எம்.கோபாலகிருஷ்ணன் விழா நிகழ்வு- லோகமாதேவி

எம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்க உரைகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தாவரங்களில் மிக முக்கியப் பயன் கொண்ட, பல சத்துக்கள் நிறைந்த கனிகளை கொண்ட, ஆனால் மக்களால் சரியாக  அறிந்து கொள்ளப்படாத, மிக மிக குறைவாகவும் அரிதாகவும்  பயன்படுத்தப்படுபவை எல்லாம் ‘’underutilized plants ‘’ என்று வகைப்படுத்தப்படுகின்றன.

இலங்கைக்குச் சென்றிருந்த போது இங்கு பழரசம் செய்யவும் ஊறுகாய்களாகவும் கலந்த சாதம் செய்யவும், விருந்தினர்கள் வருகையிலும் அதிகம் புழக்கத்தில்  எலுமிச்சம் பழங்கள் இருப்பது போல அங்கு விளாம்பழங்களை உபயோகிப்பதைப் பார்த்தேன். அனேகமாக எல்லா வீடுகளிலும் விளாமரங்கள் நின்றன. பொது இடங்களிலும் பூங்காக்களிலும் பல விளாமரங்களை பார்க்க முடிந்தது, விருந்தினர் வருகையில் அப்பழத்தில் தான் பழச்சாறு அளிக்கிறார்கள். விலாம்பழ ஜாம் ,ஊறுகாய், சமையலில் விளாம்பழம் பயன்படுத்துவது  என்று அங்கே அதன் சத்துக்களை, மருத்துவ பயன்களை அறிந்து அதிகம் உபயோகித்துக் கொண்டிருந்தார்கள்.

நான் இந்தியா வந்ததும் ஒரு விளா நாற்றை வீட்டில் நட்டுவைத்து விட்டு ‘’Wood Apple. the underutilized tree of India’’ என்று ஒரு கட்டுரை எழுதி அது ஒரு நல்ல அறிவியல் சஞ்சிகையில் வெளியானது.இப்போது மரம் வளர்ந்து வருடம் முழுவதும் கனி அளித்துக் கொண்டிருக்கிறது.

அகரமுதல்வன் M.கோபாலகிருஷ்ணன் அவர்களின் படைப்புக்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கை சென்னையில் நிகழ்த்தவிருப்பதாக அறிந்துகொண்ட போது நான் அரிதாகவே அறியப்பட்டிருந்த  விளாமரங்களைத்தான் எண்ணிக்கொண்டேன்.

M.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த 30 வருடங்களாக எழுத்துப்பணியில் இருப்பவர்.  மனைமாட்சி, அம்மன் நெசவு, மாயப்புன்னகை போன்ற முக்கியமான படைப்புகளை அளித்தவர், பல சிறுகதைகள், பல முக்கிய கட்டுரைகள் எழுதியவர், இந்தி இலக்கியத்தில் மிக முக்கியமான  பங்களிப்பாற்றியவர்.

விஷ்ணுபுரம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கவிதைஅரங்கில் அவரது இந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் எனக்கு அறிமுகமானது.

சென்ற மாதம்  பொள்ளாச்சியில் அவரது ’’இந்தி இலக்கியம் ஒரு அறிமுகம்’’    என்னும்சிறப்பான உரையையும் கேட்டிருந்தேன் மிக முக்கியமான, கொண்டாடப்படவேண்டிய ஒரு ஆளுமையான அவரை குறித்து அதிகம்  பேசப்படாமல் இருந்தது வருத்தத்திற்குரியது.

அகரனின் இந்த முன்னெடுப்பு   பல்லாண்டு காலமாக தீவிர வாசிப்பில் இருக்கும் ஒருத்தியாக அவரது படைப்புக்களை வாசித்தவளாக  எனக்கு பெருமகிழ்வளித்தது.

இந்நிகழ்வில் M.கோபாலகிருஷ்ணன் அவர்களின் முக்கியமான ஐந்து படைப்புகளை ஐந்து அமர்வுகளில் இரு ஆளுமைகள் உரையாற்றி அவர்களது வாசிப்பனுபவங்களை முன்வைத்தது  அரங்கிலிருந்தவர்களுக்கு மிக நல்ல அனுபவமாக இருந்தது. அவரது  பல படைப்புகள் சுடச் சுட அரங்கில் விற்றுத் தீர்ந்தன. நான் வாங்க விரும்பிய  மனைமாட்சியின் இறுதிப் பிரதியை எனக்கு முன்னால் அனங்கன் வாங்கிவிட்டிருந்தார். அத்தனைக்கு அமர்வின் உரைகள் அரங்கில் இருந்தவர்களிடம்  M.கோபாலகிருஷ்ணன் அவர்களின் படைப்புகளை கொண்டு வந்து சேர்ந்திருந்தன

அ.வெண்ணிலா தன் வாழ்வுடன் அம்மன் நெசவை  தொடர்புபடுத்தி  மிகசிறப்பான உரையாற்றி அமர்வுகளை துவங்கி வைத்தார். அப்படியே மனைமாட்சியை ஜா. தீபாவும் செந்தில் ஜகன்னாதனும்  விரிவாக அலசினார்கள். அனைந்து அமர்விலும் மிக நல்ல வாசிப்பனுபவங்கள் முன்வைக்கப்பட்டன. விக்னேஷ் ஹரிகரனின் உரை மிக சிறப்பாகவும் மிக முக்கியமானதாகவும் மிகவும் கவனிக்கும் படியும் இருந்தது

இளம்பரிதி  தீர்த்தயாத்திரை குறித்த உரையின் போது அரங்கில் இருந்தவர்களுக்கு மோனாலிசாவின் புகைப்படங்களை அளித்து, பின்னர்  நாவலைக்குறித்து உரையாற்றியது மிக புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது.

மாலை நிறைவு விழாவில் ஜா. ராஜகோபாலன்  மற்றும் கரு. ஆறுமுகத்தமிழன் ஆகியோரின் சிறப்புரை, மோகனரங்கன் அவர்களின் வாழ்த்துரை ஆகியவை இருந்தன.

ஒரு முழுநாள் இப்படி ஒரு இலக்கியப் படைப்பாளிக்கு, அவரது படைப்புக்கு என முழுமையாக பிரத்யேகமாக  கருத்தரங்கு, அதுவும்  அரங்கம் நிறைந்து கட்டுகோப்புடன் சிறப்பாகவும் மகிழ்வுடனும் நடந்தது மிக நம்பிக்கையளிக்கும் ஒன்றாக இருந்தது. பாதி அரங்கு விஷ்ணுபுரம் நண்பர்களால் நிறைந்திருந்தது.

M.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எங்கள் கல்லூரிக்கு சில வருடங்கள் முன்பாக சிறப்பு விருந்தினராக வருகை தந்த போது,எப்படி எளிமையும் புன்சிரிப்புமாக இருந்தாரோ அப்படியே இப்போதும் இருக்கிறார் அவர் தன்னைகுறித்தும் தன் படைப்புக்கள் குறித்தும்  பேசப்பட்டவைகளை கூச்சத்துடன் தான் கவனித்துக் கொண்டிருந்தார்,

அகரமுதல்வன் இந்நிகழ்வை மிக சிறப்பாக முன்னின்று நடத்தினார்.  நிகழ்ச்சியின் துவக்கத்திலும் இடையிலும் மாலை நிறைவு விழாவிலும் பதிகங்கள் பாடப்பட்டது மிக நன்றாக இருந்தது. முத்து என்பவர் ‘’யானே பொய், என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்’’ என்னும் பாடலை உருகி உருகிப்  பாடுகையில் சொல்லமுடியாத ஆறுதலும் நிறைவும் உண்டாகியது. துயரிலோ அசுகத்திலோ இருக்கையில் பிரியமானவர்களின் கை நெற்றியை தடவிவிடுவதைப்போல் அக்குரலும் பாடலும் பொருளும் ஆறுதலளித்தன.

மிக கச்சிதமாகவும்  ஒழுங்குடனும் நிகழ்வை அகரன் நடத்தினார்.  முழுநாளும் அகரன் எங்கும் அமரவே இல்லை. அகரனை செலுத்துவது அவரது இளமையும் குன்றாத உளவிசையும் கூர் கொண்டிருக்கும் உள்ளமும் இலக்கியத்தின் மீதான அவரது பிரேமையும்தான் .

அகரனின் அர்ப்பணிப்பும் கடும் உழைப்பும் பதட்டமில்லாத இயல்பும் புன்னகையும் கையடித்தபடி அவ்வப்போது சிரித்துக்கொள்வதும் , அவரது நம்பிக்கை நிறைந்த  உடல்மொழியும் பிரமிப்பளித்தது.அவருடன் உற்சாகமாக பல இளைஞர்கள் நேரம் காலம் லாபம் பாராமல் இணைந்து பணியாற்றுகிறார்கள்

முதல் நாள் இரவு  விழாவுக்கான பேனரை மரச்சட்டங்களில் பொருத்துவதிலிருந்து மறுநாள் அதிகமான மதிய உணவை சூடு ஆறுவதற்குள் தேவைப்படுவோருக்கு கொடுத்தனுப்பி, இரவு ஒவ்வொருவரையும் முறையாக அனுப்பி வைத்து நாற்காலிகளை எடுத்து அடுக்கிவைப்பது வரை கவனத்துடனும் மகிழ்வுடனும் அகரன் செய்து கொண்டிருந்ததை கவனித்தேன்

விஷ்ணுபுரம் கூடுகைகளுக்கு இணையாக மகிழ்சியும் நட்புணர்வும் நிறைவும் கூடவே  ஒழுங்குமாக  நடக்கும் மற்றுமோர் இலக்கிய கூடுகையை இப்போதுதான் பார்க்கிறேன், கலந்துகொள்கிறேன்

அகரன் பேசுகையில் ’’சிற்றகல் ஒளியில் துலங்கிக்கொண்டிருந்த ஒரு தெய்வத்தை உற்சவ மூர்த்தியாக உலாக்கொண்டு வரும் நிகழ்வு இது’’ என குறிப்பிட்டது மிக கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு  பொருத்தமாக இருந்தது மதியம் நல்ல மழை பெய்தபோது அகரன் ‘’இந்நிகழ்வை வான் வாழ்த்துகிறது’’ என்றார்.

M.கோபாலகிருஷ்ணன் அவர்களின் சமீபத்திய படைப்பான வேங்கை வனம் விஜயா பதிப்பக அரங்கில் வெளியிடப்பட்டபோது நான் குடும்பத்துடன் அந்நிகழ்வில் கலந்து கொண்டேன்.

M.கோபாலகிருஷ்ணன் படைப்புக்களில் மிக வேறுபட்ட கதைக்களம் கொண்டது வேங்கை வனம். சூழியல் இலக்கியங்களில் மிக முக்கியமானதும் கூட

கிபி 1110 லிருந்து 2014 வரையிலான ஒரு பயணத்தில் இந்திய அரசியல், சூழியல், காட்டியல், விலங்கியல், மானுடவியல் போன்ற பல துறைகளின் அரிய கலவையாக உருவாகி இருந்தது வேங்கை வனம்.

ஜெயந்த சௌகான் என்னும் இளவரசன் கனவில் கண்ட ஓரிடத்தை தேடி குதிரையில் காட்டிற்கு வருவதிலிருந்து அந்த கனவுப் பிரதேசத்தில் ஒரு மாபெரும் கோட்டை அமைவதும் அக்கோட்டை பல கைகள் மாறி, அரசுகள் எழுந்து வீழ்ந்து போர் நடந்து பல இறப்புக்கள் நிகழ்ந்து கடைசியில் அக்கொடிவழியின் ரவீந்திர செளகான் தன் மூதாதையும் சம்யுக்தாவை கவர்ந்து வந்தவருமான பிரித்விராஜ் செளகானை நினைவுகூருவது வரை தொடர்கிறது

நாவலின் முக்கிய பேசுபொருட்கள் கோட்டையும்,  வேட்டைமகாலும் பத்மதடாகமென்னும் ஏரியும் புலிகளும்

அக்கோட்டை சூழலுக்கான, சூழல் ஆரோக்கியத்துக்கான குறியீடாகவும் காட்டப்பட்டிருக்கிறது

புலிகள் மிகுந்திருந்த ஒரு காலம், அப்போது வீர விளையாட்டாக புலிகள் கொல்லப்பட்டது பின்னர் முகலாய பேரரசு , அதன் கொடிவழி, அப்போதும் புலி வேட்டையாடப்பட்டது  பின்ன பிரிட்டிஷ் இந்தியாவின் ராயல் கேம் என்னும் பெயரில் புலிவேட்டை, புலிகளின் எண்ணிக்கை அபாயகரமாக குறைந்தபோது முன்னெடுக்கப்பட்ட புலிகள் பாதுகாப்பிற்கான அரசின் திட்டம், சூழல் சுற்றுலா என்று படிப்படியாக சொல்லிக்கொண்டெ வருகையில் அந்த கோட்டையும் மெல்ல மெல்ல சிதிலமடைந்துகொண்டே வருகிறது

ஒருகாலத்தில்  அரசதிகாரிகளின் வீரவிளையட்டாக இருந்து ராயல் கேம் என்னும் பெயர் பெற்ற புலிவேட்டை, பின்னர் கள்ளச்சந்தை வணிகத்தின் பொருட்டு  தொடர்வதும், அதன் உடல் பாகங்கள் விற்கப்படுவதும் எப்படி கள்ளச்சந்தையில் அவ்வணிகம் நடக்கிறது என்பதுவும் வேங்கை வனத்தில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

வேங்கை வனம் காட்டும் ஆளுமைகள் மிக சுவாரஸ்யமானவர்கள் மசானிலிருந்து அப்படியே யானை மீது தாவி புலி வேட்டையாடும் பெண், மேலே பாய்ந்து விட்ட புலியின் வாய்க்குள் துப்பாக்கியை விட்டு சுட்டுக் கொல்லும் பெண், போரில் தோற்பது உறுதியானதும் எதிரிகளின் கைகளின் சிக்கிக் கொள்ளாமல்,  நெருப்பில் பாய நேரமில்லாததால் கைகால்களை கட்டிக்கொண்டு தாமரை மிதக்குமந்த ஏரியில் பாய்ந்து உயிரிழக்கும் அரசகுடும்பப்பெண்கள், யானை மீதிருந்து புலி வேட்டையை ரசிக்கும் இங்கிலாந்து ராணி,  6 தோட்டாக்களில் 4 புலிகளை கொன்ற புலிகளின் ராணி மெஹர்,படுக்கையிலும் கூட இருக்கும் நண்பனை,  திருமணம் என்று அவன் பேசும்போது மட்டும் யூதன் என்று இகழும் ஒருத்தி, புலி தாக்கி ஏறக்குறைய மரணத்தை வெகு அருகில் சந்தித்தாலும் ஐந்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் இரண்டு மண்டையோட்டு அறுவை சிகிச்சைகள் செய்து பிழைத்து பின்னரும் புலிகளை காண வரும் அருண் தாகுர் என்று ஆச்சர்யப்படுத்தும் ஆளுமைகளை M.கோபாலகிருஷ்ணன்  வேங்கை வனத்தில் காட்டுகிறார்

பல அரிய புலிகள் குறித்தான தகவல்களும் உள்ளன.

இறுதிப் பகுதிகளில் மச்லி என்னும் மீன் வடிவ தழும்பைகொண்டிருக்கும் புலியுடனான மனிதர்களின் பிணைப்பு. அதன் மரணம்,  பிளாஸ்டிக் அட்டைகளில் கூரைகள்,  காற்றில் பறக்கும்  பாலிதீன் பைகள் என மெல்ல சீர்கெடும் சூழலையும் வேங்கைவனம் காட்டுகிறது

மச்லியின் குட்டிகளால் புலிகளின்  எண்ணிக்கை அதிகரிப்பதும், மச்லி சிதையில் எரிகையில் சுந்தரி தன் வேட்டையை துவங்குவதையும்  சொல்லி பிரபஞ்சத்தின் மாறா நெறிகளையும் காட்டின் அறுபடாத  உணவுச் சங்கிலியையும் காட்டி நாவல் முடிகிறது

பறவை இறகுகள் சேர்த்து வைக்கும் ஒருவரின் கொடிவழியில் வந்த ஒரு இளம்பெண் சரணாலயமாகிவிட்ட அக்காட்டின் வழிகாட்டியாக இருக்கிறார் என்பதுவும் ஒரு சங்கிலிதான்

ஒரு அறிவியல் ஆசிரியையாக வேங்கைவனம்  எனக்கு மிகுந்த பிரியத்துக்குரிய படைப்பாகி விட்டிருகிறது.

அகரன் சொல்லியது போல சிற்றகல் வெளிச்சத்தில் இருந்த  தெய்வத்தின் இந்த ஒருநாள் உற்சவமூா்த்தி உலா பலருக்கும் அத்தெய்வத்தை காட்டியிருக்கிறது என்பதை    டேராடூனில் காட்டியல் படிக்கும் மகன் என்னை இன்று  அலைபேசியில் அழைத்து  பேசிய போது உணர்ந்தேன்.’’  அம்மா வேங்கை வனம் உரையை கேட்டேன் மச்லியை எனக்கு  நல்லா தெரியும் ஆச்சர்யமா இருக்கு, அதை குறித்து எல்லாமே நான் ஆங்கிலத்தில் தான் வாசிச்சிருக்கேன்,  மச்லியை குறித்து தமிழில் ஒருத்தர் நாவல் எழுதி இருக்காங்களா? நாம் கட்டாயமா அக்டோபர்ல அங்கே போலாம் . மச்லியோட படம் உனக்கு அனுப்பி இருக்கேன் பாரு’’ என்றான்இன்று

நானும் மகனுமாக அந்த  கோட்டையையும் ஜோகி மகாலையும் அதனருகில் இருக்கும் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆலமரத்தையும் கண்டுவருவதற்காக ஒரு பயணம் திட்டமிட்டிருக்கிறோம்

அகரனுக்கும், ஆகுதிக்கும் M.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு, நன்றியும் அன்புமாக

லோகமாதேவி

முந்தைய கட்டுரைஅணி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுருகு இதழ்-7