ஈராறு கால்கொண்டெழும் புரவி மின்னூல் வாங்க
ஈராறு கால்கொண்டெழும் புரவி வாங்க
அன்புடைய ஜெ ,
நலம் விழைகிறேன்.
சமீபத்தில் “ஈராறு கால் கொண்டெழும் புரவி” படிக்கும் பொழுது, அதென்னது பன்னிரண்டு கால், மூன்று குதிரை? என்று தோன்றியது. தேடிய போது அது திருமூலரின் திருமந்திரத்தில் வரும் வரி என்று தெரிந்ததும், அட போச்சுடா.. என்று தோன்றியது. (ஏற்கனவே திருமந்திரத்தை நூலாக படிக்க சென்று உள்புக முடியாமல் மூடி வைத்தவன் நான்).
சாத்தான் குட்டிப்பிள்ளை ஜென்சியுடன் இருக்கையில் “குளம்படியோசை வெடிப்பெழ வெண்புரவி பின்வர செம்புரவி நடுவர கரும்புரவி பின்வர சென்று…” என்கிறது விவரணை. பிற்பாடு காடு நாவலில் வரும் குட்டப்பனின் வரிகள்: “ரத்தமுன்னு சொன்னா நம்ம சரீரத்தில ஓடிட்டிருக்க ஒரு நதியாகும் ஏமான். அதிலயாக்கும் நம்ம ஓர்மைகள் மீனு மாதிரி நீந்திட்டு கிடக்கியது. ஆயிரக்கணக்காட்டு மீனுண்டு பாத்துக்கிடுங்க. சிலது கருப்பு. சிலது சிவப்பு. சில மீனு நல்ல வெள்ளித்துட்டு மாதிரி. ஒரே ஒரு தங்க மீனு… அதாக்கும் நமக்க ஆத்மா.”
2023 ஈரோடு காவிய முகாமில் மணவாளன் நடத்திய கதகளி அமர்வில், நடிக்கும் வேடத்திற்கு ஏற்ப முகத்தில் நிறம் பூசிக் கொள்வது பற்றி அவர் கூறியது நினைவு வந்தது. கருப்பு – தாமசம், சிவப்பு – ரஜோ குணம், வெள்ளை – சத்வம். சட்டென்று தத்துவ தளத்தில் வேறொரு பொருள் தரத்தொடங்குகின்றன.
உங்கள் நாவல்களில் வரும் குட்டப்பன், ஞானமுத்தன், நாடார் போன்றவர்களின் குரலாக வரும் வரிகள் தத்துவ தளத்தில் நின்று ஆழமான பொருள் பொதிந்தவை. ஈராறு கால் கொண்டெழும் புரவி ஆன்மீக பயிற்சியில் இருக்கும் எவருக்கும் படிக்க வேண்டிய நூலாகி விட்டது .
தற்கால இலக்கியத்தில் ‘ஈராறு கால் கொண்டெழும் புரவி‘ ஆன்மீகத்தில் இருக்கும் ஆசாரம் மீதான மிகவும் காட்டமான விமர்சனம். பெரும் விசை கொண்ட, நடைமுறை ஆன்மீகத்தில் சத்தமின்றி வாழும் சாமானியர்களை காட்டி, நேரெதிராக பிள்ளைவாளின் அலைக்கழிப்புகளை முன்வைக்கிறது. நாடாரின் சொற்களில் “நமக்கு படிப்பில்லல்லா? எழுத்தறியா ஏடறியா சொல்லு. அதுக்கு இருக்க கல்லிலே பீடமுண்டு. எழுதின எழுத்துக்கு தண்ணியிலாயக்கும் பீடம்.”
(பி.கு : ‘ஆசாரவாதம் ஆன்மிகத்தின்மேல் படியும் களிம்பு‘ என்றும், செயலூக்கம் பற்றியும் தங்களின் இன்றைய கட்டுரையை படித்து விட்டு இதனை எழுத தோன்றியது) https://www.jeyamohan.in/187414/
நன்றி,
சபர்மதி கோகுல்
*
அன்புள்ள கோகுல்
இக்கடிதத்தை எழுத நீங்கள் தயாரானதே ஒரு இயல்பான அழகான விஷயம். உங்கள் மேல் எனக்கிருக்கும் பிரியம் நீங்கள் தொடர்ந்த பயணி என்பதனால்தான். நிர்வாகவியல் பயின்றவர். உணவகத்தொழில் செய்துள்ளீர்கள். கணினி நிபுணராக இன்று உயர்பதவி வகிக்கிறீர்கள். கூடவே அனுபவத்திற்காக ராணுவத்தில் கௌரவப்பணி ஆண்டில் சில மாதங்கள். காந்திய படைப்புகளுக்காக சபர்மதி இணையதளம் நடத்துகிறீர்கள். கிளம்பிச்செல்லும் மனநிலைம்கொண்டவர்கள், ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்பவர்களே மெய்யாகவே வாழ்பவர்கள்
ஜெ