படையல் வாங்க
இனிய ஜெயம்
நான் முதன் முதலாக ராணி மங்கம்மாள் பெயரை கேள்விப்பட்டது பாட நூல் வழியே அல்ல, அரசு பேருந்தின் பெயர் வழியே. முன்னர் (அதாவது 89 வரை இருக்கலாம்) அரசு பேருந்துகளுக்கு மாவட்டம் தோறும் முக்கிய வரலாற்று ஆளுமை சார்ந்த பேர்களை சூட்டி இருந்தார்கள். கடைசி பெரியார் போய்ட்டானா, ஏழரை நேசமணி வந்துட்டானா, தீரன் சின்னமலை மரத்துல முட்டிட்டான், போன்ற பதங்களை சாதாரணமாக கேட்டிருக்கிறேன். அந்த வரிசையில் கோயில்பட்டி பக்கம் மங்கம்மா வந்துட்டா… மங்கம்மா பெய்ட்டா… போன்ற பதங்கள் வழியேதான் அந்த பெயர் எனக்கு முதல் அறிமுகம்.
இரண்டாவதாக எங்கள் நாடார் குலத்தின் பிற கிளைகளின் கூடை முடை அய்யனார் போன்ற குல தெய்வ கோயில்களில் ஓரத்தில் மங்கம்மாள் தெய்வ சிலை கண்டிருக்கிறேன். நாடார் குலம் உட்பிரிவுகள் கடந்து ஒன்றிணைந்து, சிவகாசி பகுதியில் வணிக உரிமைகள் பெற்று சமூக ரீதியாக மேலே வர ராணி மங்கம்மாள் உருவாக்கி அளித்த பல வணிக உரிமைகளே காரணம் என்பதை அதன் பின்னுள்ள கதையாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த முன்னெடுப்பின் பின்னுள்ள சமூக அசைவின், வரலாற்று சுழிப்பின் மீது அமைந்த மங்கம்மாள் சாலை கதையை நேற்று இரவு வாசித்தேன். கணியான் சொல்லில் எழும் முட்செடிகள் பூத்து சிரிக்கும் வெம்பாலையில், உமிதீ போல, இருக்குன்னும் இல்லன்னும் நீறி நீறி நிகழும் அந்த வாழ்வை, எண்ணி இரவெல்லாம் தூக்கம் தொலைத்தேன்.
மதுரை முதல் நெல்லை வரை பல நூறு ஆண்டுகாலம் அவ்வாறே கிடந்து நீண்ட வெம்பாலையை, சாலை போட்டு திருத்தி, ஊராக்கி பல குடிகளை வாழ வைத்த ராணி மங்கம்மாள், அந்த சாலையை அமைத்ததில் கண்ட இடர்களை, அதில் வென்ற வகைமையை பேசும் வரலாற்றின் ஒரு சரடு. மங்கம்மாள் எனும் ஊரின் அன்னைத்தெய்வம், மோகூரம்மன், எல்லைக் காவல் கருப்புசாமி போன்ற பல குடித்தெய்வங்களை பிறப்பிக்கும் பண்பாட்டு அசைவின் ஒரு சரடு.பல வருடம் கழிந்தும் இவையெல்லாம் கணியான் நாவில் வாழும் தெய்வத்தின் சொல்லிலும் கதைகளிலும் அழியாது வாழும் கலையின் ஒரு சரடு. இந்தக் கணியான் கலை சித்தரிக்கும் வரலாற்று பண்பாட்டு அடுக்கின் சாராம்சமான ஒன்றை தனது கள்ளமின்மை வழியே சென்று தொட்ட இளம் பரதேசி ஒருவனை, சாமியார் ஒருவர் தனது சீடனாக கண்டடையும் ஆத்மீக பயணத்தின் ஒரு சரடு, இந்த நான்கு சரடுகளும் பின்னிப் விரிந்து அபாரமான சமநிலை ஒன்றில் நிறையும் கதை.
தோற்று இருநூறு முன்னூறு ஆண்டுகளில் வரலாற்றை பண்பாட்டை இழந்த பல பத்து மறவர்குடி, சிக்கும் எவரையும் அடித்துக் கொன்று திருடி, வெறும் குருதி அள்ளி உண்ணும் மிருகங்கள் என்றாகி வாழும் மதுரை முதல் நெல்லை வரையிலான பாலை வெளி. அரசு பரிபாலனம் இல்லாத, எனவே சமூகம் என்றோ வாழ்வு என்ற ஒன்றோ இல்லாத நிலம். கனவில் வந்து சொன்ன மீனாட்சி உத்தரவின்படி அதில் சாலை போட்டு ஊரை உருவாக்க முனைகிறார் ராணி மங்கம்மாள். அது சாத்தியமே இல்லை எனும்படிக்கான இடர்களை தனது ராஜ தந்திரம் வழியே வெல்கிறாள்.
அந்த நிலத்தில் குடிகளை இணைத்தோ வென்றோ எழுந்து வரும் குடித் தலைவன் எவனோ அவனுக்கே இனி அங்கே எழப்போகும் ஊர்களுக்கு நீதி நிர்வாக அதிகாரம் கொண்டவன் என முரசு அறைகிறாள். அப்படி எஞ்சி வரும் தலைமைகள் வழியே அந்தப் பாலை நிலதுக்குள் நீதி நிர்வாகத்தை கொண்டு வந்து, பின்னர் சாலையை கொண்டு வந்து, சாலை நெடுக சத்திரங்களை கொண்டு வந்து, வாணிப செட்டியார்கள் வழியே வணிகத்தை கொண்டு வந்து, படிப்படியாக அந்த நிலம் முழுமையும் மங்கம்மாள் ஊராக மாற்றுகிறார். புது வாழ்வு கண்ட பல குடிகளுக்கு அவர் தெய்வம் என அமைகிறார்.
இறுதியில் எஞ்சும் வலிமை கொண்ட ஒரு குடிகளில், மோகூறான் குடிக்கும், குன்னூறான் குடிக்கும் இடையே இறுதி போர் நிகழ விருக்கும் சூழலில் இரு குடிகளின் தெய்வங்களும் சன்னதம் வழியே எழுந்து வந்து, மோகூறான் மகள் மீனாட்சியை குன்னூரான் மகன் புலியன் மணக்க வேண்டும் என அருள்வாக்கு சொல்கின்றன. போர் நிகழாது, குடிகள் இணையும், அரசு பட்டம் வழியே அதிகாரமும் அதன் வழியே குடி உயர்வும் கிடைக்கும். மீனாட்சி செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இதற்கு குறுக்கே நிற்கும் அவள் காதலன் கருப்பனை அவளே அவன் தலையை வெட்டி கொல்ல வேண்டும். பின்னர் புலியனை மணந்து பல நூறு வருட மிருக வாழ்வில் இருந்து மீட்டு ஊருக்கு சுபிக்ஷம் கொண்டு வர வேண்டும்.
மொகூரம்மன் என அமைந்த தெய்வத்தின் குடிகள் சொல்லும் இரண்டு கதைகளை காணி கூறுகிறார். முதல் கதையில் தனது பிரியத்தை கொன்று ஊரின் பொருட்டு வாழ்ந்த மீனாட்சி தெய்வமாகிறாள். இரண்டாவது கதையில் ஊர் என்ன படைத்த அந்த தெய்வமே வந்து சொன்னாலும் என் காதலனை கைவிட மாட்டேன் என்று சொல்லி அவன் காலடியில் தன் கழுத்தை அறுத்து விழுந்து உயிரை விட்ட மீனாட்சி தெய்வமாகிறாள். இரண்டில் எது சரி? மீனாட்சி இந்த இரண்டில் எந்த முடிவை எடுத்திருப்பாள்?
காணிக்கும் இளம் பரதேசிக்கும் இடையே இரண்டு குணத்துக்கு இடையே ஒரு மையப் பாதை குண நலம் கொண்டு சாமியார் வருகிறார். சாமியார் குறித்து பெரிதாக எந்த பின் கதையும் இல்லாத கதையில் காணி குறித்தும் இளம் பரதேசி குறித்தும் பின் கதைகள் வழியே அவர்கள் குணங்களும் மெல்ல மெல்லத் துலங்கி வருகிறது.
நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் இருக்கும் அவனது தெய்வம் அவனது நாவில் குடி கொண்டு அவன் சொல்லும் கதைகள் வழியே எழும் வாழ்வை கொண்டவன் காணி. கதையின் நல்லது மட்டுமே சொல்லி பட்டும் பொன்னும் பெறுபவன் அல்ல, கதையின் கெட்டதையும் சொல்லி வெறும் கஞ்சிக்கு அல்லாடி வாழ்பவன்.இளம் பரதேசியோ வெகுளி, துயரம் என்றால் என்ன என்பதே அறியாதவன். தன் இயல்பால் எவர் மீதும் எதன் மீதும் எந்த தீர்ப்பும் சொல்லிவிடாத சமன்வய இயல்பினன்.
இந்த இரண்டு கதையில் எது சரி? எது தவறு? அல்லது இரண்டுமே சரியா? இளம் பரதேசி வசம் வினவுகிறார் சாமியார். இந்த இளைஞன் வயதில் இருக்கும் போது இதே கேள்வியை காணி தனது மூத்த காணி வசம் கேட்கிறார். அதற்கு மூத்த காணி சொல்லும் பதில் “இரண்டு கதைகளுமே சரி என்று உனக்கு எப்போது படுகிறதோ அப்போதுதான் நீ முழுமையான காணி ஆவாய்” என்பது. இந்த இரண்டு கதையில் எது சரி எது தவறு என்று தெரியாமல் இதோ இந்த ஐம்பது வயது கடந்தும் உழன்றுகொண்டு இருக்கிறார் காணி.
இளம் பரதேசிக்கு பதில் தெரியும். அவன் என்ன பதிலை சொல்வான் என்று சாமியாருக்கும் தெரியும் எனவே பதிலை நீயே மூடி வைத்துக்கொள் என்று சொல்லி சாமியார் அவனை தனது சீடனாக வரித்துக் கொள்கிறார். சீடன் சாமியார் பின்னே போக, காணி அழுதபடி அந்த இடத்திலேயே நிற்கிறார்.
சீடனுக்கும் குருவுக்கும் தெரிந்த, கானிக்கு தெரியாத அந்த சரியான பதில்தான் என்ன? சீடனின் நிலையில் இருந்து பார்த்தால், அவனுக்கு அவனை ஊட்டி வளர்த்த அன்னையும், சோறு போடாமல் துரத்தி விட்ட அண்ணியும் ஒன்றுதான். இருவர் மீதும் அவனுக்கு ஒரு புகாரும் இல்லை தீர்ப்பும் இல்லை. காணி இரண்டு கதைகளை சொல்லி முடிக்கும் போதும் அவன் இரண்டுக்குமே சரி என்றுதான் ஆமோதிக்கிறானே அன்றி அவன் இரண்டு கதைகளில் எதன் மீதும் தீர்ப்பு சொல்லவில்லை. அவன் அளவில் இரண்டுமே ஒரே அன்னையின் இரண்டு செயல்கள்தான். அவன் அன்னை எது செய்கிறாளோ அது சரிதான். அந்த வகையில் அவன் முன்னால் இருக்கும் ஒரே அன்னையின் இரண்டு செயல்களில் எதை மறுத்தாலும் அவன் ஒரே அன்னையை மறுத்ததாகவே அமையும். தன் இயல்பான கள்ளமிண்மை வழியே இந்த எதிரிடயை இருமையை கடக்கிரான் சீடன். கடந்து குரு எங்கே நிற்கிறாரோ அங்கே சென்று விடுகிறான். இந்த இருமையை கடக்க இயலாது நின்று விடுகிறார் காணி.
மோகூரம்மன் ஒரு தெய்வம், கருப்பு சாமி மற்றொரு தெய்வம். தப்பு சரி வழியே உருவான தெய்வங்கள் அல்ல இவை, சரி தவறுக்கு வெளியே, நன்மை தீமைக்கும் வெளியே நிற்கும் அந்த ஒரே தெய்வத்தின் பல்வேறு முகங்கள்தான் இவை. நன்மை தீமைக்கு அப்பால் இருக்கும் அந்த தெய்வத்தை, கானியால் உணர முடியாத அந்த தெய்வத்தை, சீடன் தனது இயல்பால் அறிந்து வைத்திருக்கிறான். இந்த கதையின் மங்கம்மாள் கூட சரி தவறுக்கு அப்பால், நன்மை தீமைக்கு அப்பால் நிற்கும் தெய்வம்தான்.
உங்களது மிகச் சிறந்த கதை வரிசைகளில் முதன்மையாக சென்று அமையக்கூடிய கதை இது ஜெ.
கடலூர் சீனு