அர்ஜுனனும் துரோணரும், கடிதம்

அன்புள்ள ஜெ

நேற்று வெண்முரசு வாசிக்கும் குழுமத்தில் நண்பர் ராஜேந்திரன் பீமன் அர்ஜுனனின் கற்றல் குறித்து வியந்து சொல்லும் பகுதி ஒன்றை வண்ணக்கடலில் இருந்து பகிர்ந்து துரோணர் – அர்ஜுனன் போன்ற ஆசிரிய மாணவ உறவு அமைந்தால் வானமே எல்லை என்று பதிவிட்டிருந்தார். இரண்டையும் சேர்த்து புரிந்து கொள்வார்கள் என்பது அவரது எண்ணமாக இருந்திருக்கிறது. இது குழுமத்தில் வருகையில் இரவு 12 மணி. நம்மாட்கள் குறும்பு செய்வதில் தான் கைதேர்ந்த பேர் வழிகளாயிற்றே :)

தூங்குவதற்கு முன், அது ஒரு அங்கதம் கொண்ட உறவு. முதலில் ஆசிரியரை உயிரை கொடுத்து காதலிக்க வேண்டும். பின்னர் அதே விசையில் அவரை வெறுத்து அவரது உயிரை எடுக்க வேண்டும் என எழுதிவிட்டு படுத்தேன். எதிர்பார்த்தவாறு மறுநாள் காலையில் சில பல தொடர் செய்தி பரிமாற்றம் நடந்து சலசலப்பு நிச்சலனம் கண்டிருந்தது. முன்னமே நினைத்த படி வானமே எல்லை என்பது இளைய யாதவர் – அர்ஜுனன் உறவுக்கே பொருத்தம் என சிவமீனாக்ஷி கூறியிருந்தார்.

அதன் பின்னர் துரோணருடனான உறவு கசப்பதற்கும் இளைய யாதவருடன் முரணே வந்தாலும் இனிப்பதற்கு காரணம் என்னவென்று யோசித்து கொண்டிருந்தேன். துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையேயான அத்தனை இனிய உறவில் எப்படி மெல்ல மெல்ல கசப்பு படிகிறது என்பதையே வண்ணக்கடல் ஆராய்ந்து செல்கிறது. அதன் பரிமாணங்களையும் ஆழத்தையும் காண நினைத்தால் வெண்முரசிற்குள் சென்றலொழிய முடியாது. (குருபூர்ணிமாவில் தொடங்கியதை இடை நிறுத்திவிட்டு வேறு நூல்களை படிக்க தொடங்கினேன். இப்போது டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவலை தமிழில் டி எஸ் சொக்கலிங்கம் மொழிபெயர்ப்பில் வாசித்து கொண்டிருக்கிறேன். கொஞ்சம் வேகம் குறைவாக வாசிப்பு நிகழ்ந்தாலும் எனது எழுத்தாளர்களில் ஒருவரை கண்டடைந்துள்ளேன் என்ற நிறைவுடன் வாசிப்பு நகர்கிறது. வாசித்து முடித்தவுடன் கடிதம் எழுதுகிறேன்.)

எனவே பொதுவாக துரோணர் – அர்ஜுனன் உறவில் நிகழும் அக்கசப்பிற்கான காரணத்தை வகுக்க முற்பட்டேன். அதாவது நாம் ஒவ்வொருவருடன் கொண்டுள்ள உறவிலும் நமது எதிர்பார்ப்பை முன்வைத்தே அவ்வுறவை அமைத்து கொள்கிறோம். இந்த எதிர்பார்ப்பு நமது தேவையையும் விருப்பத்தையும் சார்ந்தது. தேவையிலும் விருப்பத்திலும் கணிசமான பகுதி சமூகத்தால் வரையறுத்து வைக்கப்பட்டவை. எனவே நமது எதிர்பார்ப்பில் கணிசமான பகுதியை நிறைவு செய்யும்படி நடந்து கொள்ள வேண்டிய தார்மீக கட்டாயம் நம்முடன் உறவில் இருப்பவருக்கு நேருகிறது. மறுதலையாக நமக்கும் அக்கட்டாயம் இருக்கிறது. எனவே ஒரு உறவில் ஈடுப்பட்டுள்ள இருவரும் தங்கள் எதிர்பார்ப்புகளை பரஸ்பரம் நிறைவேற்றி கொள்வதில் நிகழும் சமநிலையே அவ்வுறவின் இனிமையை தீர்மானிக்கிறது. தூலத்தட்டு எப்பக்கம் தாழ்ந்தாலும் கசப்பின் எடை கூடுகிறது. ஆனால் சமூகத்தின் அற விழுமியங்களோ சட்டநெறி முறைகளோ தேவைகளை தான் கருத்தில் கொள்ள முடியுமே தவிர, விருப்பங்களை அல்ல. ஆனால் உறவுகளில் அமையும் எதிர்பார்ப்புகளில் விருப்பங்களுக்கு பெரும் பங்குண்டு.

இங்கு துரோணர் – அர்ஜுனன் உறவில் ஆசிரியராக துரோணர் அஸ்தினபுரிக்கு கடன்பட்டுள்ளார். அதனால் அஸ்தினபுரியின் எதிர்பார்ப்பான சிறப்பான கல்வியை அரச மைந்தர்களுக்கு தர வேண்டும். அந்த கற்பித்தலில் வில் தேர்வலானான அர்ஜுனன் மேல் அவரது தனி பிரியம் செல்கிறது. அது அவரது மனோ தர்மத்தின் படி நிகழ்வது என அறிவோம். மறுபக்கம் அர்ஜுனன் அவரிடம் சிறந்த கல்வியை எதிர்பார்ப்பதும் இயல்பானது. துரோணர் குரு தட்சணை கேட்பதும் சரியே. கற்பித்தலில் ஒளியென்று மிளிரும் அவர் ஆசிரிய கொடையின் போது குருதி சேற்றை கேட்கிறார். உயர்ந்த மனிதர் உயர்ந்தவற்றை பெறுவார் என்ற சமூக கற்பிதமே அர்ஜுனனின் விருப்பமாக உள்ளது. அதற்கு நேர்மாறாக நிகழ்கையில் வருத்தம் கொள்கிறான். வருத்தம் கசப்பாக திரிந்து விலக்கம் ஏற்பட்டு உறவில் முறிவு நிகழ்கிறது. இந்த படிமுறை அத்தனை உலகியல் உறவுகளிலும் மாற்றமின்றி நிகழத்தான் செய்கிறது. எங்கோ அவை வெளியில் தெரிந்தோ தெரியாமலோ முறிந்து விடுகின்றன. அப்படி ஆகாத உறவுகள் என்பவை தேவைக்கும் விழைவுக்கும் அப்பால் இருவரும் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமேயாக இருக்கும் பொது தளத்தை கண்டடைவார்கள் எனில் சாத்தியப்படுகிறது.

அப்படி சமூகத்தால் கட்டியெழுப்படாத தானே கண்டடைந்த தன்னறத்தை முழுமையாக்கும் தேவையும் விழைவின்மையும் கொள்ளும் மாணவனுக்கு தன் ஞானத்தை பகிரும் ஆசிரியரை மெய்யாசிரியர் என்கிறோம். அவ்வுறவே மெய்யான ஆசிரிய – மாணவ உறவாக அமைகிறது. அங்கே ஆசிரியர் தன் ஞானத்தை தொடர்ச்சியாக இடையறாது தன் மொத்த இருப்பாலும் பகிர்ந்தபடியே உள்ளார். தேவை உள்ள மாணவன் அதனை பெற்று கொள்கிறான். அது குரு என்ற கடலில் மாணவன் தன் தோணியை செலுத்துவது தான். எத்தனை தூரம் மாணவனின் தேடல் செல்கிறதோ அத்தனைக்கு பெறுகிறான். ஆனால் எந்த கட்டாயமும் இல்லை. இரு இருப்புகள் மிக ஆழமாக தங்களுக்குள் சந்தித்து கொள்கின்றன. தங்களது இயல்பை அறிந்துள்ளன. விலகினாலோ முரண்பட்டு பிரிந்தாலோ ஏதும் குறைந்துவிட போவதில்லை என்பதை உணர்ந்துள்ளார்கள். இதுவே இளைய யாதவருக்கும் அர்ஜுனனுக்குமான உறவு முரண்கள் வந்தாலும் இனியதாக இருப்பதன் காரணம். தன் மெய்யாசிரியரை தோழனென்று அழைக்கும் மாணவனே மெய்யான ஆசிரியரை கண்டடைகிறான் என்றும் கொள்ளலாம்.

மேலுள்ளவற்றை தொகுத்து எழுதி குழுவில் பதிவிடவே நினைத்திருந்தேன். ஆனால் எழுத முயன்று முடியவில்லை. பின்னர் எவரிடமாவது சொல்லி பார்த்தால் புகைமூட்டமாக இருக்கும் கருத்தை தெளிவாக வார்த்தைக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் நண்பர்கள் ஒவ்வொருவரும் தத்தமது வேளைகளில் இருப்பார்கள், எவரையும் அரைமணி நேரம் பிடித்து வைத்து கொள்ள முடியாது. எழுதுவது என்றாலும் கூட நாம் எழுதியதை கண்டிப்பாக படிப்பார்கள் என்று ஒரு உறுதி வேண்டும். அதுவும் எவரிடமும் எனக்கு வருவதில்லை.

அவ்வண்ணம் எனது கருத்தில் பிழைகளோ பிசகான பார்வையோ இருந்தாலும் கூட வாஞ்சையுடன் படிப்பவர் என்று நீங்களே கண்ணில் தெரிபவர். இக்கடிதத்தை எழுத தொடங்குகையில் அண்மையில் கவிஞர் இசை களிநெல்லிக்கனி தொடரில் அவ்வை அதியனுக்கும் தனக்கும் உள்ள உறவை சொல்லுமிடத்தில்

ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின்

நீர்த்துறை படியும் பெருங்களிறு போல

பெரும இனியை எமக்கே

என்ற வரிகளை எடுத்து சொல்லியிருந்தார். உங்களை அந்த யானை என்றே உணர்கிறேன்.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரையோகம், அறிமுகப்பயிற்சி
அடுத்த கட்டுரைபவா என்னும் அழகன் – ராஜன் சோமசுந்தரம்