பொன்னியின் செல்வன், ஓநாய்குலச் சின்னம் – கடிதம்

இனிய ஜெயம்

பொன்னியின் செல்வன் வெளியாகி ஓராண்டு. சரிதான் அதையும் கொண்டாடி வைப்போமே என்று முடிவு செய்து நேற்று ஒரே இரவில் இடைவெளியே இன்றி அடுத்தடுத்து இரண்டு பாகங்களையும் பார்த்து முடித்தேன்.  படம் வெளியான போது, முதல் போஸ்டர் துவங்கி பட வெளியீடு வரை தொடர்ந்து வந்து விழுந்த எதிர்நிலை விமர்சனங்கள் எல்லாம் அன்று என் படம் பார்க்கும் மன நிலைக்கு இடையே நின்றிருந்தன. இன்று அவையெல்லாம் எங்கோ ஆவியாகிவிட்டதால் இம்முறைதான் பளிச் எனும் உணர்வுடன் படம் பார்க்க வாய்த்தது.

(கமல் குரலில்) கதைசொல்லி நமக்கு சொல்லும் சோழர்களின் கதையை, மணிரத்னம் அவர்கள் சிறந்த காட்சி அழகுடன், மணிரத்னம், ஜெயமோகன், மற்றும் குமரவேல் கூட்டணியின் திரைக்கதைக் கட்டுமானம் கொண்டு, சிறந்த நடிகர்களின் பங்களிப்பு வழியே, இசைப் புயல்          ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுடன் இணைந்து (கிட்டத்தட்ட ஓபரா இசை நாடகம் போல) ஒரு மென் பரவச அனுபவமாக கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு திரைவடிவம் தந்திருக்கிறார்.

ஒரு ஓபரா இசை நாடகம் ஒன்றின் வழியே நுழைந்து, ரியோ டி ஜெனிரோ கார்நிவல் ஒன்றை குறுக்கே கடந்து வெளியேறி வந்து நின்ற அனுபவம். ஆதித்த கரிகாலன் நந்தினி என்ற இருவரின் காதல் மோதல் பயணத்தின் ஊடே பின்னிச் செல்லும் அரசர் ஊமை ராணி, வந்திய தேவன் குந்தவை, அருண்மொழி படகுக்கார பூங்குழலி என மூன்று வெவ்வேறு காதல் கதைகள், வால் வெள்ளி சாட்சியாக நிகழப் போகும் அரச வம்சத்து மரணம் எனும் நம்பிக்கையை தொடர்ந்து  விரியும் அரியணை சதிகள், அதன் ஒவ்வொரு கூறும் என எல்லாமே மிக சரியாக களைமாக்ஸ் இல் வந்து நிறையும் சூழல், என முதல் பகுதியில் பாத்திர அறிமுகம் அவற்றுக்கு இடையிலான பிரச்னை, இரண்டாம் பகுதியில் பிரச்னையின் பின்னலும் தீவிரமும் அது அவிழ்வதும் ஆக, கதையின் பல்வேறு ஒடைகளும் மிக சரியாக வந்து சங்கமிக்கும் களைமாக்ஸ் கொண்டு உண்மையில் எனக்கு இது “எப்படியா இது” எனும்படிக்கான ஒரு பரவச திகைப்பூட்டும் அனுபவமாகவே இருந்தது.

பொன்னியின் செல்வன் விவாதங்கள், வாங்க
பொன்னியின் செல்வன் விவாதங்கள் ஒரு நூல்

உட்ச பட்ச போர் வெறியுடன் ஒரு போர் தெய்வம் என குதிரையில் விரைந்தபடி அறிமுகமாகும் ஆதித்தகரிகாலன், ஒரு ராஜ நாகம் போல நின்றிருக்கும் நந்தினி முன் கொந்தளிக்கும் தனது மனம் போலவே கொந்தளிக்கும் குதிரையை கடிவாளம் கொண்டு அடக்கியபடியே பேசும் ஆதித்த கரிகாலன். நெஞ்சில் பதிந்த கட்டாரி போன்ற காதலை சுமந்து திரியும் ஆதித்த கரிகாலன், எல்லாம் முடிந்து ஐந்து குதிரைகள் பூட்டிய ரதத்தில் சாவால் மட்டுமே அவனுக்கு அளிக்க முடிந்த முற்ற முழு அமைதியோடு அவன் பயணிப்பது வரை உள்ள முழுமை, பற்றி எரியும் அரண்மனையில் நிழல் தோற்றம் என ஆதித்த கரிகாலன் உடலை சுமந்து வரும் வந்தியத்தேவனை பற்றி எரியும் அகதுடன் ஒரு நடைப்பிணமாக அவன் இருக்கிறான் என்பதை அவ்விதமாக காட்சிப் படுத்திய விதம், வானத்திலிருந்து தேவர்கள் தரை இறங்குவது போல, பழுவேட்டரையர் அருண்மொழி போன்ற பாத்திரங்கள் ( குந்தவை நட்சத்திரம் ஒன்று பெண் வடிவு கொண்டு மண் தொட்டத்தை போல அறிமுகம் ஆவார்) அறிமுகம் ஆகும் விதம், அதிகார மையங்களை நோக்கிய காமிரா கோணங்கள், குறிப்பாக நந்தினியும் குந்தவயும் முதன் முதலாக சந்திக்கும் படிக்கட்டு காட்சி, என ஒட்டு மொத்த காட்சிகள் வழியே கொண்ட முழுமை, காட்சிக்கு பின் உள்ள கற்பனை விரிவு, காட்சிகளின் இருப்பு வழியாக மட்டுமே ஒட்டு மொத்த படத்தின் உள்ளுணர்வை கட்டமைத்த விதம் என எல்லா வகையிலும் இந்திய சினிமாவின் மிக சிறந்த இயக்குனர் தானே என்பதை மணிரத்னம் மீண்டும் ஒரு முறை திரையில் எழுதிக் காட்டி இருக்கிறார்.

உலகு நோக்கிய இந்திய சினிமா எனும் ஓட்டத்தில் பாகுபலி, r r r இவற்றை, சினிமா மொழி அறிந்த உலகின் முக்கிய இயக்குனர்கள் எவரேனும் பார்க்க நேர்ந்தால் சரிதான் என்றபடி மெல்லிய புன்னகையுடன் அதை கடந்து விடுவார்கள். மாறாக இந்த பொன்னியின் செல்வன்தான் அந்த’ உலகு நோக்கிய இந்திய சினிமா’ எனும் கனவுக்கு மிக சிறந்த பிரதிநிதி. உலகு நோக்கிய இந்திய சினிமாவின் பிரதிநிதி, அதே சமயம் இந்த பொ செ உலகு நோக்கிய தமிழ் சினிமாவின் பிரதிநிதியும் கூட. இந்த கலவையில் வெல்வது எவ்வளவு அரிதான விஷயம் என்பதை, ஜீன் ஜியோங் இயக்கிய (புகழ் பெற்ற செவன் இயர்ஸ் இன் திபெத் படத்தின் இயக்குனர்) சீனா சார்பாக 2015 இன் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட உல்ப் டோட்டம் படத்துடன் ஒப்பு நோக்கினால் விளங்கும்.

சீனா தனது பெருமிதம் சார்ந்து உலகு நோக்கி தொடர்ந்து அனுப்பி வரும் படங்களின் வரிசையில் பிரெஞ்ச் மற்றும் கொலம்பியா பிக்சர் கூட்டணி சேர்ந்து அது உருவாக்கிய படம்தான் உல்ப் டோட்டம். ஜியாங் ரோங் எழுதிய உலகு தழுவி அறியப்பட்ட நாவலை ஜீன் ஜியாங் கொண்டு ( இவரது செவன் ஐயர்ஸ் இன் திபெத் படம் சீனாவில் தடை செய்யப்பட ஒன்று) பிரஞ்ச் அமெரிக்க விநியோக கூட்டணியுடன் டைட்டானிக் பட இசை அமைப்பாளர் இசையுடன் தயாரித்து உலகு நோக்கி அனுப்பியது.

பொ செ அனுபவித்த அதே சிக்கலை இந்த பட இயக்குனரும் சந்தித்தார். முதலாவது, நாவல் பேசும் 1960 இன் அந்த நிலம் இப்போது அங்கே கிடையாது. நாவலே அது குறித்துதான். இரண்டாவதும் பிரதானமானதுமான சிக்கல் மொத்த படத்துக்கும் முதுகெலும்பாக அமையும் ஓநாய் கூட்டத்தை ஸ்டார்ட் கட் வழியே உருவாகும் சினிமாவுக்குள் கொண்டு வருவது. பழகிய நாய்களுக்கு வேஷம் போட்டாலோ, வரைகலையை பயன்படுத்தினாலோ கொஞ்சம் பிசகினாலும் முக்கிய காட்சிகள் கேலிக்கூத்தாக மாறி விடும். இந்த இரண்டு பிரச்னைகளையும் இரண்டு வருடங்கள் எடுத்து எவ்விதம் இயக்குனர் தாண்டி வந்தார் என்பதன் மீது நல்லதொரு ஆவணப்படம் இருக்கிறது.

எப்போதும் போல எழுந்த சிக்கல் எழுத்துக்கும் காட்சிக்கும் இடையிலானது. பொன்னியின் செல்வனில் மணிரத்னம் எவ்விதம் சீன் கம்போசிஷன், மற்றும் ஷாட் டிவிஷன் செய்தாரோ அதே முறையில் ஜீன் ஜியாங் கும் இந்த நாவலை படமாக மாற்றினார். இரண்டு இளைஞர்கள் பீஜிங்கில் இருந்து கிளம்பி மங்கோலியா புல்வெளி கிராமம் ஒன்றுக்கு வந்து இறங்கும் முதல் சீனை, வெறும் நான்கு நிமிடங்களில் ஆன ஐந்தே ஷாட்டுகளில் (ஒவ்வொன்றும் பிரும்மாண்டம். பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலன் ஐந்து குதிரை பூட்டிய ரதத்தில் போர் வீரர்கள் புடை சூழ இறுதி பயணம் போகும் பிரம்மாண்ட ஷாட் வெறும் ஆறு செகண்ட்)  முடிதிருப்பார். மனிதர்கள் ஓநாய் மோதல் என்று வருகையில் கூஸ் பம்புகள் தெறிக்க விடும் எல்லா வாய்ப்புகள் இருந்தும் அதை தவிர்த்துவிட்டு உள்ளது உள்ளபடி என்பதில் உள்ள காட்சி இன்பத்துக்கு மட்டுமே முதன்மை கவனம் அளித்திருப்பார், நாவலின் மொத்த அத்தியாயங்களுக்கும் வசீகரிக்கும் பொழுதுகள், நிலக் காட்சிகளின் பின்புலத்தில் சர சர சர என நகரும் காட்சிகளை அமைத்து மொத்த படத்துக்கும் ஒரு இறுக்கமான அமைப்பை தந்திருப்பார்.

எல்லாமே சரியாக செய்தும் விளைவு ஏமாற்றமாக அமைந்து விட்டது. நாவலின் மைய பேசு பொருளுக்கு நேர்மையாக இருந்த வகையில் அந்த படம் சினிமா வணிகம் கோரும் டெம்ப்ளேட் பிரெஞ்ச் படம் போலவே, சீன படம் போலவோ, ஹாலிவுட் படம் போலவோ இல்லாமல் போனதால் இந்த நிலத்தின் சினிமா பார்வையாளர்களை படம் கவர வில்லை. நாவல், ஒரு வேட்டைக்காரனின் இருப்பும் பார்வையும் போல பொறுமையும் துல்லியமும் கொண்ட காட்சி அனுபவத்தை மொழி வழியே அளிப்பது. மொழி வழியே இலக்கியம் கொள்ளும் இந்த விஸ்தார ஆலாபனை சினிமாவுக்கு கிடையாது, அது  உடனடியாக  காட்டி விடும். இதன் காரணமாக சினிமா பார்ப்பது என்றால் என்ன என்பதை அறியாத நாவலின் வாசகர்களால் படம் நாவல் படிச்ச மாதிரி இல்ல எனும் ஒரே வார்த்தையில் படம் நிராகரிக்கப்பட்டது.

இந்த எல்லா இடரிலும் சிக்கி சரியும் எல்லா வாய்ப்புகளும் பொன்னியின் செல்வனுக்கும் இங்கே இருந்தது. காரணம் இங்கே பல உலக சினிமா பாறைகளுக்கு கூட சினிமா பார்ப்பது என்றால் என்னவென்று தெரியாது. நான் விரும்பும் ஒரு உலக சினிமா விமர்சகர் ‘ இந்தியாவில் சரித்திர படம் எடுப்பதில் சிறந்தவர் சஞ்சய் லீலா பன்சாலிதான் ‘ என்று அபிப்ராயம் தெரிவித்திருந்தார். இலக்கிய வாசகர் பலருக்கும் கூட படம் பார்ப்பது என்றால் என்ன என்று தெரியாது. உதாரணத்துக்கு ஒரு இலக்கிய வாசகர் இப்படி எழுதி இருந்தார் ‘ விக்ரம் குதிரையில் போருக்கு வரும்போது அவர் நெற்றியில் பட்டை இருக்கிறது, அடுத்த ஷாட் இல் அது இல்லை ‘ கண்டு பிடித்து விட்டாராம். நுட்பமான வாசகராம். அதாவது இத்தனை படம் இயக்கிய ஒரு இயக்குனருக்கு இன்னும் கண்டினியுட்டி மிஸ்டுக்கே பார்க்க தெரியாது என்பதே அதன் பொருள். அவருக்கு முதலில் ஷாட் டிவிஷன் என்றால் என்ன என்று விளக்க வேண்டும், அதை ஒரு அழகியலாக கொண்டு படத்தின் டைம் ஸ்பான் எவ்விதம் கட்டமைக்க படுகிறது என்று அடுத்து விளக்க வேண்டும், பிறகு விக்ரம் வாளை உருவும் ஷாட்டுக்கு அடுத்த ஷாட்டே அவர் போரின் உச்ச கணம் எதுவோ அதில் இருக்கிறார் என்பதை விளக்க வேண்டும், அனைதிருக்கும் பிறகும் அப்டின்னா இது என்றபடி இதே போல அறியாமை கொண்டு வேறு ஒன்றை எடுத்துக் கொண்டு வருவார். இவர்களே இந்த நிலையில்தான் என்றால் யூடியூப் வாயர்களும் முகநூல் ஒட்டுண்ணிகளையும் என்ன என்று சொல்வது. இத்தகு நிலையில்தான் இங்கே பொன்னியின் செல்வன் இரண்டு பாகமும் பெரிய பட்ஜெட் முதல் போட்டு வெளியாகி, விமர்சனம் கடந்து வெகு மக்களை கவர்ந்து, தயாரிப்பாளர் முதல் அரங்க உரிமையாளர் வரை அனைவருக்கும் லாபத்தை ஈட்டி தந்திருக்கிறது.

யூ ட்யூப் முகநூல்  ஆசாமிகளில் பலர் ஒட்டுண்ணிகள். தனித்த வாழ்வு அவர்களுக்கு கிடையாது. ஏதேனும் ஒரு பெரு வாழ்வை ஒட்டி கடித்து அதன் இரத்தத்தை உருஞ்சி குடித்துதான் அவற்றால் உயிர்திருக்க முடியும். அதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது போனது பொன்னியின் செல்வன். எத்தனை எத்தனை வெற்று கூச்சல்கள். இந்த வெற்று கூச்சல்களால் நிச்சயம் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு வணிகத்தில் பெரிய பாதிப்பை செலுத்த முடியும் என்பதே இன்றைய நிலை. இந்த வெற்று கூச்சல் கொண்டு வந்து சேர்க்கும் ஆபத்தை வெற்றிகரமாக இதை ஒரு விவாத முகம் என்று மாற்றி முறியடிக்கப்பட்டது ஜெயமோகன் தளம் வழியே.

அந்த வரலாறும் அடங்கிய நூலே பொன்னியின் செல்வன் ஒரு விவாதம் நூல். பொன்னியின் செல்வன் படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நாள் தொட்டு, முதல் போஸ்டர், முதல் டீஸர், முதல் சிங்கிள், ஆடியோ லாஞ்ச், திரைப்பட வெளியீட்டு நாள் வரை தொடர்ந்த விவாதங்களின் தொகுப்பான இந்த நூல் அடிப்படையில் மூன்று சரடுகள் கொண்டு பின்னப்பட்டது. முதல் சரடு வரலாறு, இரண்டாவது சரடு இலக்கியம், மூன்றாவது சரடு சினிமா.

வரலாறு எனும் சரடில் தமிழ் நிலத்தில் வரலாற்றியல் முறைமை வளர்ந்து வந்த முறைமை, இன்றும் எஞ்சும் விடுபடல்கள், அதில் சோழர் வரலாறு எழுதப்பட்ட வகை, தெலுங்கு சோழர்கள், சோழர்களும் பிராமணர்களும், சோழர் கால சமூகம் கட்டப்பட்ட விதம், சோழர் கால கலைகளும் அது செழித்த விதமும், சோழர் காலம் பொற்காலமா போன்ற வினாக்கள் எல்லாம் விளக்கம் பெறுகின்றன.

இலக்கியம் எனும் சரடில் இலக்கியமாக பொன்னியின் செல்வனின் இடம் என்ன? இலக்கியத்தில் இடம்பெறும் வரலாறு அதன் எல்லை இப்படி பல விஷயங்கள் விளக்கம் பெறுகின்றன.

சினிமா எனும் மூன்றாவது சரடில் இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையேயான தொடர்பு துவங்கி இன்றைய 2023 இன் பொது மனம் சினிமா சார்ந்து எழுப்பும் பெரும்பாலான கேள்விகளை, அறியாமைகளை விவாதிக்கிறது. இதில் எனக்கு பிடித்தது காழ்பு சார்பு இன்றி இந்த சினிமாவை உயர் கேளிக்கை எனும் வகைமைக்குள் வைத்து நேர்நிலை  விமர்சனம் அளித்த மலையாள இதழ் கட்டுரை. அதே போல காய்தல் உவத்தல் இன்றி சினிமா எனும் கலையை அறிந்து எழுதப்பட்ட கோம்பை  அவர்களின் எதிர்நிலை விமர்சனம். இந்த சினிமா சார்ந்த எல்லா அர்த்தமற்ற கெக்கலி பதிவுகளும் ஆவிஆகிவிட,  இனி வருங்காலத்தில் எஞ்சப்போகும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல், மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம், ஜெயமோகனின் பொன்னியின் செல்வன் ஒரு விவாதம் என்ற இந்த மூன்றின் வரிசையில் இந்த நூலை மிகுந்த முக்கியத்துவம் கொள்ள வைக்கும் மற்றொரு விஷயம் ஒரு கட்சி துவங்கிய சோழர்கால பாசன வழிகளை மீட்டு மறு சீர் அமைப்பு செய்வோம் எனும் கோஷம். கட்சி நூறை சொல்லும் இரண்டை மட்டுமே நடைமுறை படுதும் இதுவே யதார்த்தம் என்றாலும், இப்படி ஒரு சொல் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்பதன் ஆவணம் இந்த நூல். அந்த சொல் ஒரு விதை. அந்த விதை என்றேனும் முளைத்தெழும்.  அது வரை அந்த விதை அங்கே பாதுகாக்கப்படட்டும்.

பின் குறிப்பு:

https://youtu.be/LIwWa-WkCak

உல்ப் டோடம் திரைப்படம் பொன்னியின் செல்வன் வெளியான அதே ott இல் பார்க்கக் கிடைக்கிறது.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஅம்பைக்கு விருது
அடுத்த கட்டுரைபெண்களுக்கான உலகம் -கடிதம்