அன்புள்ள ஜெவுக்கு,
உண்மையில் நீங்கள் அறிவிக்கும் வகுப்புகள் அனைத்திலும் பங்கு கொள்ளவே பெரிதும் விரும்புகிறேன். ஆனால் என் இரண்டு வயது மகனை யாரிடமும் விட்டு செல்ல முடியாத நிலை.
தியான வகுப்பு, உளக் குவிதல் வகுப்பு, ஆலய பயிற்சி வகுப்பு, இந்திய தத்துவ சிந்தனை வகுப்பு, மேலை நாட்டு இசை வகுப்பு என எல்லாவற்றிலும் நான் கற்க நிறைய இருக்கிறது. உண்மையில் இவை எதைப் பற்றியும் எனக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என்பதால் அத்தனை ஆசையாக இருக்கிறது.
ஆதித்யாவிற்கு கொஞ்சம் விபரம் வந்ததும் நான் செய்ய போகும் முதல் காரியம் இந்த வகுப்புகளில் கலந்து கொள்வதே. ஆனால் அப்போது இவை எனக்கு கிடைக்குமா என்னும் பயம் இருக்கிறது. இன்று கிடைக்கும் வாய்ப்புகளை தவற விடுவதாகவே ஒவ்வொரு வகுப்பு அறிவிப்பிலும் நினைக்கிறேன்.
இப்படிக்கு,
சரண்யா
*
அன்புள்ள சரண்யா
இவற்றை தொடர்ச்சியாக ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்காவது நானும், எனக்குப்பின்னரும் நடத்தவே உத்தேசம். நிகழுமென நம்புகிறேன்.
ஆனால் வாழ்க்கையில் பெரும்பாலும் அவ்வண்ணம் ஒத்திப்போடப்பட்டவற்றை நாம் அடையும் மறு வாய்ப்பு அமைவதில்லை. ஏனென்றால் வரவிருக்கும் காலம் எப்போதும் முற்றிலும் புதிய ஒன்று.
உங்கள் சிக்கல் புரிகிறது. என்றும் பெண்களுக்கு இருக்கும் சிக்கல் இது. பொறுப்பு என்பதைவிட இது சூழல் உருவாக்கும் கட்டாயம். அதற்கு பெண்கள் ஏதேனும் வழியைக் கண்டடைந்தேயாகவேண்டும்
(ஆனால் நானும் அருண்மொழியும் அஜிக்கு 6 மாதமிருக்கையிலேயே எல்லா இலக்கிய நிகழ்வுகளிலும் பங்குகொண்டோம். பயணங்கள் சென்றோம். பல இலக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்களில் அஜிதன் இருக்கிறான். அனேகமாக கருவிலிருக்கையிலேயே இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒரே தமிழ் இலக்கியவாதி அவன் என நினைக்கிறேன்)
ஜெ