மானுட ஆழம் – கடிதம்

இனிய ஜெயம்,

நீங்கள் ஏதேனும் பயணம் கிளம்பும்போதெல்லாம் அது சார்ந்து இணையத்தில் ஏதேனும் தேடி வாசிப்பேன். அந்த வகையில் இந்த முறை நான் கண்டடைந்த விஷயங்கள் இரண்டு. பொதுவாக உலகம் முழுவதும் ஆப்ரிக்காவுக்கு வெளியே எங்கேனும் இருந்து 10 வருடத்துக்கு ஒரு முறை தொல் மானுட எச்சம் ஏதேனும் கிடைக்கும். இனி மானுடத்தின் தொட்டில் ஆப்ரிக்கா எனும் கூற்றை மாற்றி எழுத வேண்டும் என்ற நிலை வந்து விட்டது என்ற கோஷம் கிளம்பும். அவற்றின் உண்மையான முழுமைப் பார்வை கொண்ட அறிவியல் பூர்வமான எல்லை அடுத்து வரும் நான்கு ஐந்து வருடத்தில் தெளிந்து, மானுடவியல் ஆய்வாளர்கள் மீண்டும் அனைத்தையும் ஆப்ரிக்காவில் இருந்து துவங்குவார்கள். தொடரும் இந்த விளையாட்டில் ஆப்ரிக்காவுக்கு வெளியே மானுடம் என்பதன் மற்றும் ஒரு தடயம் இப்போது துருக்கியில் கிட்டியிருக்கிறது. 12,000 வருடத்துக்கு முன்பான கோபெக்லி டேபே கோயில் உள்ள அதே துருக்கியில்.

https://scitechdaily.com/discovery-of-8-7-million-year-old-fossil-ape-challenges-long-accepted-ideas-of-human-origins/

இத்தகு விஷயங்கள் உறுதி கொள்ள மென் மேலும் தரவுகள் தேவை. உதாரணமாக  இந்திய நிலத்தின் இடைக் கற்காலம் என்பதன் காலம் இரண்டு உறுதியான தொல் தடம் வழியேதான் சமீபத்தில் மாற்றி எழுதப்பட்டது. முதலாவது நர்மதை சாரதில் கிடைத்த புருவம் வரையிலான தொல் மானுட மண்டைக் கப்பரையின் காலம் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது எனும் ஆய்வு முடிவு.

https://anthropology.iresearchnet.com/narmada-man/

அது முற்ற முடிவாக அவ்விதம்தான் என்பது மேலும் உறுதியானது கொசஸ்தலை சாரத்தில்  இடைக் கற்கால கருவிகள் கிடைத்து அதன் வயது மூன்று லட்சம் ஆண்டுகள் என்று உறுதி கண்ட பிறகு.

https://www.bbc.com/tamil/india-42959325

இன்று இந்த ஆய்வுகள் சார்ந்த அறிவியல் தரவுகள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. இனி இந்தக் (time line) காலக் கோடு கொண்டுதான் இந்தியத் தொல்லியல் களத்தில் பின் வரும் ஆய்வுகள் அலசி ஆராய்ந்து பார்க்கப்படும். இப்படி அடிப்படை ஆதாரத்தை தொடர்ந்து அடுத்தடுத்து கிட்டக் கூடிய இணை ஆதார வரிசை கொண்டுதான் இத்தகு எட்டு மில்லியன் சமாச்சாரங்கள் போன்றவை உறுதி கொள்ளும். இவை போக உயிரியல் ரீதியாக மானுடம் ஆப்ரிக்காவில் தோன்றினால் என்ன அதற்கு வெளியே, ஏன் செவ்வாய் கிரகதில் தோன்றி இருந்தால்தான் என்ன?  ஆனால் பண்பாட்டு ரீதியாக மானுடம் என்பதை அடையாளம் செய்யும் அடிப்படைக் கூறுகளின் மிகப் பழமையான சான்று இன்றும் ஆபிரிக்காவில்தான் கிடைக்கிறது.

பொதுவாகவே 2000 க்குப் பிறகான தொழில்நுட்ப வளர்ச்சி, தொல் மானுடவியல் சார்ந்த வரையறைகள் பலவற்றை பழையவை அல்லது செல்லாதவை என்று ஆக்கிவிட்டன. உதாரணமாக, ஹோமோ வகைமையில் படிநிலை என கொண்டு, அதன் கீழ் படியில் இருக்கும் ஹோமோ ஹேபிலைன் க்கு முகபாவம் காட்ட சிரிக்க தெரியும், நிமிர்ந்து இரண்டு காலில் நடக்க வரும், நமதே போல எடை கொண்ட மூளை உண்டு, கற்களை பயன்படுத்த தெரியும் என்று வகைப்படுத்துவர். அதன் மேல் படியில் உள்ள ஹோமோ எரக்டஸ்கு கூடுதலாக நெருப்பை பயன்படுத்த தெரியும். அதன் மேல் படியில் உள்ள ஹோமோ நியண்டர்தாலுக்கு நீத்தார் வழிபாடு தெரியும், அதன் மேல் உள்ள ஹோமோ சேபியன் ஆன நமக்கு அதனினும் கூடுதலாக மொழியும், கலையும், விவசாயமும் இன்ன பிறவும் தெரியும் என்பதே 2000 வரையிலான பொதுவான வரையறை. தமிழில் மூதாதயரைத் தேடி எனும் தொல் மானுட வரலாறு குறித்த நூலை எழுதிய சு.கி ஜெயகரன் இந்த வரிசையை பயன்படுத்தி இருப்பதை உதாரணம் சொல்லலாம்.

2000 கு பிறகு நியண்டர்தால் பண்பாடு சார்ந்த அறிதல்கள் வேறு முகம் கொண்டு மேற்கண்ட வரையறையை காலாவதி ஆக்கி விட்டது.  தற்போதய ஒட்டு மொத்த மானுடவியல் ஆய்வாளர்கள் ஏற்பின்படி, மனிதனுக்கும் குரங்குக்கும் பொதுவான மூதாதை, அதிலிருந்து கிளைத்து அடுத்தடுத்து பரிணமித்து இன்றைய ஹோமோ சேபியன் என்ற நிலை வரையிலாக வளர்ந்த இந்த ஹோமினாய்ட் எனும் உயிரியல் சார் மானுடவியல் களம் நான்கு வண்ணம் கொண்டு பிரிக்கப்படுகிறது. (ஆரிய சதி?) பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு. சிகப்பு வரிசையில்தான் ஹோமோ சேபியன்ஸ் ஆகிய நாம் இருக்கிறோம். இந்த வண்ணங்கள் குறிப்பிட்ட சில விஷயங்களில் படிநிலை பூர்வமானது அல்ல. ஒன்றுடன் ஒன்று கலந்தது. அதாவது ஒரே காலத்தை அதன் இயற்கை சூழலை இந்த வண்ண வரிசை மானுடம் பகிர்ந்துகொண்டு இருக்கிறது.(இவை அனைத்துமே மனிதர்கள் இது மானுடம் என்பது நான் பயன்படுத்தும் சொல், உயிரியல் சார் மானுடவியல் இதை சொல்லாது. ஹோமோ சேபியன்ஐ தாண்டி ஹோமோ நியண்டர்தாலை கூட  மானுட எல்லைக்குள் அனுமதிக்க அதில் ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு.எல்லாம் அறிவியல்பூர்வமானவை என்றே சொல்கிறார்கள். இந்த அறிவியல் ஆய்வுகளுக்கு அதன் படியிலான தொல் மானுட வாழ்வு சார்ந்த ஊகங்ளுக்கு எல்லாம் அடிப்படையான, இதுவரை கிடைத்த தொல் மானுட படிமம் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு குளிர் பதன பெட்டிக்குள் வைத்தே அடைத்து விட முடியும் என்று பில் பிரைசன்  நகைச்சுவையாக சொல்லுவார்)  இந்த வகைமையின் சாட்சியமே இரண்டாவதாக நான் கண்ட (mark mannucchi) மார்க் மன்னுக்கி இயக்கிய cave of bones, எலும்புகளின் குகை எனும் ஆவணப்படம்.2013 முதல் நேஷனல் ஜியாக்ரபி, தொல்லியல் அறிஞர்கள், தடயவியல் அறிஞர்கள், உயர் நவீன தொழில் நுட்பம் இவற்றின் உதவியோடு தொல் பழங்கால மற்றும் மானுடவியல் ஆய்வாளர் லி பெர்கர், தென்னாப்ரிக்கா ஜோகன்ஸ்பர்க் அருகே ரைசிங் ஸ்டார் எனும் பெயரிட்ட  குகையில் அவர் புதியதாக கண்டு பிடித்த ஹோமோ நலேடி வகையின் மீது அவர் நிகழ்த்திய ஆய்வுகளை, அதன் 2022 ஆம் ஆண்டின் இறுதி பெற்ற முடிவுகளை, அந்த நலேடி மக்களின் வாழ்வின் குறிப்பிட்ட சூழல் ஒன்றினை, கனவுக் காட்சி போலும் புனைந்து விளக்குவதே இவ்வாவணம். இந்த லி பெர்கர் இதற்கு முன்பாகவே இதே தென் ஆப்ரிக்காவில் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டு வாழ்ந்த இதுவரை கண்டறியப்படாத புதிய ஹோமினாய்ட் இனம் ஒன்றைக் கண்டு பிடித்த வகையில் புகழ் பெற்றவர். 2016 இல் டைம் இதழ் வெளியிட்ட தம் துறை சார்ந்த உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலில் இவரும் இடம்பிடித்திருக்கிறார்.

இவ்வாவணத்துக்கு வெளியிலும் நேஷனல் ஜியாக்ரபி முதலான இதழ் கட்டுரைகள் வழியே லி பெர்கரின் இந்த cave of bones ஆய்வுகளும் முடிவும் விரிவாகவே வாசிக்கக் கிடைக்கிறது. 1900 இல் சுண்ணாம்பு இன்ன பிற தனிமங்கள் தேடி குடையப்பட்ட வகையில் முதன் முதலாக இந்த ரைசிங் ஸ்டார் குகை நமது அறிதலுக்குள் வர, 1980 கும் பிறகுதான் அங்கே மானுடவியல் ஆய்வுகள் நுழைந்து இந்த குகைக்கு இந்த பெயரும் கிடைத்தது , 2008 க்கு பிறகே இதே போல பல களங்களை அவர் கண்டடைந்த வரிசையில் இந்த குகையில் உள்ள தொல் மானுட எச்சங்கள் லி யின் கவனத்துக்கு வருகிறது. எப்போதும்போல அங்கே கிடைத்த எலும்புகள்  ஏதேனும் மிருங்கம் இழுத்து வந்து, உண்டுவிட்டுப் போட்டுச் சென்ற எஞ்சிய மிச்சில் எனும் முதல் ஊகத்தின்படி அமைந்த கருத்து விரைவிலேயே உடைந்தது. எலும்புகள் இணைத்துக் கூட்டி கிட்டத்தட்ட முதல் முழு உடல் 2013 இல் கிடைத்தபோது ஆய்வுகள் தீவிரம் கண்டு, இது தொல் பழங்கால ஆதிவாசிகள் வாழ்ந்த குகை என்று முடிவானது. அது என்ன இனம் அவர்கள் காலம் என்ன என்று ஆய்வு செய்கையில் ஸ்தம்பிக்கவைக்கும் அந்த உண்மை தெரிந்தது. அது இதுவரை கண்டறியப்படாத மேலும் ஒரு புதிய இனம். சில அடிப்படைகளின் படி அதற்கு ஹோமோ நலேடி என பெயர் இடுகிறார் லி.

அந்த குகை என்பது முதல் அறை மட்டுமே, அந்த குகைக்கு பின்னே செல்லும் ஒரு மிக மிக குறுகிய சுரங்கம் வழியே (சூப்பர் மேன் கூட இந்த வழியில் தவழ்ந்துதான் போக முடியும் என்ற ஆய்வாளர் ஒருவரின் நகைச்சுவை குரல் வழியே இந்த சுரங்கம் சூப்பர் மேன்ஸ் கிராவ்ல் என்ற பெயர் பெறுகிறது) மற்றொரு அறைக்கும், அங்கிருந்து செங்குத்தாக ஏறி, குறுகிய பிலம் ஒன்றில் நுழைந்தால், எட்டு இன்ச் மட்டுமே மொத்த அகலமும், பதினைந்து மீட்டர் ஆழமும் கொண்ட பாதை வழியே செங்குத்தாக சரிந்து சென்று நிலம் தொட்டால் இறுதியாக மூன்றாவது அறை ஒன்றும் வரும் என்று நவீன கருவிகள் காட்டியது. அதாவது இந்தோனேசியா குனங் படாங், எகிப்து பிரமிட் போன்ற மனித பிரம்மாண்ட  யத்தனத்துக்கு இணையான அதே போன்றதொரு பிரம்மாண்ட இயற்கை அமைப்பு.

இப்போதும் கடக்க கடினமான அந்த சூப்பர் மேன்ஸ் கிராவ்ல் பாதையை கடந்து டிராகன் சேம்பர் என்று பெயரிடப்பட்ட அந்த இரண்டாம் அறைக்கு சென்றால், ஒரு குழந்தையின் உடல் உட்பட முழுமையான பல உடல்களின் புதை படிமங்கள் கிடைக்கின்றன. அவை புதைந்து கிடக்கும் தன்மை தெளிவாகவே சுட்டுகிறது. அதுவொரு கல்லறைக் களம். இப்போதும் மின்சாரம் இல்லை எனில் அங்கே முற்ற முழுதான (pitch black) இருள்தான். எனில் இது எங்கனம் சாத்தியம்?  அதிர்ச்சி அளிக்கும் அடுத்த தடயம் கிடைக்கிறது. நலேடிக்கள் நெருப்பை பயன்படுத்த அறிந்திருக்கிறார்கள் என்பதே அது.

அந்தக் குழந்தையின் புதை படிமம் அவ்விதமே உயர் தொழில்நுட்பம் வழியே மிக்க பாதுகாப்புடன் பெயர்த்து எடுக்கப்பட்டு, பொதியப்பட்டு, அந்த மிகக் குறுகிய பாதை வழியே சேதம் இன்றி வெளியே எடுக்கப்பட்டு, ஆய்வகம் சென்று நவீன ஊடுருவல் கதிர்கள் வழியே ஆய்வு செய்யப்படுகையில் அந்த குழந்தையின் கையில் எழுத்தாணி போல ஒரு கல்லை பிடித்திருப்பது தெரிய வருகிறது. அந்தக் கல்லை மட்டும் தனியே ஆய்வு செய்த வகையில் எழுந்து வருகிறது மற்றொரு அதிர்ச்சி. ஆம் அது ஒரு கருவி. இடைக் கற்கால ஆயுதம்.

இரண்டாவது டிராகன் அறையில் இருந்து செங்குத்தாக உயர்ந்து, குறுகிய குகைக்குள் ஊர்ந்து, (அந்த பாதைக்கு டிராகன் டெயில் என்று பெயர்) சாத்தியமே அற்ற எட்டு அங்குல இடைவெளிக்குள் நுழைந்து 15 மீட்டர் சரிந்து இறங்கி,  டிநலேடி சேம்பர் எனும் பெயரிட்ட மூன்றாம் அறைக்குள் நுழையும் முன்பாக, விதானதில் இருந்து தொங்கி இருக்கும் உள் நாக்கு போன்ற பாறை அமைப்பில் மற்றொரு அதிர்ச்சி கிடைக்கிறது. ஆம், நலேடிக்கள் வெட்டிய # போன்ற பாறை செதுக்கு வெட்டுக்கள் அதில் நிறைந்திருக்கிறது. கடந்து மூன்றாவது அறைக்குள் சென்றால் டஜன் கணக்கில் துல்லியமாக கருவறை போலவே ஓவல் வடிவில் வெட்டப்பட்ட குழிக்குள், கருவறைக் குழந்தை போலவே கிடத்திப் போட்டு புதைக்கப்பட்ட நலேடி மூதாதைகள் வரிசை.

எட்டு வருட ஆய்வின் தொடர்ச்சியாக, தன்னைப் பணயம் வைத்து முதன் முதலாக இந்த குகைக்குள் நுழையும் (மிக மிக மெலிந்த பாம்பு போல வளையும் உடல் கொண்ட ஆசாமிகள் தவிர வேறு எவரும் இந்த குகையின் மூன்றாவது அறையை அடைய முடியாது என்பதை இந்த ஆவணம் அளிக்கும் காட்சிகள் வழியே அறியலாம்) லி பெர்கரை தொடரும் இவ்வாவணம்,  அவரது குரலின் வழியாகவும், காட்சிகள் வழியாகவும் விவரித்துக் காட்டும் உண்மை உள்ளபடியே திகைக்க வைப்பது. அந்தக் கல்லறைக் களம் நிறைத்த நலேடி மக்களின் காலம் என்பது ஆய்வு முடிவின்படி இன்றிலிருந்து மூன்று லட்சம் வருடம் முந்தையது.  (அதாவது இங்கே  இந்திய நர்மதை நாயகன் வாழ்ந்த அதே காலம்). உலகில் இதுவரை கிடைத்த நீத்தார் பண்பாட்டு அடையாளங்களில் மிக மிக மூத்தது இதுவே.  இவர்களுக்கு நெருப்பை உருவாக்க, அதை கட்டுப்பாடாக வைத்து உபயோகிக்க தெரியும், எனவே சமைத்து உண்ணத் தெரியும். புதிய கற்கால ஆயுதம் கொண்டு புழங்கத் தெரியும். (அதாவது இங்கே கொசஸ்தலையில் கிடைத்த அதே காலத்தின் அதே இடைக் கற்கால ஆயுதம்). கற்செதுக்கு வழியே கலை செய்யத் தெரியும், இன்றைய நவீன மனிதன் கூட சென்று வர சாத்தியம் குறைந்த இடத்திற்குள் கொண்டு சென்று முன்னோர்களை முறைப்படி  புதைக்கத் தெரியும்,(எனவே) சடங்குகள் செய்யத் தெரியும், கூடி வாழத் தெரியும், இந்த வாழ்வு குறித்தும் இந்த வாழ்வுக்கு அப்பால் என்பது குறித்தும் கற்பனை செய்யத் தெரியும்.

அனைத்திற்கும் மேலான இணையற்ற அதிர்ச்சி என்பது, சராசரியாக ஐந்து அடி உயரம் கொண்ட இந்த நலேடி மனிதர்களின் சராசரி மூளை அளவு, அவர்கள் மண்டயோட்டுக் கொள்ளவின்படி ஒரு பெரிய சைஸ் தக்காளியின் அளவு மட்டுமே கொண்டது எனும் ஆய்வு முடிவு. அதாவது நமது மூளை அளவில் நான்கில் ஒரு பகுதி. இந்த அம்சம்தான் இதுவரை நிகழ்ந்த தொல்  மானுடவியல் சார்ந்த ஆய்வு முடிவுகள்,  தொல் மானுடம் சார்ந்த கதையாடல்கள் அனைத்தையும் கலைத்துப் போட்டிருக்கிறது. இந்தக் கலைப்பை அவ்வளவு எளிதாக உடனடியாக இந்தத் துறை முழுவதும் ஒப்புக்கொள்ள இயலாது இல்லையா? எனவே இன்னும் உரிய காலம் வரும் வரை மேற்கண்ட அனைத்தையும் இந்த அறிவுத்துறை நிச்சயம்

” லாம்  ” வரிசையில்தான் வைத்திருக்கும்  என்றே  எவரும் சொல்லிவிட முடியும்.  ஹோமோ சேபியன் வரலாற்றில் உள்ளதிலேயே கிட்டத்தட்ட 50,000 வருடம் முன்பான கற்செதுக்கு வெட்டுக்களில் உள்ள # , நியாண்டர்தால் குகைக் கலையில் கிட்டத்தட்ட 80,000 வருடம் முன்னர் வெட்டப்பட்ட # , இவற்றுடன் இவ்வாவணம் மூன்று லட்சம் ஆண்டுகள் முன் நலேடி மனிதர்கள் வெட்டிய # ஹாஷ் வரிகளை இணைத்துக் காண்பிக்கும் பொழுது வியந்து ஸ்தம்பித்து விடுவோம்.கதிர் ஒளியின் மென்நீலப் பின்னணியில் வயலட் வண்ணம் கொண்டு ஒளிரும் அந்த வெட்டு வரிகளை முதன் முதலாக லி பெர்கர் தனது விரல்கள் கொண்டு மெல்லத் தொட்டு வருடுகையில், அக்கணத்தின் லி போலவே நானும் உளம் பொங்கி, கண்ணீர் திரையிட்ட காட்சி வழியாகவே அனைத்தையும் கண்டேன்.

ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னர் எனது தோழி, அவரது முதல் மகன் மூன்று வயதை நிறைவு செய்த அன்றைய நாளில் எடுத்த அவனது புகைப்படங்களை அனுப்பி இருந்தார். கோடுகள், சுழிகள், கிறுக்கல்கள் நிறைந்த நோட்டுப் புத்தகத்தில் அதன் மேலேயே ஒருக்களித்துப் படுத்து, கருவறைக் குழந்தை போலவே கைகளை கால்களைக் குறுக்கி கண் வளர்ந்திருந்தான். அவனது முஷ்டி பிடித்த வலது கையில் இது என்னுது எனும்படிக்கு பென்சிலை இறுக்கிப் பிடித்திருந்தான். அவன் கைக்கு அருகே துயிலில் அவனைத் தீய கனவுகள் வந்து தீண்டாது எனும் நம்பிக்கைக்கு,  தேங்காய் பத்தை போடும் ஒரு குட்டி அரிவாள் கிடத்தப்பட்டிருந்தது.

இந்த ஆவணத்தில் அந்த நலேடி குழந்தை கையில் இருக்கும் கல்லாயுதத்தை ஒரு ஆய்வாளர் அது அவன் கிறுக்கி விளையாடிய பென்சில் என்கிறார். யாரறிவார் அந்தக் குழந்தையை அவ்வுலகில் தீமை எதுவும் வந்து தீண்டிவிடலாகாது என்ற நம்பிக்கையில் தரப்பட்ட ஆயுதமாகவும் அது இருக்கலாம்.

இந்த ஆவணம், (அறிவியல் இவர்களை மனிதர்கள் என அங்கீகரிக்காது), அவர்கள் மனிதர்கள் இல்லை என்றே மீண்டும் மீண்டும் சொல்கிறது. உடன் எது மானுடம் என்ற கேள்வியையும் அது எழுப்புகிறது. அவர்கள் மனிதர்கள் இல்லையெனில் பின் எவர்தான் மனிதர்? அன்றைய அந்த ஹோமோ நலேடி குழந்தை தொட்டு இன்றைய (என் தோழியின்) இந்த ஹோமோ சேபியன் குழந்தை வரை காலத்தால் அறுபடாது,  இந்த எழுவிண்மீன் களம் தொட்டு, குனங் பாடாங், பிரமிடுகள் தொடர்ந்து சோழப் பள்ளிப்படை கோயில் வரை தொடரும் அந்த ஆழ்மனம் அது கொண்ட ஆழ் கனவு. அது மானுடத்தின் சொத்து. அந்தக் கனவைப் பகிர்ந்து கொள்ளும்  எவரும் மானுடரே. எனவே எனக்கு நலேடிக்கள் மானுடர்களே.

குகனோடும் ஐவரானோம் என்றவன், மானுடம் வென்றதம்மா என்று சொன்ன அந்தக் கலைஞன் இன்றிருந்து இதைக் கண்டிருந்தால்,நலேடியோடும் மானுடரானோம் என்றே பாடியிருப்பான்.

பின்னிணைப்புகள்:

1) கேவ் ஆஃப் போன்ஸ் ஆவணப் படத்தின் முன்னோட்டம்.

https://youtu.be/D85B4rVcFtk?feature=shared

2) லி பெர்கர் அவர்களின் நேர்காணல்.

https://youtu.be/TsBTXHFoexI?feature=shared

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைசோர்பா – கடிதம்
அடுத்த கட்டுரைமாதர் மனோரஞ்சனி