அன்புள்ள ஆசிரியருக்கு,
அணி சிறுகதை படித்தேன். முத்துக்குமார சுவாமி தம்பிரானின் இந்த வரிகள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கின்றது
இது அச்சமில்லை, வேறொன்று. இது எனக்கான உச்சம். ஒவ்வொருவரும் அவர் நம்பும் சொற்களை குருதியால் அடிக்கோடிட வேண்டியிருக்கிறது. சொற்களில் உறையும் தெய்வங்கள் பலிகோருபவை. இது அத்தருணம்.
இக்கதைக்கு முன்னர் பட்டினத்தார் பாடல்கள் போன்றவை வாசிக்கையில் சம்சாரியான எனக்கு அது சொல்லும் உக்கிரமான தருணங்கள் மிகையாக, புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக, இருத்தலியல் துயரங்களாக இருக்கும்.
சங்கச்சித்திரங்கள் வழியே வாழ்க்கையில் அழகியலை காண சங்க கவிதைகள் உண்டு என தெரிந்து கொண்டேன்
இன்று இக்கதையின் வழியாக பட்டினத்தார் பாடல்களின் மெய்மையை வாழ்ந்து காட்ட ஒருவரை ஒருவரை காணமுடிந்தது.
அணியென பூண்ட தம்பிரான் என்னும் அடையாளத்துக்கும், தன் சொல்லுக்கும்,தான் வாழும் வாழ்வுக்கும் ஓருமை கண்ட வாழ்வினை தெரிந்து கொள்ள முடிந்தது.
அன்புடன்
நிர்மல்
*
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
‘அணி’ சிறுகதை பற்றி. அறவுணர்ச்சியுடனும், தான் நம்பும் சித்தாந்தத்தில் ஆழமான, அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் இருப்பவர்கள் அமைதியாக இருந்தாலும், அவர்களின் இருப்பு, அப்படி அல்லாதவர்களை, சிறு மதியாளர்களை, குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களை, எதோ ஒரு விதத்தில் தொடர்ந்து குற்றவுணர்வு கொள்ள செய்கிறது. அம் மாமனிதர்களை, தன் சிறு புத்தியால் நிலை குலைய வைக்க சூழ்ச்சி செய்கிறது. விளைவு, மேலும் குற்றவுணர்ச்சி கொண்டு வீழ்வது தான். இது எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் நடக்கிறது.
அன்புடன்,
- சங்கர்
*
அன்புள்ள ஜெ
அணி சிறுகதை வாசித்தேன். ஒருவர் தங்க- வைர ஆபரணத்தை விடவும் அதைத் துறப்பதனால் உருவான ஊனத்தை தன் ஆபரணமாகக் கருதுகிறார் என்பதுதான் கதை. துறவிக்கு தியாகத்தழும்புதான் அணி. கூழங்கை தம்புரான் தன்னை பின்னாளில் கூழங்கை தம்புரான் என்றுதான் சொல்லிக்கொண்டார். அவருடைய பெயர் அவர் இயற்றிய நூல்களிலே கூட அப்படித்தான் உள்ளது. அதுதான் அவருடைய அடையாளம். அது தன்மேல் அவர் கொண்ட வெற்றியின் அடையாளம். நன்றி
ராஜன் ப