அன்புள்ள ஜெ
இங்கே வாழவிதிக்கப்பட்டுள்ள வாழ்க்கை செக்குமாட்டுத்தனம் கொண்டது. அர்த்தமில்லாத ஒரு சுழற்சி இது. இதற்கு ஏதாவது ஓர் அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டு வாழ்ந்து தீர்வதுதான் விதியா? செய்யவேண்டியவை எல்லாமே சலிப்பூட்டுகின்றன. எந்த கிரியேட்டிவிட்டியும் இல்லாத வேலைகள். குடும்பக் கடமைகள். இதுதான் வாழ்க்கை என்றான பிறகு செயலில் மகிழ்ச்சி என்ற சொல்லுக்கு என்னதான் அர்த்தம்?
எஸ். மகாலிங்கம்
தன்மீட்சி நூல் வாங்க
தன்னைக் கடத்தல் நூல் வாங்க
ஒளிரும் பாதை வாங்க
அன்புள்ள மகாலிங்கம்,
செயலை விரும்புதல், விரும்பும் செயலைச் செய்தல் என இரண்டு கூறுகள் வாழ்க்கையில் உண்டு. விரும்பும் செயலைச் செய்தல்தான் மகிழ்வானது. தனக்குரிய செயலை வாழ்வெனக் கொள்ளுதல் ஒரு நல்லூழ். ஆனால் இங்கே மிகச்சிலருக்கே அமைவது அது. மகிழ்வூட்டாத, பொருளற்றவை என அகம் உணரக்கூடிய, அன்றாடச்சுழற்சி மட்டுமேயான செயல்களைச் செய்யாமல் வாழ்வது உலகியலாளனுக்கு இயல்வது அல்ல.
உலகியல் வாழ்க்கை என்பது கடமைகள், வாய்ப்புகள் என பலவற்றாலானது. அவற்றைத் தவிர்க்க முடியாது. பொறுப்புகளை நிறைவேற்றாமலிருப்பது உருவாக்கும் குற்றவுணர்ச்சியை, தற்சிறுமையை கடப்பது மிகக்கடினம், ஆகவே எத்தனை சலிப்பூட்டினாலும் அவற்றை நிறைவேற்றுவதே உகந்தது. ஒருவர் தன் கடமைகளை நிறைவேற்றும்போது உருவாகும் நிறைவுணர்வும் ஒரு வகை இன்பமே.
இந்திய வாழ்க்கை என்பது வாய்ப்புகளாலானது. கல்வி, வேலை, குடும்பம் , வாழ்விடம் எதிலும் நமக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அமையும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்கிவாழ்வதே நாம் செய்யக்கூடுவது. ஆகவே நமக்கு அமையும் வாழ்வு பலசமயம் நாம் விரும்புவதாக அமையாது போகலாம். எந்த வாய்ப்புமின்றி அலைக்கழிந்து அழிவதைவிட இது மேல்.
மகிழ்வூட்டும் செயலே வாழ்வென அமையும் நல்லூழ் பெற்ற சிலருக்கே கூட எல்லா செயலும் அவ்வண்ணம் அமையவேண்டுமென்பதில்லை. உலகியலிலுள்ள எவராயினும் பிடிக்காத செயல்களைச் செய்தாகவேண்டும். சலிப்பூட்டும் செயல்களைச் செய்தாகவேண்டும். பிடித்தமான ஒன்றைச் செய்ய முன்நிபந்தனையாக பிடிக்காத சில விஷயங்கள் இருப்பதே வழக்கம்.
பிடித்ததை மட்டுமே செய்வேன் என்பது மாபெரும் இலட்சியவாதிகள், ஞானத்தேடல் கொண்டவர்கள் இரு சாராருக்கு மட்டுமே இயல்வது. ஆனால் அதற்கான நிபந்தனை துறவுதான். தனக்கு பிடித்தமானதை மட்டுமே செய்யும் வாழ்வுக்காக அவர்கள் துறப்பவை மிக அதிகம். உலகியலின்பங்கள், உலகியல் மரியாதைகள் என அவர்கள் நாம் வாழும் இயல்புலகை விட்டு விலகி தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பார்கள்.
உலகியலாளர் பிடிக்காதவற்றைச் செய்தாகவேண்டும். அதற்குரிய வழிகளிலொன்று செய்யும் செயலை, செய்தாகவேண்டிய செயலை, இனிதாக ஆக்கிக்கொள்வது. ‘இனிமை சேர்த்தல்’ எனும் கலை. “தேன்குழைத்தல்’ என அதை நித்ய சைதன்ய யதி சொல்வார். அக்கலையைச் சற்றேனும் பயிலாமல் இங்கே எவரும் மகிழ்வாக வாழ்ந்துவிட முடியாது. அது எவ்வண்ணம் என அறிந்து ,அதை ஓர் அன்றாடப் பயிற்சி என முனைந்து ஆற்றுபவர்களே மெய்யான மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
எச்செயலுடனும் சிறு இனிமைகளை இணைத்துக்கொள்ளலாம். ‘சிறு இனிமைகள்’ என்ற சொல் மிக முக்கியமானது. வாழ்க்கையை அழகாக்குவது அது. காலை எழுந்ததும் ஒரு செடிக்கு நீர் ஊற்றுவது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வகையில் காபியை அருந்துவது, ஒரு குறிப்பிட்ட கோயிலுக்குச் செல்வது என ஒன்றை இணைத்துக் கொண்டாலே நாளின் தொடக்கம் இனிதாக ஆகிவிடும். உதாரணமாக நான் காலையில் எழுந்ததும் காபி போடுவேன். வீடே தூங்கிக்கொண்டிருக்கும். என் டைனிங் டேபிளில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தினத்தந்தி நாளிதழுடன் தனிமையில் காபியை குடிப்பேன். அந்த நேரம் சாரதா நகர் அமைதியாக இருக்கும். காலை என்றதுமே அந்த இனிய இருபது நிமிடங்கள் நினைவுக்கு வருவதே உற்சாகமானது.
எல்லாச் செயல்களுடனும் அப்படி இனிமைகளை இணைத்துக்கொள்ளலாம். நான் அலுவலகத்தில் இருபதாண்டுகள் எனக்கு சற்றும் ஒவ்வாத ஒரு வேலையைத்தான் செய்தேன். ஆனால் பதினொன்றரைக்கு நண்பர்களுடன் சென்று நேர் எதிரே இருந்த மணிகண்டன் டீக்கடையில் ஒரு டீ குடிப்பேன். ஒரு மணிக்குச் சாப்பாட்டுக்குப்பின் முக்கால்மணிநேரம் ஒரு பெஞ்சில் படுத்து மென்துயில். மூன்றரை மணிக்கு இன்னொரு டீ. இந்த இடைவெளிகள் மிக இனியவை என நானே எனக்குச் சொல்லி நம்பவைத்திருந்தேன். அந்த இனிமைகளின் இடைவெளிகளில்தானே வேலை? அதைச் சமாளித்துவிடலாம்.
அப்படி எவ்வளவோ நுட்பங்களை கண்டு வைத்திருந்தேன். ஃபைல்களில் நான் எழுதும் குறிப்புகளில் எனக்கு மட்டுமே தெரியும் இடக்குகள் உண்டு. சில ஃபைல்களில் சில படங்கள் வைத்திருப்பேன். அந்த ஃபைல் பலவாறாகச் சுற்றி என் கைக்கு வரும்போது அந்த படம் இருந்தால் அது சிறு மகிழ்ச்சி. கணிப்பொறி வந்தபின் நானே கண்டுபிடித்த குறுக்குவழிகள் ஒரு சிறு கொண்டாட்டத்தை எப்போதும் அளித்துக் கொண்டிருந்தன.
நான் அன்றுமின்றும் அச்சுப்பிழை சார்ந்த வேடிக்கைகளை கவனிப்பவன். என் நண்பர்களுக்குத் தெரியும் ,எந்த பயணத்திலும் ஒருமணி நேரத்திற்குள் ஒன்றை சுட்டிக்காட்டிவிடுவேன். அன்று தானியங்கி பிழைதிருத்தியின் விளையாட்டுகள் மிகுதி. உதாரணமாக Justin எங்களூரில் பரவலான பெயர் (எம்ஜிஆரின் பாதுகாப்பாளர் ஜஸ்டின் எங்களூர்க்காரர்தான்) அது எப்போதுமே Just in என திருத்தப்பட்டிருக்கும் . எங்களூரில் புகழ்பெற்ற Delphin என்ற பெயர் ஒருமுறை Dust bin என திருத்தப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
என்னை காணவருபவர்களின் நடத்தையை கவனிப்பேன். நானே ஒரு ‘டெம்ப்ளேட்’ உருவாக்கியிருந்தேன். ஜகதி ஶ்ரீகுமார், நாகேஷ், கவுண்டமணி, சிவாஜி, நாகையா என பல நடிகர்களின் ‘மாடல்கள்’ . அப்படி கிட்டத்தட்ட எண்பது மாடல்கள் வைத்திருந்தேன். அவற்றில் அன்று வந்தவரை எங்கே சேர்க்கலாம் என ஆராய்ந்து அந்த அட்டவணையில் குறித்து வைப்பேன்.ஆகவே எப்போதுமே ஒரு மர்மச் சிரிப்புடன், கொண்டாட்டமாகவே இருப்பேன்.
1985 ல் நான் தொலைபேசி நிலையப் பணிக்குச் சேர்ந்தேன். 1988ல் நிரந்தரமானேன். 2008ல் இருபதாண்டுகள் பணியாற்றி நான் பணிவிடுவிப்பு பெற்றுக்கொண்டேன். பதினைந்தாண்டுகளுக்குப் பின் இன்றும் என் பழைய சகாக்கள் “சார், அப்பல்லாம் சிரிச்சுக்கிட்டே இருப்போமே” என்றுதான் நினைவுகூர்வார்கள். இன்றும் என் நண்பர்களைச் சந்தித்தால் சிரிப்பும் ஆர்ப்பாட்டமும்தான். எந்த படைப்பூக்கமும் இல்லாத, எந்த சவாலும் இல்லாத, அரிசியில் கல்பொறுக்குவதுபோன்ற வேலையை செய்தவர்கள் நாங்கள்.
என் மேலதிகாரி ஒருவர் இருந்தார். ஜெகத்சிம்மன் நாயர் என்று பெயர். சிக்கலான, சோர்வான தருணங்களில் பிடித்தமான உடையணிந்துகொள்வார். பிடித்த உடையே பாதி விஷயங்களை சரிசெய்துவிடும் என்பார். நான் இன்றும் கடைப்பிடிப்பது அது. ஒரு செயலுக்கு முன் குளித்து, உடைமாற்றிக்கொள்வேன். மகிழ்ச்சியாக இருப்பதாக எனக்கு நானே சொல்லிக்கொள்வது அது.
சுந்தர ராமசாமிக்கும் குளியல் ஓர் அன்றாட இனிமை. பாத்டப் குளியல் இன்னும் பிடிக்கும். வீட்டிலேயே குளியல்தொட்டி வைத்திருந்தார். ஒரு சில நறுமண திரவியங்களை ஓரிரு சொட்டு பூசிக்கொள்வதுண்டு– அதைப்பற்றி எழுதியிருக்கிறார் என எண்ணுகிறேன். “ஒரு சின்ன சீசா. அதிலே ஒரு சொட்டு காதுக்குப்பின்னாடி விட்டுக்குவேன். சட்னு எல்லாமே ரம்யமா ஆயிடுது…எவ்ளவு பெரிய வாய்ப்பு இது….” என்றார். இன்பம் என பெரிய ஏதோ ஒன்றை கற்பனை செய்துகொண்டு வாழ்வின் அன்றாடச் சிறிய இன்பங்களை ‘விரலிடுக்கு வழியாக நழுவவிடும்’ எளியவர்களைப் பற்றி அவர் எழுதியிருக்கிறார்
நித்ய சைதன்ய யதி சிறிய இனிமைகளின் பெருந்தொகை. காலையில் எழுந்ததுமே அரைமணி நேரம் மலர்களுடன் இருப்பார். ஒவ்வொரு நாளும் அன்றைய காலைமலரின் நிறமென்ன என அவர் முடிவுசெய்வார். இன்று மஞ்சள் மலர்கள், இன்று நீலம், இன்று வெண்மை. அன்று மாலை கேட்கவேண்டிய இசையை காலையில் தேர்வுசெய்து வைப்பார்— முழு நாளும் அந்த இசையை எதிர்நோக்கிச் செலவிடலாமே. சிறு எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு நாளும் உருவாக்கிக்கொண்டே இருப்பார்.
நித்யா காலைநடை செல்லும்போது அழகிய கூழாங்கற்களை பொறுக்கி கொண்டுவருவார். கூழாங்கற்களை அழகாக மேஜை மேல் அடுக்கி வைப்பார். இறகுகளை பொறுக்கி வந்து ஒரு பீங்கான் சீசாவில் சேமிப்பார். அவற்றை அவரைக் காணவரும் குழந்தைகளுக்குக் கொடுப்பார். அவருடைய நாள் முழுக்க அவ்வாறுதான் செல்லும். பெருந்துயர்களுடன் அவரைத் தேடி வந்துகொண்டே இருப்பார்கள். ஆனால் அவர் அன்றைய மலபார் விசிலிங் த்ரஷ் வந்து கூவிவிட்டதா என்பதை கவனித்து அதைப்பற்றி ஒரு சிறு டைரியில் குறித்துவைப்பார்.
நித்யாவிடமிருந்து நான் பெற்றுக்கொண்டது இது. இன்று கோலாப்பூரில் சிறு கண்ணாடி முட்டைகளை வாங்கினேன். எந்த படிகமும் எனக்குப் பிடிக்கும். படிகங்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்துவிடுகிறது.
மகிழ்ச்சியாக இருப்பதென்பது ஒரு கலை. நாம் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் திட்டமிட்டு பயிலவேண்டும். இன்னொருவர் பயிற்றுவிக்க முடியாது. நாம் எப்படிப்பட்டவர் நமக்கு மட்டுமே தெரியும். நமக்கான பயிற்சித்திட்டத்தை நாமே உருவாக்கிக்கொள்ளலாம். சின்னஞ்சிறு மகிழ்ச்சிகளாலானது இவ்வுலகம். அவை ஒவ்வொரு செயலுடனும் வந்து இணைந்துகொள்பவை. நம்மை வானுக்குத் தூக்கிச் சென்று மேகங்களில் நிறுத்தும் குழந்தையுருக்கொண்ட தேவதைகள்.
ஜெ