் காண்டாமிருகங்கள் அன்று இத்தனை பெரியதாகவும் இருந்திருக்கலாம். அவை ஜுராஸிக் கால எச்சங்கள், அழிந்துபட்டிருக்கலாம். ஏனென்றால் சு.கி.ஜெயகரன் கண்டடைந்த காண்டாமிருக எலும்பும் கூட ஒப்புநோக்க பெரியதுதான்.
இங்கும் அந்த பிரசவிக்கும் பெண் ஓவியம் உள்ளது. ஆனால் இது மிகத்தெளிவாகவே இரு கைகளும், விரித்த கால்களுமாக உள்ளது. பிள்ளை வெளிவருவதும் உள்ளது. இதில் தலையில்லை – லஜ்ஜா கௌரி போலவே. ஆகவேதான் முன்பு பார்த்த இரு கால்களின் படங்களும் பிரசவச் சித்திரமாக இருக்கலாமென ஊகிக்கிறார்கள்.

லஜ்ஜா கௌரிச் சிற்பத்தில் தலைக்குப் பதிலாக தாமரை இருப்பது வழக்கம். இங்கே தலை வெட்டுண்டிருக்கிறது என்பது மட்டுமே வேறுபாடு. லஜ்ஜா கௌரி பற்றிய தொன்மங்கள் எல்லாமே பிற்காலத்தையவை. அதற்கு புராண ஆதாரமில்லை. ஏன் தலை இல்லை என்பதற்கு எந்த பண்பாட்டு விளக்கமும் இன்றுவரை இல்லை.
உண்மையில் இப்படி விளக்கம்தேடிச் செல்வதும் அபத்தம்தான். அதை நமக்கு நாமே பிடரியிலறைந்து சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கற்பனைக்கு தீனி போடுவது தர்க்கம். ஆனால் தர்க்கத்தை ஓர் உதைவிட்டு விலக்கி தாவினாலொழிய கற்பனை முன்னகர முடியாது.

இந்தக் பாறைச்செதுக்குகளை நாம் குகை ஓவியங்களுடனும், நெடுங்கற்களுடனும், கற்பதுக்கைகளுடனும் இணைத்து ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அத்துடன் இன்றும் வாழும் தொல்குடிகள், குறிப்பாக கற்கால வாழ்க்கையில் இருந்து வெளிவராத ஜாரவா, சென்டினல் தீவு பழங்குடிகள், ஒரிசா பழங்குடிகள் வாழும் வாழும் வகையை இவற்றுடன் இணைத்து புரிந்துகொள்ளவேண்டும்.
என்ன சிக்கலென்றால் இன்று ஆய்வுகள் மானுடவியல், தொல்லியல், தொல்மானுடவியல் என விதவிதமாகப் பிரிந்துகிடக்கின்றன. இவை அனைத்தையும் இணைத்து ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளும் அறிஞர்கள் அனேகமாக இல்லை. அவ்வாறு சிலர் எதிர்காலத்தில் உருவாகி வரக்கூடும். இன்றைய சூழலில் துறைசார் அறிஞர்கள், துறைசார் நெறிகளுக்கு ஏற்ப ஆய்வுசெய்வதே வழிமுறையாக உள்ளது இன்றைய கல்வித்துறை ஒட்டுமொத்த ஆய்வை ஏற்பதில்லை. வெறும் கற்பனை, துறை எல்லைக்கு வெளியே செல்லுதல் என தூக்கிவீசிவிடுகிறது.
அத்துடன் அறிஞர்கள் என்பவர்களே அந்தந்தக் கால அரசியல் கோட்பாடுகள் மற்றும் சமூகவியல் கோட்பாடுகளால் அடித்துச் செல்லப்படுபவர்களாக உள்ளனர். மானுடவியல் ஆய்வாளர்கள் அனைவரிலும் குளோட் லெவிஸ்டிராஸின் செல்வாக்கு மிகுதி. அதை அவர்களால் கடக்கவே முடிவதில்லை. உலகசிந்தனைக்கு பின்நவீனத்துவம் ஓர் அழிவை, உடைவை உருவாக்கியது. அதிலிருந்து சிந்தனை இன்னும் மேலேறவே இல்லை.
இன்றைய இன்னொரு போக்கு அரசியலுக்குள் ஆய்வுகளைக் கொண்டுசெல்லுதல். நம் உள்ளூரில் சு.வெங்கடேசன் போன்ற துளியறிவுகள் ஆய்வுகளை ஊடுருவி வழிநடத்தும் அவலம் இன்னொருவகையில் உலக ஆய்வுக்களத்திலேயே உள்ளது. இன்னும்கூட இனவாத மேட்டிமைநோக்கு, பழையபாணி மானுடப்பரிணாமவாதம் ஐரோப்பிய ஆய்வுகளில் செல்வாக்கு செலுத்துகிறது.
உக்ஷி (Ukshi) என்னும் ஊரில் இருந்த மாபெரும் யானையை பார்க்கச் சென்றொம். நாங்கள் பார்க்கும் பாறைவரைவோவியங்களில் அதுவே கடைசி. மிகப்பெரிய கோட்டோவியம் அது. அதைப்பார்க்க ஒரு காவல்மாடம் ஊராரால் கட்ட ஆரம்பித்து கொரோனாக்காலத்தில் கைவிடப்பட்டு இடிந்து கிடக்கிறது. ஒரு மதில்மேல் ஏறிநின்று பார்க்கலாம். மழைக்காலமாதலால் புல்முளைத்து மூடியிருந்தது. ஆனாலும் அதை ஓரளவு பார்க்கமுடிந்தது.
அந்த யானையின் தனித்தன்மை அதன் நேரான கொம்புகள்தான். முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் தக்காணப்பகுதியில் வாழ்ந்து மறைந்த யானை வகை அது. உடலளவில் பெரியதும்கூட. பெரியவகை யானைகள் அவற்றின் விரைவின்மையாலேயே முதலில் அழிந்துபட்டன. இன்று வாழ்பவை சிறிய வகை. அந்த ஓவியம் பலமடங்கு பெரிதாக்கப்பட்டது.
உக்ஷியின் பேரானைச் சித்திரத்துடன் பாறை ஓவியங்களைப் பார்த்துவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். மாலை விடுதிக்கு திரும்புவது என்னும்போதே காபி நினைவும் எழுந்துவிடுகிறது. இனி எங்கு சென்றாலும் காபிமேக்கர் இல்லாமல் செல்லமாட்டேன் போலிருக்கிறது.
இரவு அறையில் நண்பர்கள் ஆளுக்கொரு கேள்வி கேட்க நான் விரிவாக உரையாடினேன். சிந்தனைகளை தர்க்கபூர்வமாக தொகுத்துக்கொள்வது பற்றியும், வெண்முரசு பற்றியும். 11 மணிக்குத்தான் தூங்கச் சென்றோம்.
(மேலும்)
Mapping and Spatial Analysis of some Petroglyphs in Ratnagiri District of Maharashtra, India
PETROGLYPHS IN KONKAN: HISTORIOGRAPHY, RECENT DISCOVERIES AND FUTURE ENDEAVOURS
Interpreting the petroglyphs of prehistoric shamans of India’s west coast