அன்பின் ஜெ
குருதிநனைந்த குருக்ஷேத்ர களம் விட்டு வெளியே வந்து வெண்முரசு தொடர்கையில் எதன் பொருட்டு பெரும்போர் நடந்ததோ அதன்பொருட்டு அஸ்தினாபுரியில் முடிசூட்டு விழாவுக்கு இந்திரபிரஸ்தத்திலிருந்து வெளிவர விரும்பாத திரௌபதிக்கு யுயுத்ஸுவை தூது அனுப்புகிறார் யுதிர்ஷ்டிரன்.இந்திரபிரஸ்தம் வந்த யுயுத்ஸு திரௌபதியை நெருங்கும்முன் எட்ட நின்று கவனிக்கிறான்.
“முதுமை கொண்ட கொற்றவை. அல்லது சாமுண்டி. ஆம், சாமுண்டி. மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருக்கிறாளா? வெட்டப்பட்ட தலைகளை குண்டலமாக அணிந்துள்ளாளா? கால் கழலில் அனல் சுழல்கிறதா? நாகங்கள் அணிகளென உடலெங்கும் வளைந்துள்ளனவா? குழலென எழுந்து பரந்து நின்றிருப்பது அழலா? அவ்வழலில் எரிந்துருகி வழிந்தகன்ற தசைக்கு அடியிலிருந்து புடைத்தெழுந்த மண்டை முகமா? எலும்புருக்கொண்ட உடலா? இங்கே புதுக்கள் வெறியுடன் பிணக்கூத்திடும் பேய்கள் நிறைந்துள்ளனவா? அணிகொண்ட சாமுண்டி. எழுந்தெரியும் அழலுடுத்த அன்னை.”
திரௌபதி எப்போதுமே ஆண் என்ற நிமிர்வும் பெண் என்ற கனிவும் கொண்டவள்.ஆனால் இப்போது பார்க்கயில் வெறும் தெய்வமாய் அமர்ந்திருக்கிறாள்.
யுயுத்ஸு திரௌபதியை நெருங்கி வணங்கி நிற்கும்போது ஆசிரியர் இருவரிலும் மாறிமாறி உள்நுழைந்து அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளை உடல் அசைவுகளை பிரச்சினைகளின் தீவிரத்தை அதற்கான தீர்வுகளை உள்ளொளிந்திருக்கும் ஊடுபாவுகளை தனித்தனியே பிரித்துக்காட்டி, வாசகர்களின் மனதை வியாபித்துக்கொள்கிறார்.
திரௌபதியின் விழியசைவும்,உடலசைவும்,மூச்சொலியும், வார்த்தைகளுக்கு இடையே விழும் ஆழமான இடைவெளியும், உடன் பேசுபவர்களை கவனிக்காததுபோல் கவனிக்கும் பாவனையும் , அவள் முதுமையும், முதுமையின் விளைவையும் யுயுத்ஸு அறிந்தே இருக்கிறான்.
“திரௌபதி எப்பொழுதும் வினாக்களை முழுமைப்படுத்துவதில்லை. அவ்வினா என்ன என்பதை கேட்பவர் புரிந்துகொண்டு தொகுத்துக்கொள்வதற்காக அடையும் பதற்றமே அவ்வினாவிற்கு அவர் அளிக்கக்கூடிய தடைகளை இல்லாமலாக்கிவிடும். பெரும்பாலானவர்கள் அவற்றைக் கேட்டவுடனே “அரசி?” என்று பணிவுடன் மீண்டும் கேட்பார்கள். அவள் விழி நிமிர்ந்து அவர்களை கூர்ந்து பார்த்து முன்பு சொன்ன வினாவின் ஓரிரு சொற்களை சற்றே மாற்றி மறுபடியும் கேட்பாள். அப்பதற்றத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் மறுமொழியை உளம்நழுவி சொல்லிவிடுவார்கள். உடனே பதறி அக்கூற்றிலிருக்கும் பிழைகளையோ விரும்பாமெய்களையோ மறைக்கும்பொருட்டு சொல்பெருக்குவார்கள். அவ்வாறு தங்களை முழுமையாகவே அவள் முன் படைப்பார்கள்.”
வெண்முரசில் ஏராளமான புதிய வார்த்தைகளை கண்டிருக்கிறோம்.மெய்யிற்கும் பொய்யிற்கும் இடையில் நிற்கும்“விரும்பா மெய் “எனும் வார்த்தை புதிதிலும் புதிது.
களிற்று யானை நிரையில் திரௌபதியை கவனிக்கயில் அவளின் கடந்த காலம் நினைவுக்கு வருகிறது.
தரையை தடாகமென்றும்
தடாகத்தை தரையென்றும்
தடுமாறும் துரியனைப்பார்த்து மாளிகை குலுங்க சிரித்த சினிமா திரௌபதியைவிட அரைக்கண பார்வையால், இலேசான இதழ் வளைந்த சிரிப்பால் துரியோதனனை சுருள் கத்தியாலும் சூட்டுக்கோல்கொண்டும் துடிதுடிக்கச்செய்த திரௌபதியை நமக்கு தாயாகவும் மகளாகவும் உடன்பிறந்தாளாகவும் ஆக்குகிறார் ஆசிரியர்.வெண்முரசெங்கும் நம்மை மெல்லிய உணர்வுகளுக்கு ஆட்படுத்திக்கொண்டே வருகிறார்.
கௌரவசபையில் திரௌபதி துச்சாதனனால் துயிலுரியப்படும்போது சினிமாக்களில் அவையின் ஒரு மூலையின் மேற்கூரையில் இருந்து கண்ணனின் உள்ங்கையிலிருந்து துயில் வரும் திரௌபதிக்கு.
ஆனால் ஆசிரியரோ பெண்ணுக்கு பெண்ணே காப்பு என்று எதிர் நிலையிலிருக்கும் கௌரவப்பெண்டிரே திரௌபதிக்கு ஆடை வழங்கி ஆலிங்கனம் செய்துகொண்டபோது கலங்காத மனது கல் மனது.இனி பெண்ணுக்கு எதிரானவர் என்று ஜெயமோகனை யாரேனும் சொன்னால், சொன்னவர் ஜெயமோகன் எழுத்தை வாசிகாகாதவர் என்றே அர்த்தம்.
ராமாயணத்தில் வால்மீகி எழுதாத அணில் கதையை கம்பர் எழுதிய பிறகு கம்பருக்கு பின் எழுதப்பட்ட அனைத்து ராமயணங்களிலும் அனில் கதை இடம்பெற்றதாக சொல்வார்கள்.போலவே இனிவரும் காலங்களில் திரௌபதி துயிலுரியப்படும்போது கௌரவப்பெண்டிரே ஆடை வழங்குவார்கள்.அதுவே சாலப்பொருத்தமாக இருக்கும்.
யுயுத்ஸு திரௌபதியை நன்கறிந்த உளவியலாளன்.கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்காமல் அடிமேல் அடிவைத்து அம்மியை நகர்த்துகிறான்.
“சென்று சொல் அரசரிடம்.நான் அஸ்தினாபுரிக்கு வருகிறேன் என்று.”என்கிறாள்.
ஒவ்வொரு பாத்திரத்துக்குள்ளும் உள் நுழைந்து எதிரில் இருக்கும் பாத்திரங்களை அணு அணுவாக கவனித்து எழுதும் ஆசிரியரை, நாங்கள் நேரில் சந்திக்கும் போதெல்லாம் அந்தக்கால ஆசிரியர் மாணவர் போல் நாலு வார்த்தை பேசிவிட்டு நகர்ந்துகொள்கிறோம்.நம்மிடம் ஏதேனும் குறை இருந்தால் அதை ஆசிரியர் கவனித்துவிடக்கூடாது என்பதற்காக.
நன்றி ஜெ.
மூர்த்தி விஸ்வநாதன்
வாழப்பாடி.