பூமியின் விழிகள்

எனக்கு படிகங்களை மிகப்பிடிக்கும். எல்லா வகையான படிகங்களும். உப்புக்கல், பனிக்கட்டி கூட. படிகங்களைப் பார்க்கப் பார்க்க ஒருவகை பரவசம் உருவாகும். மிகச்சின்ன வயதிலேயே இந்த பித்து உருவாகிவிட்டது. அன்றெல்லாம் நீல நிறத்தில் ஒரு வகை புட்டிகள் உண்டு. ஆஸ்பத்திரிக்கு அவற்றை கொண்டு செல்வார்கள். அந்தப்புட்டிகள் வழியாக பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னை நானே மனவசியம் செய்துகொள்வேன். பல மணிநேரம்கூட எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் அமர்ந்திருந்தது உண்டு.

உடைந்த குப்பிகளின் அடிப்பகுதியை பொறுக்கி, கல்லில் உரசி உரசி மென்மையாக ஆக்கிச் சேர்த்து வைப்பேன். கழச்சி (நாங்கள் கச்சி  என்போம்) விளையாடுவதற்கான கண்ணாடி உருண்டைகள் என்னிடம் ஏராளமாகவே இருந்தன. அவற்றை வைத்து எனக்கு நானே விளையாடிக்கொள்வேன். எருமைக்கண், தேன்துளி என்றெல்லாம் அவற்றுக்குப் பெயர்கள் போட்டு வைத்திருப்பேன்.

அர்த்தமற்ற ஒரு பிரியம். ஆனால் அது இன்றுவரை என் வாழ்க்கையை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. நியூயார்க் அருங்காட்சியகத்தில் நான் பார்த்த ஒரு படிகக் கண்காட்சி எனக்கு ஒரு பேரனுபவம். இன்றும் கனவுகளில் வந்துகொண்டே இருக்கிறது. வைரம் முதலிய அருமணிகள். வெவ்வேறு வண்ணங்களில் இயற்கையான படிகக் கற்கள். படிகக்கற்களில் செய்யப்பட்ட கலைப்பொருட்கள், ஆபரணங்கள். அன்று ஒருமாதிரி கண் மலைத்து, புத்தி மயங்கி அங்கே அலைந்து கொண்டிருந்தேன்.

வாஷிங்டன், நியூ யார்க், பாரீஸிலும் ; அண்மையில் ஸ்டாக்ஹோமிலும் பார்த்த கண்ணாடிச் சிற்பங்களை நான் என் கனவுகளுக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அவை உறைந்த சிற்பங்கள் அல்ல, ஒளி அவற்றை நிகழ்வுகளாக ஆக்கி விளையாடுகிறது. அந்த ஆடல்தான் அச்சிற்பம்,

படிகம் என்பது ஒளி   ஒரு திடப்பொருள் என ஆகும் நிலை. தன் அனைத்துக் கடினத்தன்மையுடனும் அது தன் வழியாக ஒளியை மட்டும் ஊடுருவ அனுமதிக்கிறது. தன்னை முழுமையாக ஒளிக்கு அளித்துவிடுகிறது. ஒளியை அள்ளி அள்ளி தன்னை நிரப்பிக் கொள்கிறது. தன்னுள் ஒளியை பெருக்கிக் கொள்கிறது.

ஒளி படிகத்தை திடப்பொருளுக்கே உரிய வடிவமென்னும் இறுக்கத்தில் இருந்து விடுவிக்கிறது. அதை மென்மையானதாக ஆக்குகிறது. திரவம் போல தன் வடிவை தானே நிகழ்த்திக்கொள்ளும் வாய்ப்பை அதற்கு அளிக்கிறது.

படிகம் இப்புவியென நிறைந்துள்ள பருப்பொருளின் விழி. ஒளியை அறியும் பொருட்டு பருப்பொருள் தன்னை அவ்வண்ணம் ஆக்கிக் கொண்டுவிட்டது. ஒளி தன்னை நமக்கு தானாகவே காட்டிக்கொள்ள முடியாத அதிநிகழ்வு. அது பருப்பொருளில் பட்டும் பொருளென நடித்தும் தன்னை நமக்குக் காட்டுகிறது. படிகம் என்பது பருப்பொருள் தன்னை முற்றாக ஒளிக்கு விட்டுக்கொடுத்துவிட்ட இடம்.

இம்முறை கோலாப்பூர் அருகே அம்பாதேவி என்னும் ஆலயத்துக்குப் படிகளிலேறிச் செல்லும்போது இந்த கண்ணாடி முட்டைகளை வாங்கினேன். நிறமற்ற அழகிய மெல்லொளிர்வுகள். ஒளிக்குமிழிகள். பெரிய நீர்த்துளிகள்போல. ஒன்று நூறு ரூபாய் என்று அதை விற்ற லம்பாடிப்பெண் சொன்னாள். வாங்கிவிட்டேன். அதை இன்னொரு படிகக் கிண்ணத்தில் போட்டு வைத்திருக்கிறேன். சும்மா பார்ப்பதற்காக. இந்த பூமியை வேறெப்படி கண்ணுக்குக் கண்ணாகச் சந்திப்பது?

முந்தைய கட்டுரைசி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம்
அடுத்த கட்டுரைமனமல்லவா? கடிதம்