குருகுவைத் தேடி


அன்பார்ந்த ஜெயமோகனுக்கு

மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன். ஒரு சின்னத் தேடல்தான். பைத்தியத்காரத்தனம்தான். ஆனால் எதோ ஒன்று நெருடி எதிலும் கவனம் செலுத்தமுடியாத தவிப்பிலிருந்து விடுதலை. இன்று உங்கள் தளத்தில் துளிக்கனவு புத்தகத்தைப் பற்றி தாங்கள்  எழுதியதை பார்த்ததும் அதோடு மற்ற புத்தகங்களையும் தருவித்து ஒன்றொன்றாக  படித்து கடைசியில் துளிக்கனவு படித்தேன். எதிர்பாராத ஒரு தேடலின்  முடிவு. முழுக்கதையும் கூறுகிறேன்.

குருகு வைப் பற்றி உங்களுடைய தளத்தில் படித்து அது எப்பொழுதும் என் நினைவுகளில் இருந்து கொண்டிருந்தது.ஆனால் விபரீதமாக cinnamon bittern என்பது எப்படியோ warbler என்று என் நினைவில் பதிந்து விட்டது. இப்படி பல நேரங்களில் ஏன்   நடக்கிறது என்று புரியவில்லை. இங்கு கோவையில் Coimbatore nature society என்பதில் நான் உறுப்பினர்.அவர்களோடு வாரா வாரம் ஓரிடத்திற்கு சென்று பறவைகளை காண செல்வோம்.

மிகவும் சுவாரஸ்யமான நண்பர்கள். ஒருவருக்கொருவர் ஆவலுடுன் போட்டியோடு பறவைகளை  கண்டு பிடிப்பதில், கூடுகளை அறிவதில், தான்  அறிந்ததை எல்லோருக்கும்   தயக்கமில்லாமல் பகிர்ந்து கொள்ளும் நண்பர்கள்   உற்சாகமாக செல்லும் பொழுது சில  அரிய  தகவல்களும், பறவையின் வாழ்க்கை முறைகளும் அதன் எண்ணற்ற செயல்பாடுகளும் என்று ஒவ்வொரு நண்பரும் கூறிக்கொண்டே போகும்பொழுது தோன்றும் இது தான் கல்வி, இப்படித்தான் கற்கவேண்டும் என்று.

சமீபத்தில் கல்லார் வனப்பூங்காவில் இருவாட்சி பறவைகள் கண்டபொழுது இந்த கூட்டத்தின் தலைவர் செல்வராஜன் அவர்கள் எப்படி கூட்டில் பெண் இருவாட்சியையும் குஞ்சு வையும் கூட்டில் விட்டுவைத்து ஆண் இருவாட்சி மட்டுமே இரைத்தேடி கொண்டு வந்து தரும் வாழ்வு முழுவதும் அவை பிரிவதில்லை என்று சொல்லும்பொழுது ஓரோரு உயிரிடமும் ஒரு கதையிருக்கு என்று நினைத்துக்கொள்வேன்.

இப்படி ஒரு முறை சேங்குளம் என்றும் நீர்ப்பகுதியில் போகும்பொழுது (இப்படி போகும்பொழுதெல்லாம் உங்கள் தளத்தில் பேசிய bittern (என் நினைவில் warbler) ஐ தேடுவேன். நீர்ப்பகுதியில் கரையோரங்களிலுள்ள நாணல் கள்ளிச்செடிகள், தேடி தேடி ஒரு சமயம் முறை நாலு பறவைகளாக அமர்ந்திருந்த கூட்டத்தை தலைவர்  செல்வராஜன் காண்பித்து reed warbler என்றதும் ஒரு நிமிடம் மின்னல் தாக்கியது போல அதிர்வு. காண்பிங்க sir காண்பிங்க என்று அவர் காண்பித்த கூட்டத்தை பார்த்து என் கண்ணே ,  புறநானூற்றுக்  காலத்தில் இருந்து இன்று வரை எத்தனை ஆண்டுகளாயினும் காலத்தின் சாட்சியாக உன்னை  காண்பதே எனக்கு வரம்.

அந்த மாதிரி எத்தனை பறவைகள், நீங்கள் கூறியது போல் குருகு, நாரை எத்தனை பறவைகள் இருந்திருக்கும்.  திருப்பி திருப்பி “நாராய் நாராய் பாட்டுதான் ஞாபகத்திற்கு வந்தது. இதைப் பற்றி யாரவது ஆராய்ச்சி செய்திருப்பார்கள். தேடிப்படிக்கணும் என்று புறநானூற்று காலத்தின் சுழலில் மிதந்துகொண்டு இருந்த என்னை நல்லா ஞாபகம் வச்சிக்கங்க எல்லாரும் , all warblers are migrants என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். என்னது warblers நம்ப நாட்டிலே இருக்கிறது எல்லாம் migrants ஆ. அப்ப எப்படி புறநானுறு காலத்தில் பார்த்திருப்பார்கள். இல்லை சார் புறநானூற்று காலத்திலேயே என்று உளறுவதுற்குமுன் இல்லை இன்னும்  ஒரு தடவை ஜெயமோகன் தளத்தில் பார்த்து விட்டு பேசலாம் என்று முடிவு செய்தேன்.

துளிக்கனவு வாங்க

துளிக்கனவு மின்னூல் வாங்க

அன்று தொடங்கியது நெருடல்.உங்களுடைய தளத்தில்  அந்த பதிவைத் தேடித் தேடி பைத்தியமானது தான் மிச்சம்.யாரவது உங்களிடம் உங்கள் தளத்தின் “தேடு ” பற்றி சொல்லியிருக்கார்களா? முதலில் கூகுளில் போய் தமிழில் சொல்லீடு எடுத்துக் கொண்டு வந்து இங்கு தேடு வில் பதிந்து,  நான் தேடுவதை தவிர எல்லாம் வந்தன warbler, நாணல், நெல்     ஒரு விஷயத்தை தவறாக நம் மூளையில்  பதிந்துவிட்டால்      இது ஏன் நடக்கிறது என்னைப்போன்றவர்கள் (நான் சொல்ல விரும்புவது என்னை உயர்த்தி நினைக்கிறேன்

என்றுஅல்ல முறையாக கல்விப்  பெற்று, ஆராய்ச்சி செய்து, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக methodical registration கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு நபரிடம் ஏன்  இப்படி). சில சமயம் உங்கள் கதைகளை படிக்கும்பொழுது நீங்கள் கூறுவதற்கு மேல் நான் கற்பித்துக் கொள்கிறேனோ) சுருங்கக் கூறினால் பறவை என்ற தேடுச் சொற் கூட ஒன்றும் உதவவில்லை. அப்படி தப்பாக சொல்ல மாட்டாரே migrant பறவையை புறநானூற்றுக்  காலத்தில்…….இருக்காது. ஜெயமோகன் தவறாகவே சொல்ல மாட்டார் (இந்த நம்பிக்கை உங்கள் எல்லா வாசகர்களிடமும் இருக்கும். (He is Ultimate! )

தேடித் தேடி ஒரு கட்டத்தில் நான் தான் கற்பனை.செய்தேனென்று விட்டு விட்டேன். இது போல் இன்னொரு தேடல், 2000/01/புதுடில்லி தமிழிச்சங்க நூலகத்தில் உங்களுடைய கதைத்தொகுப்பில் படித்த கதை, தலைப்பு நினைவிற்கு வரவில்லை. இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ள பள்ளத்தாக்கில் பலமாக காற்று வீசிக் கொண்டே இருக்கும் சூழலில் வாழும் ஒருவன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருகிறான். அந்த கதை முழுவதும், நாங்கள் பரிணாம வளர்ச்சியை புரியவைக்க ஒரு மாதத்திற்கு மேல் திணறும் படிவங்களை மணி மணியாக எழுதியிருப்பீர்கள். அந்தக் கதை படித்த பிறகு அந்த மாதிரி ஒரு மானிடர் கூட்டம் இப்பொழுதும் எங்கோ இருப்பார்கள், இப்பொழுதைய நகரங்களில் ஒவ்வாமையோடு எங்கோ தவிக்கிறார்களோ என்று தோன்றும்.. இப்பொழுது கோவைக்கு வந்து ஏழு வருடங்களாகியும் அந்த  கதை  கிடைக்கவில்லை.தேடுகிறேன். உங்கள் தளத்தில் “தேடு “அருகே செல்லக்கூட துணியவில்லை.யாரவது உதவ முடியுமா?

குருகுவின் கதைக்கு வருவோம். வாரா வாரம் பறவைகளைக் காண போகும் சமயம், கிருஷ்ணம்பதி எனும் குளம், கழிவுகள் கொட்டுமிடமாக மாறிக்கொண்டிருக்கிறது இருந்தாலும் காண்பதற்கு அரிய பறவைகள் கிடைக்கும் என்று அந்த அழிக்கமுடியாத குப்பை குளத்தைத் தாண்டி போய்க்கொண்டிருக்கும் பொழுது எல்லாராலும் எளிதாக பார்க்க முடிந்த greater painted snipe(மயில் உள்ளான்) எனக்கு மட்டும் தெரியவில்லை. வாழ்க்கையே கசந்து விடும் அந்தச் சமயங்களில். இத்தனை எளிதாக எல்லாருக்கும் கிடைப்பது நமக்கு ஏன் கிடைக்கவில்லை.

அவ்வளவு மோசமா நம் கண்கள் என்று கண்களில் நீர் மூட்டி திணறும் பொழுது, நவீன் என்னும் நண்பர் ஐயோ Cinnamon bittern பாருங்க ன்று விஷ்க்ன்று பறந்து செல்லும் பறவையைக் காண்பித்தான்.காலை கதிரவன் ஒளியில் ஒரு பக்கம் மின்னும் செங்கல் நிறத்தில் நொடியில் பறந்து நீர்நிலையில் நாணலில் ஒரு நிமிடம் உட்கார்ந்து பின்னே மறைந்துவிட்டது எங்கேப்பா எங்கேப்பா ன்று எல்லாரும் பதட்டமானார்கள், ஓடினார்கள் குனிந்து குனிந்து தேடினார்கள். யாருக்கும் கிடைக்கவில்லை “நானும் madam மட்டும் தான் பார்த்தோம் என்று ” கைதட்டிக் “கொண்டாடி மகிழ்ந்தோம் நானும் நவீனும்.

நண்பர் பிரகாஷ் வழக்கம் போல் அதன் குணாதிசயங்கள் பற்றி  கூற ஆரம்பித்தார், ரொம்பவுமே வெட்கப்படும், நாணல் புதர்களிலிருந்து வரவே வராது. ரொம்ப நல்ல sighting madam Lifer தான் என்றார். (காண முடியாததை காணும் பொழுது இந்த குழுவில் இந்த வார்த்தையை கூறுகிறார்கள் ) வியப்பு என்ன வென்றால் சிறிது அந்த இடத்தை கடந்து வந்து ஒரு பாலத்தின் மேல் நின்று நீர்நிலையை பார்த்துக் கொண்டேயிருந்த பொழுது நாணல்களால் ஒரு தீவுப் போல இருந்த மேட்டில் கிட்டத்தட்ட cinnamon bittern ஆனால் வேறு நிறத்தில்.

Prakash sir என்று நான் அலறும்  முன்  யாரும் விட்டுவிடாதீங்க அங்கேயிருக்கிறது  yellow bittern என்றார். அதுவும் இரண்டு. அதில் ஒன்று எனக்காக மிகவும் அழகாக அமர்ந்து கொண்டே இருந்து நான் பார்த்த பிறகு தண்ணீர்க்கு மேல் மெல்லப் பறந்து வேறு தீவில் உள்ள செடியில் அமர்ந்தது.இன்றைக்கு இந்த இரண்டு போதும், கண்கொள்ளாக் காட்சி என்று அசைப் போட்டுக் கொண்டு வீடு திரும்பிய பிறகும், பின் தொடர்ந்த நாட்களிலும் உங்கள் தளத்தில் அதைப்பற்றிதான் நீங்களும் அஜிதனும் உரையாடினீர்கள் என்று ஒரு நினைவும் இல்லை.

மறுபடியும் warbler, மறுபடியும் தேடல் ஒரு பிடி கிடைக்கவில்லை.சரி என்றைக்காவது அதற்க்கு விடிவு வரும் என்று சலித்து மறைந்த பிறகு உங்கள் புத்தகத்தில் கிடைத்தது விடை.குருகு என்று துளிகனவின் அத்தியாயத்தில் பார்த்து, அது cinnamon bitternஎன்று தெரிந்தபிறகு, ஆஹா. இதை வார்த்தையில் விவரிப்பது மிகவும் கடினம்.என்னுடைய முட்டாள்தனத்தில் நானே உருவாக்கிய புதிர் விடுபட்டது. அன்று நேரில் பார்த்தது போல பரவசம் .என்ன பறவை என்று தெரிந்து  உடனே அதை நான்  பார்த்துமிருக்கேன்  .இது ஒரு தற்சயலாக நடந்த நிகழ்வு. ஆயினும் அதில் எனக்கு ஏதோ ஒரு செய்தி இருப்பது போல  உவகை  ஜெயமோகன் பார்த்ததை நானும் பார்த்தேன் என்று ஒரு பெருமை.

இந்தத் தேடல் ஒரு தொடக்கம் தான்.எத்தனை கேள்விகள் எழும்புகின்றன. அந்தக் காலத்தில் இருந்த பறவைக்கும் இப்பொழுது நாம் காண்பதும் ஒன்றா, பரிணாமமாற்றங்கள் எத்தனை இருந்திருக்கும், எத்தனை அழுத்தங்களை தாங்க முடியாமல் அந்த  ஜீவன்  மடிந்திருக்கும்.Archeopteryx தவிர பறவைகள் பதைவடிவம் (fossils) இருக்கா.தமிழகத்தில் இருக்கா. இவ்வகை இனங்களோடு நாமும் சேர்ந்து ஒரே பரிணாம பாதையில் பயணித்துக் கொண்டேயிருக்கிறோம்.அவரவர் பாதை வேறு. மைல்கல் வேறு.சென்று கொண்டேயிருப்பது தான் வாழ்க்கையா?

நான் எழுதியிருப்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். தமிழகத்திலிருந்து முப்பது ஆண்டுகள் விலகி முதன் முதலாக எழுத முற்படும் என் நடையில் தவறுகள் இருக்கலாம். நான்  இதை எழுதுவதே என் நன்றியை தெரிவிக்கத்தான். ஏதோ ஒரு வகையில் உங்கள் தளத்தில் நீங்கள் எழுதுவது என் போன்ற வாசகர்களை பாதிக்கிறது, உயிரூட்டுகிறது, உற்சாகத்தை தருகிறது, சோர்வில்லாமல் இன்னும் தெரிய வேண்டும் என்று தேடச் சொல்லுகிறது. இந்த தேடல் இன்றும் விரிவாகட்டும். என்னுடன் நீங்கள் எப்பொழுதும் இருங்கள் என்று கூறி வணங்கி.

அன்புடன்
மாலதி
கோவை

முந்தைய கட்டுரைகளிற்றியானை நிரை – ஆதன்
அடுத்த கட்டுரைதமிழக கல்வெட்டு அட்டவணை