வெண்முரசு நூல்கள் வாங்க
அன்புள்ள ஜெ,
நான் மிகையாகப் பேசுகிறேன் என எண்ணுகிறீர்கள் என அறிவேன். மிகையாகப் பேசுவது என் வழக்கம். பொதுவாக குதிரைச்சூதர் மிகையாகப் பேசுவார்கள். நாளெல்லாம் அவர்கள் குதிரைகளுடன் தனித்திருப்பார்கள். குதிரையுடன் பேசத்தொடங்கினாலொழிய அவர்களால் இந்தத் தனிமையை கடக்கவியலாது. அதில் பழகிப்போனால் எதிர்நிற்பவர்களின் செவியை எண்ணாமல் பேசிக்கொண்டிருக்க இயலும். நான் குதிரைக்கொட்டிலுக்குள் நுழைந்து எழுபதாண்டுகளாகின்றன
நீர்க்கோலத்தில் வரும் இவ்வரிகள் கர்ணனின் தந்தை அதிரதனை நினைவுப்படுக்கிறது, ஜெ. அவர் ஓயாமல் பேசுவது எதனால் என்று உணரமுடிகிறது.
ஆனால் இவ்வரிகள் இன்னொருவரையும் நினைவுப்படுத்துகிறது. அதை கூறவே இக்கடிதத்தை எழுதினேன்.
செகாவ் எழுதிய ‘குதிரைக்காரன்‘ என்ற சிறுகதை. அச்சிறுகதையில் வருகின்ற குதிரை வண்டிக்காரர் அண்மையில்தான் தன்னுடைய மகனை இழந்திருப்பார். அந்தச் சாவில் இருந்து மீள முடியாமல் திணறிக்கொண்டிருப்பார்.
தன் குதிரைவண்டியில் ஏறும் பயணியர் அனைவரிடமும் தன் மகன் எப்படி இறந்தான் என்ற கதையை கூற முயல்வார், ஆனால் பயணியர் அனைவரும் அந்த பேச்சை விரும்பாமல் குதிரைக்காரரை வாயை மூடும்படி ஆணையிடுவார்கள்.
இப்படியிருக்கையில், ஒருநாள் ஒரேயொரு பயணி மட்டும் அவர் கூறும் கதையை வேண்டாவெறுப்பாக கேட்டுக்கொண்டு வருவார், ஆனால் குதிரைக்காரரின் கதை முடியும் முன்னரே பயணி இறங்க வேண்டிய இடம் வந்துவிடும், பயணியும் ஆளைவிட்டால் போதுமென்று தலைதெறிக்க ஓடிவிடுவார்.
அன்றிரவு வேலை முடிந்த பின்பு குதிரைக்காரர் பிற வண்டியோட்டிகளிடம் அந்த கதையை சொல்ல முயல்வார், அவர்களோ கேட்டுக்கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார்கள்.
முழுக்கதையை யாரிடமும் சொல்லி புலம்ப முடியவில்லையே என்று பதறித் தவித்து மனம்பொறுக்காமல் கடைசியில் தன்னுடைய குதிரையிடமே போய் தன் சோகக் கதையை முழுமையாக சொல்லி முடிப்பார். குதிரையும் அவர் சொல்வதை புரிந்துகொள்வது போல தலையை அசைப்பதாக அக்கதை முடியும்.
ஒரு குதிரைக்காரரின் தனிமையையும்,பேசுவதற்கும் புலம்புவதற்கும் ஆள் கிடைக்காமல் போகும் அவருடைய தவிப்பையும் இதற்கு மேல் யாரால் சிறப்பாக எழுதிவிட முடியும்?
– மணிமாறன்
அன்புள்ள மணிமாறன்
பெரும்பாலும் ஏதாவது தொழிலுடன் கட்டிப்போடப்பட்டவர்கள் அவ்வாறுதான் இருப்பார்கள். அவர்களால் பேசாமலிருக்க முடியாது. தனியாக இருக்கையில் மனதுக்குள் பேசிக்கொண்டே இருப்பார்கள். கேட்க காது அமைந்துவிட்டால் பொழிய ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களில் புத்திசாலிகள் சுவாரசியமாக பேசுவார்கள். எஞ்சியோர் படுகொலை புரிவார்கள்.
ஜெ