கற்காலக் கனவுகள்-1

சென்ற ஜூலை2023 ல் நான் கோவை புத்தகக் கண்காட்சியில் ஓர் உரையாற்றினேன். சங்க இலக்கியம் பற்றிய உரை (யூடியூப் இணைப்பு). அதில் கற்காலத்துக் குகை ஓவியங்களில் இருந்து சங்க இலக்கியத்திற்கு ஒரு தொடர்ச்சி இருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அது குகை ஓவியங்களை புரிந்துகொள்வதற்கான முயற்சி அல்ல. சங்க இலக்கியத்தின் படிமங்கள் சிலவற்றைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி.

அந்த உரையில் பிம்பேத்கா குகை ஓவியங்கள் முதல் உடுமலைப்பேட்டை தேன்வரந்தை குகை ஓவியங்கள் வரை இருக்கும் ஒரு  சில பொதுப்படிமங்கள் பலவகையாக மருவியும் உருமாறியும், ஓர் ஆழ்படிமமாக ஆகி சங்கப்பாடல்களில் இருக்கின்றன என எனக்குப் படுவதைச் சொல்லியிருந்தேன். அது சங்கப்பாடல்களை ஆழ்மனம் சார்ந்து புரிந்துகொள்ளும் ஒரு முயற்சி. ஒரு புனைவிலக்கியவாதி மட்டுமே முன்வைக்கும் கனவுசார்ந்த அணுகுமுறை அது (தேன்வரந்தை, தென்னக பிம்பேட்கா)

அதற்கு வந்த எதிர்வினைகள் பெரும்பாலும் என்ன ஏது என்று புரிந்துகொள்ளாத மொட்டை வசைகள். நம் சமூகவலைத்தளச் சூழலில் அதை எதிர்பார்க்க வேண்டியதுதான்.  ஆனால் நிதானமான மொழியில் எழுதப்பட்ட ஓர் எதிர்வினை, நான் ‘தமிழ்ப் பண்பாட்டை‘ கொண்டுபோய் ‘இந்தியப்’ பண்பாட்டுடன் இணைக்க முயல்கிறேன் என்பது.

அதாவது தேன்வரந்தையும் சங்கப்பாடல்களும் தமிழ்ப் பண்பாடு அல்லது திராவிடப்பண்பாடு சார்ந்தவையாம். பிம்பேட்கா ஓவியங்கள் இந்தியப்பண்பாடு சார்ந்தவையாம்.. இன்னொரு பக்கம் இதே தரப்பினர் சிந்துவெளி நாகரீகம் தமிழ் நாகரீகம் என்றும் பேசுவார்கள்.

இது நம்முடைய பண்பாட்டு அறிதல்கள் எந்த அளவுக்கு குறுகியிருக்கின்றன, எளிய இனவாத அரசியல் உருவாக்கியளித்த ’டெம்ப்ளேட்’ கருத்துக்களுக்குள் சிக்கிக்கிடக்கின்றன என்பதற்கான சான்று. என்னிடம் ஆய்வாளர் ஒருவர் சொன்னார், எந்த கற்கால நாகரீகச் சின்னம் என்றாலும் அதை ‘தமிழ்ப்பெருமிதம்’ என்னும் தென்னைமரத்தில் கொண்டுசென்று கட்டினாலொழிய அதற்கு கவனம் வராது, நிதியும் அமையாது என. நம் சமூகத்தின் கூட்டுமனநோய் இது.

கற்கால நாகரீகம் என்பது இன்றுள்ள எந்த பண்பாட்டுடனும் நேரடியாக தொடர்புபடுத்தத் தக்கது அல்ல. இதை பத்தாண்டுகளாக எல்லா கட்டுரைகளிலும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.கற்காலப் பண்பாட்டின் பல கூறுகள் இன்றுள்ள எல்லா பண்பாடுகளிலும் உண்டு என்றாலும் இன்றும் அதற்கும் இன்றைய பண்பாடுகளுக்கும் நடுவே மிகப்பெரிய இடைவெளி ஒன்று உள்ளது. அந்த இடைவெளியை மானுடப் பண்பாட்டுப் பரிணாமத்தை அறிந்த எவரும் தங்கள் குறுகிய தற்பண்பாட்டுமேன்மை சார்ந்த பார்வை கொண்டு நிரப்ப முயலமாட்டார்கள்.

கற்காலப்பண்பாடு திகைப்பூட்டும்படி உலகம் முழுக்க ஒன்றாக உள்ளது. குறிப்பாக யுரேசியா முழுக்க கற்காலப் பண்பாடு ஏறத்தாழ ஒன்றே. இந்தப் பொதுத்தன்மையை ஆய்வாளர் பலவாறாக விளக்கிக்கொண்டே உள்ளனர். ஆனால் முழுதாக விளக்கக்கூடுவதும் அல்ல. மானுடம் என்பது உலகமெங்கும் ஒற்றை வேர்த்தொகை கொண்டது என்னும் எண்ணத்தின் எழுச்சியே எனக்குப் போதுமென நான் எண்ணிக்கொள்வேன்.

நாம் இன்றுகாணும் பல்வேறு வட்டாரப் பண்பாடுகள், இனப்பண்பாடுகள், தேசியப்பண்பாடுகள், மொழிப்பண்பாடுகள் எல்லாமே மிகமிகப் பிற்காலத்தையவை. மனிதர்கள் மேய்ச்சல்பண்பாட்டுக்கும் வேளாண்மைக்கும் வந்து, நிலையான உறைவிடங்களை உருவாக்கிக்கொண்டபின் உருவானவை. பழைய கற்காலப் பண்பாடுகளை இன்றைய பண்பாடுகளைக்கொண்டு புரிந்துகொள்ள முயல்வது பிழை. இன்றைய பண்பாடுகள் சொந்தம்கொண்டாடுவது மடமை

கற்காலப் பண்பாட்டு எச்சங்கள் மிகச் சொற்பமானவை. அவை தொல்லியல் தடையங்கள் அல்ல. அவற்றில் மொழி இல்லை. அன்றைய வாழ்க்கையின் முழுமையான சித்திரமும் இல்லை. அவற்றை இன்றைய ‘தர்க்கங்களை’ கொண்டு புரிந்துகொள்ள முடியாது. அவற்றை நாம் நம் ஆழுள்ளத்தால், கனவால் புரிந்துகொள்ள வேண்டும். அத்தனை மத, இன, மொழிப் பண்பாடுகளுக்கும் அடியிலுள்ள மானுடக்கனவால் அவற்றைச் சென்று தொட்டறியவேண்டும்.

தமிழ்ச்சூழலின் மிகப்பெரிய சிக்கலே அதிகார அரசியல் காரணங்களுக்காக இங்கே உருவாக்கப்பட்டிருக்கும் சல்லிசான இனவாத – மொழிவாத அரசியல் சுழிக்குள் இங்கே பேசப்படும் எந்தக் கருத்தும் சென்று விழுந்துவிடுவதுதான். இந்தியச்சூழலில் அண்மையில் எல்லாமே இந்துத்துவ அரசியலுக்குள் அவ்வாறு சென்று விழுந்துவிடுகின்றன. எதையுமே பொதுவெளியில் பேசிவிடமுடியாத சூழல். அவை உடனே திரிக்கப்பட்டுவிடும். அர்த்தமற்ற விவாதங்களுக்குள் இழுக்கப்பட்டுவிடும்.

அவற்றை மீறி, கருத்துக்களின் நுண்ணிய விரிவுக்குச் செவிகொடுக்கும் சிலர் இருக்கக்கூடும் என்னும் நம்பிக்கையில்தான் இங்கே பேசமுடியும். அத்துடன், நம்மை அவற்றிலிருந்து விடுவித்தாகவும் வேண்டியுள்ளது. மதம், இனம், மொழி எதுவானாலும் ‘பண்பாட்டு அரசியல்’ என்பது ஃபாஸிசமே. ஒரு ஃபாஸிஸத்தை எதிர்ப்பதனால் இன்னொரு ஃபாஸிசம் முற்போக்காக ஆகிவிடாது. இந்த இருமைகளில் இருந்து வெளியேறி பண்பாட்டின் மானுடப்பொதுமை நோக்கிச் செல்ல நான் கண்டடைந்த வழி கற்கால எச்சங்கள் நோக்கிச் செல்வது.

குகை ஓவியங்கள், நெடுங்கற்கள்,  கல்வட்டங்கள், புதிர்ப்பாதைகள், கல்பதுக்கைகள், கற்செதுக்கோவியங்கள் என சென்ற இருபதாண்டுகளாகத் தேடித்தேடிச் சென்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் நவீன இலக்கியவாதிகளில் என்னைத் தவிர இந்தப் பித்து கொண்ட இன்னொருவரைக் கண்டதில்லை. எனக்கு என் கனவின் வேர்கள் நோக்கிச் செல்லும் ஆழ்பயணம் இது. எனக்குள் ஊடுருவும் ஒரு வகை மூழ்குதல்.

இந்தியா எங்கும் பலவகையான கற்கால பண்பாட்டு எச்சங்கள் உள்ளன. அவற்றில் தக்காணத்தில்தான் முக்கியமான கற்செதுக்கு ஓவியங்கள் (Petroglyph)உள்ளன. தென்னிந்தியாவிலுள்ள முக்கியமான கற்செதுக்கோவியம் அட்டப்பாடிக்கு அப்பாலுள்ள இடக்கல் குகைகள். ஆனால் கற்செதுக்கோவியங்கள் மிகுதியாகக் கண்டடையப்பட்டுள்ளது தக்காணப் பீடபூமியில்தான்.

தக்காணப்பீடபூமி நமக்கு வேலூர்,   தர்மபுரி என ஆரம்பிக்கிறது. மேட்டூர், சத்தியமங்கலம், ஊட்டி என அந்த விளிம்பை நாம் காணலாம். நிலம் மேடாகிக்கொண்டே சென்று ஆயிரத்தைநூறு அடி உயரமானதாக ஆகிவிடுகிறது. அதன் உயர்ந்த பக்தி சராசரியாக இரண்டாயிரம் அடி உயரமானது.

தக்காணப்பீடபூமியின் நில அமைப்பு தமிழகத்திலிருந்து மாறுபட்டது. வேலூரிலிருந்தும் ஹோசூரிலிருந்தும் அந்த வேறுபாட்டைக் காணலாம். உருளைப்பாறைகளை குவித்துப்போட்டதுபோன்ற சிறிய குன்றுகள். நிலம் மிகப்பெரிய சமவெளி. அது அலையலையாக  ஏறி இறங்கி தொடுவான் வரைச் செல்லும். அலையில் தாழ்வான பகுதிகள் பசுமையானவை.

தக்காணப் பீடபூமியின் உயரமான நிலங்களில் சொறிக்கல் என்றும் புள்ளிக்கல் என்றும் கேரளத்தில் சொல்லப்படும் ஒருவகை பாறையே மண்ணாக உள்ளது.Laterite என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்தக் கல் சதுரமாக வெட்டி எடுக்கப்பட்டு வடகேரளத்தில் வீடு, சுற்றுச்சுவர் கட்ட பயன்படுத்தப்படுகிறது. மழைக்காலத்தில் இது புல்முளைத்து பச்சைமென்மயிர் பரப்பு போல தெரியும். நனையாத இடங்களில் செந்நிறமாக, கரடுமுரடான பரப்புடன் மாமிசம்போலிருக்கும்

பலகோடி ஆண்டுகளுக்கு முன், பூமி உருவான காலகட்டத்தில், பெய்துகொண்டே இருந்த பெருமழையில் உருவானது இப்பாறை. பூமியில் நீர் உருவாகி, அது ஆவியாக மேலே சென்று குளிர்ந்து மழையென விழுந்து மீண்டும் சூடாகி வானுக்குச் சென்று மீண்டும் மழையாகியது. ஒருவகை நீர்ச்சுழற்சி. பல்லாயிரமாண்டுக்காலம் பெய்த ஒரே மழை. மண்ணை அது குளிர்வித்தது. மண்ணை அடித்து தூளாக்கிச் சேறாக்கியது.

அச்சேற்றில் பின்னர் நெடுங்காலம் கழித்து ஒரு சிற்றுயிர் வாழ்ந்தது. மீண்டும் நெடுங்காலம் கழித்து, மண்ணின் அழுத்ததாலும் வெயிலின் வெம்மையாலும் அது பாறை ஆகியது. அந்தச் சிற்றுயிர் வாழ்ந்த துளைகள் அப்பாறையை சல்லடை போல ஆக்கின. அதுவே சொறிக்கல். இரும்பு ,அலுமினியம் முதலிய பல முக்கியமான கனிமங்கள் கொண்டது இக்கல்.

சொறிக்கல் பரவிய மேட்டு நிலங்களில் கற்கால மனிதர்கள் தங்கள் கல்லாயுதங்களால் கோடிழுத்தும், பள்ளங்கள் வெட்டியும் ஓவியங்களை வரைந்துள்ளனர். பல ஓவியங்கள் அன்றைய கணக்குக்கு மிக நேர்த்தியானவை.இவை மிக முக்கியமான கற்கால பண்பாட்டுத் தடையங்கள். குகை ஓவியங்களை விட பல்லாயிரமாண்டு தொன்மையானவை. ஏனென்றால் எளிதில் அழியாதவை.

மழையில் இந்தக் கல் நன்றாக ஊறி மென்மையாகிவிடுகிறது. அதன்மேல் புல் முளைக்கிறது. சொறிக்கல் பாறைகள் எல்லாமே மாபெரும் பசும்புல் வெளிகளாக ஆகிவிடுகின்றன. அப்போது புல்லை அகற்றிவிட்டு இந்த ஒவியங்களை வரைந்திருக்கிறார்கள்.சிலநாட்களிலேயே அவை இறுகிய பாறைகளாக ஆகிவிடுகின்றன. ஆகவே நீடிக்கின்றன.

சென்ற 2019 ல், கோவிட் தொற்று முடிந்து இடைவெளி விட்டதுமே கற்காலச் செதுக்கோவியங்களைப் பார்க்க ஒரு பயணம் மேற்கொண்டோம். (கற்காலத்து மழை ) அன்று ரத்னகிரி வட்டாரத்தை விட்டுவிட்டோம். அப்போது அங்கே கோவிட் தடை நீங்கவில்லை. அங்குதான் மேலும் நிறைய செதுக்கோவியங்கள் இருப்பதாக அன்றே அறிந்திருந்தோம்.அடுத்து இன்னொரு முழுமையான பயணம் அதற்காகச் செய்வதாக அன்றே முடிவெடுத்தோம்.

சென்ற ஆகஸ்ட் 28 அன்று நான் எர்ணாகுளத்தில் இருந்து விமானத்தில் பெங்களூர் சென்றேன். அங்கே ஈரோடு கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, அரங்கசாமி, ஓசூர் பாலாஜி, ஓசூர் ஜெகன், திருப்பூர் அனந்த கிருஷ்ணன், ஸ்ரீதர், சக்தி கிருஷ்ணன், திருவண்ணாமலை திருமலை அல்லது திருதிரு ஆகியோர் வந்தனர். நேராக கோலாப்பூர். எங்கள் மொத்தப் பயணமும் கோலாப்பூர் – ரத்னகிரி நடுவே உள்ள நீள்வட்டப்பாதையில்தான்.

கோலாப்பூர் விமானைநிலையம் ஒரு நடுத்தரப் பஞ்சாயத்து அலுவலகம் அளவுக்குப் பெரியது. விமானத்தில் இருந்து இறங்கி நடந்து விமானநிலையம் செல்லவேண்டும். பெட்டிகள் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படும், தானியங்கி பட்டையெல்லாம் இல்லை. ஐம்பதுபேர் இருந்தாலே தோள்முட்டும் நெரிசல் உருவாகும்.

மதியம் பன்னிரண்டரைக்குச் சென்று இறங்கினோம்.வெளியே எங்களுக்கான வேன் காத்து நின்றிருந்தது. ஆறுநாள் பயணத்துக்கும் அந்த வண்டியை ஒட்டுமொத்தமாக அமர்த்தியிருந்தோம். நேராகச் சென்று மதிய உணவு. அதன்பின் பந்திவாடே எரிமலை பாறைகளைப் பார்க்க கிளம்பினோம். Basalt  எனப்படும் இந்த தொன்மையான பாறைக்குழம்பு உறைவுகள் தென்னாடெங்கும் காணப்படுகின்றன. தக்காணத்தில் இவை விந்தையான பல வடிவங்களில் உள்ளன. சென்ற கற்காலத்து மழை பயணத்திலும் இவற்றின் தலையணைப்பாறை, குடப்பாறை போன்ற வடிவங்களைக் கண்டோம்.

பந்திவாடே என்பது பன்ஹலா அருகே உள்ள ஒரு சிற்றூர். ஓர் இடத்தில் வேனை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம். அண்மைக்காலப் பருவமழையால் ஊரே பசுமையாக இருந்தது. வயல்களில் நெல் அலையடித்தது. வழிகேட்டு சென்றோம். சாலையிலேயே பாறைகளைப் பார்த்துவிட்டோம். ஆனால் அங்கே செல்லும் வழி தெரியவில்லை. ஒரு விவசாயியிடம் கேட்டோம். முதலில் வழியை விளக்கியவர், ‘சரிதான் நான் அவற்றை இப்படிப் பார்த்தால்தானே உண்டு’ என அவரே வந்து காட்டுவதாகச் சொன்னார்.

மலைச்சரிவின் புதர்ப்பாதை வழியாக ஏறிச்சென்றோம். வழியில் ஒரு களிமண் மலர். சிதல்புற்று ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த வடிவின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. மண்ணில் ஒரு காது திறந்ததுபோலவும் இருந்தது.

இந்த எரிமலைப்பாறை ஆறரைக்கோடி ஆண்டுகள் தொன்மையானது, ஆனால் தக்காணத்தின் ‘இளமையான’ எரிமலைப்பாறைகளில் ஒன்று. லாவா பொங்கி வழிந்து உருவான பாறை நீண்டகால மழையரிப்பால் விதவிதமான வடிவங்களை எடுத்துள்ளது. 1980 களில்தான் புனே சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழக நிலவியலாளர்கள் இந்த இடத்தை முறையாக ஆவணப்படுத்தினார்கள்.

கடல் மட்டத்திலிருந்து 850 மீட்டர் உயரத்திலுள்ளன இந்தப்பாறைகள். சராசரியாக பத்து மீட்டர் உயரம் கொண்ட பாறைகள் அடுக்கப்பட்டு உருவான தூண்கள் போல மலையுச்சியில் வரிசையாக நின்றுள்ளன. ஏதோ உடைந்த மாளிகையின் தூண்கள் என தோன்றும். அல்லது மாபெரும் வாய் ஒன்றின் பற்கள் போல. அல்லது முகிலைக்கோது பாறையாலான சீப்பு போல. அல்லது பாறைகளானால காடொன்றின் அடிமர எச்சங்கள் போல.

பாறைகள் நடுவே தொற்றித் தொற்றி ஏறி அமர்ந்து கீழே விரிந்திருந்த பசுமைவெளியை பார்த்துக்கொண்டிருந்தோம். பாறையிடுக்குகள் சற்று அபாயமானவை. கால்தவறி உள்ளே விழுந்தால் மிக ஆழத்தில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படி விழுந்த ஒருவர் அச்சத்தாலும் களைப்பாலும் உடல் வீங்கி, வெளியே வரமுடியாமலாகி, இறந்துபோனார் என்ற செய்தியை கிருஷ்ணன் சொன்னார். பாறையை உடைத்து அவரை மீட்க முடியவில்லை. இப்பகுதிக்கு நம்மூர் ‘செல்ஃபி புள்ளிங்கோ’ வருவது ஆபத்து.

மலையிறங்கி வந்து நின்று மீண்டும் அப்பாறைகளைக் கண்டோம். விதவிதமான தெய்வச்சிலைகள் போலவும் தோன்றின. வழிகாட்டியிடம் விடைபெற்று மீண்டும் பயணம். வழியில் டீ. அதன்பின் மலையிறங்கத் தொடங்கினோம். பலவகையிலும் மும்பை- புனே சாலையை நினைவுறுத்தும் மலைச்சுழற்சாலை. ஒருபக்கம் ஓங்கிய மலைகள். இன்னொரு பக்கம் பச்சை பெருகிய வெளி. அதன்மேல் கவிந்த கருமுகில் வானம். சாலை ஈரமாகப் பளபளத்தது. மங்கிக்கொண்டே வரும் மாலை ஒளி.

வண்டியை நிறுத்திவிட்டு சற்றுதூரம் நடந்தோம். முகில்மூடிய வெளி பார்க்கப்பார்க்கச் சலிக்காதது.சட்டென்று மலபார் விசிலிங் த்ரஷ் என்னும் பறக்கும் புல்லாங்குழல் பறவையின் ஒலியைக் கேட்டோம். நின்று அதைச் செவிகூர்ந்தோம். ஒரு இனிய மர்மம் போல. அந்த பசுமைநிலத்தின் மொத்த அழகும் ஒலியென்றானதுபோல. ஒரு தெய்வீகமான கையெழுத்து, இந்த மாபெரும் ஓவியத்தின் ஓரமாக.

(மேலும்)

கற்காலக் கனவுகள்-2

முந்தைய கட்டுரைஆர்.சூடாமணி
அடுத்த கட்டுரைவனத்தில் வாழ்பவன்