மலர்மஞ்சம் தமிழ்விக்கி
கிராமத்தில் வசந்தா அத்தையின் வீடு எங்கள் வீட்டுக்கு எதிரிலிருந்த சலபதி பெரியப்பாவின் வீட்டுக்குப் பக்கத்திலிருந்தது. வசதிகள் கொண்ட மூன்று மாடி வீடு. எழுபதுகளில் வால்வ் ரேடியோவையும், டூ இன் ஒன் டேப்ரிகார்டரையும், ஷட்டர் வைத்த கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியையும் அத்தையின் வீட்டில்தான் முதல்முறை நான் பார்த்தேன். மனோ, சித்ராவின் பெயர்கள் முதன்முதலில் எனக்கு அறிமுகமானது அந்த வால்வ் ரேடியோவில்தான். மனோகர் சித்தப்பா பாடல்கள் பதிந்த நூற்றுக்கணக்கான ஆடியோ கேசட்டுகளை வகை வாரியாக அடுக்கி வைத்திருப்பார். ரூபவாஹினியின் வார இறுதி இரவு சினிமா பார்க்க நான் அம்மாவுடன் அத்தை வீட்டிற்குத்தான் போவேன். வசந்தா அத்தை கள்ளிக்குடி அரசுப் பள்ளியில் தையல் டீச்சராக வேலை செய்தார். அம்மாவின் நெருங்கிய நண்பர். எங்கள் மேல் மிகப் பிரியம்.
பால்யத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் (எழுபது, எண்பதுகளில்) நான் எப்போதும் வசந்தா அத்தையின் வீட்டில்தான் கிடப்பேன். காரணங்களில் பிரதானமானது, முதல் மாடியில் அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள். அப்போது அத்தை வீட்டில் தொடர்ந்து வாங்கும் வாராந்தர, மாத இதழ்களில் வெளிவரும் எல்லாத் தொடர்களையும் பிரித்து அழகாக பைண்ட் செய்து வைப்பார்கள் (படக்கதைகள் உட்பட). விடுமுறை நாளில் நான் காலையில் மாடிக்குப் போனால் நேரம் காலம் தெரியாமல் அங்குதான் கிடப்பேன். அத்தைதான் அவ்வப்போது நடுவில் டீயோ, காஃபியோ, ஸ்நாக்ஸோ, உணவோ மேலே கொண்டு வந்து தருவார். ஸ்டெல்லா புரூஸின் “அது ஒரு நிலாக்காலம்” அங்குதான் படித்த ஞாபகம். எழுதியவர் பெயர் கவனமில்லாமல் பல புத்தகங்கள் படித்திருக்கிறேன். அவ்வயதில் மனதுக்குள் நுழையாத புத்தகங்களை அங்குமிங்குமாய் சில அத்தியாயங்கள் வாசித்திருக்கிறேன். பின்னாட்களில் புத்தகமாய் பிரசுரமானபின் வாங்கிப் படித்த நூலகள் பல, முன்னமே இதை வாசித்திருக்கின்றேனே என்று யோசிக்க வைத்திருக்கின்றன. கல்லூரிக் காலத்தில் தி.ஜா-வுடன் ஒட்டிக்கொண்டிருநத நேரத்தில் மோகமுள்ளை முடித்துவிட்டு மலர் மஞ்சம் கையிலெடுத்தபோது பாலியை முன்னமே சந்தித்திருக்கிறோமோ என்ற பிரமை உண்டானது.
சமீபத்தில் தி,ஜா-வின் நாவல்கள் அனைத்தையும் மறுவாசிப்பு செய்தேன். சட்டநாதன், புவனா, குஞ்சம்மா, அனந்தசாமி, ருக்கு, அனுசுயா, செங்கம்மா, அம்மணி, இந்து, பாலி, செல்லம், கோணவாய் நாயக்கர் எல்லோருடனும் அவர்கள் வாழ்வில் நுழைந்து பயணித்து வந்த ஒரு மிதப்பு வெகுநாட்கள் வரை நீடித்தது.
“மலர் மஞ்சம்” தி.ஜா-வின் இரண்டாவது நாவல். 40-களின் “அமிர்த”த்தை விட உரையாடல்களில், பாத்திரங்களின் வார்ப்பில், துலக்கத்தில், முழுமையின் செவ்வியல் உணர்வில் “மலர் மஞ்சம்” மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது. “மலர் மஞ்சம்” 60-ல் சுதேசமித்திரனில் வாரத் தொடராக வெளிவந்த நாவல். தொடர்கதைக்கே உரித்தான “விஸ்தாரம்”, தி.ஜா-வின் எழுத்து எனும் கற்கண்டால் திகட்டாத இனிப்பாய் உடன் பயணிக்க வைத்தது. பெரிய நாவல்கள் எப்போதும் படித்து முடிக்கும்போது ஒரு பிரிவுத் துயரை உண்டாக்கும். வீட்டு மனிதர்களைத் தற்காலிகமாகப் பிரிவது போன்ற மென்சோகத்தை கிளறும். அதிலும் “மலர் மஞ்ச”த்தில் இறுதிப் பகுதியான ஹரிச்சந்திர கட்டம், பெரும் மனத் தவிப்பை உண்டாக்கியது.
இம்முறை “மலர் மஞ்சம்” மீள்வாசிப்பில் செல்லமும் கோணவாய்ச்சாமியுமே பாலியைத் தாண்டி மனம் நிறைத்தார்கள். செல்லத்தை மறுபடியும் மறுபடியும் நினைவு மீட்டுக்கொண்டே இருந்தது. செல்லத்தை நினைக்கும்போதெல்லாம் ஒரு ஆதுரமும், வாஞ்சையும், நெகிழ்வும் மலர்ந்துகொண்டேயிருந்தன. கோணவாய் நாய்க்கரின் வாழ்வின் பயணமும் நிறைவும் இந்த வாழ்வு பற்றிய பல கேள்விகளை மனதில் உருவாக்கி உருவாக்கி அசை போட்டு தொட்டுத் தொட்டு இழுத்துச் சென்றுகொண்டேயிருந்தது. காட்டில் குட்டப்பனின் வாழ்வு ஒருவகை ஜென்ம ஈடேற்றம் என்றால், கோணவாய் நாய்க்கரின் வாழ்க்கை வேறுவகை ஜென்ம ஈடேற்றம் நகரத்தில். அந்த நிறையின் இறுதி அத்தியாயம், அந்த உண்மை, நிதர்சனம் மனதுக்கு புரிந்தாலும், அதை எதிர்கொள்ளும் கணத்தில் வாசிக்கும் மனது அடையும் பதட்டம், தவிப்பு, கண்கள் நிறைக்கும் நெகிழ்வு…ஆழத்தில் எதையோ தோண்டி எடுக்கும்.
பின்னாட்களின் இந்து, அம்மணி, அனுசுயா, செங்கம்மா, ருக்கு, குஞ்சம்மாவின் சாயல்கள் பாலியிடம் உண்டு. சொல்லப் போனால் பாலியின் விரிவுகள்தான் அவர்கள் என்று தோன்றுகிறது.
நான்கைந்து வருடங்களுக்கு முன், கரூர் (நெரூர்), திருச்சி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர் பயணச் சுற்றின் போது (இயல், அம்முவுடன்) தஞ்சை பெரியகோவிலில் நுழையும்போது மதியம் உச்சிப்பொழுது. வெயில் சுட்டெரித்தது. நடப்பதற்காக போடப்பட்டிருந்த கார்ப்பெட்டின் மீதுகூட கால் வைக்க முடியவில்லை. இயல் கைபிடித்துக் கொண்டு விறுவிறுவென்று சென்று நந்தியின் பக்கத்தில் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டேன். அம்முவும் இயலும் கோவிலுக்குள் சென்றார்கள். நான் விமானத்தையும், மண்டபங்களையும், மனிதர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பாலாவின் உடையாரை ஞாபகத்தில் கொண்டுவந்த அதே நேரம், பாலியும் செல்லமும் உடன் சேர்ந்தே நினைவில் எழுந்தார்கள்.
தஞ்சை கிராமமான ராஜங்காட்டில் பாலியின் பிறப்பில் ஆரம்பிக்கும் கதை காசியில் கோணவாய்ச் சாமி ஒன்றாவதுடன் நிறைவு கொள்கிறது.
***
தஞ்சையில் வீட்டிலிருந்து சட்டென்று அனைத்தையும் உதறி லௌகீகம் விலக்கி நாய்க்கர் கிளம்பி விடுகிறார். ஷேத்திரம் ஷேத்திரமாய் பல ஆண்டுகள் சுற்றிவிட்டு கடைசியில் காசியை வந்தடைகிறது சாமி. குழந்தை அப்பாவின் செருப்பைப் போட்டுக்கொண்டு நடப்பது போல் உடம்பைத் தூக்கிக்கொண்டு அலைவதில் ஒரு அயர்ச்சி. ஒரு வாரம் முன்பு தண்ணீரில் தான் கரைந்து போவது போல் ஒரு கனவு. அதற்குப் புரிந்து விடுகிறது. சொல்லிவிட்டு கிளம்புவதற்காக தந்தி அடித்து ராமையாவையும், வடிவையும் தஞ்சாவூரிலிருந்து காசிக்கு வரச்சொல்கிறது.
ஹரிச்சந்திர கட். தந்தி அனுப்பி உதவிய சோழிக்கண் ஆசாமியுடன் அது பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறது.
“மூணுநாளாச் சாப்பிடலையே அவிடத்திலே. ஏதாவது பழம்கிழம் வாங்கிண்டு வரேனே!”
“பழம்தான் பழுத்திக்கிட்டிருக்கே. பழுத்தா தன்னாலெ விழுந்துபிடுது”
வெங்கி