அன்புள்ள ஜெ,
நீங்கள் எழுதிய நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது காடு. காடு மட்டும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு பேரை சென்றடைந்திருக்கும் என்ற ஏக்கம் எப்போதும் என்னுள் இருந்துவந்திருக்கிறது.
அண்மையில்தான் அறிந்துகொண்டேன் காடு நாவல் முன்னரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று. எனக்கு இவ்வறிதல் முதலில் வியப்பாகவே இருந்தது. ஏனெனில், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டும் எப்படி அந்நாவல் பெரும்புகழ் அடையாமல் போனதென்று?
கீறக்காதனை யாராவது விரும்பாமல் இருப்பார்களா என்ன? அவனுடைய முடிவை கண்டும் யாராவது கண்கலங்காமல் இருக்க முடியுமா என்ன?. அவனுடைய படத்தை இன்னும் நான் என் நெஞ்சில் சுமக்கிறேன், ஜெ.
எப்படி காடு பேசப்படாமல் போகும்? மொழியாக்கம் சரியாக அமையாமல் போய்விட்டதா? அல்லது காடு போன்ற ஒரு நுண்சொல்லை மொழிபெயர்க்கவே முடியாதா?
மணிமாறன்
அன்புள்ள மணிமாறன்,
தமிழிலிருந்து என்றல்ல, இந்திய மொழிகளில் எதிலும் இருந்து செல்லும் மிகப்பெரும்பாலான நூல்கள் எந்தவிதமான கவனத்தையும் பெறாமல்தான் போயிருக்கின்றன.
அதற்கு அந்த நூலின் தரப்பில் இருந்தும் பிரசுரத்தரப்பில் இருந்தும் சில காரணங்களுண்டு. பொதுவாக இங்கே மொழியாக்கங்கள் பேராசிரியர்களால், கல்லூரிகளில் ஆங்கிலம் பயின்றவர்களால் செய்யப்படுகின்றன. அவை இலக்கண மொழியில் அமைந்த மொழியாக்கங்கள். திரு.வி.க, முவரதராசனார் தமிழ் எப்படி இருக்குமோ அப்படி அமைந்தவை. அந்த மொழியில் செய்யப்பட்ட புனைவுமொழியாக்கங்களை எவரும் படிக்க முடியாது. அவை கல்வித்துறை ஆய்வுக்கு மட்டுமே பயன்படும். கல்லூரி நூலகங்களுக்கு மட்டுமே சென்று சேரும்.
பிரியம்வதா மொழியாக்கம் செய்த அறம் கதைகள் என்னும் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக வந்தபோது அது ‘இலக்கணப்பிழை’ என்று சுட்டிக்காட்டி பேராசிரியர்கள் எனக்கு எழுதிக்கொண்டே Stories of the true people என்று சொல்லவேண்டும் என்றனர். அது ஒரு சமகால ஆங்கிலம் என்று சொன்னாலும் ஏற்க அவர்களால் முடியவில்லை. குறைந்தது ஓரு புகழ்பெற்ற ஆங்கில பதிப்பகம், ஓர் ஆங்கிலேய சரிபார்ப்புநரால் பரிசோதிக்கப்பட்ட நூலின் தலைப்பை பிழையாக வைக்குமா என்றுகூட அவர்கள் யோசிக்கவில்லை. அவர்கள் அறிந்தது அந்த இலக்கண ஆங்கிலம் மட்டுமே. அவர்களால் எப்படி புனைவு மொழியாக்கங்களைச் செய்ய முடியும்?
இங்கே நமக்குத் தேவை சமகாலப் புனைவுமொழியில் செய்யப்படும் மொழியாக்கங்கள். அவற்றை ஆங்கிலத்தில் சமகாலப் புனைவுமொழியில் உளம்நிகழ்பவர்களே செய்யமுடியும். அத்தகையோர் தமிழில் மிகமிகமிக அரிதானவர்கள். ஒப்புநோக்க மிகக்குறைவான மொழிபெயர்ப்பாளர்கள் இந்தியாவில் தமிழிலேயே உள்ளனர்.
பொதுவாக இந்தியாவிலேயே தமிழகம்தான் ஆங்கிலப்புலமை குறைந்த மாநிலம் என்று நினைக்கிறேன். என்னிடம் ஓர் ஆங்கிலப் பதிப்பாளர் ஆங்கில இலக்கிய நூல்கள் மிகக்குறைவாக விற்கும் பெரிய மாநிலங்களில் ஒன்று தமிழகம், மிகக்குறைவாக நூல்கள் விற்கும் நகர்களிலொன்று சென்னை என்றார். மிகச்சிறந்த ஆங்கிலப்புலமையுள்ள, ஆங்கில நூல்கள் விற்கும் பகுதி வடகிழக்கு இந்தியா.
இங்கே கல்வி என்பதே தொழிற்கல்விதான். மூன்று வகை ஆங்கிலங்களே இங்குள்ளன. ஒன்று, தொழில்துறை ஆங்கிலம். அது முழுக்கமுழுக்க நடைமுறை பயிற்சி சார்ந்தது. இரண்டு உயர்குடி ஆங்கிலம். அது அச்சூழலுக்கான வழக்கமான சொற்றொடர்களாலானது. மூன்று, கல்வித்துறை ஆங்கிலம். அது மிகச்சம்பிரதாயமானது. மூன்றுமே ஆழமற்றவை, நவீன இலக்கியத்துக்கு உதவாதவை.
மிகச்சிறந்த மொழியாக்கங்களை வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த அடுத்த தமிழ்த் தலைமுறையினர் செய்ய முடியும். ஆனால் மிகப்பெரும்பாலும் ஒரு சொல்கூட தமிழ் தெரியாதவர்களாகவே தமிழர்கள் அடுத்த தலைமுறையை வளர்க்கின்றனர். தங்களுக்குத் தெரிந்த தமிழக கட்சியரசியல், சினிமா, பட்டிமன்றம் ஆகியவற்றையே தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கின்றனர். அக்குழந்தைகளுக்கு அவற்றில் ஆர்வம் வருவதே இல்லை, அலட்சியமும் உருவாகிறது. இதுவரை ஒரு மொழியாக்கம்கூட அப்படி அங்கே பிறந்து வளர்ந்தவர்களால், அங்கே வாழ்பவர்களால் செய்யப்பட்டு வெளிவந்தது இல்லை.
இரண்டாவதாக, பதிப்பகங்கள். இன்று நூலை அச்சிட்டு வினியோகம் செய்தால் மட்டும் போதாது. அவற்றை பிரச்சாரம் செய்யவும் பதிப்பகங்கள் முயலவேண்டும். அதற்கு பதிப்பகம் பணம் செலவழிக்கவேண்டும். அவர்களுக்குத் தொடர்புகள் இருக்கவேண்டும். தமிழகத்தில் இருந்து அப்படி ஆங்கிலத்தில் நூல்களை வெளியாகும் பெரிய பதிப்பகம் ஏதுமில்லை. ஆங்கிலப் பதிப்பகங்கள் டெல்லி அல்லது கல்கத்தாவை மையமாக்கியவை. அரிதாக பெங்களூர், ஹைதராபாத்.
இங்கிருந்து கிழக்கு பதிப்பகத்தின் ஆங்கிலக்கிளை வெளியிட்ட நூல்களை இந்தியக் கவனத்துக்குக் கொண்டுசெல்லவே அவர்களால் இயலவில்லை. இங்கிருந்து செல்லும் பெரும்பாலான நூல்களுக்கு எந்த கவனமும் அமைவதில்லை. மதிப்புரைகள்கூட வருவதில்லை. சென்னையிலிருந்து வெளிவரும் நாளிதழ்களேகூட அவற்றைக் கவனிப்பதில்லை.
என் முதல் நூல் காடு மொழியாக்கமான The Forest. அதை நான் பொருட்படுத்தவே இல்லை. அம்மொழியாக்க நடை எனக்கு எவ்வகையிலும் உவப்பானது அல்ல. அதை எங்கும் சொல்லிக்கொள்வதில்லை. என் இரண்டாவது ஆங்கிலநூல் . பிரியம்வதா ராம்குமார் மொழியாக்கம். அதுதான் என்னை ஆங்கிலச்சூழலில் அறிமுகம் செய்த நூல். ஆங்கிலப் புனைவுமொழியில் ஆழ்ந்தவர் பிரியம்வதா ராம்குமார். முதன்மையான இலக்கிய முகவர் கனிஷ்கா குப்தாவால் அது முன்னெடுக்கப்பட்டது.ஜக்கர்நாட் பதிப்பகம் (கல்கத்தா) அதை இந்தியாவெங்கும் கொண்டுசென்றது.
எத்தனை மதிப்புரைகள், எவ்வளவு பேட்டிகள், எவ்வளவு நிகழ்வுகள் என்று பார்த்தாலே போதும்; அந்நூல் ஏன் கவனிக்கப்பட்டது, ஏன் விற்பனை வெற்றி அடைந்தது என்று தெரியும். நூலின் தகுதி அதில் ஒரு அம்சம் மட்டுமே. அதுவே இன்றைய சூழல். ஏழாம் உலகத்தின் மொழியாக்கமான The Abyss வெளிவந்தபோது முதல் நூலின் புகழும் சேர்ந்துகொண்டதென்றாலும் அதற்கும் பல பேட்டிகள், மதிப்புரைகள், நிகழ்வுகள் வேண்டியிருந்தன. இவை அமையாமல் வெளிவரும் நூல்கள் மறைந்துவிடுகின்றன.
இன்னும் சில நுண்ணிய காரணிகள் உண்டு. இந்திய ஆங்கிலச் சூழலில் இன்று இலக்கிய விமர்சகர் என்னும் ஆளுமைகள் அரிது. இலக்கிய விமர்சனமே குறைவு. இரு சாரார்தான் இலக்கியம் பற்றிப் பேசுகிறார்கள். மதிப்புரையாளர்கள், கல்வியாளர்கள். இவர்கள் பொதுவாக இலக்கியப்படைப்பின் அடையாளத்தையே முக்கியமாகக் கொள்கிறார்கள். அதன் அரசியல் மற்றும் சமூகவியல் உள்ளடக்கம் சார்ந்து அந்த அடையாளம் போடப்படுகிறது. அழகியல்நோக்கு என்பது மிக அரிதாகவே கண்ணுக்குப்படுகிறது.
ஆகவே வெளிப்படையான அரசியல் கொண்ட ஆக்கங்களுக்கு மட்டுமே கவனம் அமைகிறது. பெருமாள் முருகன் போல ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி பெயர் அடிபட்டால் விற்பனை உருவாகிறது. தொடர்ந்து அதேபோல ‘சமூக அரசியல்’ பேசுபொருளைக் கொண்டு எழுதவும் பெருமாள் முருகன் கவனம் எடுத்துக்கொள்வதைக் காணலாம். பெருமாள் முருகனுக்கு சிறந்த இலக்கிய முகவர் அவருடைய பதிப்பாளர். இந்திய அளவில் பரவலாகப் பேசப்பட்ட படைப்புகளில் பெரும்பாலானவை அரசியல் காரணமாகவே பேசப்பட்டன. விருதுகள் அரசியலுக்காகவே அளிக்கப்பட்டன.
ஆகவே, தமிழ் உட்பட்ட இந்தியமொழிகளின் வாழ்க்கையை முன்வைக்கும் இலக்கிய அழகியல் கொண்ட படைப்புகளை இன்று கவனப்படுத்த மேலதிக முயற்சி தேவை. அது இயலுமா என்றே தெரியவில்லை. அதற்கான ஊடகங்களும் ஆளுமைகளும் இன்றைய இந்திய ஆங்கிலச் சூழலில் இல்லை என்பதே உண்மை.
சர்வதேச சூழல்கூட சாதகமாக இல்லை. ஐரோப்பிய -அமெரிக்க இலக்கிய விமர்சகர்கள், வாசகர்களைப் பொறுத்தவரை அவர்கள் கீழைநாடுகளிடமிருந்து தத்துவம், வாழ்க்கைத்தரிசனம், ஆன்மிகம் என எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு உகந்த அரசியலை இங்குள்ள வாழ்க்கையை களமாக்கி நாம் எழுதிக்காட்டவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். அதற்குமேல் பேச உனக்கு நுட்பம் போதாது, உன் அரசியல் அவலங்களையும் சமூகச்சீர்கேடுகளையும் மட்டும் பேசு என்ற மேட்டிமைநோக்கே அவர்களின் அணுகுமுறையாக உள்ளது.
இலக்கிய ஆக்கங்களை வெறுமே மொழியாக்கம் செய்து வெளியிட்டால் மட்டும் போதாது. அவற்றை வாசகர்கள் அடைவதற்கான பேசுதளமும் உருவாக்கப்படவேண்டும். ஐரோப்பிய மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கு படைப்புகள் வந்தபோதுகூட பல ஆண்டுகள் அவை கவனிக்கப்படாமலிருந்த வரலாறே உள்ளது. அந்நூல்களை வாசிப்பதற்கான அறிவுக்களத்தை அம்மொழிகளை அறிந்த இலக்கிய அறிஞர்கள் பேசிப்பேசி உருவாக்கிய பின்னரே அப்படைப்புகள் வாசிக்கப்பட்டன.
உதாரணமாக, நாம் இன்று விதந்தோதும் ரஷ்யப் பேரிலக்கியவாதிகளான தல்ஸ்தோய், தஸ்தய்வேவ்ஸ்கி ஆகியோர் மொழியாக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் ஆங்கிலச் சூழலில் எந்த வாசிப்பையும் பெறவில்லை. கான்ஸ்டண்ட் கார்னெட் (Constance Clara Garnett) அவற்றை அன்றைய ஆங்கிலப் புனைவுமொழியில் மீண்டும் மொழியாக்கம் செய்ய, கூடவே ருஷ்யாவின் அரசியல் பண்பாட்டுச்சூழல் பற்றிய விவாதங்களும் உருவாக, அதன்பின்னரே அவர்கள் வாசிக்கப்பட்டனர்.
நமக்குத்தேவை கான்ஸ்டண்ட் கார்னெட்டுகள்தான் என நினைக்கிறேன். அவர் ஓர் மொழியாக்க இயந்திரம் என்பார்கள். மொழியாக்கம் செய்து குவித்தார். விளைவாக ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய ரஷ்ய இலக்கிய குவியல் ஆங்கிலத்துக்கு வந்தது. ஒன்றை வாசித்தவர் இன்னொன்றை வாசிக்க முடிந்து. ரஷ்ய இலக்கியச் சூழலே ஆங்கிலத்துக்கு கார்னெட் வழியாக அறிமுகமானது. கார்னெட்டின் மொழியும் சிக்கலற்றது, அன்றைய ஆங்கில புனைவுமொழியில் அமைந்தது. ஆகவே அது படிக்கப்பட்டது. மொழியாக்கம் ‘சரியாக’ அமைவது முக்கியமல்ல ‘படிக்கப்படுவதே’ முக்கியம். படிக்கப்பட்ட பின் செவ்வியல் அந்தஸ்து அமையுமென்றால் அப்படைப்பை மீண்டும் சரியாக மொழியாக்கம் செய்யலாம். தல்ஸ்தோய் உட்பட ருஷ்யப்பேரிலக்கியங்களுக்கு அப்படித்தான் நடந்தது.
மொழியாக்கங்களுக்கு நிகராகவே நமக்கு நம் இலக்கியப்படைப்புகள் பற்றிய பேச்சுகளும் தேவை. நம் அழகியலை, நம் சமூகச்சூழலை, நம் பண்பாட்டுக்கும் இலக்கியத்துக்குமான உறவை நாம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். உலகம் கவனிக்கும்படியாக. அதை அப்படிப்பேச நமக்கு இளம் இலக்கிய ஆர்வலர்களின் ஓர் அணியே தேவை. அவர்கள் நம் உயர்கல்வித்துறையில் இருந்தும் ,புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகளிடமிருந்தும் உருவாகி வருவார்களென்றால் அவ்வண்ணம் நிகழலாம்