மேடையுரைப் பயிற்சி, கடிதம்

அன்புள்ள ஜெ,

“சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்றார் ஜெ. நான் டம்ளருக்குள் ஸ்பூனை விட்டு தேடிக்கொண்டிருப்பதுபோல் உணர்கிறேன்.” என்றான் அருகில் இருந்த நண்பன். சிறு பொட்டல் வெளி வழியே செல்லும் அந்த  மலைப்பாதையில்தான் சற்று ஜியோ இணைப்பு கிடைக்கும் என்று காரின் நான்கு கதவுகளையும் திறந்து வைத்து ஆளுக்கொரு பக்கமாய் யோசித்தபடி அமர்ந்திருந்தோம். மேடை உரை பயிற்சி முகாமின் இரண்டாம் நாள் அனைவரும் 7 நிமிட உரை நிகழ்த்த வேண்டும் என நீங்கள் அனுப்பி வைத்த பிறகு உரைக்கான உள்ளடக்கத்தை தயாரிக்க ஆரம்பித்த தருணம் அது. வேலவன் விறுவிறுவென உரையை எழுதிவிட்டு அந்த பொட்டலில் தனி ஆளாக கைகளை ஆட்டி பேசியபடி உலவிக்கொண்டிருந்தார்.

முதல்முறை உரையாற்றியவர்களில் பெரும்பாலானோர் தரவுகளை மட்டும் முன்வைத்துப் பேசினோம். சொந்த துறைகள் பற்றிய தலைப்புகளே அதிகம். மறுநாள் அதே தலைப்பில் பேச முடியாது. உரையில் தரவுகள் மீதான எங்களுடைய அபிப்பிராயமோ, சிந்தனை வழியான தாவலோ இருக்கவேண்டுமென நீங்கள் வலியுறுத்தினீர்கள். கோர்வையாக, ஒற்றை மையச்சரடை விட்டு விலகாமல், முக்கியமாக சொந்த சிந்தனையை முன்வைத்து ஒரு 7 நிமிட உரையைத் தயாரிப்பது எவ்வளவு சிரமம் என உணர்த்தியது இந்த பயிற்சி முகாம்.

சமீபத்தில் ஈரோட்டில்  நடந்த வகுப்புகள் கிட்டத்தட்ட அனைத்திலுமே நான் இருந்திருக்கிறேன். எங்களை அதிக நேரம் சிந்திக்க வைத்து தொடர் உழைப்பைக் கோரிய வகுப்பு இதுதான். முகாமுக்கு அருகில் பறவைகள் அதிகம் என்பதால் மற்ற முகாம்களில் காலையும் மாலையும் பறவைகள் பார்க்க நேரம் அமையும். நிறைய நண்பர்கள் ஆர்வத்துடன் இருந்தும் அவற்றையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு உரையைத் தயாரிக்க வேண்டியிருந்தது. முகாம் இறுதியில் ஒருவர் மிச்சமில்லாமல் 30 பேரும்  மேடையில் இரு முறை பேசி முடித்திருந்தோம்.

இந்த மேடை உரை பயிற்சி முகாம் பெருமளவில் பயனளித்ததற்கு பயிற்சியை நீங்கள் வடிவமைத்த விதம் முக்கியமான காரணம்.

முதல் நியதி, உரையின் உள்ளடக்கம் மீதான எந்த விவாதத்துக்கும் இடமில்லை.

உரையில் முப்பது பேரும் முப்பது வகையான தலைப்புகளில் பேசினாலும் , எவருடைய கருத்தையும் ஒட்டியோ வெட்டியோ விவாதம் செல்ல அனுமதிக்கவே இல்லை. இந்த பயிற்சி ஒரு புதிய சிந்தனையை முன்வைப்பது எப்படி என்பது மட்டுமே. ஒருவர் சொல்ல வந்த கருத்து சரியா தவறா என்பது பற்றியது அல்ல என்று ஆரம்பத்திலேயே நீங்கள் அறிவுறுத்தியது பெரும் ஆறுதல். வெளியுலகில் நம் உரையின் உள்ளடக்கத்துக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். அது ஏற்கப்படலாம் , அல்லது மறுக்கப்படலாம். சிறைசெல்ல நேரிடலாம். ஆனால் மேடை உரை பயிற்சி முகாமில்  எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம், அதன்மீதான விவாதம் கிடையாது என்பது சிறப்பான உத்தி. அதிதீவிர பெண்ணியம் பேசியவர்களைக்கூட மறுவார்த்தை இன்றி அனுமதித்தது அந்த அவை என்றால் வராதவர்கள் நம்ப மறுப்பார்கள்.

மாதிரி உரைக்கான என்னுடைய தயாரிப்பில் ஒரு சறுக்கல் இருந்தது. அதை பிந்தியே கண்டறிந்தேன். “பின்தொடரும் நிழலின் குரல்” நாவலில் “ரஷ்யப் புரட்சி என்பது வால் நாயை ஆட்டிவைத்தது போல நடந்த ஒன்று” என்று ரிஷி சொல்லுவார். ஒரு உரை, கேட்பவரை சுண்டி இழுக்கும் ஒரு ஆர்வமூட்டும் கருத்து அல்லது நிகழ்விலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் நீங்கள் சொன்னது. ஆனால் நான் அப்படி ஒற்றை வரியிலிருந்து மொத்த உரையின் உள்ளடக்கத்தையும் உருவாக்க முனைந்தேன். வால் நாயை ஆட்டிவைப்பதுதான் அது. உரையின் மொத்த உள்ளடக்கத்துக்கான முகமாகவே அந்த திறப்பு அமையவேண்டும். அந்த திறப்பு வரியை முன்னரே அமர்த்திக்கொண்டு அதற்கான உள்ளடக்கம் தயாரிக்க அமர்ந்ததே என்னுடைய சறுக்கல். அதை உணர்ந்த கணமே பின் சென்று , கையிலிருக்கும் தரவுகளைக்கொண்டு இணையம் உயிருள்ள ஒரு கட்டமைப்பு என்ற இடத்தை வந்தடைந்தேன். அந்த தருணம்தான் அறிதலின் இன்பம். அதன் பின்னர் உரையின் திறப்பை சரியாக அமைக்க முடிந்தது. அந்த நேரத்தில் உரையின் உள்ளடக்கம் விவாதத்துக்குள்ளாகாது , வடிவம் சரியாக அமைய வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்த முடிந்தது பெரும் ஆறுதல்.

இரண்டாவது நியதி, உடல்மொழி மற்றும் குரலுக்கான பயிற்சியை இங்கு இணைக்காதது.

“அறிவார்ந்த சபையில் பயனுள்ள தரமான உரைகளை நடத்தும் சிறு குழுவைப் பயிற்றுவிப்பதே நோக்கம். ஒரே குரலில், ஒரே உடல்மொழியோடு, ஒற்றைக் கருத்தைப் பேசும் குழுவை உருவாக்குவது அல்ல.” என்பது தெளிவான இந்த வகுப்புகளுக்கான நிலைப்பாடு.

மூன்றாவது , உரைகளின்மீதான உங்களது உடனடி பின்னூட்டம்.

இதுதான் முகாமின் அதிமுக்கிய அம்சம். ஐந்து பேர் பேசிய உடனேயே அந்தந்த உரைகள் குறித்த உங்கள் அவதானிப்பையும் , எதை மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையையும் அப்போதே தெரிவித்தது.

எந்த துறையிலும் 10000 மணி நேர பயிற்சி வேண்டும் என்ற ஒரு ஆராய்ச்சி முடிவை மால்க்கம் க்ளாட்வெல் என்பவர் அவரது புத்தகத்தில் பிரபலப்படுத்தினார். ஆனால் புத்தகத்தில் இல்லாதது என்று ஆராய்ச்சியாளர் தெரிவிப்பது ஒன்று உண்டு. 10000 மணி நேர பயிற்சி மட்டும் போதாது, பயிற்சி முழுவதும் ஆசிரியரின் நுட்பமான பின்னூட்டம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். எந்த பின்னூட்டமும் இல்லாத 10000 (பத்தாயிரம்) மணி நேர பயிற்சியை விட, ஆசிரியர் கவனித்துப் பரிந்துரைக்கும் மாற்றங்களை உள்ளடக்கிய 1000 (ஆயிரம்) மணி நேர பயிற்சி பலமடங்கு பயனளிக்கும் என்பதே ஆராய்ச்சியின் முடிவு.

முப்பது பேர் இரு முறை உரையாற்றினோம். 60 உரைகளை நேரில் கேட்டு , அவற்றின் மீதான உங்கள் கருத்துக்கள்,  அவை எப்படி இருந்திருக்கலாம் என்று உங்கள் பின்னூட்டம் அனைத்தும் அப்போதே கிடைத்தது. இது உரையாற்றியவர்களுக்கு நேரடியாக உதவியது.  மட்டுமல்லாமல் அங்கிருந்த அனைவருக்குமே ஒவ்வொரு உரையின் வடிவ ரீதியிலான விமரிசனம் இருக்கும். அவர்களும் உங்கள் கருத்துக்களிலிருந்து துரிதமாக கற்றுக்கொள்ள முடிந்தது.

இலக்கிய வட்டத்தில் மேடை உரை முகாமில் கலந்துகொள்ள முடியாத நண்பர்கள், முக்கியமாக வெளிநாட்டில் இருப்பவர்கள், முகாமில் கிடைத்ததை பகிர்ந்துகொள்ள கேட்டதுண்டு. அவர்களுக்கும் இந்த கட்டுரையில் இருப்பதையே விளக்கினேன். ஜோக், சிறுகதை, கட்டுரை, மேடை உரை அனைத்துக்கும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் என சொல்லிவிடலாம்தான். செய்யவேண்டியவையையும், செய்யக்கூடாதவையையும் வரையறுத்துவிடலாம்தான். ஆனால் ஜோக், சிறுகதை, மேடை உரை, மேஜிக் ஆகியவை வரலாற்றில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் உருவாகி வந்த பின்புலத்தையும், 60 உரைகளுக்கான பின்னூட்டத்தையும் வகுப்பில் நேரடி அனுபவமாக அடைவதைக் கடத்துவது வகுப்புக்கு வெளியே எளிதன்று. அவர்களுக்காக நீங்கள் இந்த வகுப்பை மட்டுமாவது இணைய வகுப்பாக நடத்த முடியுமா என யோசிக்க வேண்டும்.

இறுதியாக ஒன்று. மேடை உரைக்கான வகுப்பு என்பது ஒரு முகாந்திரம்தான். உண்மையில் அன்றாட உரையாடல்களுக்குமே இந்த வடிவம்தான் சரியானது. மேலும் நீங்கள் சொன்னதுபோலவே மேடை உரைக்கான பயிற்சி என்பது குவியம்கொண்ட சிந்தனைக்கான பயிற்சிதான். Fix your prose , fix your thought என்றீர்கள் அல்லவா? தன்னியல்பாக மனம் போன போக்கில் சிந்தித்தால் அதன் தாவலுக்குப் பின்னால் நாம் ஓட வேண்டியிருக்கும். உரைநடையில் மட்டுமே ஒருவன் ஒழுங்குடன் சிந்திக்க முடியும்.

சீரான சிந்தனைக்கு மற்றொருவரை முன்னிறுத்தி பேசுவதுபோல கற்பனை செய்யச் சொன்னதும் நல்ல உத்தி. அதுவும் உரைதான். ஜெயராமுக்கு பேருந்தில் தற்செயலாக சந்திக்கும் அழகிய பெண்ணிடம் நவீன ஓவியம் பற்றி உரையாற்றுவது போல கற்பனை செய்துகொள்ளச்சொன்னீர்கள் அல்லவா? அதன்பிறகு குருபூர்ணிமா விழாவி்ல் , ஹம்பி செல்லும்போதெல்லாம் அவர் கண்கள் கனவுகளில் ஆழ்ந்திருப்பதாக எனக்கொரு ஐயம். கண்டிப்பாக கனவில் பேருந்து பயணம்தான். ஜெயராமின் உரைகள் மெருகேறி வருவதைக் காண முடிந்தது.

இக்கடிதத்தின் பெரும்பகுதியை நான் வகுப்பு முடிந்த சில நாட்களிலேயே எழுதிவிட்டேன். ஆனாலும் வகுப்பில் கற்றவற்றை ஒரு சில உரைகளில் நிகழ்த்திப் பார்த்த பிறகு இதை எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும் என இருப்பில் வைத்திருந்தேன். குருபூர்ணிமாவில் மருத்துவர் ஜீவா பற்றிய உரை, இம்பர்வாரியில் மராமரப்படலம் குறித்த உரை இரண்டும் முடித்த பிறகு என்னுடைய உரைகள் பற்றிய அவதானிப்பு இதுதான். முகாமில் பயிற்றுவிக்கப்பட்ட வடிவம் பிடிகிடைக்கிறது. உரை பற்றியும், பொதுவான உரையாடல் பற்றியும் நண்பர்கள் நல்லவிதமாகவே சொல்கின்றனர். பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. “எப்படி உங்களால் 60 உரைகளையும் சுவாரசியமாக மாற்ற முடிகிறது?’ என்ற கேள்விக்கு “சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும். வாசிக்காமல் உரையாற்ற முடியாது.” என்றீர்கள். வாசிப்புதான் அடித்தளம். வாசிப்பு மட்டுமல்ல, இப்போது நடக்கும் முகாம்களும் செவிவழிக் கல்விதான்.

வகுப்புகளிலும் தேர்வுகளிலும் தீவிரமும் கலகலப்பும் ஒருங்கே இருக்கும் இடத்தில் P.E.T இடைவெளி தேவை இல்லைதான். ஆனாலும் இரண்டாம் நாள் இரவு 10 மணிக்குமேல் தூக்கம் வருபவர்கள் சென்று தூங்கலாம் என்று சொன்ன பின்னரும் பாடலும் பகடியுமாக கொட்டும் பனியில் அனைவரும் விழித்திருந்த மாலை மகிழ்ச்சிகரமானது. நண்பர் ஒருவர் நீங்கள் சொன்ன நகைச்சுவை துணுக்குகளைக்கூட குறிப்பெடுத்து வைத்திருக்கிறார். நானே இவ்வகுப்பு பற்றி கேட்போரிடமெல்லாம் பூனையை குளிப்பாட்ட அழைத்துச்செல்லும் சர்தார்ஜி பற்றிய நகைச்சுவையையேக் கொண்டே அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறேன். கல்வியை பெரும் கொண்டாட்டம் ஆக்கிவிட்டீர்கள்.

அன்புக்கும் கல்விக்கும் நன்றி சார்,
பா.விஜயபாரதி
சென்னை

முந்தைய கட்டுரைஇச்சாமதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசீ.வி.குப்புசாமி