சென்னையில் நண்பர் சென்ற ஆகஸ்ட் 25 அன்று ஷாஜியின் மகள் கீதி சலீலாவின் பதினெட்டாவது பிறந்தநாள் விழா. ஷாஜி எனக்கு இருபதாண்டுக்கால நண்பர். (இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்தி ஐந்து பிரச்சினைகள்) அவரை தமிழில் எழுதவைத்தவன் நான். தமிழில் ஆங்கில பரப்பிசை பற்றியும், இந்திய திரையிசை ஆளுமைகள் பற்றியும் முழுமையான கட்டுரைகளை எழுதியவர் ஷாஜி. அவருடைய கட்டுரைகள் வாழ்க்கைப்பதிவுகள், ரசனை மதிப்பீடுகள் அடங்கியவை.
அத்தகைய எழுத்துக்கள் தமிழில் தேவை என்னும் எண்ணம் எனக்கிருந்தது. ஆகவே அவர் ஆங்கிலத்தில் எழுத நான் தமிழாக்கம் செய்தேன்.அவை உயிர்மை இதழில் தொடர்ந்து வெளிவந்தன. பின்னர் அவரே தமிழில் எழுதலானார். இப்போது அவரே தமிழ், ஆங்கிலம், மலையாளம் மூன்றுமொழிகளிலும் எழுதுகிறார். பல நூல்கள் வெளிவந்துள்ளன.
ஷாஜியின் வளர்ப்பு மகள் கீதி நடக்கமுடியாத குழந்தை. எனக்கு அவளை கைக்குழந்தைக் காலம் முதல் தெரியும். ஷாஜியும் ஜெஸியும் தமிழகத்தின் முன்னுதாரண பெற்றோர்களில் ஓர் இணை. சின்னஞ்சிறு விஷயங்களுக்கெல்லாம் கசப்பும் துவர்ப்புமாக வாழ்க்கையை இருட்டாக்கிக் கொள்வோர் நடுவே ஷாஜியின் ஊக்கம் என்னை எப்போதுமே கவர்வது. ஷாஜி நடிகரும்கூட. மிஷ்கினின் நண்பர். மிஷ்கினால் நடிகராக்கப்பட்டவர். இப்போது ஏராளமான படங்களில் நடித்துவிட்டார்
ஷாஜியின் மகள் விழாவுக்கு அவளுடைய பள்ளி நண்பர்கள் வந்திருந்தனர். அவளுடன் அப்பையன்களுக்கு இருந்த ஆழமான நட்பும், அவள் அப்பையன்கள் ஒவ்வொருவரையும் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்ததும் நெஞ்சை நிறையவைத்தன. சென்னை போன்ற ஒரு மெட்ரோபாலிடன் நகரில் மட்டுமே இது சாத்தியம். அப்பையன்கள் சிலர் வட இந்தியக்குடும்பத்தினர். சிலர் தென்னிந்தியர். சென்னைக்கு வெளியே இந்த நட்பும் இருக்காது. இந்த விரிந்த உலகப்பார்வையும் இருக்காது. கூடவே, மிக உயர்தரப் பள்ளிகளில்கூட நம்பவே முடியாத அளவுக்கு சாதிப்பிரிவினையும் குழுமனநிலையும் இருக்கும். தமிழகம் சென்னைக்கு வெளியே வேறொன்றாக இருக்கிறது.
விழாவுக்கு மனுஷ்யபுத்திரன் தன் வளர்ப்பு மகளுடன் வந்திருந்தார். வசந்தபாலன் தன் மகனுடன் வந்திருந்தார். பாடகர் ஶ்ரீனிவாஸ், சீனு ராமசாமி என பலர். என் நண்பர் சென்னை வழக்கறிஞர் செந்தில்குமார் மகன் நிருதனுடன் வந்திருந்தார். ஒரு பிட்ஸா கடையின் ஒரு பகுதியில் நிகழ்ச்சி நடந்தது. ஷாஜி சுமாரான பாடகர் (ஆகவேதான் இசை விமர்சகர்) ஆனால் நிறைய இசைநிகழ்ச்சிகளில் பாடிய அனுபவம் உண்டு. கட்டப்பனை டி.எம்.எஸ் என அறியப்பட்டிருக்கிறார். கட்டப்பனையில் ஏசுதாஸ், எஸ்.பி.பி, ஜானகி, சுசீலா எல்லாரும் உண்டு. ஹைதராபாதில் ஒரு மேலையிசைக் குழு நடத்தியிருக்கிறார்.
ஷாஜி உரிய ஏற்பாடுகளுடன் வந்திருந்தார். கரோகே இசையில் ஷாஜி இந்திப்பாடல்களைப் பாடினார். ஆச்சரியம், பாட்டு நன்றாகவே இருந்தது. சென்ற ஆண்டுகளில் கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். ஶ்ரீனிவாஸ் பாடினார். இந்தி பாடலாசிரியர் பாடினார். இரவு பத்து மணிக்கு வசந்தபாலன் காரில் நான் விடுதிக்கு திரும்பினேன்.
மறுநாள் காலை ஐந்தரை மணிக்கு விமானம். ஏழு மணிக்கு கோழிக்கோடு. கோழிக்கோட்டில் எனக்கு பிரியமான விடுதி அளகாபுரி. 1951ல் தொடங்கப்பட்டது. எஸ்.கே.பொற்றேக்காடு, எம்.டி.வாசுதேவன் நாயர், புனத்தில் குஞ்ஞப்துல்லா என பலருக்கும் பிடித்தமான இடம் இது. கோழிக்கோட்டின் முதல் பெரிய விடுதி. மிகச்சிறந்த உணவகமும் இணைந்தது. பெரிய மாற்றங்கள் இல்லாமல் நீடிக்கிறது . அறைகள் குளிரூட்டப்பட்டவை என்பதே வேறுபாடு. அறைகள் மட்டுமல்லாமல் தனித்தனி குடில்களும் கொண்டது. விடுதிகள் ஒரேபோல, தனிக்குணமே இல்லாமல் இருக்கும். இது சரியான கோழிக்கோடன் விடுதி. மீன்கறியின் தெய்வீக மணம் அனேகமாக எல்லா இடங்களிலும் இருந்துகொண்டிருக்கும்
விடுதியின் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் நடுவயது கடந்தவர்கள். முப்பதாண்டுகளுக்கும் மேலாக இங்கே வேலை பார்ப்பவர்கள். ஆனால் பொதுவாக கேரளத்தில் காணக்கிடைக்கும் உதாசீனமான, தெனாவெட்டான பதில்கள் இல்லை. வீட்டுக்கு வந்த விருந்தினர்களிடம் நடந்துகொள்ளும் ஒரு நட்பான பாவனை.
காலை வந்ததுமே படுத்து மதியம் வரை தூங்கினேன். மதியம் ஓண சத்யை சாப்பிட்டேன். பிரதமனுடன். ஓணம் இப்போதெல்லாம் கேரளத்தில் பத்துநாட்களுக்கு முன்னரே தொடங்கிவிடுகிறது. கொண்டாட்டம் கொண்டாட்டம்தான். எங்கு பார்த்தாலும் பெண்கள் கேரள உடைகள் அணிந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். பிரதமன் ஹார்லிக்ஸ் புட்டிகளில் ஒருலிட்டர் 270 ரூபாய்க்கு தெருக்களில் போட்டு விற்கப்படுகிறது. கடைகள் , தெருக்கள் எங்கும் பெருங்கூட்டம். வாங்கிக் குவிக்கிறார்கள் என்றார் நண்பர்.
நண்பர் கோகுல் வந்திருந்தார். அவர் கணினி நிபுணர், ஆனால் ஆண்டில் இரண்டு மாதம் இந்திய ராணுவத்தில் மேஜர். இப்போது இங்கிருக்கிறார்(நிபுணர்களை உள்ளே கொண்டுவரும்பொருட்டு இந்த முறை) கோகுலுக்கு கேரள உணவு, கேரளச் சூழல் பிடிக்கும். ஆகவே கொண்டாட்டமாக இருந்தார்.
மாலை நண்பர் விஸ்வநாதன் எழுதிய நாவல் ‘நக்னனாய கொலபாதகியுடெ ஜீவிதம்’ வெளியீடு. அவர் புகழ்பெற்ற இதழாளர். விளையாட்டு வீரர்களை பற்றிய நூல்களை எழுதியவர். உலகமெங்கும் விளையாட்டை அறிக்கையிட பயணம் செய்தவர். கேரள இதழாளர்களின் வாழ்க்கையே வேறு. தமிழ் இதழாளர்கள் குறைவான சம்பளம் வாங்கும் குமாஸ்தாக்கள். மாத்ருபூமியின் இதழாளர் இருபதாண்டுகளில் உலகம் முழுக்கச் சென்றிருப்பார்— அனேகமாக அனைவருமே. அவர்களின் வாழ்க்கை ஜேம்ஸ்பாண்ட் தன்மைகொண்டது.
விஸ்வநாதன் எழுதிய முதல் நாவல் இது. நான் கேரளத்தில் எந்தக்கூட்டத்திலும் கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்து அறிவித்தும் விட்டேன். ஆனால் வேறுவழியில்லை. விஸ்வநாதன், அருண்கோபி இருவரும் மலையாளத்தில் என்னைப்பற்றி எழுதிக்கொண்டே இருப்பவர்கள். அருண் கோபி என்னைப்பற்றி ஒரு நூலே எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்நாவல் ஒரு ஜெர்மானிய நூல்குறிப்பு, ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை, ஒரு கொலை என கேரள நாவல்களின் வழக்கமான தொடுபொருட்களையெல்லாம் தொட்டுக்கொண்டு விரியும் படைப்பு.
நான் இன்றைய நாவலின் நோக்கம், அந்நோக்கம் அதன் வடிவத்தை உருவாக்கும் விதம், கேரள நாவலில் செயல்படும் சில அடிப்படை ‘பைனரிகள்’ ஆகியவற்றைப் பற்றிப் பேசினேன். நல்ல உரைதான். முழு உரையும் மாத்ருபூமியில் விரைவில் வெளியாகும். சுருக்க வடிவம் எல்லா நாளிதழ்களிலும் வெளியாகியிருந்தது. (வெளியீட்டுவிழாச் செய்தி)
கோழிக்கோடு நகரில் இலக்கியக் கூட்டங்களுக்காகவே மாத்ருபூமி ஒரு நல்ல அரங்கை உருவாக்கியிருக்கிறது. குறைந்த செலவில் அங்கே கூட்டங்கள் நடத்தலாம். நம்மூரில் தினத்தந்தியோ தினமணியோ தினமலரோ அப்படி ஓர் அரங்கை உருவாக்குவார்களா என எண்ணிக்கொண்டேன்.
கல்பற்றா நாராயணனுடன் அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்தேன். அருண் கோபி, புகைப்பட நிபுணர் மதுராஜ் ஆகியோர் வந்தனர். மதுராஜ் என்னை முக்கியமான புகைப்படங்கள் எடுத்த நிபுணர் (குடையுடன் நான் மலையடிவாரத்தில் நிற்கும் புகைப்படம் அதில் மிகப்புகழ்பெற்றது) எங்கள் பயணத்தில் இணைந்து ஸ்பிடி சமவெளிக்கு வந்திருக்கிறார். இரவு பன்னிரண்டு மணிவரை அரட்டையும் சிரிப்புமாகச் சென்றது.
காலையில் நானும் மதுராஜும் கோழிக்கோடு கடற்கரைக்குச் சென்றோம். மதுரான் என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை கோழிக்கோடு கடற்கரை கொண்டாட்டமாக இருந்தது. என்னை சந்தித்த ஒருவர் அறிமுகம் செய்துகொண்டு சாரு நிவேதிதா சௌக்கியமாக இருக்கிறாரா என்று விசாரித்தார். ஷம்சுல் என்று சொன்னார். சாருவுடன் அறிமுகமுண்டு என்றார்.
கோழிக்கோடு விந்தையான பலவற்றின் கலவை. ஒரு சூஃபி, மாப்பிளை கலாச்சாரம் இங்குண்டு. இலக்கியக்கூட்டங்களில் பாதிப்பெண்கள் புர்க்கா போட்டவர்கள். இன்னொரு பக்கம் அண்மையில் வளர்ந்துவரும் ஐரோப்பிய மோகம். ஜெர்மன், பிரெஞ்சு கற்று ஐரோப்பாவுக்கு சென்றுவிட துடிக்கிறார்கள். ஜெர்மன் மொழியிலேயே ஜெர்மனிக்குச் செல்வதற்கான விளம்பரம். அப்படியென்றால் ஜெர்மன் மொழி படித்தவர்கள் விளம்பரத்தை வாசித்தால்போதும் என்பது சாராம்சம் . நர்ஸுகளாகவும், சமையற்காரர்களாகவும், பொறியாளர்களாகவும். அந்தப்பணம் கோழிக்கோட்டின் முகத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது.
மறுபக்கம் கோழிக்கோட்டிற்கு ஒரு கேரளத்தன்மையும் உண்டு. பழம்பொரி சூடாக புதிய தேங்காயெண்ணையில் பொரிக்கப்பட்டு கிடைக்கிறது. சைவ ஓட்டலின் சுவரில் அழகிய கேரளபாணி மியூரல் ஓவியங்களில் நடனமிடும் பிள்ளையார்.
இது ஓணக்காலம். எங்குபார்த்தாலும் பூக்களம் எனப்படும் மலர்முற்றங்கள். ஒருகாலத்தில் கேரளமே பூத்துக்குலுங்கும் பருவம் இது. சிறுவர்கள் குடலைகளுடன் பூக்களை கொய்ய அதிகாலையிலேயே கிளம்பிச் செல்வார்கள். பலவண்ண பூக்களை கொய்துவந்து மிகப்பெரிய பூக்கோலம் போடுவதில் ஊரெங்கும் போட்டி நிலவும். இப்போது மொத்த கேரளமும் ஒற்றை உயர்நடுத்தர குடியிருப்பு. பூ வளர இடமில்லை . கொய்ய நேரமும் இல்லை. ஆகவே தீபாவளிக்கு நம்மூரில் பட்டாஸ் கடைகளைப்போல எங்கு நோக்கினும் தற்காலிக மலர்க்கடைகள் மலர்களில் 90 சதவீதம் குமரிமாவட்டம், நெல்லை மாவட்டத்தில் இருந்து வருபவை. அங்கே வை மிகப்பெரிய அளவில் வேளாண்மை செய்யப்படுகின்றன. இருநூறாண்டுகளாகவே தோவாளை மலர்விவசாயம் புகழ்பெற்றது. ஆண்டெல்லாம் அறுவடை நிகழும் ஒரு பயிர் மலர்.
கோழிக்கோடு தளி கோயிலுக்கும் சென்றோம். சாமூதிரி ராஜா பழங்காலத்தில் வேத சதஸுகள் நடத்தியிருந்த இடம் அக்கோயில் பெரிய ஏரி. கோயில் சுவரில் நவீன ஓவியமாக சிவபெருமானின் தோற்றம்.
கோழிக்கோட்டில் ஓணக்காலத்தில் நான் வருவது இதுவே முதல் முறை. ஏகப்பட்ட அழகிகள். ஏகப்பட்ட செல்போன்கள். அழகிகள் செல்போன்களை நோக்கி போஸ் கொடுத்துக்கொடுத்துக் களைத்துப்போயிருந்தனர். மாலை வந்தேபாரத் விரைவுரயிலில் எர்ணாகுளம். அங்கே விமானநிலையம் அருகே விடுதியில் தங்கி 28 அதிகாலை விமானத்தில் கோலாப்பூர்.