கேரளத்தில் ஒரு படம்

அண்மையில் ஒரு நண்பர் கண்ணனூரில் இருந்து ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தார். அவர் சாப்பிட்ட ஒரு சிறிய உணவகத்தின் சுவரில் நூறு நாற்காலிகள் (நூறு சிம்ஹாசனங்கள்) குறுநாவலின் விளம்பரம். அருகே தமிழில் என்னுடைய ஒரு மேற்கோள் வாசகம்.

ஒரு நிலம் இலக்கியத்தைக் கொண்டாடுவதென்பது கேரளம், கர்நாடகம், ஒரிசா, வங்கம் ஆகிய மாநிலங்களில் நாம் அடிக்கடிக் காணக்கூடுவதுதான். கர்நாடகத்தின் பள்ளிகளின் சுவர்களில் இலக்கிய ஆசிரியர்களின் படங்கள் வரையப்பட்டிருப்பதை நாம் அடிக்கடிக் காணலாம், நான் பதிவுசெய்துள்ளேன். ஒரிசாவில் அவர்களின் முக்கியமான நவீன இலக்கியவாதிகள் அனைவருக்கும் நகர்மையங்களில் சிலைகள் உள்ளன.

கேரளத்தில் இலக்கியவாதிகள் பிறந்த ஊர்களில் அவர்களுக்குச் சிலை இல்லாமலிருப்பது மிக அரிது. ஓ.வி.விஜயன் போன்ற படைப்பாளிகள் எழுதிய நிலங்களிலேயே அவர்களுக்கு நினைவிடங்கள் உள்ளன. தமிழில் அரசியல்வாதிகள் அல்லது அரசியல்கட்சிகளுடன் இணைந்து செயல்பட்ட எழுத்தாளர்களுக்கே அவ்வகை ஏற்புகள் அமைந்துள்ளன. ஒரே விதிவிலக்கு கி.ராஜநாராயணன்.

இந்த ஓட்டலில் உள்ள போஸ்டர் ஒரு தன்னிச்சையான பதிவு. இதன் பயன் என்ன? இலக்கியம் மீது ஒரு கவனம் குவிகிறதென்பதுதான். இவ்வகைச் செயல்பாடுகளால்தான் வாசிப்பு நிலைகொள்கிறது. வாசிப்புக்கு வருபவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. தமிழில் என் பெருந்தொற்றுக் காலக் கதைகளின் தொகுப்புகள் இரண்டாம்பதிப்பை அடைந்துள்ளன. அவற்றின் மலையாள மொழியாக்க நூல் பல பதிப்புகள் கடந்துவிட்டது.

இத்தனைக்கும் இலக்கியத்திற்கு சிறிதேனும் கவனம் அமைவது அண்மையில்தான். அந்தக் கவனமே பாமரர்களை, அரசியல் உதிரிகளை புழுங்கச் செய்கிறது. எழுத்தாளர்கள் மீதான வசையும் அவமதிப்பும் மும்மடங்காகி உள்ளன. அதை அஞ்சி புகழும் வேண்டாம் என மறைந்திருக்க விரும்பும் எழுத்தாளர்களே இங்கே மிகுதியாக உள்ளனர்.

முந்தைய கட்டுரைகற்காலக் கனவுகள்- 4
அடுத்த கட்டுரைஅணி, கடிதங்கள்