நான் நீண்டகாலம் காலையில் டீ குடிப்பதே வழக்கம். காபி என்பது எங்களூர் பக்கம் பொதுவாக இல்லாத வழக்கம். பாலில் காபிப்பொடியை போட்டு தருவதை காபி என எங்கள் டீக்கடைகளில் சொல்வார்கள். திருவட்டார் ஆலயம் பார்க்கவரும் ஐயங்கார்கள் எங்களூர் காபியின் முன் திறன்வியந்து செயல்மறந்து நிற்பதை கண்டிருக்கிறேன்.
ஆனால் ’காலையிலே காப்பிகுடி ஆயாச்சா?” என்றால் எங்களூர்ப் பக்கம் டிபன் சாப்பிட்டாச்சா என்று பொருள். அதில் காபி இடம் பெறுவதில்லை. இன்னொரு காபி உண்டு, கருப்பட்டிக் காபி. அது சுக்குமல்லி பானம்தான். கொத்தமல்லி கருக வறுக்கப்பட்டிருக்கும். அதுவும் காபி இல்லை.
திடீரென எனக்கு காபி மோகம் உருவானது. அதாவது கொரோனாக் காலம் முடிந்தபின். கொரோனாவின்போது தொடங்கிய வழக்கம். காலையில் சட்டென்று உருவாகும் வெறுமையை வெல்ல நான் கண்டடைந்த வழக்கம் அது. ஓர் இனிய பழக்கத்தை ஆரம்பித்து, அதை நினைத்தபடி நாளைத் தொடங்குவது நல்ல விஷயம்.
காலையில் அன்றெல்லாம் எனக்கு இரவு முழுக்க வந்த நூறு தவறிய அழைப்புகளாவது இருக்கும். வெவ்வேறு ஊர்களில் வேண்டியவர்களுக்கு மருத்துவமனை அனுமதிக்காக முட்டிமோதுபவர்களின் அழைப்பு. நான் அவற்றை அவ்வப்போது எடுத்துப் பேசத் தொடங்கினால் தூங்கவே முடியாது. அவர்களே முடிந்தவரை முட்டிமோதட்டும் என விட்டுவிடுவதே நல்லது என்று கண்டுகொண்டேன்.
காலையில் பாதிப்பேருக்கு பிரச்சினை தீர்ந்திருக்கும். சாதகமாகவோ பாதகமாகவோ. எஞ்சியோருக்கு நான் அங்கே இங்கே அழைத்து, மன்றாடி, இடம்பெற்றுத் தருவேன். வேறு வழியில்லை. அழைப்பவர்களுக்கு தெரிந்த ஒரே விஐபி நான். நான் விஐபி அல்ல என அவர்களிடம் சொல்லிப் புரியவைக்கும் தருணம் அல்ல. ஆனால் எழுத்தாளர் என்றால் பெருமதிப்பு கொண்ட அதிகாரிகள் , அரசியல்வாதிகள் பலர் உண்டு என அறிந்த நாட்கள். என் விஷ்ணுபுர நண்பர்களின் ஆற்றலென்ன என்று அறிந்த தருணங்கள்.
காபி ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது அந்நாட்களுக்கு. காலையில் நல்ல பாலில் டிக்காஷன் சேர்த்து நானே உருவாக்கும் காபி. ஃபில்டர் இல்லாமல் டிகாஷன் போடலாம். காபிப் பொடியை நாலைந்து டீஸ்பூன் எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு உடனே மூடி அப்படியே இறக்கி வைத்து மேலே உள்ள தெளிவை எடுத்தால்போதும். என்ன, மும்மடங்கு நான்கு மடங்கு காபிப்பொடி தேவையாகும். ஃபில்டர் கடைசி ஊறல்வரை உறிஞ்சி விடுவதுபோல் நடக்காது.
நிறையச் சீனிபோட்டு எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று ஆர அமர அமர்ந்து மலைகளைப் பார்த்தபடி குடிப்பேன். மலைகளை தினமும் இருமுறை பார்த்த நாட்கள். மொட்டைமாடி அன்றாடப் புழங்கிடமாக ஆன நாட்கள். இன்று எல்லாமே இனியவை ஆகிவிட்டன. காபி மணமும் காபிச்சுவையும் கொண்ட காலைக்காற்று, காலையிளவெயில், காலைக்கொழுந்துபோல் மலைகள்.
அப்படி சிறிய இனிமைகளைக்கொண்டு அந்நாட்களை அழகுற ஆக்கிக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் ஸூம் செயலியில் நான்கு வாசகர்களுடன் பேசினேன். மொத்தம் 230 வாசகர்களுடன். அதைத்தவிர வாரமிரு முறை குழும ஸூம் உரையாடலில் நாடகங்கள், கதைகள், கலைநிகழ்வுகள். கூடவே நான் ஒவ்வொருநாளும் ஒரு கதை என 130 கதைகள் எழுதினேன். மூன்று நாவல்கள் எழுதினேன். (கதாநாயகி, அந்த முகில் இந்த முகில், குமரித்துறைவி) எல்லாம் காபியின் கொடை.
ஆனால் எடைகூடி விட்டது. கொரோனாக் காலகட்டத்தில் தினமும் ஓட்டப்பயிற்சி எடுத்தமையால் எடை கட்டுக்குள் இருந்தது. அது முடிந்து தொழிலில் இறங்கி விடுதியறைகளில் தங்க ஆரம்பித்தபோது, தொப்பை வந்து சட்டைகள் போடமுடியாமலாயின. காபியல்ல, காபியுடன் சேர்ந்த சீனிதான் பிரச்சினை. நான் முழுக்கோப்பை காபி சாப்பிடுவேன், அதில் குமரிமாவட்ட மரபை மீறவிரும்பவில்லை. அது தமிழ்க்கணக்குக்கு மூன்று கோப்பைக்குச் சமம். நான்கு டீஸ்பூன் சீனி. அப்படி ஒருநாளில் மூன்று காபி. ஐந்து டீ. அதாவது கால் கிலோவுக்குமேல் சீனி, ஒருநாளுக்கு.
சென்ற பிப்ரவரியில் தவாங் பயணத்தின்போது எடைகுறைந்து ஒல்லியாக வந்த அரங்கசாமி ஆணையிட்ட படி சீனியை நிறுத்தி, இடைநேர பட்டினியை பயின்று, பத்து கிலோ குறைத்தேன். காபியை விடவில்லை, சீனி பால் இல்லாத காபி. அது பசியை அடக்குவதும்கூட. ஆனால் காபியின் சுவை உகந்ததாக இருக்கவில்லை. பாலில்லாத காபி சற்று புளிக்கும் என்று தெரிந்தது. அதிலும் சன்ரைஸ், புரூ போன்ற தயார்நிலை காபிகள் நம்பவே முடியாத அளவுக்கு அரைப்புளிப்பு, ரசாயனத்தன்மை கொண்டவை
இந்தியாவில் கர்நாடகத்தில், அதிலும் மைசூர் மாண்டியா பகுதிகளில் மட்டுமே நல்ல காபி கிடைக்கும். வடகிழக்கில் நல்ல டீ. வேறெங்கும் நல்ல காபி அல்லது டீ கிடைக்காது. அப்படியொரு பழக்கமே இங்கே உருவாகவில்லை. நமக்கு எந்த உணவையும் கலப்படம் செய்து, கீழிறக்கி சுவைத்தால்தான் பிடிக்கிறது. எல்லா அசல் பொருட்களும் ஏற்றுமதிக்கானவை என்னும் நம் பொருளியல்மரபுகூட காரணமாக இருக்கலாம்
நல்ல காபி என அந்தந்த ஊர்க்காரர்கள் சொல்வது அவர்கள் குடித்துப் பழகிய திரவங்களை. சென்னையில் பிராமணநாக்குக்கு பழகிய கீர் போன்ற ஒன்றை காபி என அளிக்கிறார்கள். ஃபில்டர் கீர். அதையே அனைவரும் விரும்புவதனால் அதுவே கிடைக்கும். கள்ளிச்சொட்டு என கள்ளிச்சொட்டை பார்த்திராத மாமாக்கள் சொல்கிறார்கள். பாலில்லா காபி, சீனியில்லா காபி என்றால் மொத்த அமைப்பே திகைத்து உறைந்துவிடும்.
அதிலும் ஈரோடு. அங்கே காபி, டீ என எந்த பானமும் இதுவரை தயாரிக்கப் படவில்லை. பராபரியாகக் கேள்விப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு ஏதோ செய்கிறார்கள். டீ என்றால் அதிகாலையில் போட்ட அதே டீத்தூளுடன் மேலும் மேலும் டீத்தூள் போட்டு அடிமாட்டைக் கறப்பதுபோல பிழிந்து பிழிந்து நள்ளிரவு வரை ஊற்றிக் கொண்டே இருப்பார்கள். அட்சய அரிப்பான்!. காலைமுதலே சுண்டிய பாலில் அதை விட்டால் ஒரு மொத்த அவச்சுவை உருவாகிறது. ஈரோட்டினர் அதை சுவையென நம்ப பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
காபி என்றால் ஈரோட்டில் தயார்நிலை காபித்தூள் கறையை பாலில் விடுவதுதான். அது பால்கூட அல்ல, பலவகை ரசாயனங்களும் மாவும் கலந்த ஒரு வெண்திரவம். மிதமிஞ்சி சீனி போடும் பழக்கம் ஈரோட்டிலுண்டு. டீ ,காபி இந்த வகையில் இருந்தால்தான் நிறைய சீனிபோடமுடியும். சீனிப்பழக்கமே அங்கே டீ, காபிப்பழக்கம் எனப்படுகிறது.
அதிலும் அண்மைக்காலமாக ஈரோட்டில் எல்லா டீக்கடைகளிலும் டீ மாஸ்டர் என்பவர் பிகார்க்காரர். அவருக்கு உழவு ,கட்டிடத்தொழில், டீ போடுவது எதுவுமே தெரியாது. வெள்ளந்தித்தனமே அவருடைய ஆற்றல். அதை நம்பி மூவாயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து வந்து தமிழர்களை நம்பி வாழ்பவர். அண்மையில் ஈரோட்டில் கிருஷ்ணன் பரிந்துரை செய்த ’உயர்தர’ டீக்கடையில் ஒரு கருப்பு டீ சொன்னேன். டிக்காஷனை அப்படியே பிழிந்து கொடுத்தார். ஏற்கனவே பலமுறை பால்டீயை பிடிந்த அரிப்பான் வழியாக விட்டமையால் டீ ஒரு விபரீதச் சாக்கடை நிறம் கொண்டிருந்தது. பார்த்ததுமே குமட்டி அப்பால் வைத்துவிட்டேன்.டீ மாஸ்டரைப் பார்த்தேன். வெள்ளை முகம். மலர்ந்த புன்னகை.
ஆனால் நட்சத்திர விடுதிகளில்கூட அறைக்குள் கெட்டில் காபிக்கு வைக்கப்பட்டிருப்பவை தயார்நிலை காபி உறைகள் மட்டுமே. அதையே குடித்துக் குமட்டி வைத்து வாழ்ந்து கொண்டிருந்தேன். என்னை ‘ராவாக’ மது அருந்தும் ஒரு ராவ் என கற்பனைசெய்துகொண்டு. அண்மையில் எட்டுநாட்கள் ஒரே அறையில் இருந்தேன். அதே சன்ரைஸ் காபியுடன். அறைக்குள் ஒரு காபி இயந்திரமும் இருந்தது- வெள்ளையருக்கானது. எனக்கு எக்ஸ்பிரஸோ காபி பிடிக்காது . ஆகவே அதை சீண்டவில்லை.
கடைசிநாள் சன்ரைஸ் உறை இல்லாததனால் அந்த காபி இயந்திரத்தை அணுகினேன். அதில் காபி போட ஓர் சிமிழில் காபித்தூள் இருந்தது. அதைக்கொண்டு காபி போட்டேன். அறைக்குள் ஒரு தெய்வம் உதித்தது போலிருந்தது. அற்புதமான காபி மணம். அற்புதமான காபிச்சுவை. வெறும் காபி போல மகத்தான பானம் வேறில்லை என அறிந்தேன். ஆனால் அன்றுடன் கிளம்பியாகவேண்டும் என்னும் சூழல்
வீடு திரும்பியதும் அமேஸானில் ஆணையிட்டு உயர்தர காபி வாங்கினேன். இந்தியக் காபி என்பது காபியே அல்ல. பெரும்பகுதி சிக்கரி. அதுதான் அந்த அசட்டுப்புளிப்புக்குமட்டல். அது பாலில் கறையாகச் சுவைப்பதற்கு மட்டுமே உரியது. வெறும் காபி சிக்கரி போல ’ஸ்டிராங்’ ஆக இருப்பதில்லை. நம்மூரில் ஃபில்டர் காபி என அருந்தபடுவது ஃபில்டர் சிக்கரிதான். அது அந்தணரின் நவீன சோமம். அதை மற்ற அசுரர்களுக்கும் பழக்கப்படுத்தி விட்டிருக்கின்றனர்.
நல்ல காபியுடன் அமர்ந்து இதை எழுதுகிறேன். இந்த அறையை நிறைத்திருக்கிறது மைசூரின் காபி. இனி எங்கு சென்றாலும் வீட்டிலிருந்தே காபித்தூளுடன், கெட்டிலுடன் செல்ல உத்தேசம்.