இன்று சென்னை,நாளை கோழிக்கோடு, பின்னர் செதுக்கோவியங்கள்.

இன்றொருநாள் சென்னை. ஒரே நாளுக்காக சென்னை வருகிறேன். நாகர்கோயிலில் இருந்து கிளம்பி சென்னை வந்து நண்பர் ஷாஜியின் மகள் கீதி சலீலாவின் பதினெட்டாவது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்கிறேன். கீதி என் நெஞ்சுக்கு அணுக்கமான குழந்தை. எண்ணும்போதெல்லாம் ஒரு உளச்சுமையும் வருமென்றாலும்.

கீதி இனியவள், இவ்வுலகின் இனிமையையும் அன்னை தந்தை என அமைந்தவர்களின் பேரன்பையும் மட்டுமே அறிந்து வாழும் நல்லூழ் கொண்டவள். இந்நாள் எனக்கு மிக இனிய ஒரு நாள் அவ்வகையில்.

விந்தையான இணைவொன்று உண்டு என் உள்ளத்தில். கீதிக்கு ஷாஜி அவருடைய மனம் கவர்ந்த ஆசான் சலீல் சௌதுரி பெயரை போட்டிருக்கிறார். அதனால்தானோ என்னவோ எனக்கு கீதி நினைவுடன் ‘கிலும் கிலுகிலும்’ என்னும் சலீல் சௌதுரி பாடலும் இணைந்துள்ளது. நேற்றும் முந்திய நாளும் அப்பாடலை பல முறை கேட்டேன்.  ‘இக்கரிமலைக்கு குந்தியாறு ஒரு குளிர் அரைநாண்’ என்னும் வரியை கடக்கமுடியவில்லை.

முன்னரே ஒப்புக்கொண்டிருந்த இலக்கிய நிகழ்வு நாளை. கோழிக்கோட்டில் மாத்ருபூமி இணையாசிரியர் விஸ்வநாதன் எழுதிய முதல் நாவலின் வெளியீட்டுவிழா. அதிகாலையில் கிளம்பி கோழிக்கோடு செல்கிறேன். அங்கே ஒருநாள். பொதுவாக மலையாள உரை என்றாலே மூச்சுத்திணறுகிறது. சமாளிக்கவேண்டியதுதான்.

அடுத்தநாளே கிளம்பி எர்ணாகுளம் வழியாக விமானத்தில் கோலாப்பூர். ஆங்கே நண்பர்கள் இணைகிறோம். தொல்பழங்கால கல்செதுக்கோவியங்களைக் காண மகாராஷ்டிர மாநிலம் வழியாக ஒரு பயணம்.

முந்தைய கட்டுரைபணம், கல்வி, இலட்சியவாதம்
அடுத்த கட்டுரைஅஜிதனின் ‘அல் கிஸா’ – வாசு முருகவேல்