சென்னை

அன்புள்ள ஜெ

சென்னை நகரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. சென்னை நகர் பற்றி உங்கள் மனப்பதிவு என்ன என்று எழுதுவீர்கள் என நினைத்தேன். சென்னையுடன் உங்களுக்கு நீண்டகாலத் தொடர்பு உண்டு என்று தெரியும். ஆகவே இந்தக்கேள்வி.

முரளிதர்

*

அன்புள்ள முரளிதர்,

ஓர் ஊருடன் நீண்டகால தொடர்பு இருக்குமென்றால் நமக்கு ஏராளமான நினைவுகளும் உருவாகியிருக்கும். நினைவேக்கத்துடன் அந்த ஊரை  எண்ணிக்கொள்வோம். அந்த ஊர் இனிது என தோன்றவும் செய்யும்.

நான் அந்த உணர்வுகள் உள்ளவனே. ஆனால் கூடுமானவரை புறவயமாகப் பார்க்கவேண்டும் என எனக்கே நான் ஆணையிட்டுக் கொள்வதுண்டு. அவ்வகையிலேயே பார்க்கிறேன்.

சென்னைக்கு நான் 1979ல் என் அலைச்சல் நாட்களில் வந்தேன் – பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கையில். பெரம்பூர் அன்று அச்சகங்களின் இடம். அங்கே வாழ்ந்தேன். அந்த அனுபவங்களை புறப்பாடு நாவலில் எழுதியுள்ளேன். அன்றைய முகங்கள் பல நினைவிலாடுகின்றன.

அதன்பின் பல முறை பல விஷயங்களுக்காகச் சென்னை வந்துள்ளேன். நண்பர் செந்தூரம் ஜெகதீஷின் வீடு ஒரு காலத்தில் என் சென்னை தங்குமிடம். பின்னர் நீண்டநாள் திருவல்லிக்கேணியில் ராஜமார்த்தாண்டன் அண்ணாச்சியின் நாகராஜ் மேன்ஷன் அறை. பின்னர் தமிழினி வசந்தகுமாரின் ராயப்பேட்டை இல்லம். அதன்பின் சினிமாவில் நுழைந்து தொடர்ச்சியாக விடுதிகளில் தங்க ஆரம்பித்தேன்.

தொடக்கலால விடுதி பிரதாப் பிளாஸா மற்றும் விஜய் பார்க். பின்னர் கிரீன் பார்க்.  எனக்கு சொந்தவீடென்றே ஆன, சொந்த வீட்டை விட மாதத்தில் அதிகநாட்கள் தங்குகிற விடுதிகள் பல உள்ளன. ஒருமாதக் காலம்கூட ஒரே நட்சத்திர விடுதி அறையில், ஒருமுறைகூட வெளியே வராமல் தங்கியிருந்ததுண்டு.

என் பிரியத்துக்குரிய பலர் சென்னையின் அடையாளங்களாகவே திகழ்ந்திருக்கிறார்கள். உதாரணமாக, ஜெயகாந்தன் இன்னொருவர் அசோகமித்திரன். இருவரும் சென்னையின் இரண்டு உலகங்களை எழுதிக்காட்டியவர்கள். சென்னையில் பிரியமான இதழலுவலகங்கள் இருந்தன. தீபம் அலுவலகம், கணையாழி அலுவலகம். கணையாழி அலுவலகம் இருந்த பெல்ஸ் சாலையில் இருந்து மிக அருகே கடற்கரை

பிரியத்துக்குரிய நண்பர்கள் பலர் சென்னையைச் சேர்ந்தவர்கள். உதாரணம், அன்பு. இன்று எனக்கு சென்னையில் ஓர் அமைப்பு போலவே நண்பர்குழாம் உண்டு. சென்னையில் ஆண்டுதோறும் இலக்கியநிகழ்வுகளை நடத்துகிறோம். சென்னையில் நான் செல்லும்போதெல்லாம் விடுதியறைக்கு நண்பர்கள் வருகிறார்கள். அறைக்குள் இலக்கியக்கூட்டமே நிகழும்.

சென்னையின் அருங்காட்சியகம், நூலகம் ஆகியவற்றில் நான் மாதக்கணக்கில் வாழ்ந்துள்ளேன். சென்னையின் வரலாற்று அடையாளங்களை தேடி அலைந்து திரிந்து பார்த்திருக்கிறேன். சென்னையின் கொண்டாட்டமான இசைவிழா ஆற்றூர் ரவி வர்மாவுக்கு பிடித்தமானது. அவருடன் சென்றுள்ளேன். சென்னை புத்தகக் கண்காட்சி சென்னை உட்லாண்ட் டிரைவின் ஓட்டலில் நிகழ்கையிலேயே தெரியும்

1994 ல் நாஞ்சில்நாடனுக்கு சென்னையில் நான் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ் துணையுடன் கூட்டிய இலக்கியக் கூட்டமே அவருக்காக முதலில் நிகழ்ந்த இலக்கியக்கூட்டம் என்று அவர் சொல்வதுண்டு. ரப்பர் நாவலுக்கு 1990 ல் சென்னையில் நிகழ்ந்த வெளியீட்டுவிழா மற்றும் அகிலன் நினைவுப்பரிசளிப்பு விழா எனக்கான முதல் இலக்கியக் கூட்டம். விஷ்ணுபுரம் நாவலுக்கு செந்தூரம் ஜெகதீஷ் நடத்திய வெளியீட்டுவிழா 1997 தேவநேயப்பாவாணர் அரங்கில் நிகழ்ந்தது. அப்படி பல விழாக்கள்.

நினைவுகள் தொட்டுத் தொட்டு வந்தபடியே உள்ளன. இனிய நினைவுகள் மட்டுமே. சென்னையைச் சார்ந்து கசப்பான நினைவு என ஏதுமில்லை. கொஞ்சம் வருத்தமான நினைவென்பது கஸ்தூரிமான் படம். அதன் தோல்வி லோகிததாஸின் வாழ்க்கையை துன்பமயமாக்கியது. ஆனால் அதுவும் இந்த ஆட்டத்தின் ஒரு பகுதியே. அந்தப்படம் உருவான நாட்கள் எனக்கு மகிழ்வானவை.

இதற்கு அப்பால் சென்னை ஒரு நகரமாக எனக்கு எப்படி உள்ளது? இன்று எனக்கு அதனிடம் அணுக்கமில்லை. அதில் எனக்குப் பிடித்த ஒரு சிறு இடத்தை தெரிவுசெய்துகொண்டிருக்கிறேன். அது சில விடுதி அறைகள் மட்டுமே. நான் வெளியே செல்ல, எதையும் பார்க்க விரும்புவதே இல்லை.

இன்று நான் காணும் சென்னை என்பது என் விடுதியறையின் கண்ணாடிச்சன்னல் வழியாக தெரியும் நகர்க்காட்சி மட்டுமே. ரயிலில் விடியற்காலையில் வந்திறங்கி காரில் விடுதிக்கு வந்தால் காரிலேயே பயணம் செய்வேன். பெரும்பாலும் ஓரிரு கிலோமீட்டர் அணுக்கத்தில் இருக்கும் திரையலுவலகங்களுக்கு. வேறெங்கும் செல்வதில்லை. அதிலும் காரிலேறினால் செல்போனில் தவறிய மின்குறிப்புகளுக்கு பதிலளிப்பதே என் வழக்கம். வெளியே பார்ப்பதே இல்லை

இன்றைய சென்னையை எனக்குத் தெரியாதென்பதே உண்மை. இன்றைய சென்னையில் பெரும்பகுதி நான் செல்லாத இடங்கள். சென்னையின் நிலவரைபடமே என் உள்ளத்தில் இல்லை. சென்னையில் நான் எங்கிருக்கிறேன் என்றே என்னால் சொல்லமுடியாது. சென்னையின் வாழ்க்கையும் எனக்குத் தெரியாது.

ஏனென்றால் சென்னை என்பது ஒரு நகரமே அல்ல. ஒரு பிரம்மாண்டமான கூட்டுக் குடியிருப்புப் பகுதி. சரியாகச் சொன்னால் சென்னை ஒரு மாபெரும் மானுடக் குப்பைக்கூடை.  நகரம் என்பது அது அல்ல. ஒரு நகரம் என்பது சற்றேனும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதும், சற்றேனும் அந்த அமைப்பு பேணப்படுவதுமான ஒரு வகைச் சிற்பம்.

நகரமைப்பு பற்றிய நம் பழைய நூல்களெல்லாம் அதை ஒரு சிற்பமாகவே குறிப்பிடுகின்றன. வாஸ்து என்பது முதன்மையாக ஆலயங்களுக்கும் நகரங்களுக்குமே உரியது. வாஸ்துப்படி அமையாத கோயில்களில் வணங்கவோ நகரங்களில் வசிக்கவோ கூடாது. தனிப்பட்ட இல்லங்கள் நகரத்தின் வாஸ்து அமைப்புக்குள் ஒத்திசைந்து இருக்கவேண்டுமே ஒழிய அவற்றுக்கு என தனி வாஸ்து கிடையாது. ஆனால் நாம் ஆலயங்களை வாஸ்து பார்க்காமல் மாற்றிக்கட்டுவோம். நகரங்களை குப்பமலை போல ஆக்குவோம். வீடுகளுக்கு வாஸ்து பார்த்துக்கொண்டே இருப்போம்.

ஒரு நகரம் எனும்போதே அதன் அமைப்பு ஒன்று நினைவிலெழ வேண்டும். அந்த அமைப்பின் தனித்தன்மையும் உள்ளத்தில் தோன்றவேண்டும்.  அப்படி ஓர் அமைப்போ தனித்தன்மையோ இந்தியாவின் எந்தப் பெருநகருக்கும் இல்லை. எல்லாமே தான்தோன்றிகளாக உருவாகி தறிகெட்டு வளர்ந்தவை. சிலநகர்களில் சில பகுதிகள் அழகானவை. பெங்களூரில் ஒரு காலகட்டத்தில் இரண்டு பூங்காக்களும் ஜெயநகர் பகுதிச் சாலைகளும் அழகனாவை.டெல்லியில் சாணக்யபுரி கம்பீரமானது. மும்பையில் கடலோரத்தில் சில இடங்கள் ஒருவகைச் சிற்றூர்த்தன்மை கொண்டவை.

ஆனால் இந்தியாவில் மொத்தமாக சற்றேனும் அழகான நகரம் எனச் சொல்லவேண்டும் என்றால் மைசூர் மட்டுமே. ஆனால் மைய மைசூர் தவிர எஞ்சிய புறநகர் பகுதிகள் பெங்களூரைவிட மோசமாகிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் மிகமிக மோசமான ஊர்கள் சுற்றுலா மையங்களான சிம்லா, டார்ஜிலிங், ஊட்டி போன்றவை. குன்றையே கட்டிடங்களாக ஆக்கி சாக்கடையும் குப்பையுமாக நிறைத்துவைத்திருக்கும் இடங்கள் அவை.

இந்தியாவில் எல்லா நகரங்களுமே ‘நாதனற்றவை’. அவற்றைப் பற்றி அக்கறைகொள்ள, பராமரிக்க எந்த அமைப்பும் இல்லை. எந்த நிர்வாகக் கொள்கையும் இல்லை. இந்திய நிர்வாகத்தின் மிகப்பெரிய சிக்கல் இந்தியர்களின்  திறனின்மைதான் என்று அறியவேண்டுமென்றால் இந்திய நகரங்களைப் பார்த்தால் தெரியும். ஒரு துறைக்கும் இன்னொரு துறைக்கும் தொடர்பே இருப்பதில்லை. ஒரு துறை அமைத்ததை மறுநாளே இன்னொரு துறை இடிக்கும்.

இது ஏன் என நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். எந்த துறைக்கும் ஒரு கடிதமெழுதி உடனே பதில் பெற்றுவிட முடியாது. நெடுஞ்சாலைத் துறைக்கு நீங்கள் அடுத்தபடியாக எப்போது சாலைபோடுவீர்கள், அதற்கு முன்பாக கேபிளுக்கு தோண்டுகிறோம் என ஒரு கடிதத்தை அனுப்பிய ஓரு பி.எஸ்.என்.எல்  அதிகாரிக்கு மேலதிக விளக்கம் கேட்டு ஒரு பதில் கடிதம் வந்தது- ஒன்றரை ஆண்டுக்குப்பின். அந்த சாலை போடப்பட்டு அடுத்தவாரமே அதை பி.எஸ்.என்.எல் காண்டிராக்டர்கள் குதறிப்போட்டு அதை மீண்டும் குடிநீர்வாரியம் மறுகுதறல் செய்து எட்டு மாதம் கழித்து.

ஆகவே இந்திய நகரங்கள் எப்போதுமே இடிபாட்டுக் குவியல்கள்தான். சென்னை நானறிந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக சிரிய -லெபனான் நகர்களைப் போலத்தான் இருக்கிறது. மெட்ரோ கட்டினார்கள், இன்னும் முடியவில்லை. மேம்பாலங்கள் அமைத்தார்கள். வேலைகள் தொடர்கின்றன.  கட்டுமான வேலைகள் முடியவே முடியாது. ஏனென்றால் அவை அரசியல்வாதிகளின் அகழ்விடங்கள், அறுவடைவயல்கள்

பொதுவாக எங்குமே நகரங்கள் கட்டிவிரிவாக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். ஆனால் இந்திய நகரங்கள் இடித்து, தோண்டி குவிக்கப்பட்டு பற்பல ஆண்டுகள் அப்படியே போடப்பட்டு கட்டப்படுகின்றன.  கட்டிமுடித்த ஒரு நகரில் வாழும் நல்லூழ் சென்னைவாசிகளுக்கு இல்லை. கட்டிமுடிக்கப் பட்டதுமே கட்டுமானங்கள் பாழடைந்து இருண்டு விடும் என்பது இன்னொரு பிரச்சினை.

மேம்பாலங்களே வெளிநாடுகளில் பார்வைக்கு அழகாக உள்ளன. இங்கே எந்த கட்டுமான நேர்த்தியுமில்லாத கான்கிரீட் பூதங்களாக கண்களை நிறைக்கின்றன. சென்னையில் என் பார்வையில் அழகான புதிய கட்டிடம் என்று ஒன்றுகூட இல்லை. வெளிநாடுகளில் நகலெடுத்துக் கட்டப்பட்ட கட்டிடங்கள் எந்த சம்பந்தமும் இல்லாமல் நின்றிருக்கின்றன. பெரும்பாலான கட்டிடங்களுக்கு அவற்றைச் சுற்றி இடம் இருப்பதில்லை. அவற்றைப் பார்க்கவே முடியாது.

நல்ல நகரங்களுக்கு ஒரு ‘புறத்தோற்றக் கொள்கை’ இருக்கும். நகரின் காட்சியொழுங்கு அவ்வாறு உருவாவதே. பெரும்பாலான ஐரோப்பிய நகரங்கள் அவற்றை மிகக்கச்சிதமாக பேணுகின்றன. நம் அருகிலேயே பூட்டானின் திம்பு போன்ற நகரங்கள் அப்படி ஒரு சிற்ப ஒருமையுடன் உள்ளன. அப்படியொன்று இந்தியாவில் இல்லை. பொதுவான வண்ணம், வடிவம் ஏதும் பேணப்படுவதில்லை. ஆகவே புதிய கட்டிடங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒரு வண்ண வடிவ அராஜகமே கண்ணுக்குப்படும். அத்துடன் எந்த இடத்திலும் கட்டிட இடிபாடுகளை, குப்பை மலைகளை பார்க்கலாம்.

வரைமுறையற்ற போஸ்டர்கள், தட்டிகள் நகரை கண்ணுக்கு ஒவ்வாமை கொள்ளச் செய்கின்றன. சென்னையின் எல்லா சுவர்களும் சருமநோய் வந்தவைபோல தோலுரிந்து தென்படுகின்றன. எந்த இடத்திலும் மாபெரும் தட்டிகள் கண்களை மறைக்கின்றன. அவற்றுக்கு எந்த ஒழுங்குமில்லை. வண்ணம், வடிவம் ஆகியவற்றில் குறைந்தபட்ச ரசனைகொண்ட எவருக்கும் சென்னை போன்ற நகரங்களைப் பார்ப்பது ஒரு சித்திரவதை.

ஆனால் சென்னை பெருமைகொள்ளும் கட்டிடங்கள் பல உண்டு. எக்மூர் அருங்காட்சியகம், உயர் நீதிமன்றம், எக்மூர் ரயில்நிலையம் என. அவற்றில் பெரும்பாலானவை மூர்க்கமாக பயன்பாட்டில் இருக்கின்றன. அழிந்து பாழடைந்தும் கூட அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன. அல்லது இடித்துத் தள்ளப்படுகின்றன. சென்னையின் தொன்மையும் வரலாறும் அழிந்துகொண்டே இருப்பதை ஒவ்வொருநாளும் பார்க்கலாம்.

எந்நகரமும் அழகாவது மூன்று அடிப்படைத்தேவைகளால். ஒன்று, பூங்காக்கள். இரண்டு, நீர்நிலைகள். மூன்று நகர்ச்சதுக்கம். நான் உலகமெங்கும் மகத்தான நகர்ச்சதுக்கங்களைக் கண்டிருக்கிறேன். அப்படி ஒன்று இந்தியாவில் இருக்கவே முடியாது. அங்கே பல்லாயிரக்கணக்கான சிறுவணிகர்கள் வந்து முகாமடித்து குப்பைகளைக் குவித்து வணிகச்சந்தாக ஆக்கிவிடுவார்கள். சென்னைக்கு சதுக்கம் என ஏதுமில்லை. கடற்கரை இருக்கிறது. அது ஒரு நெரிசலிடும் சந்தை

சென்னையில் பூங்காக்களே இல்லை. சின்னச்சின்ன சந்துகளில் பூங்கா என சில செடிகளையும் மரங்களையும் வைத்துள்ளனர். அங்கேயும் குப்பை, ஆள்கூட்டம். சென்னையில் உள்ள நீர்நிலைகள் எல்லாமே தூர்க்கப்பட்டுவிட்டன. பெங்களூர், கோவை போன்ற நகர்களின் நீர்நிலைகளெல்லாமே சாக்கடைத் தேக்கங்கள். ஒப்புநோக்க தமிழக நகரங்களில் கொஞ்சமேனும் தூய்மையாக இருப்பது கோவை மட்டுமே. மதுரைதான் நினைக்கவே அஞ்சுமளவுக்கு சீரழிந்து கிடக்கும் நகரம். நாகர்கோயில்? நாகர்கோயில் இன்னும் ஓர் ஊராக உருவாகவே இல்லை. நகரின் பெரும்பகுதிகளில் சாலைகள் என்ற விஷயமே இல்லை.

சென்னையர்கள் ‘ஆயிரந்தானிருந்தாலும் அவள் என் அம்மா’ வகை செண்டிகளை கைவிட்டு குறைந்தபட்சம் சென்னைக்கு ஒரு குப்பை அள்ளும் நிர்வாக முறை, குப்பைகளை அழிக்கும் அல்லது மறுசுழற்சி செய்யும் முறை இனியேனும் உருவாகவேண்டும் என வேண்டிக்கொள்ளலாம். இன்று வரமொருமுறை குப்பைகளை அள்ளி நீர்நிலைகளிலும் சதுப்புகளிலும் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

*

இந்தியாவின் எந்த நகரமும் மானுடர் மகிழ்ந்து வாழ உகந்தது அல்ல. மானுடர் அங்கே உயிர்வாழ்ந்தாக வேண்டியுள்ளது, அவ்வளவுதான். ஆனால் அவ்வண்ணம் சென்னையை அல்லது ஏதேனும் நகரத்தை வெறுக்கவேண்டுமா?

வெறுத்தால் வாழமுடியாது என்பதை நாம் முதலில் உணரவேண்டும். விரும்பியே ஆகவேண்டும். விரும்புவதற்கான வாய்ப்புகளை தேடிக் கண்டையவேண்டும். அவ்வாறு பார்த்தால் சென்னையிலும் விரும்பத்தக்க பல உண்டு.

முதன்மையாக சென்னையின் வாய்ப்புகள். எந்த தொழிலுக்கும் சென்னை பெரிய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் சென்னைக்கு வந்திறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். சென்னை அனைவரையும் வாழவைக்கிறது

இரண்டு சென்னையின் மெட்ரோபாலிட்டன் தன்மை. அத்தன்மை கொண்ட ஒரே இந்திய நகரம் அதுவே. கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலுள்ள சாதிமதபேதம்  பெருநகர்களில் நிகழமுடியாது. இங்கே மனிதர்களெல்லாம் நுகர்வோரும் உழைப்போரும்தான். ஆகவே கொஞ்சம் உளம் விரிந்தால் சென்னையில் அற்புதமான நட்புகளை அடையமுடியும்.

மூன்றாவதாக சென்னை போன்ற ஒரு நகரில் கொண்டாட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும்.கொஞ்சம் தேடிக்கண்டடைய வேண்டும். சிற்பக் கண்காட்சி நிகழும். இசைநிகழ்வும் நாடகநிகழ்வும் இருக்கும். வெவ்வேறு கலையுலகங்கள் அருகருகே இருக்கும். அவற்றில் வாழ கொஞ்சம் முயற்சி எடுக்கவேண்டும் அவ்வளவுதான்.

அத்துடன் என்னதான் இருந்தாலும் சென்னை போன்ற நகர்களிலுள்ள மானுடத்திரள் ஓர் உயரனுபவம்தான். உளச்சோர்வின்போது மானுடத்திரளில் இருப்பதுபோல ஊக்கமளிக்கும் இன்னொன்றில்லை.

*

நான் பார்த்த நகரங்களில் எனக்குப் பிடித்தவை பல உண்டு. ஆப்ரிக்க நகரமான விண்டூக் சிறிய அழகான ஒழுங்கான நகரம். சிங்கப்பூர் நேர்த்தியானது, ஆனால் அங்கே ஒரு இயந்திரத்தனம் உண்டு. பாரீஸ் அழகாக இருந்திருக்கும், ஆனால் அண்மைக்கால அகதிப்பெருக்கம் அதன் பாதுகாப்பை அழிக்கிறது. எங்குநோக்கினும் திருடர்கள், பிச்சைக்காரர்கள். வெனிஸ்? பெயர்தான் பெரிய பெயர், அது சாக்கடைகளுக்குள் அமைந்த கட்டிடத்தொகை. லண்டன்? அழகான நகரம். நினைவுகளின் நகரம். ரோம் ஒரு கனவு.  மியூனிக்கும் கனவு நகர்தான்.

ஆனால் எனக்குப் பிடித்த நகர், எண்ணும்போதே உளம் மலரச்செய்யும் நகர், நியூயார்க்தான். ஆம், நியூயார்க்கில் அங்கே வாழ்பவர்கள் பலர் பார்த்திராத வறுமைச்சந்துகள் உண்டு. கறுப்பர் வாழ்விடங்கள், அகதிகளின் மடுக்கள் உண்டு. நான் அங்கெல்லாம் சென்று பார்த்திருக்கிறேன். ஆனாலும் நியூயார்க் அழகானது. நேர்த்தியான வடிவமைப்பும் தூய்மையும் உடையது. தெளிவான நிர்வாகம் கொண்டது.

அனைத்தையும் விட முக்கியமாக அது மானுட இனங்கள் அனைத்தும் ஒன்றெனக் கொப்பளிக்கும் ஒரு மையம். ஒரு காலச்சுழி. மானுடத்தை இதுவரை கொண்டுவந்து சேர்த்த நம்பிக்கை, கனவுகள், ஊக்கம் ஆகியவை ஒருகணம் கூட அணையாத ஒர் இடம்.

சென்னையில் 

முந்தைய கட்டுரைஆலிப் புலவர்
அடுத்த கட்டுரைஆயுர்வேத அறிமுக முகாம், கடிதம்