அணி, கடிதங்கள்

அணி (புதிய சிறுகதை)

அணி, கடிதங்கள்

அன்புள்ள ஜெ வணக்கம்.

ஒரு மனிதன் என்பவன் தெரிந்தவர்களுக்கு ஒரு உருவம். தெரியாதவர்களுக்கு ஒரு பெயர். உலகுக்கு அவன் ஒரு குணம். ஆனால் அவனுக்கு அவன் யார்?   உடலைத்தாண்டி,  பெயரைத்தாண்டி,   குணத்தைத்தாண்டி மேல் எழுந்து நின்று அவனையே அவன் திரும்பிப் பார்த்து உள்நுழைந்து தேடி கண்டடையும் அவனே அவனுக்கு அவன்.

சிலரால் உடலைத்தாண்டிப் பார்க்க முடியவில்லை. சிலரால் பெயரைத்தாண்டிப் பார்க்க முடியவில்லை. சிலரால் குணத்தைத்தாண்டிப் பார்க்க முடியவில்லை. பார்க்கமுடியவில்லை என்பதால் இந்தப்பார்வை நின்று விடுகின்றதா? இல்லை. அலைபாய்ந்துக்கொண்டே இருக்கிறது.

எதையுமே பார்க்கமுடியாதவர்கள் ஒருவிதத்தில் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். கல்விழியர்கள். கலங்குவதில்லை.

ஒளிவிழியர்கள் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்கள் மனவிழியும் விழித்துக்கொள்கிறது. வெளிவிழியும் உள்விழியும் வெளியும் புறமும் அவகளை இழுத்து இழுத்து மத்தென கடைகிறது. சுழல்கிறார்கள்  காண்கிறார்கள். கலங்குகிறார்கள். தேடுகிறார்கள். சிலர் கண்டும் அடைகிறார்கள்.  கனகசபாபதி கண்களைத்தாண்டி மனதாலும் பார்க்க கூடியவராக இருக்கிறார். ஓசையிலும் பார்க்கிறர் ஓசையின்மையிலும்  பார்க்கிறார்.

எப்பொழுதும் நுட்பமாக எழுதி உணர்வுகளை அதிர்வுற செய்யும் தாங்கள் நுட்பத்தின் நுட்பமாக இந்த கதையை எழுதி உணர்வுகளில் முரசுகொட்டுகின்றீர்கள்.  நல்ல கதையை எழுதியிருக்கிறீர்கள் என்ற சந்தோஷத்தைவிட, மிக மிக நேர்த்தியாக ஒரு துளி மணியைக்கூட சிந்தாமல் இந்த கதைஅணியை எவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள் என்பதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுகின்றேன்.

கதை ஓசையின்மையில் தொடங்கி ஓசையில் நிறைவடைகிறது. அறம் அப்படிதான் மேல் எழுந்து வருகிறது

நலம் நாடுபவரின் நட்பின் கனிந்த பரிவு சொல்லும் இருக்கிறது. நலம் கெடுப்பவர்களின் வஞ்சத்தில் பொறாமையில்  சிதறும் கடும்சொல்லும் இருக்கிறது. கனகசபாபதி நடுவில் சுழல்கிறார். நல்லோர்கள் யாவரும் இந்த சொற்களின் இடையில்தான் பயணித்தாகவேண்டும்.  இருவர்கள் சொற்களும். உண்மை உணர்பவருக்கு நலம் செய்யுமா? ஒன்று தடவி தடுக்கும். மற்றது அடித்து நிறுத்தும். இரண்டுக்கும் இடையில் மனம் துள்ளித்துடிக்கும்.   இரண்டையுமே கடந்து கனகசபாபதி தனது மௌனமொழியின் அர்த்தத்தை நிலை நிறுத்துகிறார்.

நுட்பமான கதையை இவ்வளவு எளிய சொற்களில் சொன்னவிதத்தில் அற்புதம் செய்து உள்ளீர்கள். பூவாசம் இருக்கும்போதே பூ கனியாகி கைசேரும் அதிசய இனிமை. படிக்கும் அனைவருக்கும் புரிந்துவிடக்கூடி எளியநடை. யாரும் எளிமையானது என்று  சொல்லிவிடமுடியாத ஞானமுதிர்ச்சி. அச்சம் அச்சம் அச்சம் இல்லை உச்சம் உச்சம் உச்சம் என்று கதை அறத்தின் தடத்தில்  தனாக சென்று திடத்தில் நிற்கிறது.

யோசித்தே பார்க்காமல் எழுதியதுபோல் எழுதி இருக்கிறீர்கள். ஒரு சொல்லைக்கூட யோகிக்காமல் தாண்ட முடியாது என்று கட்டி எழுப்பி  நிறுத்தி இருக்கிறீர்கள்.  அற்புத கை பக்குவம். நீங்கள் சிறுகதை சித்தர்

அன்பு தியாகம் பத்தி என்னும்   நுண்ணிய இழைகளை நெய்து ஆடையாக கட்டும் நுண்கலைவேலை நிறைந்த கதை கரு. அன்பு தியாகம் பத்தி என்பது உலகின் பார்வையில் அது ஒரு மடத்தனம்.  அந்த  மடத்தனத்தை அடித்து நொறுத்தி ஞானத்தை தீபத்தை ஏற்றும் சிற்றகலாகவும் அன்பு தியாகம் பத்திதான் உலகில் நிலைத்து நிற்கிறது.

அன்பு தியாகம் பக்தி  அதுதான் உலகம் முழுவதையும் நிறைத்து இருக்கிறது. பைய அசைந்து ஒரு சலனப் பார்வை பார்த்தால்  உலகில் எந்த இடத்திலும் அவைகள் இருக்க இடமே இல்லை என்று தோன்றும். அவைகள் ஏதிலிகள்.  அவைகள் இல்லாவே இல்லை என்றுகூட தோன்றும்.  தவித்து தனித்து உயிர் உருகும் நிலையில் நாவறண்டு நிலைக்குத்திப்பார்க்கையில் இருக்க இடமே இல்லாத அவைகளில் தான் இந்த உலகமே நிலைத்து நின்று வாழ்ந்து வளர்கிறது என்பது தெரியும்.    அன்பு தியாகம் பத்தி நுண்மைகளாக இருக்கும் விஸ்வரூபங்கள்.  மென்மைகளாக இருக்கும் வலிமைகள்.   இன்மைகளாக இருக்கும் நிலைத்தவைகள்,  உயிர் உயிர் அற்றவைகளின் ஜீவாதாரங்கள்.

அறம் செய்ய விரும்பு

ஆறுவது சினம் -என்னும் பாட்டியின் கனிமொழிகளை பல்முளைக்காத பிள்ளைகளின் சுவை உணவுகள் என்று நின்கின்றோம். இந்த அறமொழிகளை உண்மையில் யார் சுவைக்கவேண்டும் என்றால் அதிகாரம் இருப்பதாக நினைப்பவர்கள் நித்தம் நித்தம் பசியாறவேண்டிய ஜீவாமிர்தம் அது.

காம குரோத மோகத்திற்கு அப்பால் மேலேயே இருக்கும் அன்பு தியாகம் பத்தி எளிதில் அடையக்கூடியதாக இல்லை. அடைந்தாலும் தக்க வைக்கும் மனோ  தைரியம் கைகூடுவதில்லை. காம குரோத மோகத்திற்கு அப்பால் இருக்கும் அன்பு தியாகம் பத்தியை தொட்டு எடுத்திருக்கிறார் கனகசபாபதி. அதன் கனம் ஏறிய அவர்கைவலிமை அவரை சுற்றி இருப்பவர்களின் புலன்களில் கனக்கிறது. வலிக்கிறது. அவர்கள் உடல் உள்ளம் புத்தியில் எரிகிறது. அவர்களுக்குள் எரியும் தீ அணைந்து அவர்களுக்குள் அமுதம் சுரக்கவேண்டும் என்றால் அவர்களும் கனகசாபதி கைப்பற்றிய துய பத்தியை கைப்பற்றவேண்டும், ஏன் என்றால் கனகசபாபதி பற்றியது பேய் கரும்பைப்பற்றி இனிக்க வைத்த பட்டினத்தார் பற்றிய பக்தி.  அந்த பேய்க்கரும்பை பற்றி இனிக்க வைக்கமுடியாவிட்டால் அவர்கள் சுவைப்பதெல்லாம் பெரும் கசப்புதான். அது அவர்களையும் எரிக்கும்.  அது அவர்கள் அருகில் இருப்பவர்களையும் எரிக்கும் ஆலகால கசப்பு.  மடத்தில் பேய் கரும்பு இனிக்கும் இடத்தை கனகசபாபதி அறிந்துவிட்டார். மற்றவர்களுக்கு அவர் பற்றி இருப்பது பேய் கரும்பு மட்டும்தான்.

பாற்கடலின் கரையில் இருப்பவர்கள் அறிவதில்லை ஆலகாலத்தை அமுதத்தை. பாற்கடலைக்கடைபவர்கள் மட்டுமே பெறுகிறார்கள் ஆலகாலத்தை அப்புறம் அமுதத்தை. வாழ்வின் முக்கிய உச்சங்கள் அனைத்தும் பாற்கடல் கடையும் கட்டமைப்பில் இருக்கிறது.

இல்லறம், அரசியல், ஆன்மிகம். என்று ஏதேனும் ஒன்றன் கரையில் நிற்பவர்கள் வயிற்றுப்பாட்டோடு முடித்துக்கொள்கிறார்கள். இறங்கிப்பார்ப்பவர்கள் கொஞ்சம் துணிந்து கடைபவர்கள் மேருமத்துக்சுழலில் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவன் அமுதத்தை நெருங்கிவிட்டாள் அவன் அமுத்தை எடுத்துவிடுவான் என்ற சிறு சந்தேகம் வந்தாலும் போதும். நாம் எப்படி அமுதம் எடுப்பது என்பதை விட்டு. மொத்த உலகமும் அவனை அந்த மத்தில் தள்ளி மாட்டவைத்து கொன்றுவிட துடிக்கிறது. அகிம்சை பெரிதென்றால் நீ துப்பாக்கியால் செத்துப்போ என்கிறது உலகம். தியாகம் பெரிதென்றால் ஆலகாலம்  குடித்துக்காட்டு என்கிறது உலகம். உடல் பெரிதில்லை என்கிறார் கனகசபாபதி. அப்படி என்றால் இந்த உலகம் அவர் உடலோடு வாழக்கூடாது என்றுதானே நினைக்கும்.

கனகசபாபதி மேலான ஒன்றை, தனக்கான தெய்வீகமான ஒன்றை கண்டு அடைந்துவிடுகிறார். அவர் கண்டடைந்தது அவர்கள் தோட்டத்தில் பூத்த மலரல்ல, பக்கத்து தோட்டத்தில் உதிர்ந்த தேவமலர்.  அவர் கண்டு அடைந்து  அதைக்கொண்டு மேலே சென்றுவிடுவார் என்பதற்காக அல்ல, இத்தனை காலமாக தங்களை தங்கள் உடலை  தாங்கி இருந்த தங்கள் அமைப்பு அதனால் சிதைந்துவிடும் என்ற பதட்டம்தான் அவரை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மடத்தில் அனைவருக்கும் ஏற்படுத்துகிறது. சோறு முக்கியம். சுகம் முக்கியம். அதற்கு சிதைவு வந்தால்? அதற்கு காரணமானவனை சிதைக்கவேண்டும்.  அதற்கு ஒரு காரணம் தேவை அதுதான் கண்டிகை திருட்டு. “நீ ஒண்ணும் பெரிய இவன் இல்ல“ என்று அவரையே நம்ப வைக்கவேண்டும். உலகம் எளிதாக நம்பிவிடும். நல்லவன் பெரியவன் உயர்ந்தவன் குணவான் என்றால்தான் நம்பாது. உதாரணம் சொல்லி சொல்லி ஓய்ந்துப்போகவேண்டும். கெட்வன் என்று சொல்லக்கூட வேண்டாம். கண்ணில் ஒரு சிரிப்பு தோன்றினால் கூட உலகம் நம்பிவிடும். விளம்பரப்படுத்திக்கொண்டே இருக்கும்.

ஏசுநாதர்   கள்வர்களுக்கு இடையில் சிலுவையில் அறையப்பட்டுதுபோல கனகசபாபதி திருடன் என்பதை நம்ப வைக்கவேண்டும். கனகசபாபதி சிதைந்துவிடுவார். அவர்கள் சாதி மடம் அமைப்பு சிதையாது கட்டிக்காக்கப்படும்.

கனகசபாபதியும் நான் உடல் என்றும், உடல்  பெரிதென்று நினைத்து அங்கு இருந்தவர்தான். பட்டினத்தார் பாட்டால் அவர் உடல் பெரிதில்லை என்பதை அறிந்திருக்கலாம் அல்லது நான் உடல் இல்லையோ என்ற கேள்வி பிறந்தபோது அந்த பாடல் பொருள் அவரை பற்றிக்கொண்டிருக்கலாம். ஆனால் அது பாட்டு அல்ல அர்த்தம். அது வெறும் சொல் அல்ல உயிர் அறியும் உண்மை என்பதை அறிதல் கடந்து உணர்ந்து, உணர்தல் கடந்து உணர்வாகி நிற்கின்றார். நிற்கின்றார் என்றால் வில்வமரமாகி நிற்கின்றார்.

அவர் சாளரத்தை திறந்து  காணும் வில்வமரம் விண்ணோடும் மண்ணோடும் உறவுக்கொண்டு ஏகாந்தமாய் நிற்பதுபோல அவர் அவருடைய கூண்டை திறந்துக்கொண்டு வெளியே வந்து மடத்தை தாண்டி வெளியே  நிற்கின்றார். மனதால் நிற்கிறார். பெரிய சன்னிதானம் வெளியில் இருந்தாலும் மடம் என்னும் கூண்டுக்குள்தான் சிக்கி அமர்ந்திருக்கிறார். ஒரு படமாவதற்காக அமர்ந்திருக்கிறார்.   கனகசபாபதி உடலை விட்டு,  உடல்சார்ந்த புலனை விட்டு உடலால் கிடைத்கும் சாதியை விட்டு மடத்தில் இருக்கும் சாம்பிரதாயத்தை விட்டு மேலே எழுந்து நிற்கிறார்.    இது எல்லாவற்றையும் சிறு சிறு மணிபோல கதைக்குள் வைத்திருப்பது அதி அற்புதம்.

சிலைகள் பீடத்தில் நழுவாமல் சிமெண்ட்கலவையால் பூசி ஒட்டிவைக்கப்பட்டதுபோல இல்லறத்தில், அரசியலில், ஆன்மீகத்தில் இந்த உடல் ஒட்டி வைக்கப்பட்டு உள்ளது. அதை தாண்டுவது எளிதல்ல. அதை தாண்டினாலும் அமைப்பை தாண்டுவது எளிதல்ல, அமைப்பை தாண்டினாலும் சாதியை தாண்டுவது எளிதல்ல. சாதியை தாண்டினாலும் மடத்தின் சடங்குகளை தாண்டுவது எளிதல்ல. ஆன்மீக மடங்களும் அப்படித்தான் இருக்கின்றன.

கனகசபாபதி பட்டினத்தார் பாடல் மூலம் உடலை தாண்டுகின்றார். பட்டினத்தார் மடாதிபதி அல்ல அவரை நம்புவதன் வழியாக மடத்தை தாண்டுகின்றார். “சொல்லிட்டீங்க, அப்ப நம்மாளில்ல. செட்டியாரு… அவரு எப்டி சிவன பாக்க முடியும்?” கனக சபாபதி புன்னகைத்தார்.” என்னும்போது சபாபதி சாதியை சம்பிரதாயத்தை தாண்டி போய்விட்டார் என்பது தெளிவாகி விடுகிறது.  கனகசபாபதியின் புன்னகை அவர்தான் யார் என்பதை காட்டுகிறது. நீங்கள் யார் என்பதை புரியவைக்கிறது. புன்னகையால புறம்தள்ளவேண்டியவர்கள்.

தாண்டிப்போகின்றவர்கள் ஒன்றை நம்புகின்றார்கள். அவர்களின் அந்த நம்பிக்கைதான் அவர்களின் தெய்வம். அது காலம் காலமாக வரும் நம்பிக்கையில் இல்லை. கிளிப்பிள்ளைப்போல சொல்லும் மந்திரத்தில் இல்லை. நான் இப்படிப்பட்டவன் என்ற பாவனையில் இல்லை.  மழித்தலில் நீட்டலில் இல்லை. அவர்களின் நம்பிக்கையில் உள்ளது. அது அச்சம்போல் எழுந்து உச்சம் தொடுகிறது. அந்த நம்பிக்கையை அவர்கள் நம்பும் அந்த சொல்லை அவர்கள் சொந்த இரத்தத்தால் அடிக்கோடிட்டு உலகுக்கு காட்சிப்படுத்துகிறார்கள். அது அவர்கள் சொல், அது அவர்கள் நம்பிக்கை, அது அவர்களின் இரத்தம். அதனால் அவர்கள் அதுவாகவே அடையாளப்படுகிறார்கள். அவர்கள் சாவதே இல்லை.

கனகசபாபதி தனது நம்பிக்கையை தனது சொல்லை தனது ரத்தத்தால் அடிக்கோடு இடுகின்றார். தான் உச்சரிக்கும் நமசிவாய மந்திரத்தை நம்பவைப்பதற்காக அல்ல. தான் வணங்கும் சிவத்தை உலகுக்கு காட்டுவதற்காக அல்ல. உலகுக்காக அல்ல தன்னையே தனக்கு நிறுபிப்பதற்காக கொதிக்கும் நெய்யில் கைவிடுகின்றார்.  வலியோ துடிப்போ இல்லாத ஒரு சமாதியை தன்னில் கண்டுகொள்கிறார்.  அந்த கணம் அவரே அவரின் தெய்வம். தெய்வமே அவர்.  யார் அறிவார்? அவரே அறிவார். வேறு யார் அறியவேண்டும். உலகம் என்ன பெயரிட்டு வேண்டும் என்றாலும் அழைத்துக்கொள்ளட்டும்.

கதை ஓசையின்மையில் தொடங்கி ஓசையில் முடிகிறது. அறத்தின் குரல் அப்படிதான் ஒலிக்கும்

கனகசபாபதி அச்சத்தில் தொடங்கி வலிமையில் நிறைகிறார் உண்மை அப்படிதான் தெய்வமாகும்

சபாபதி கட்டமைப்பில் இருந்து கட்டமைப்பை உடைத்து செல்கிறார் ஞானம் அப்படிதான் வெளிப்படும்

அன்பு தியாகம் பத்தி இன்மையில் இருந்து எழுந்து இல்லாமையாக்கமுடியாத இருப்பில் அணிகொள்கின்றன

எரியும் தீபத்தை தலைகீழாக பிடித்தாலும் மேல் நோக்கியே எரிவதுபோல சபாபதி கையை கொதிக்கும் நெய்யில் தலைகிழாய் நுழைக்கிறார் அன்பு தியாகம் பக்தி உடன் உண்மையும்  மேல்நோக்கி தீபமாக ஒளிவிடுகிறது. சிறுகதைக்கு அணி என்ற தலைப்பு அற்புதத்திலும் அற்புதம். அதற்கான ஓவியம் அணிக்கு அணி.

நண்பரின் பரிவுக்கும் மடத்தின் பொறாமைக்கும்  அவர் தேடும் ஞான நூல்களுக்கும் இடையில் பட்டினத்தார் பாடல் மட்டுமே  சபாபதி உள்ளம் நிறைந்திருப்பதுபோல் காட்டியிரும் கனகசபாபதியின் உணர்வுநிலை  கதையல்ல மெய்தேடும் உள்ளத்தின் கனிமுதிர்ந்த உணர்வு உயர்நிலை. அவர் நினைவு மூச்சு பேச்சு பார்வை அனைத்தையும் உருக்கி கதை அச்சில் வார்த்து கதையை உயிர் பெற வைத்துவிட்டீர்கள்.

கனகசபாபதி புன்னகைக்கும் இடமும். பெரிய சன்னிதானத்தின் கண்களில் இருந்து சிரிப்பு அகலும் இடமும் இருமனங்களின் இருபெரும்  மன இடைவெளியை மறைத்திருந்த திரையைவிளக்கி தரிசிக்க வைக்கிறது. மண்டியிடும் இடத்தில் இருந்தாலும் ஒரு மனம் எவ்வளவு பெரியது. பீடத்தில் அமர்ந்திருந்தாலும் ஒரு மனம் எத்தனை சிறியது.கதை சிறு சிறு மணிகள் பதித்து செய்த பெரும்மணித்தேர்.

லோகித்தாஸ் இடம் நீங்கள் எளிமையானது போல ஒரு பெரும் கேள்வி கேட்கின்றீர்கள். அதற்கு அவர் சிற்பசெதுக்குபோல எத்தனை  அற்புதமாக பதில் சொல்கிறார் அதை இப்போது நினைக்க தோன்றுகிறது.

ஜெயமோகன்: அப்படியானால் சினிமா மீண்டும் மீண்டும் நீதியைகருணையைஅன்பைப் பற்றித்தானே பேச முடியும்?

லோகித்தாஸ்: அதைப்பற்றித் மட்டும்தான் பேசவேண்டும். பல நூற்றாண்டுகளாக அதைப் பற்றித்தான் பேசி வந்திருக்கிறது. இனியும் அதைப் பற்றித்தான் பேசும். ஏனென்றால் நீதியும் கருணையும் அறமும் மனிதனின் அடிப்படை இயல்புகள் அல்ல. மனிதனுக்குள் இருப்பது காமமும் குரோதமும் போகமும் மட்டும்தான். இடைவிடாமல் ஒவ்வொரு கணமும் வலியுறுத்திக் கொண்டிருந்தால் மட்டும்தான் மனிதனின் பண்பாட்டின் அடிப்படைகளான நல்லுணர்வுகள் நிற்க முடியும்.

ஒரு போர் அல்லது பஞ்சம் வந்தால் எத்தனை சீக்கிரம் இந்த உணர்வுகள் அழிந்து, மிருகம் வெளிவருகிறது என்று பாருங்கள். எத்தனை சீக்கிரமாக மனிதனைக் கட்டவிழ்த்துவிட்டுவிட முடிகிறது! ஆகவே கலைஞன் மீண்டும் மீண்டும் அறம், கருணை, அன்பு என்று கூறிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

நன்றி

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்.

முந்தைய கட்டுரைநவீன ஓவியக்கலையை ரசிக்கும் பயிற்சி.
அடுத்த கட்டுரைஎம்.கோபாலகிருஷ்ணன் விழா நிகழ்வு- லோகமாதேவி