புதிய புல்வெளிகள்…

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறீர்கள். அதை எல்லாம் ஒரே இடத்தில் ஈரோடு அருகே நடத்தி வருகிறீர்கள். அவை அங்கே தூரத்தில் நடப்பதனால் என் போன்றவர்கள் பங்கெடுப்பது கடினமாக உள்ளது. நீங்கள் அவற்றை எல்லா ஊர்களிலும் நடத்தினால் நன்றாக இருக்கும். மதுரைப்பக்கம் நடத்தினால் உதவியாக இருக்கும். மதுரையில் அப்பகுதியிலுள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். யோசிக்கவும்

கிருஷ்ணப்பெருமாள்

அன்புள்ள கிருஷ்ணப்பெருமாள்,

உங்களுக்கு சேவை செய்து கடைத்தேற்றவேண்டும் என்னும் பொறுப்பு ஏதும் எனக்கில்லை. நீங்கள் இவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் எவ்வகையிலும் கட்டாயப்படுத்தவில்லை. உங்களுடையது போன்ற மனநிலை கொண்ட ஒருவர் கற்றுக்கொள்ளவும் முடியாது. நீங்கள் எங்கள் முகாம் பக்கம் வரவேண்டாம் என்று மட்டுமே கேட்டுக்கொள்வேன். உங்களைப்போன்றவர்களை தவிர்க்க இன்னும் கொஞ்சம் கறாரான நெறிகள் தேவையா என்றுகூட இப்போது யோசிக்கிறோம்.

ஏனென்றால் உங்களுடையது ஒரு குறிப்பிட்ட மனநிலை. ஆங்கிலத்தில் inertia என்று சொல்லப்படும் இந்த நிலையைக் குறிக்க தமிழில் சரியான சொற்கள் இல்லை. ‘மாறாமல் சென்றுகொண்டே இருக்கும் நிலை’ என்று இதைச் சொல்லலாம். தேங்கிப்போன பண்பாடுகளில் இந்த மனநிலை உண்டு. நீண்ட பாரம்பரியம் கொண்ட பண்பாடுகளில்தான் இந்தத் தேக்கநிலை பொதுவாகக் காணப்படுகிறது. இந்தியா மட்டுமல்ல, கிரேக்கம், எகிப்து, எத்தியோப்பியா போன்றவை இம்மனநிலை வேரூன்றிய நாடுகள். சீனா இம்மனநிலையில் இருந்து வன்முறையாக உசுப்பி எழுப்பப்பட்ட நாடு. ஐரோப்பா அறிவுச்செயல்பாடுகளால் இம்மனநிலையை உதறி எழுந்துவிட்ட நிலப்பரப்பு.

விவேகானந்தர் முதல் ஜவகர்லால் நேரு வரையிலானவர்களின் எழுத்துக்களை வாசிக்கையில் அவர்கள் உறைந்து நின்றுவிட்ட இந்தியச் சமூகத்தை நோக்கி செயலூக்கத்திற்காக மன்றாடுவதை அறைகூவுவதைக் காணலாம். சில நாட்களுக்கு முன் நான் நேருவின் ஓர் உரையை வாசித்தேன். சாகசம் இல்லாமல் வாழ்க்கை இருந்தால் அது சாவுக்கு நிகர் என உக்கிரமாக அதில் வாதிடுகிறார். ஆனால் பெரும்பாலும் மலையை நோக்கி ’கிளம்பு! கிளம்பு!” என ஆணையிடும் செயலாகவே அது அமைந்துவிட்டிருக்கிறது.

இந்தத் தொல்பண்பாடுகளில் இதுதான் வாழ்க்கை, இதுதான் அதன் அறுதிப்பொருள் என வகுக்கப்பட்டு நெடுங்காலமாக நிலைநிறுத்தப் பட்டுள்ளது. அதில் அவ்வண்ணமே ஒழுகுதலே உகந்த வழி என அவர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. ’முன்னோர் சொன்னபடி வாழ்தல்’ மட்டுமே சிறந்த வாழ்க்கை என்னும் நம்பிக்கை வேரூன்றியுள்ளது. விளைவாக புதுமைப்பித்தனின் எரிச்சல் நிறைந்த சொற்களில் சொல்லப்போனால் ‘சீலைப்பேன் வாழ்க்கை’ உருவாகிறது. புதுமைப்பித்தன் சொன்னபடி ‘நன்கு எண்ணை ஊற்றப்பட்ட இயந்திரம்’ போல சரியாக, பிசிறின்றி ஓடிக்கொண்டே இருத்தலே உயிர்வாழ்தலின் உயர்நிலை என நம்பப்படுகிறது.

ரயிலில், பொது இடங்களில் நம்மவர் பேசுவதைக் கவனித்தால் இது தெரியும். “காலம்ப்ற ஆறுமணிக்கு எந்திரிச்சு ஒரு காப்பி. நூஸ்பேப்பர் வாசிப்பு. எட்டுமணிக்கு நாலு இட்டிலி, தேங்காச்சட்டினி, ஒரு காப்பி…அப்றம் அப்டியே…’ என தன் மாறாத வாழ்க்கைவழக்கத்தைச் சொல்வது நம்மில் பெரும்பாலானவர்களின் வழக்கம். தண்டவாளத்தில் ஓடும் ரயில்கள். அவற்றுக்கு வழித்தேர்வே இல்லை. இது ‘சாத்வீக வாழ்க்கை’ என நம்பப்பட்டு, ஓர் உயர்வாழ்க்கையாக முன்வைக்கப்படுகிறது. இதை கிண்டலடித்து நான் ஒரு கட்டுரைகூட எழுதியிருக்கிறேன் (”ஏன் சார்?’)

பழங்காலத்தில் இந்த வாழ்க்கை ‘ஆசார அனுஷ்டானங்கள்’ என்று சொல்லப்பட்டது. இந்தியாவில் கிடைக்கும் நூல்களில் ஆசாரங்களை உயர்நெறியாக முன்வைப்பவையே எண்ணிக்கையில் மிகுதி. நாம் கொண்டாடும் ‘ஆன்மிகப் பெரியோர்’ பலர் வெறும் ஆசாரவாதிகளே. நான் ஆசாரவாதம் மேல் கடும் ஒவ்வாமை கொண்டவன், அது ஆன்மிகத்தின்மேல் படியும் களிம்பு என நம்புபவன். காமம் குரோதம்,மோகம் ஆகியவற்றுடன் நான்காவது மலம் ஆசாரம். முதல் மூன்றையும் வளர்ப்பதும்கூட. அந்த பழைய ஆசாரவாத மனநிலையின் நவீன வடிவங்கள் இன்று உருவாகியுள்ளன. நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்வது அதில்தான்.

இந்த மனநிலையை இளமையிலேயே அடைந்துவிடுகிறார்கள். ஒரு குறுகிய எல்லைக்குள் கண்பட்டை போட்டுக்கொண்டு விரைவாக ஓடுவதைப்போல படிப்பு. அங்கே இங்கே திரும்பாமல் படிப்பை முடித்தால் வேலை. வேலை அமைந்துவிட்டால் அவ்வளவுதான், அதன்பின் வாழ்க்கை தண்டவாளத்தில் ஓட ஆரம்பித்துவிடும். அப்படியே கடைசிவரை. எது தன் வாழ்க்கை என வகுக்கப்பட்டுள்ளதோ அதை மீறவே மாட்டார்கள். தங்கள் வாழ்க்கையைச் சிறையென அமைத்துக்கொண்டு உள்ளே தாழிட்டுக்கொண்டவர்கள் இவர்கள்.

இவர்களால் உள்ளம், உடல் இரு நிலையிலும் நகர முடியாது. தன் சுற்றுவழியை எவ்வகையிலும் மாற்றிக் கொள்ள முடியாது. பயணங்கள் அமையவேண்டுமென்றால் மருத்துவச் சிகிழ்ச்சை, ஆலயங்களுக்கு பரிகார யாத்திரை, கல்யாணம் என ஏதாவது கட்டாயம் இருக்கவேண்டும். புதியதாக ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஏதாவது எதிர்பாராத கடும் நிகழ்வுகள் அமையவேண்டும். அதாவது விபத்துக்கள், தற்செயல் அனுபவங்கள் வழியாக மட்டுமே கற்றுக்கொள்வார்கள். ஆகவே இவர்கள் பேசுவதெல்லாமே அவற்றைப்பற்றி மட்டுமே.

இவர்களாக எதையும் தேடிச்செல்ல முடியாது. ஆனால் அதற்கு உகந்த எளிய சாக்குகளை வைத்திருப்பார்கள். எதையாவது வாசிக்கவேண்டும் என்றால் ‘ரொம்ப நீளமா இருக்கு, சுருக்கமாச் சொல்லலாமே’ என்பது புகழ்பெற்ற வரி. ‘இதெல்லாம் நமக்கு எதுக்கு, நமக்கு பொழப்பு இருக்கே’ என்பது அதன் அடித்தள மனநிலை. ‘அங்க வரைக்கும் வரணுமா?’  என்பது சொல்லப்படும் சாக்கு. ‘எதுக்கு அங்கெல்லாம் போயிட்டு…’  என்பது உண்மையான எண்ணம். ‘இதெல்லாம் எங்கசார் கெடைக்கும்?’ என ஆவல் பொங்க கேட்பார்கள். சொன்னால் ‘அது நம்மூர்ல கெடைக்குமா சார்?” உண்மையில் ‘நம்ம தெருவிலே, நம்ம வீட்டிலே, நம்ம படுக்கையறையிலே, நமக்கு ஒழிஞ்ச நேரத்திலே, நமக்கு புரியறாப்ல’ கிடைத்தாகவேண்டும்.

இவர்களை எவ்வகையிலும் நகர்த்தமுடியாது என்பது என் அனுபவம். ஏனென்றால் வட்டச்சுழற்பாதை உறுதியாகிவிட்ட கோள்கள் இவர்கள். கடும் உழைப்பைச் செலுத்தி கொஞ்சம் நகர்த்தினாலும் அடுத்த சுழற்பாதைக்கு வந்து அங்கே அதேபோல மாறாமல் சுற்றிக்கொண்டிருப்பார்கள். அப்படி ஏராளமான ஏமாற்றங்கள் எனக்கு உண்டு. கொஞ்ச காலம் என் அருகே வந்து செயலாற்றி, உடனே மீண்டு, தங்கள் வழக்கமான வாழ்க்கைப் பாதையில் அமைந்துவிட்டவர்கள் பலர் . உண்மையில் அவர்கள் வந்துகொண்டும் சென்றுகொண்டும் இருப்பார்கள், நம்மால் தொடக்கத்தில் தவிர்க்கவே முடியாது. அந்த ஏமாற்றம் இந்த பணியின் ஒரு பகுதிதான்.

நான் உத்தேசிப்பது உங்களைப் போன்றவர்களை அல்ல. உங்களைப் போன்றவர்களிடம் எனக்கு உறவில்லை. செலவிடப்பொழுதில்லை. அவ்வப்போது பேருந்திலோ ரயிலிலோ சந்தித்தால் ஒரு புன்னகை, ஒரு நலம் விசாரிப்புக்கு அப்பால் பேச ஒன்றுமே இல்லை. உங்கள் வட்டத்துக்குள் என் செயல்பாடுகளுக்கும் இடமில்லை. நான் உத்தேசிப்பவர்கள் கொஞ்சமேனும் செயலூக்கம் கொண்டவர்கள். தேடிச் சென்று கொண்டே இருப்பவர்கள். புதிய மகிழ்ச்சிகளும் புதிய அறிதல்களும் கொண்டவர்கள். கற்றுக்கொண்டே இருப்பதே வாழ்க்கை என அறிந்தவர்கள். அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு அமையாத சூழல் இருக்கலாகாது என்று மட்டுமே எண்ணுகிறேன்.

இந்தச் சிறுபான்மையினரே உண்மையில் மானுட வாழ்க்கையை அமைத்தவர்கள். அவர்கள் அகத்திலும் புறத்திலும் எங்கும் படிந்துவிடாதவர்கள். எப்போதும் தேடிச்சென்றுகொண்டே இருப்பவர்கள். பழைய எல்லைகளைக் கடந்து புதிய களங்களை கண்டடைபவர்கள். அவர்கள் உருவாக்கியனதான் மானுட அறிவு முழுக்க. மானுடக் கலையும் ஆன்மிகமும் முழுக்க. மற்றவர்கள் இருந்து மறைபவர்கள், இவர்கள் மட்டுமே வாழ்ந்து நிறைந்து செல்பவர்கள்.

அத்தகையோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் மிக அதிகம், நம் நாட்டில் மிகக்குறைவு. ஏனென்றால் நாம் முதல்வகையினரை ‘அலைபவர்கள்’ என்று நம்பவும் இரண்டாம் வகையினரை ‘செட்டில் ஆனவர்கள்’ என போற்றவும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். ‘செட்டில்’ ஆனவர்கள் மேல் எனக்கிருக்கும் ஒவ்வாமையை நான் மறைப்பதே இல்லை. அவ்வாறு வாழ்ந்த ஒருவரின் ஈமச்சடங்குக்குச் செல்வதாக இருந்தால் முடிந்தவரை தவிர்த்துவிடுவேன். ஒருபோதும் ஓர் அஞ்சலிக்குறிப்பு எழுத மாட்டேன். அவர் இருந்தாலும் போனாலும் எனக்கென்ன?

ஒன்றைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு, ஓர் அனுபவத்தை அடையும் பொருட்டு, ‘கிளம்பிச் செல்லுதல்’ என்பது ஓர் அற்புதமான அனுபவம். அப்போது உருவாகும் பரவசத்தை இளமையிலேயே அறிந்தவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். நான் என் பத்து வயது முதல் இன்றுவரை அப்படித்தான் இருக்கிறேன். இதை எழுதும்போது இன்னும் ஒரு மணிநேரத்தில் தொல்பழங்கால கற்செதுக்குகளைக் காண இரண்டாயிரம் கிலோமீட்டர் பயணத்தை தொடங்குவதாக இருக்கிறேன். என்னைவிட வயது குறைந்தவர் நீங்கள் என நினைக்கிறேன்.

ஒரு புதிய நிலம் இல்லாமல் புதிய கல்வி நிகழ முடியாது. புதிய நிலம் நம்மை நாமறிந்த எல்லா பழைய மனநிலைகளிலிருந்தும் விடுவிக்கிறது. புதிய மனம்கொள்ளச் செய்கிறது. சிலேட்டை அழித்துவிட்டு புதியதாக எழுதுவதுபோன்றது அக்கல்வி. அது மட்டுமே கல்வி.

ஜெ

முந்தைய கட்டுரைசு.கிருஷ்ணமூர்த்தி
அடுத்த கட்டுரைவழி- ஆவணி இதழ்