ஓர் இடம், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

குரு பூர்ணிமா-வெண்முரசு நாளை முன்னிட்டு மலைத்ங்குமிடத்தில் கூடியிருந்த நாட்கள் தொடர்ந்து நினைவுகளில் உடன்வந்தபடி உள்ளன.

குரு பூர்ணிமாவுக்கு ஒரு வாரம் முன்னதாகவே குருஜி சௌந்தர் அவர்கள் நடத்திய யோகமுகாமில் பங்கெடுக்க வந்திருந்தேன். அந்த மூன்று நாட்களும் உயிரோட்டமானவை. முகாம் முடிந்து காரில் மெயின் கேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில்  எதேச்சையாக  வலது பக்கமாகத் திரும்பிப் பார்த்தபோது ஆழ்ந்துறங்கும் மலைகளைப்  பின்னணியாகக் கொண்டு, குவிந்த கூரைகளுடன் குரு நித்யா மீட்டிங் ஹால் நின்றிருந்தது. ஏதோ ஒரு உணர்வு மேலெழ கைகளைக் குவித்து வணங்கிக் கொண்டேன். இது ஒரு தொடக்கம் என நினைத்துக் கொண்டேன்.

சரியாக ஒரு வாரம் கழித்து பேருந்தில் வந்து இறங்கி, ஓடியும் நடந்தும் குரு நித்தியா அரங்கத்தை அடைந்தபோது நீங்கள் அங்கே உரையாற்றத் தொடங்கியிருந்தீர்கள். அக்கணத்திலிருந்து மூன்று நாட்கள் உங்கள் அருகாமையில் இருந்தபடி உங்கள் சொற்களையும் ஆளுமையையும் பின்தொடர்ந்து உள்ளூர ஒரு பயணத்தில் இருந்தேன். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் உங்களிடம் சில கேள்விகள் கேட்டேன். கேள்விகளின் தீவிரத்தைவிட, சொற்களால் உங்களை நோக்கி வந்துகொண்டே இருக்கவேண்டும் என்ற விழைவுதான் என்னை உந்திக்கொண்டிருந்தது. உங்கள் பதில்கள் முதலில் வியக்க வைத்தன. பின்னர் விரிவான ஒரு சிந்தனையை முடுக்கிவிட்டன. நான் கேள்வி கேட்டபோதும் கேட்காதபோதும் எனது முகத்தைப் பார்த்து நீங்கள் பேசிய கணங்கள் அனைத்தும் எனது பொற்கணங்கள்.

மற்ற நண்பர்கள் ஆற்றிய உரைகள் அனைத்துமே வெவ்வேறு ஆழங்களைச் சென்று தொடுபவையாக இருந்தன. குறிப்பாக ஸ்ரீனிவாஸின் உரையும் அஜிதனின் உரையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எனக்குள் ஒரு மலையருவியின் உற்சாகத்தைத் தூண்டி எழச்செய்தது, குரு நித்தியாவைப் பற்றி ஆனந்த் குமார் அவர்கள் ஆற்றிய உரைதான். எல்லா உரைகளையும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்கிறேன்.

என்னை மேலும் உற்சாகம் கொள்ளச்செய்த மற்றொரு விஷயம் சக வாசகர்களோடு நிகழ்ந்த உரையாடல்கள்தான். எல்லோருமே இலக்கியம் என்னும் பெருநிகழ்வுக்குத் தங்களை எதோ ஒரு வகையில் அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அதன் பலனாக மகிழ்ச்சியையும் நிறைவையும் அடைந்தவர்கள். ஒவ்வொரு உரையாடலிலும் அந்த நிறைவையே அவர்கள் எனக்குப் பகிர்ந்தளித்தார்கள். யோகா முகாமின்போது உற்சாகமான நான்கு நண்பர்கள் அமைந்தார்கள். ரமேஷ் சிறைக்காவலராகப் பணிபுரிபவர். ஒரு சுழற்காற்று போல அவர் என்னை உங்களுடைய படைப்புலகத்திற்குள் கொண்டுசென்றார். ஒரு நாள் நள்ளிரவு வரை வெண்முரசின் கதைகளை அவர் சொல்ல நாங்கள் செவிகளில் உள்ளம் குவித்துக் கேட்டுக் கொண்டிருந்தோம். உங்கள் மொழி அவரிடம் எப்படியெல்லாம் படிந்திருந்தது என்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். நண்பர் கோபிநாதன், தீவிர வெண்முரசு வாசகியான அவருடைய துணைவியார் அளித்த ஊக்கத்தில் யோக வகுப்பில் கலந்துகொள்ள வந்திருந்தார். ஒரு புது வாசகரின் குதூகலமும் ஆச்சரியமும் அவரிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன. நண்பர் சக்திராஜ் சூழல் விதித்த எல்லா தடைகளையும் மீறி பயிற்சிக்காக வந்திருந்தார். அவரிடமிருந்த களங்கமின்மை ஒரு இனிய பரிசு. அடுத்ததாக உங்களுடைய நண்பரான ஹோமியோபதி மருத்துவர் கோவிந்தராஜன் எங்களுடன் இருந்தார். டாக்டரிடமிருந்த இளமை எங்களையும் துள்ளல் கொள்ளச்செய்தது. அவர் உங்களுடன் பழகிய நாட்கள், குரு நித்யாவைச் சந்தித்த தருணங்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொன்னபோது மெய் சிலிர்த்தது. நாங்கள் எல்லோரும் ஒரே குடிலில் தங்கினோம். தீவிர உரையாடல்களுடனும் வெடிச் சிரிப்புகளுடனும் நிகழ்ந்த இனிய தருணங்கள் அவை.

குரு பூர்ணிமா நாட்களின்போதும் பலப்பல நண்பர்கள். எழுத்தாளர் கா சிவா அவர்களை அந்தியூர் பேருந்து நிலையத்திலேயே சந்தித்து அறிமுகம் செய்துகொண்டேன். நண்பர் பரணி ஒரு உற்ற துணையாக உடனிருந்தார். உங்களுடைய சிறுகதைகள் பலவற்றை நண்பர் பரணி பல சந்தர்ப்பங்களில் கூற, நான் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தேன். இயக்குனர் மருது அவர்களுடன் சேர்ந்து தங்கியதும் பயணித்ததும் நல்ல அனுபவங்கள். நண்பர்கள் ஸ்ரீனிவாஸ், நித்தியானந்த் ஜெயராம், அழகிய மணவாளன் ஆகியோரிடம் உற்சாகமான ஒரு அறிமுகமும் உரையாடலும் நிகழ்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த மனிதர்களின் மூலமாக நான் இதுவரை இருந்ததிலிருந்து முற்றிலும் புதிய வேறொரு உலகிற்குள் நுழைந்துவிட்டதாக உணர்ந்தேன். அதற்குக் காரணமுண்டு.

நான் இலக்கியத் துறையில் ஆய்வு மாணவன். கான்பூர் ஐஐடி- ல் humanities துறையில் தமிழிலக்கியம் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். ஆங்கில இலக்கியத்தில் எனது மேற்படிப்பு முழுவதும் இந்தியாவிலுள்ள குறிப்பிடத்தக்க சில கல்விசாலைகளில் நிகழ்ந்தது. இலக்கியம் என்ற பெயரில் இந்தக் கல்விசாலைகளில் நிகழ்ந்து வருவது என்ன என்பதைக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். இங்கே இலக்கியம் ஒரு தொழிற்கடமை அல்லது சுமை மட்டுமே. அத்தொழிலின் முக்கிய மையம் என்பது கோட்பாடுகள்தான். கோட்பாடுகளுக்கு இணங்குவதே இலக்கியத்தின் கடமை என்றாகியிருக்கும் ஒரு நிலை. இதன் அப்பட்டமான விளைவு என்பது இங்கே எல்லோருக்குள்ளும் நிரம்பியிருக்கும் மகிழ்ச்சியின்மையும் நிறைவின்மையும்தான். இத்தனை நிதி அளிக்கப்பட்டபின்பும் இத்தனை பொருளாதார வசதிகள் செய்துதரப்பட்ட பின்பும் ஒருவர்கூட இங்கே மகிழ்ச்சியாக இல்லை. பேராசிரியர்களைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், மாணவர்கள் பலியாடுகள் என்றே தோன்றுகிறது. நாள் முழுக்க இலக்கியம் இலக்கியம் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் வாழ்வதற்கான ஒளியை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. பேரூக்கம் தரும் கனவுகள் அவர்களில் எழுவதில்லை. கசப்பையே முகங்களாகக் கொண்டு தெருவெல்லாம் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கசப்பையே கோட்பாடுகளின்மேல் போட்டு, அந்தக் கோட்பாடுகளை மேலும் இலக்கியத்தின்மேல் போட்டு ஒரு சுழலில் சிக்கியதுபோல் அலைவுறுகிறார்கள். ஆனால் கெட்டியான அகங்காரம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றிக்கொண்ட கோட்பாடு அவர்களின் தெய்வம் என்பதுபோல.

இவற்றையே பார்த்து நம்பிக்கை இழந்திருந்த எனக்கு விஷ்ணுபுர வாசகர்கள் ஒரு மாற்றுலகைக் காட்டினார்கள். அத்தனை அலைக்கழிப்புகளுக்கும் கொந்தளிப்புகளுக்கும் அடியில் இலக்கியம் நம்மில் இருத்திச்செல்வது ஒரு அமைதியையும் நிறைவையும்தான் என்று கண்டுகொண்டேன். நிறைவும் செயலூக்கமும் கொண்ட மனிதர்கள். வாழ்க்கையின் உயர்ந்த அம்சங்களின்மீது பெருங்காதல் கொண்டவர்கள். இதுவல்லவா இலக்கியம் செய்ய வேண்டியது! இதைவிட்டுவிட்டு எங்கே எந்தச் சுழலில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்?

இந்த வேறுபாட்டை நான் மிகத் தெளிவாக உணர்ந்தது, சென்னையில் உங்கள் நண்பரும் இலக்கிய விமர்சகருமான ஜா ராஜகோபாலன் அவர்களுடைய வீட்டில். எனது ஆய்வு பற்றி உரையாடுவதற்காக அவரிடம் நேரம் வாங்கிக்கொண்டு அவரது வீட்டில் சென்று சந்தித்தேன். பல திறப்புகளையும் உடைவுகளையும் என்னில் நிகழ்த்திய உரையாடல். மரபு என்னும் தொடர்நிகழ்வை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், அதை இலக்கியத்தில் எப்படி கண்டுகொள்ள வேண்டும் என்பதையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். தமிழில் கல்விப்புலங்கள் விதித்த அத்தனை தடைகளையும் இடைஞ்சல்களையும் தாண்டி ஆக்க இலக்கியம் தன் திசையில் எப்படி மேலெழுந்து வந்திருக்கிறது என்பதை அவர் அளித்த வராற்றுச் சித்திரத்திலிருந்து கண்டுகொண்டேன். ஐந்து மணிக்குத் தொடங்கிய உரையாடல் இரவு பத்தரைக்குத்தான் முடிந்தது. அதன்பின்பு எனக்கு உணவளித்து இரயில் நிலையம் வரை கொண்டுவந்து விட்ட ஜா ராஜகோபாலன் அவர்களின் அன்பு இன்றும் நெகிழச் செய்கிறது. அவருடைய சொற்களிலும் உணர்ச்சியிலும் நான் கண்டுகொண்டது இலக்கியம் என்பது எத்தனை தீவிரமான ஒரு இலட்சிய நிகழ்வு என்பதைத்தான். தமிழிலக்கியத்தை உருவாக்கிய மேதைகள் இங்கே எத்தனை மகத்தான ஒரு பணியை ஆற்றிச் சென்றிருக்கிறார்கள் என்பதைத்தான்.

இப்போது கான்பூருக்குத் திரும்பிவந்து சில நாட்களாகின்றன. இங்கே எவற்றிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்று தெளிவாகவே காண்கிறேன். குறையாத ஒளியாக தமிழின் முன்னோடி இலக்கிய ஆசிரியர்கள் முன்னே சென்று வழிகாட்டுகிறார்கள். வெண்முரசையும் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். அனைத்திற்கும் அப்பால் என் வாழ்வில் அது தனக்கான இடத்தில் வந்து அமர்ந்துவிட்டது.

எனது ஆய்வு தமிழ் நாவல்களின் அழகியல் பற்றித்தான். நாவல் என்கிற உலகளாவிய இலக்கிய வடிவம் தமிழில் நிகழ்ந்தபோது அதன் அழகியல் எவ்வாறெல்லாம் உருவாகி வளர்ந்தது என்ற கேள்வியிலிருந்து துவங்குகிறேன். இந்த ஆய்வு ஆங்கிலத்தில்தான் எழுதப்படும். ஆங்கில இலக்கிய ஆய்வுத்துறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் விழுமியங்களுடனும் கோட்பாடுகளுடனும் நான் உரையாட வேண்டியிருக்கும். ஆனால், இந்த ஆய்வு தமிழில் கா.நா.சு முதல் நீங்கள்வரை உருவாக்கி வளர்த்து வந்திருக்கும் அழகியல் விமர்சன மரபிலேயே வந்து காலூன்ற வேண்டும் என்பதே எனது விருப்பமும் தேடலும். பின்நவீனத்துவமும் posthumanism- ம் பேசப்படும் அரங்கில் கொஞ்சம் காலத்தையும் இடத்தையும் பெற்றுக்கொண்டு “இதோ தமிழில் ஒரு மாபெரும் இலக்கிய நிகழ்வு நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று காட்டிவிட்டு வந்துவிடமேண்டுமென்று அவா கொள்கிறேன். எனது மேற்பார்வையாளரின் முழு ஒத்துழைப்பு இதற்கு இருப்பதால் நம்பிக்கை கொள்கிறேன்.

உங்கள் எழுத்துக்கள் வாழ்க்கையில் எப்போதும் உடனிருந்திருக்கின்றன. அதற்கு அப்பால், இலக்கியத்தை ஒரு சமூக நிகழ்வாகவும் இயக்கமாகவும் ஆக்கிக்காட்டி, அதில் பங்குபெற எனக்கும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் வாசகர்களுக்கென்று நீங்கள் அளித்த அனைத்துடனும் நான் என்றும் உடனிருக்கவேண்டுமென்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். என்னை இப்போது பதற்றத்தால் நிறைத்துக்கொண்டிருக்கும் கனவுகள் செயல்வடிவுற்று முழுமைபெற உங்கள் ஆசியை வேண்டி நிற்கிறேன். ஆசிரியருக்கு நன்றி.

அன்புடன்,

ஆல்ஸ்டன்.

முந்தைய கட்டுரைகிலும் கிலுகிலும்
அடுத்த கட்டுரைஎழுத்தாளன் இதழ்