அன்புள்ள ஜெ
நலம்தானே?
அண்மையில் எம்.கோபாலகிருஷ்ணன் விழா நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பெரும்பாலும் விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்களின் முகங்கள்தான் கண்ணுக்குப் பட்டன. புதுவாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவர்களை எனக்கு நேரில் அறிமுகம். மற்றவர்கள் முகம் தெரிந்தவர்கள். விஷ்ணுபுரம் நிகழ்வு, குக்கூ நிகழ்வுகளிலும் நீங்கள் நடத்தும் பயிற்சிமுகாம்களிலும் கண்டவர்கள்.
நான் சென்னையில் எல்லா இலக்கியக் கூட்டங்களுக்கும் செல்பவன். எல்லா கூட்டங்களிலும் கணிசமானவர்கள் விஷ்ணுபுரம் அமைப்புடன் தொடர்புடையவர்களாகவே இருக்கிறார்கள். எந்தக்கூட்டமானாலும் பேசுபவர்களில் பாதிக்குமேல் விஷ்ணுபுரம் நிகழ்வுகள், உங்கள் இணையதளம் வழியாக அறிமுகமானவர்கள். எம்.கோபாலகிருஷ்ணன் விழாவில் வேறு முகங்கள் ஒன்றிரண்டுதான்.
இது மகிழ்ச்சியாக இருந்தாலும் பிறர் இலக்கியத்தைவிட்டு விலகிச்செல்கிறார்களோ என்ற எண்ணமும் உருவாகிறது. இன்றைக்கு உருவாகியிருக்கும் அதிதீவிர அரசியல் polarization பலரையும் அரசியலை நோக்கி ஈர்த்து விட்டதா? அவர்கள் இலக்கிய ஆர்வமில்லாதவர்களாக ஆகிவிட்டார்களா?
செந்தில்குமார்
அன்புள்ள செந்தில்,
அரசியல் துருவப்படுத்தல் என்றும் உள்ளது. தேர்தல்களை ஒட்டி அது அரசியல்கட்சிகளாலும், ஊடகங்களாலும் உச்சகட்ட நிலைக்குக் கொண்டுசெல்லப்படும். அதனால் அரசியல்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் லாபம். மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு. விளையாட்டில் கட்சிகட்டுவதுபோல. செயற்கை ஆவேசம், செயற்கை உற்சாகம், செயற்கைக் கோபம்.
ஆனால் எதையாவது நெடுங்காலநோக்கில் செய்ய நினைப்பவர்களுக்கு அது பெரிய எதிர்மறைவிசை. நேரவிரயம் என்பதை விட உளஆற்றலின் விரயமே முக்கியமானது. இந்தியாவில் நமக்கெல்லாம் கிடைக்கும் நமக்கான நேரமே மிகக்குறைவு. அதில் ஒவ்வொரு துளியும் நமக்கு முக்கியமானது.
விஷ்ணுபுரம் என ‘அமைப்பு’ ஏதுமில்லை. விஷ்ணுபுரம் என்பது ஓர் இயக்கம். கூடுமானவரை இலக்கிய – தத்துவ – பண்பாட்டு ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டுசெல்ல முயலும் ஓர் பண்பாட்டு முயற்சி இது. ஆகவே பெரும்பாலும் இலக்கிய ஆர்வமுள்ள அனைவருமே இதில் தொடர்பு கொண்டிருப்பார்கள். வெளியே உள்ளவர்கள் சிலரே. அவர்கள் அரசியல் விசை மட்டுமே கொண்டவர்கள். அவர்களுடன் நமக்கு உரையாடல் முனைகளே இல்லை.
அத்துடன் நான் இப்போது ‘விவாதங்களில்’ நம்பிக்கை இழந்துவிட்டேன். அதனால் பெரிய பயனேதுமில்லை. ஒருவகை கவன ஈர்ப்பு தவிர. இன்றைய சூழலில் எந்தக்கருத்து மீதும் குப்பையைகொட்டி மூடிவிட முடியும். அமைப்புரீதியாகவே தனிக்கருத்துக்களை சிதறடிக்கிறார்கள். ஆகவே தொடர்ச்சியான சந்திப்புகளும் பயிலரங்குகளுமே முக்கியமானவை. அவை நிலையான ஒரு நட்பு வட்டத்தையும் உருவாக்குகின்றன. அந்த நட்புவட்டங்களால்தான் இத்தனை தொடர் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் திரள்கிறார்கள்
ஜெ