அணி, கடிதங்கள்

அணி (புதிய சிறுகதை)

அணி, கடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன்.

நெய்விட்டெரி நெருப்பில் நின்னையே நினைவாக்கிக் கைவிட்டெடுத்துக் காட்டென்ற போதிலுமென் மெய்விட்டாவிநின் னடிசேரும்மல்லாது கைவிட்டா னென்றுன்னைச் சொல்வேனோ காடப்பா!!

கதையப் படிச்சுட்டேன்னு திருஷ்டாந்தம் காட்டணுமில்லையா…

நமசிவாயம்!!

அன்புள்ள

கிருஷ்ணன்

மன்னார்குடி

*

அன்புள்ள ஜெ

அணி படித்தேன். கூழங்கை தம்புரானைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். ஒருவர் தன் வெந்தகையை தன் அடையாளமாக, ஆபரணமாகக் கொள்கிறார். அவருடைய நூல்களில் அவர் தன்னை அப்பெயரால்தான் சொல்கிறார். அது ஓர் அறைகூவல். இந்த உலகின் ஆடம்பரம், பொருளாசை, தன்னலம் எல்லாவற்றுக்குமான சவால் அது.

சொல்லப்போனால் ஒவ்வொரு கலைஞனும் ஒவ்வொரு ஆன்மிகவாதியும் இப்படி ஒரு ஆன்மப்பரீட்சைக்கு தன்னை ஆளாக்கிக் கொள்கிறார். அக்கதையிலேயே அது வருகிறது. ரத்தத்தால் தன்னை அடிக்கோடிடவேண்டிய ஒரு தருணம். இந்த லௌகீக உலகின் சூழ்ச்சிகள், கவர்ச்சிகளுக்கு எதிராக நிலைகொள்ளுவது அது. அதுதான் அவனுடைய அடையாளம். பட்டினிகிடந்த பிரமிளும் காசநோய் வந்த புதுமைபித்தனுமெல்லாம் கூழங்கையர்கள்தான் இல்லையா?

சந்திரசேகர்

*

அன்புள்ள ஜெ

உ.வே.சாமிநாதையர் மீதும் இதேபோல நகை திருடிவிட்டார் என்னும் பழி வந்ததாகப் படித்துள்ளேன். இது அக்கால சைவ மடங்களிலுள்ள ஒரு வழக்கமான வழிமுறையா என்ன?

சா. முருகேசன்

முந்தைய கட்டுரைகேரளத்தில் ஒரு படம்
அடுத்த கட்டுரைநித்திலம் – ஒரு முயற்சி