நிவேதிதா, கடிதம்

சிறுமியின் தஞ்சை

அன்புடன் ஆசிரியருக்கு

காலை எழுந்ததும் ‘சிறுமியின் தஞ்சை’யை வாசித்தேன். இனிமையான உற்சாகம் தொற்றிக் கொண்டது. தொடர்ச்சியாக நண்பர்கள் பலரும் அப்பதிவின் சுட்டியைப் பகிர்ந்து கொண்டனர். ‘ஒரு சிறுமி என்னமாக எழுதி இருக்கிறாளா!’ என்ற வகையான ஆச்சரியம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக நாம் ஏற்கனவே வாழ்ந்து வரும் இந்த உலகத்தை இரு இளம் விழிகள் என்னவாகப் பார்க்கின்றன என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது. நாம் வாசிக்கும் அறைக்கு தூய்மையான ஒருவர் வந்தால் வரக்கூடிய தர்மசங்கடம் கலந்த பதற்றம் அது! பெரிய கோவில் நந்தியும் பெப்ஸி ஐஸும் இணையான துல்லியத்துடன் விவரிக்கப்படுவது புன்னகையை மட்டுமல்ல பரவசத்தையும் அளித்தது. எழுத்தாளர் வீ‌.நிவேதிதாவுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

அன்புடன்

சுரேஷ் பிரதீப்

அன்புள்ள சுரேஷ்,

நலம்தானே?

அக்குறிப்புகளில் எனக்கிருந்த ஆர்வமும் அதுதான். ஒரு புதிய எழுத்தாளர் புதிய உலகத்தை முற்றிலும் புதியதாகக் கண்டடைகிறார். அந்த உற்சாகம் மிக அசலான ஒன்று

ஜெ

நிவேதிதாவின் கட்டுரை மிகவும் அருமை. ஆனால் அவர் உங்களை அங்கிள் என அழைப்பதைத்தான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தாத்தா என்றால் அங்கிள் என்று யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்

மரபின்மைந்தன் முத்தையா

அன்புள்ள முத்தையா,

அதாவது, அஜிதனுக்கோ சைதன்யாவுக்கோ மணமாகி, குழந்தை பிறப்பது வரை நானெல்லாம் அங்கிள்தான். இது உங்களை உத்தேசித்துச் சொல்லப்படவில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஅஜிதனின் ‘அல் கிஸா’ – வாசு முருகவேல்
அடுத்த கட்டுரைவீரபத்ருடுவின் உலகம்