ஐசக் டினேசன் பற்றி தமிழில் முதலில் நான்தான் பேசினேன் என நினைக்கிறேன். பொதுவாக நான் வாசித்து முன்வைத்த பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பற்றி தமிழில் எவரும் பேசியதில்லை. ஐசக் டினேசனின் நீலஜாடி என்னும் கதையை அருண்மொழி 1995ல் சுபமங்களா இதழுக்காக மொழியாக்கம் செய்திருக்கிறாள்.
ஐசக் டினேசன் அன்றைய நவீனத்துவ எழுத்தாளர்கள் – விமர்சகர்கள் அனேகமாக முழுமையாகவே மறந்துவிட்ட ஒரு பெயர். அவருடைய கதைகள் தேவதைக்கதைச் சாயல் கொண்டவை. நவீனத்துவக் கதைகளின் அன்றாடத்தன்மை, இறுக்கமான யதார்த்தம் அவற்றில் இல்லை. அவர்கள் அவற்றை ‘பழமையான’ கதைகள் என எண்ணினர். அவற்றிலுள்ள கவித்துவம், தரிசனம் அவர்களுக்குப் பிடிகிடைக்கவில்லை. அவரது கனவு அவர்களின் இரும்புமுடைந்த எழுத்துக்கு உவப்பானதாக இல்லை. ஆனால் இன்று, உர்சுலா லெ க்வின் போன்றவர்களுக்கு தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் ஐசக் டினேசனை ஒரு மாபெரும் படைப்பாளியாக, இலக்கிய மேதையாக அடையாளம் காண முடியும்.
ஐசக் டினேசனை சுசித்ராவுக்கு நான் அறிமுகம் செய்தேன். சுசித்ராவை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்ட படைப்பாளியாக அவர் ஆனார். அவரது கதைகளிலொன்றின் மொழியாக்கம்