நீங்கள் சில தனிப்பட்ட ஆன்மிக பயணங்களாகச் சென்ற இடங்கள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறீர்கள். பேச்சிலும் சொல்லியிருக்கிறீர்கள். அவை பெரும்பாலும் இமையமலைப்பகுதியின் கோயில்கள், அஜ்மீர் தர்கா போன்ற இடங்கள், பௌத்த மடாலயங்கள். அத்துடன் ஏராளமான கேரள ஆலயங்கள். ஒருமுறைகூட ஒரு தமிழ்க்கோயிலைப் பற்றிக்கூட அவ்வண்ணம் சொன்னதில்லை. ஏன்?
செந்தில்
அன்புள்ள செந்தில்,
நான் சொல்வது என் தனிப்பட்ட் அனுபவங்களை மட்டுமே. இன்னொருவர் வேறுவகையில் உணரலாம். நான் இவற்றை பொதுவில் விவாதிக்க விரும்பவில்லை. விவாதிக்கவும் முடியாது. ஏனென்றால் இவற்றுக்கு எவ்வகையிலும் புறவயத்தர்க்கம் கிடையாது.
பொதுவாக இவற்றை ஆழ்மனம் சார்ந்த அனுபவங்கள் எனலாம். ஓர் இடம், அல்லது பொருள் நம் ஆழ்படிமங்களைத் தீண்டி எழுப்புவது என விளக்கலாம். அதற்குமேல்தான் அவ்வனுபவம், ஆனால் விளக்குவது அவ்வளவுதான் சாத்தியம்.
நான் செல்லுமிடங்கள் பலவகை. முதன்மையானவை நீண்ட வரலாறுள்ள இடங்கள். ஆன்மிகப்பெரியோர்களின் இடங்கள். அல்லது இயற்கை சார்ந்து முக்கியமான மையங்கள். இமையமலைக் கோயில்கள், அஜ்மீர், பௌத்தசமண மையங்கள் போன்ற இடங்களுக்கு அத்தகைய ஆழம் உண்டு. அவை இயல்பாக உருவாகி வந்த இடங்கள்.
உருவாக்கப்பட்ட இடங்களில் பொதுவாகக் கேரளத்திலுள்ள ஆலயங்கள் மட்டுமே என் ஆழத்தை தொடுகின்றன. கூடவே மேற்குக்கடற்கரை கர்நாடக ஆலயங்களும். தமிழக ஆலயங்களில் கலை சார்ந்து பெரும் அனுபவங்கள் எனக்குண்டு. ஆகவே மீண்டும் மீண்டும் அங்கே சென்றுகொண்டே இருக்கிறேன். ஆனால் இங்குள்ள ஆலயங்கள் மிகச் சில தவிர பெரும்பாலும் எனக்கு ஆன்மிகமான எதையும் அளிப்பதில்லை.
காரணம், இங்கே எந்தவகையான ஆகம முறைகளும் பேணப்படுவதில்லை. ஆலயங்கள் கண்டபடி இடித்து கட்டப்பட்டவை. கம்பிகள் கொட்டகைகள் கான்கிரீட் அறைகள். எந்தவகையிலும் ஆகம முறைப்படி ஒவ்வாத சலவைக்கல், தரையோடுகள் வேயப்பட்ட இடங்கள் உள்ளன. ஒவ்வாத வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன
இங்கே பூசகர்கள் மிக இயந்திரத்தனமாக, மிகமிக பொறுப்பின்றி செயல்படுகிறார்கள். கருவறைக்குள் நின்று கூப்பாடு போடுகிறார்கள். அத்தனை சிலைகளுக்கும் அழுக்குக் கந்தல் துணிகளைச் சுற்றி விட்டிருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத வேண்டுதல் முறைகளை புதியதாக உருவாக்கி பணம்பிடுங்குகிறார்கள். கருவறைக்குள் கொய்யாப்பழம், ஆப்பிள் பழம் படைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறேன்.
இங்குள்ள ஆலயங்களில் ஒரு நிமிட அமைதி கூட இல்லை. ஆலயம் என்பது அமைதிக்குரியது என எவருக்கும் தெரிவதில்லை. வழிபட வருபவர்களும் எந்த வழிபாட்டு நெறியையும் அறிந்து கொண்டிருப்பதில்லை, கடைப்பிடிப்பதுமில்லை. விஐபிகள் எல்லா நெறிகளையும் மீறி உள்ளே செல்கிறார்கள். கருவறைக்கு அருகே அமர்ந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் விஐபிகளின் குண்டிகளைத்தான் தரிசனம் செய்கிறார்கள். அப்படிச் செல்லும் விஐபிகள் பழி தேடிக்கொள்கிறார்கள் என அவர்கள் உணர்வதில்லை. எங்கு பார்த்தாலும் குப்பைகளை வீசுகிறார்கள். கூச்சலிடுகிறார்கள்.
ஆகம முறைப்படி வழிபாடு என்பது ஒரு சம்பிரதாயமல்ல என நான் இன்று நினைக்கிறேன். அது நீண்டகாலமாக திரட்டப்பட்ட உள்ளுணர்வுகளை குறியீட்டுச் சடங்குகளாக மாற்றிக்கொண்ட ஒரு முறை. அது மீறப்படும்போது கோயிலின் ஒட்டுமொத்தமான நுண்ணிய அமைப்பு அழிகிறது. அது வெறும் இடம்தான். தமிழகத்தில் மிக அதிகமாக சம்பிரதாயம் பேசப்படுகிறது. ஆனால் அப்படிப்பேசுபவர்கள் உட்பட எவராலும் எந்த தொல்நெறியும் எங்கும் கடைப்பிடிக்கப்படுவதில்லை – சாதிமேட்டிமை, சாதிக்கான முன்னுரிமைகள் தவிர.
ஆகவே தமிழக ஆலயங்கள் எனக்கு வெறும் இடங்களாகவே இன்றுவரை நீடிக்கின்றன. கேரளத்தின் புகழ்பெற்ற, பெருங்கூட்டம் வரும் ஆலயங்களில் கூட முறைமைகள் ஆலயத்தினராலும் வழிபடுபவர்களாலும் மீறப்படுவதில்லை. அங்குள்ள ஆழ்நிலையனுபவம் இங்கு அமைவதில்லை. அதை ‘ஆழ்குறியீட்டமைவு சிதறுதல்’ என நான் அறிவியல் விளக்கம் அளிப்பேன்.
ஆனால் இது பக்திக்கு தடையானது அல்ல. ஆழ்ந்த பக்தி கொண்ட ஒருவருக்கு எதையும் நெகிழ்வுடன் அணுகவும் ஆழ்ந்த அனுபவம் பெறவும் முடியும். தன் இல்லத்திலுள்ள காலண்டர் படங்களைக்கூட தெய்வமாக்க முடியும். முச்சந்தியில் நின்றுகூட மெய்மறந்து வணங்கவும் முடியும். அது வேறு. நான் சொல்வது முற்றிலும் வேறொன்று.
இதைச்சொன்னதும் பலருக்கு பிராந்தியவாதச் சீற்றம் அல்லது சாதியவாதச் சீற்றம் தோன்றுமென எனக்குத் தெரியும். சிலருக்கு அவருடைய தனிப்பட்ட அனுபவங்களும் வேறாக இருக்கலாம். ஆனால் நான் சொல்வதென்ன என்பது நான் சொல்லும் தளங்களுக்குச் சென்றவர்களுக்குப் புரியும்
ஜெ