பனை எழுக, முன்பதிவுத் திட்டம்
அன்புள்ள ஆசிரியருக்கு
இன்று தளத்தில் வெளியான பனை எழுக புத்தக முன்வெளியீடு செய்தி பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி.
வினோபா அவர்களின் கல்வி சிந்தனைகளின் தொகுப்பு நூல் ஒன்று கிடைத்தது.அதில் உள்ள மாற்றுக் கல்வி தகவல்,கட்டுரைகள் தொகுத்து ‘ கல்வியில் மலர்தல் ‘என்று ஒரு நூல் தொகுக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த நூலை cuckoo பள்ளியில் போதகர் காட்சன் அவர்கள் தான் வெளியிட்டார்கள்.என்னுடைய முதல் நூல் அவர் கையால் வெளியிட்டது மிக சிறப்பான நிகழ்வு என நான் கருதுகிறேன்.
அன்று போதகர் பனை குறித்தும், பனை ஏறிகள் அவர்கள் அன்றாட வாழ்க்கை குறித்தும் அவ்வளவு தகவல்கள் கூறினார்கள்.தர்மப் பதனி என்றொரு பதம் உபயோகித்து சொன்னது , பனை மரங்கள் அங்குள்ள மக்களுக்கு எப்படி தெய்வமாக இருக்கிறது என்று ஒப்புநோக்கி பேசியது எனக்கு ஒரு பெரிய திறப்பாக அமைந்தது.
பனை விதை சேகரிப்பு, பனை ஓலை ஓவியங்கள், பெட்டி என பல்வேறு தகவல்கள் பாதர் மூலமே பெற்றுக் கொண்டேன்.எங்கள் ஈரோடு பகுதிகளில் சுண்ணாம்பு சூலைகளுக்கு பனை விதைகள் தான் முக்கிய எரிபொருள்.இப்போது கூடுமான விழிப்புணர்வின் காரணமாக அது தவிர்க்கப்பட்டுள்ளது.பனை சார்ந்த பொருளாதாரம் குறித்த ஒரு புரிதலுக்கு இந்த நூலின் கட்டுரைகள் உதவியாக இருக்கும்.
நன்றி
அன்புடன்
குமார் சண்முகம்
அன்புள்ள ஜெ
பனை மீது பெரும் பற்று கொண்டு பயணம் செய்துகொண்டிருக்கும் காட்சன் பற்றிய செய்திகளை அவ்வப்போது உங்கள் தளத்தில் பார்ப்பேன். அவரை உங்கள் இணையதளம் வழியாகவே அறிமுகம். பின்னர் தமிழ் ஹிந்து இதழிலும் எழுதினார்.
ஓர் அவசியத்தேவை இயற்கையில் இருக்கும்போது அதற்கான இலட்சியவாதிகள் இயற்கையால் உருவாக்கப்பட்டுவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஒரு பெரிய இலட்சியத்துக்காக வாழும் மனிதர். பனைகளின் காவலர். அவருக்கு என் வணக்கம்
ஜெபராஜ்