இந்தியாவின் அழகிய கடற்கரைகளிலொன்று சென்னை. ஆனால் சென்னை கடற்கரைமேல் இன்று எனக்கு ஒவ்வாமைதான். ஒன்று பெருங்கூட்டம். இன்னொன்று இண்டு இடுக்கு இல்லாமல் நிறைந்திருக்கும் சிற்றுணவுக் கடைகள். அவர்கள் அங்கேயே குப்பைகளைக் கொட்டி, அழுக்குநீரை ஊற்றி அந்த பகுதியையே நாற்றமடிக்கச் செய்துவிட்டிருப்பார்கள்.
மெரினா என்பது ஒரு மாபெரும் குப்பைமேடு. அங்கே வணிகங்களை கட்டுப்படுத்தியாகவேண்டும். உரிமை பெறாதவர்கள் எதையும் விற்பதை கடுமையாகத் தடைசெய்தாகவேண்டும். ஆனால் அது சாத்தியமே அல்ல. வருபவர்களிலேயே மிகப்பெரும்பாலானவர்கள் கண்டதையும் வாங்கி வாயில்போடத்தான் வருகிறார்கள்.
கூடவே சென்னையின் சிலைகள். சுதந்திரம் கிடைத்தபின் வைக்கப்பட்டவற்றில் ராய் சௌதுரி செய்த உழைப்பாளர் சிலை, காந்தி சிலை தவிர எல்லாமே பொம்மைகள்தான் என்பது என் எண்ணம். பெருமதிப்பிற்குரிய ஆளுமைகள்தான். ஆனால்சிலைகள் காட்சியளவிலேயே வடிவ ஒருமை அற்ற, மிகையுணர்ச்சிகொண்ட உள்ளன. ஆனால் பழைய பிரிட்டிஷ் சிலைகளெல்லாமே அற்புதமானவை, அவை பெரும்பாலும் அகற்றப்பட்டுவிட்டன.
அத்துடன் சமாதிகள். இனி ஒன்றும் செய்யமுடியாது, சமாதிகள் பெருகிக்கொண்டேதான் இருக்கும். மெரினா ஒரு மாபெரும் கல்லறைத்தோட்டமாக ஆவதை எவரும் தடுக்க முடியாது. ஆனால் கன்யாகுமரிக்கு மெரினா எவ்வளவோ மேல். அங்கே காந்தி மண்டபமே கட்டியிருக்கக் கூடாது. இப்போது கடற்கரைக்கு பின்பக்கம் காட்டி, கடலை மறைத்திருக்கும் கட்டிடங்களாக கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் ரசனைதான் உண்மையில் பிரச்சினை. மெய்யான கலை எவருக்கும் அறிமுகமில்லை. மக்களின் ரசனை சற்று மேம்பட்டிருந்தால், கூடவே நுண்ணுணர்வுள்ள ஒருவர் நினைத்தால், அரசியல்வாதிகள் ஊடுருவாமலிருந்தால், நிறையவே செய்யமுடியும் என்பதற்குச் சான்று கோழிக்கோடு கடற்கரை.
2014ல் கோழிக்கோடு ஆட்சியர் கே.வி.மோகன்குமார் உதவியுடன் கேரள லலிதகலா அக்காதமி பின்னணியில் உதவ கோழிக்கோடு நகரச் சுற்றுலா கழகத்தலைவர் வி.கே.ராஜன் ஒருங்கிணைத்த சிற்பக்குழு கோழிக்கோட்டை சிற்பநகரமாக ஆக்கும் திட்டமொன்றை முன்னெடுத்தது. கோழிக்கோடு கடற்கரையில் நவீனச் சிற்பங்களை உருவாக்க அகில இந்திய அளவில் சிறந்த சிற்பிகளை அழைத்தது. வழக்கமாக அரசுகள் நிறுவும் அரசியல்வாதிகளின் பொம்மைகள் அல்ல, முழுக்கமுழுக்க நவீனச் சிற்பங்கள்.
மிக எளிதாக உருவாக்கப்பட்ட சிலைகள் இவை. மொத்தமே 27 நாட்களில் அனைத்தும் செதுக்கப்பட்டுவிட்டன. 12 சிலைகள். அவற்றில் 9 சிலைகள் கோழிக்கோடு கடற்கரையில் நிறுவப்பட்டன. எஞ்சியவை சரோவரம் தாவரவியல் பூங்காவிலும், எஸ்.கே.பொற்றேக்காடு நினைவுச் சாலையிலும் நிறுவப்பட்டன.
வங்காளிகள், மும்பை கலைப்பள்ளியைச் சார்ந்தவர்கள், மலையாளிகள் என தேசத்தின் முன்னணிக் கலைஞர்களால் செதுக்கப்பட்டவை. வெவ்வேறு கருக்கள் கொண்டவை. ஒரு சிற்பத்துக்கு சிற்பிக்கு ரூ 75000 மட்டுமே ஊதியமாக அளிக்கப்பட்டது. அந்தத்தொகை பெரும்பாலும் நன்கொடைகள் வழியாக உருவாக்கப்பட்டது.
கோழிக்கோட்டின் கடற்கரை ஒரு நவீனக் கலாச்சார மையமாகவே ஆகியிருக்கிறது. இச்சிலைகளுக்காக இங்கே பயணிகள் வருகிறார்கள். பெரும்பாலும் குப்பைகள் அற்று சுத்தமாக உள்ளது. கற்சிலைகளின் சிறப்பு, அவை காலத்தால் அழியாதவை என்பது. கடற்கரையில் இருந்தாலும் அவை எவ்வகையிலும் சிதைவதில்லை. ஒவ்வொரு சிலைமுன்னும் பார்வையாளர்கள் நின்று கவனித்து, குழம்பி, விவாதித்து, கண்டடைந்து ரசிப்பதைக் காணமுடிகிறது.