அன்புள்ள ஜெயமோகன்,
சமீபத்தில் மத்தகம் எனும் இணையத் தொடர் பற்றிய விளம்பரத்தை பார்த்தவுடன் “மத்தகம்” எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தமாக இருக்கும் என தேட ஆரம்பித்த போது உங்கள் ‘மத்தகம்” எனும் குறுநாவல் கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்தால் இந்த கதையை முடிக்காமல் வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை. கேசவன் அப்படியே மனதில் ஒட்டிக் கொண்டான்.
சிறுவயதில் இருந்தே யானையை பார்க்க பிடித்தாலும் உங்கள் “யானை டாக்டர்” வாசித்த பின் யானை எங்களின் செல்லப்பிள்ளையாக மாறிப்போனது. காட்டு யானையை பார்ப்பதற்காகவே டாப்சிலிப்பும் தேக்கடியும் , மசினகுடியும் அடிக்கடி செல்ல ஆரம்பித்தோம். யானையை அவதானிப்பது என்பது மனதிற்கு அத்தனை இதமான ஒரு விஷயமாக உள்ளது.
கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் வழியில் தினம் ஒரு சிறுகதை எனப் படிப்பது என் வழக்கம். நாம் ஆசைப்படுவது நம் கண்ணில் அடிக்கடி படுமே அதுபோல உங்கள் யானை சம்பந்தப்பட்ட கதைகள் அடுத்தடுத்து எனக்கு வாசிக்க கிடைத்தது.
இப்போது மத்தகம் மற்றும் ஊமை செந்நாய் வாசித்த பின் உங்களிடம் என்னால் இந்த கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை. அதற்காகவே இக்கடிதம்.
ஒரு யானைப்பாகனாக சில வருடமாக யானை கூடவே வாழ்ந்தவர் போல உங்களின் ஆனையில்லா , துளி , பெருங்கை , மத்தகம் கதைகளில் யானையின் ஒவ்வோர் அசைவையும் அப்படியே காட்சிப்படுத்தியிருப்பது எனக்கு அவ்வளவு ஆச்சரியம். இதற்கு முன் இதைப் பற்றி ஏதும் பதில் அளித்திருக்கிறீர்களா எனத் தெரியவில்லை.
இருந்தாலும் நான் உங்களிடம் கேட்க விரும்புவது.
“யானையைப் பற்றி இவ்வளவு நுட்பமாக உங்களால் எப்படி எழுத முடிகிறது? “
“யானையைப் பற்றிய விசயங்களை படித்தா? பார்த்தா? கேட்டா? எப்படி தெரிந்து கொண்டீர்கள்“?
நீங்கள் ஆனையை அறிந்தது எப்படி?
பாபி முருகேசன்,
உத்தமபாளையம்.
அன்புள்ள பாபி
எழுத்தாளர்களுக்கு சில விஷயங்கள் அவர்களின் அந்தரங்கமான ஈடுபாட்டை சார்ந்தவையாக இருக்கும். இடங்கள், பொருட்கள், மனிதர்கள், காட்சிகள், சுவைகள் என அவை பலவகையானவை. அவை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என அவர்கள் சொல்வார்கள். ஏன் பிடிக்கும் என பெரும்பாலும் அவர்களால் சொல்ல முடியாது. இலக்கியத்தை புறவயமாக ஆராயும் எழுத்தாளர், கொஞ்சம் இலக்கிய விமர்சனமும் எழுதுபவர், மட்டுமே அதை கொஞ்சமேனும் வகுத்துச் சொல்லமுடியும்.
இவ்வாறான தனிப்பட்ட விருப்புகள் அந்த எழுத்தாளரின் மிக இளம் வயதில் இருந்தே உருவாகித் தொடர்பவை. அவை அவருடைய சூழலில் இருந்து கிடைப்பவை. அந்த எழுத்தாளரின் அடிப்படை இயல்பு சார்ந்தவை. இவை இரண்டும் சந்திக்கும் ஒரு புள்ளியில் அவை அவருடைய உள்ளத்தில் நுழைகின்றன. உதாரணமாக, நோயுற்றிருக்கும் ஒரு குழந்தைக்கு யானை அல்லது காளை போன்ற ஆற்றல் மிக்க விலங்கு மிகப்பெரிய ஒரு தாக்கத்தை அளிக்கக்கூடும். அஞ்சிக்கொண்டிருக்கும் குழந்தைக்கு பேருருவம் கொண்ட ஒரு ஆலமரம் ஆறுதலளிப்பதாக ஆகக்கூடும். தனிமையான குழந்தைகளுக்கு நாய் மிக அணுக்கமானதாக ஆகிவிடுகிறது.
நான் சிறுவயதில் நோயுற்றிருந்தேன். தொடர் வயிற்றுப்போக்கு. அப்போது தீராப்பசி கொண்ட யானை என் உள்ளத்துள் ஆழப்பதிந்திருக்கலாம். எங்களூரில் யானை மிக அதிகம். யானையை பார்க்காமல் ஒரு நாள் கடப்பது அரிது. இப்போதுகூட திருவரம்பு திற்பரப்பு பகுதிகளில் செல்பவர்கள் யானையை பார்க்காமலிருக்க வாய்ப்பில்லை. யானையை குளிப்பாட்டுவது, யானையுடன் பாகன் இருப்பது போன்ற பல ‘வைரல்’ படங்கள் எங்களூரில் எடுக்கப்பட்டவை. என் அகமும், சூழலில் நிறைந்திருந்த யானைகளும் இணைந்து என் உள்ளத்தில் யானை என்னும் சித்திரத்தை ஆழமாக பதியவைத்திருக்கலாம்
உண்மையில், அப்படி பதிவது ஒரு விலங்கு அல்ல. ஒரு புறவயமான பொருள் அல்ல. அது என்னுடைய கனவால், கற்பனையால் ‘அர்த்தப்படுத்தப்பட்ட’ யானை. gestalt என அதைச் சொல்வார்கள். யானை என்னும் விலங்கு, யானையைப்பற்றிய கதைகள், யானை பற்றிய சிற்பங்களும் ஓவியங்களும், யானை கதகளி உள்ளிட்ட கலைகளில் வரும் வடிவம் எல்லாம் என்னில் இணைந்து ஒட்டுமொத்தமாக ஒரு யானையை எனக்குள் உருவாக்கியிருக்கின்றன. அது என் யானை. அதை ஒரு private archetype என்று சொல்லலாம். அதை நான் ஒவ்வொரு கதையிலும் விரிவாக்கிக் கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு கதையிலும் அதன் வழியாக புதிய ஒன்றை கண்டடைந்து வெளிப்படுத்துகிறேன்.
அப்படிப்பார்த்தால் நான் யானையை ‘ஆவணப்படுத்தி’ ‘பதிவு’ செய்யவில்லை. என் கதைகளில் இருப்பது யானையின் ‘துல்லியமான’ பதிவு அல்ல. எனக்கு அவ்வகை புறவயத் துல்லியங்களில் நம்பிக்கை இல்லை. அப்படி புறவயமான துல்லியம் இலக்கியத்தில் இயல்புவாதம் என்னும் அழகியல் முறையில் மட்டுமே ஏற்கத்தக்கது. மற்ற அனைத்து அழகியலுமே அந்த புனைவுயானை வெளியே உள்ள நிஜயானையில் இருந்து எவ்வகையில் மேலும் நுட்பமும், மேலும் ஆழமும் கொண்டுள்ளது என்ற வினாவையே முன்வைக்கின்றன. நான் எழுதுவது என் கனவு யானையை.
உண்மை, அது துல்லியமாகவும் இருக்கும். ஏனென்றால் நான் யானைகளின் நிலத்தில், யானைகளுடன் இணைந்து பல்லாண்டுக்காலம் வாழ்ந்தவன். அதிலும் உள்ளம் திறந்திருக்கும் இளமைக்காலத்தில். எனக்கு யானைகளையும் யானைகளுக்கு என்னையும் நன்றாகத் தெரிந்திருந்த காலம் அது. அந்த யானைகள் எவையும் இன்றில்லை. அவை காலத்தில் மத்தகம் சாய்த்துவிட்டன. அவை என்னுடைய சொற்கள் வழியாக அழிவின்மை கொள்கின்றன.
மாபெரும் யானைப்பித்தராக இருந்தவர் என் அப்பா மறைந்த வயக்கவீட்டு பாகுலேயன் பிள்ளை. அவருக்கான என் அஞ்சலி என்றும் என் யானைக்கதைகளை எடுத்துக்கொள்ளலாம். என் கதைகளில் பிள்ளைவாளும் யானையும் சேர்ந்தே வரும்போதுதான் முழுமையான கொண்டாட்டம் அமைகிறது. நான் யானைடாக்டர் கே மேல் பெரும் பற்று கொண்டமைக்குக் காரணமும் அவரிடமிருந்த பிள்ளைவாளின் அம்சம்தான். இறந்தபின் என்னில் வளர ஆரம்பித்தவர் என் அப்பா.
நான் என்னை என் கனவுகளில் ஒரு துருதுருப்பான குட்டியானையாக அடிக்கடி காண்பதுண்டு. ஆனையில்லா தொகுப்பில் அந்த பெரிய யானையுடன் கொஞ்சிநிற்பது நான். அது அன்னையானை அல்ல. பிள்ளைவாள் இப்போது காட்டில் ஒரு யானையாக திரிகிறார் என்பதில் ஐயமில்லை.
தீராப்பசியுடன் காட்டில் வாழ்வதற்கு எவ்வளவு பெரிய நல்லூழ் வேண்டும்!
ஜெ